தமிழின் முக்கியமான கவிஞரான சுகுமாரனின் முதல் நாவல் இது. வெல்லிங்டன் என்னும் ஊர் உருவாவதன் வலுவான சரித்திரப் பின்புலத்தைத் தொடக்கமாகக் கொண்டுள்ளது. இதன் விவரணைகளில் துலக்கமாகும் மலைக்காட்டுப் பயணமும், பழங்குடிகளின் வாழ்வும், பிரிட்டிஷ் இந்தியாவின் கருப்பு வெள்ளைச் சித்திரங்களும் நாவலை வண்ணமயமாக்குகின்றன. ஒரு ஊரின், அதன் மனிதர்களின் வழியாக ஒரு சிறுவனின் மனம் உருவாவதை மிக எளிமையான விவரணைகளின் வழியாக இந்நாவல் பதிவுசெய்கிறது. இது காலச்சுவடு வெளியீடாக ஜனவரி 4ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
பெரியவர் ஒருவர் கேட்டார்: “மாத்தி, அது எப்படிச் சரியாகும். அது நேற்றுவரைக்கும் நாம் புழங்கிய பூமி இல்லையா? அதைக் கொத்திப் பண்படுத்தி நாம்தானே பார்த்துக்கொண்டோம். அந்தக் காடுகளிலெல்லாம் நமது கால் தடத்தின் அடையாளமிருக்கிறதே? அதையெல்லாம் இல்லையென்று சொல்லிவிடுவார்களா? நம்முடைய இடத்தில் என்னவோ பண்ணுகிறார்கள். அதைக் கேட்க நமக்கு உரிமையில்லையா? அவர்களாக இன்னது செய்கிறோம் என்று சொல்லமாட்டார்களா? பெரிய படாயியாக இருக்கிறதே?”
சந்தைக்குப் போய் வருகிறவர்களில் கொஞ்சம் விவரக்காரனான ஹாலன் பெரியவரை சமாதானப்படுத்தினான். எல்லாக் கேள்விகளுக்கும் சேர்ந்து ஒரே பதிலாகச் சொன்னான்: “நீங்கள் சொல்வது எல்லாம் வாஸ்தவம். ஆனால் அதை அவர்களிடம் சொல்ல முடியாது. அவர்கள் மிலிட்டெரிக்காரர்கள். அவர்களுக்கு என்ன வேண்டுமானலும் செய்ய அதிகாரமிருக்கிறது”.
“ஒரு மிலிட்டெரி பாரக்ஸுகுக்கு இந்தப் பெயர் பொருத்தமாக இல்லை. புதிய பெயர் சூட்ட வேண்டும்” சர். ரிச்சர்ட் ஆம்ஸ்டிராங்க் ராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் சொன்னார்.
ஜகதளா என்று சொல்லும்போது அதில் கம்பீரமில்லை. நாட்டுப்புறச் சத்தமாக ஒலிக்கிறது. ஜகதளா பாரக்ஸ் என்று சொல்லுவது இந்தியர்கள் கோட்டணிந்து வேட்டி கட்டியதுபோலிருக்கிறது என்றார். அதைக் கேட்டு கூட்டம் சிரித்தது. சர். ஹென்றி போட்டிங்கர் முகம் சுளித்தார். அவரது முகச் சுளிப்பு ஆம்ஸ்டிராங்கின் கண்ணிலும் பட்டது.
“சர். ஹென்றி போட்டிங்கருக்கு பெயர் மாற்றம் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். சரியா மிஸ்டர். ஹென்றி?”
“என்னுடைய விருப்பமின்மையல்ல இங்கே விஷயம் சர். ரிச்சர்ட். உள்ளூர் ஜனங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய பெயராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்”
“என்னுடைய ஆலோசனையில் ஒரு பெயர் இருக்கிறது. வெல்லிங்டன்”
“இந்தப் பெயர் உள்ளூர்க் காரர்களால் ஏற்றுக் கொள்ளப்படுமென்று நினைக்கிறீர்களா? அவர்களால் உச்சரிக்க முடியும் என்று நம்புகிறீர்களா?”
“அது விஷயமே இல்லை சர்.ஹென்றி. எந்தப் பெயரும் இரண்டாவது தடவை உச்சரித்தால் பழகிவிடும். நான் சொன்ன பெயருக்குக் காரணம் இருக்கிறது. ராணுவத்துக்கு சானடோரியம் வேண்டுமென்று வாதாடும் சர். ஆர்தர் வெல்லெஸ்லியின் கீர்த்திப் பெயர் வெல்லிங்டன் என்பது நீங்கள் அறியாதது அல்லவே. அதைவிட ராணுவ பாரக்ஸுக்குப் பொருத்தமான வேறு பெயர் இருக்க முடியாது என்பது என் எண்ணம்”
“அது சரிதான். ஆனால் . . . உள்ளூர்க்காரர்கள் அதை அந்நியமாகக் கருதக்கூடுமே என்று . . .” சர். ஹென்றி போட்டிங்க் இழுப்பதைப் பார்த்து எரிச்சலாக இருந்தது சர். ஆம்ஸ்டிராங்குக்கு. இருவரும் கிட்டத்தட்ட சம அந்தஸ்துள்ளவர்கள். சமமான அதிகாரம்கொண்டவர்கள். ஒரு பெயர் சூட்டும் விவகாரத்துக்காக மோதிக்கொள்வது மாட்சிமை தங்கிய மகாராணியாரின் புகழை மங்கச் செய்துவிடும். சர். ஆம்ஸ்டிராங்க் தொண்டையைச் செருமிக்கொண்டார்.
“இந்த விவாதத்தை நாம் தற்காலிகமாகக் கைவிடுகிறோம். ஷேக்ஸ்பியர் சொன்னதுபோல பெயரில் என்ன இருக்கிறது, இல்லையா கனவான்களே?”
அதைச் சொல்லும்போது அவரது கன்னக் கதுப்புகள் சிவந்திருந்தன. வெளிக்காட்ட முடியாத அவமானத்தின் தழல் சதைக்குள் எரிவதன் அடையாளம்.
ஆனால் சொற்ப காலத்துக்குள் அவர் ஜெயித்தார். சர். சார்லஸ் டிரெவல்யன் அவரை ஜெயிக்க வைத்தார். “ஒரு ராணுவ மையத்துக்கு எவ்வளவு அழகாக ஒத்துப் போகிறது இந்தப் பெயர். வெல்லிங்டன். வெல்லிங்டன் பாரக்ஸ். வெல்லிங்டன் கண்டோன்மெண்ட்” பெயர்ப் பொருத்தத்தைச் சிலாகித்தபடியே உத்தரவில் கையெழுத்துப் போட்டார்.
அன்று மாலை எல்லாச் சிப்பாய்களும் அணிவகுத்து நின்றார்கள். ராணுவ பியூகிள் ‘பெப்பரபெப்பரபெப்பே’ என்று ஒலித்தது. ஹட்டிவாசிகளும் பள்ளத்தாக்குகளில் குடியிருப்பவர்களும் எக்காளத்தின் அர்த்தம் புரியாமல் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
கொஞ்ச நாட்களுக்கு பட்டாள நடமாட்டங்கள் ஹட்டிக்காரர்களுக்கும் வெளியாட்களுக்கும் வேடிக்கையாக இருந்தன. பிறகு அது பழக்கப்பட்டுப் போனது. ‘எங்கள் ஹட்டி வெல்லிங்டனுக்குப் பக்கமிருக்கிறது’ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். எல்லாரும் தன் பெயரில் அமைந்த ஊரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோதும் அந்த இடத்தை ஒருமுறைகூட வெல்லிங்டன் என்ற சர். ஆர்தர் வெல்லெஸ்லி பார்த்ததில்லை.
பாதுகாப்புப் பணி அதிகாரிகள் கல்லூரி முற்றத்தில் இரண்டு கொடி மரங்கள் இருந்தன. ஒரு கம்பத்தின் பாதியில் மூவர்ணக் கொடி கயிறுடன் சுருட்டிக் கட்டப்பட்டிருந்தது. இரண்டாவதில் ராணுவத்தின் கொடி. இரண்டும் சின்ன மூட்டைகளாக வெயிலில் பளபளத்துக் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. மிலிட்டெரி வாத்தியக்காரர்கள் காத்திருந்தார்கள். கழுகுச் சின்னத்தில் வெட்டிச் சீராக்கப்பட்ட புல்வெளிக்கு அந்தப் பக்கமாக மடக்கு நாற்காலிகள் போட்டிருந்தன. பாதிக்கு மேல் நாற்காலிகள் நிரம்பியிருந்தன. எல்லாரும் வாசலை அடிக்கடித் திரும்பிப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
சட்டென்று வாத்தியங்கள் உயிர் பெற்றன. டிரம்கள் ஒலித்தன. பியூகிளும் டிரம்பெட்டும் பாக் பைப்பரும் காற்றை நாதங்களால் நிறைத்தன. எல்லாரும் எழுந்து நின்றார்கள். பிரதான வாயிலிலிருந்து ஒரு திறந்த ஜீப் இசைக்குத் தோதான வேகத்தில் உள்ளே நுழைந்தது. மேஜர் ஜெனரல் பக்கத்தில் பிரதமர் புன்னகையுடன் வலது கையை வீசியபடி நின்றிருந்தார். முற்றத்தில் ஜீப் வந்து நின்றதும் சிப்பாய்கள் விறைப்பானார்கள். பாண்டு வேறு இசையை ஒலித்தது. பிரதமர் ஜீப்பிலிருந்து இறங்கினார். வேகமாக நடந்து கொடிமரத்தருகில் வந்து நின்றார். அப்போதும் முகத்தில் புன்னகை இருந்தது. அது அவர் கோட்டின் மார்புப் பகுதியில் சொருகியிருந்த ரோஜாப் பூவைப் போல இருந்தது. அதிகாரி இரண்டாவது கம்பத்தில் சுற்றியிருந்த கயிற்றை அவிழ்த்து பிரதமரிடம் கொடுத்தார்.
பிரதமர் கயிற்றை இழுத்தார். சின்ன மூட்டை மேலே உயர்ந்துபோய் உச்சி வலையத்தில் பட்டு அவிழ்ந்தது. சாட்டின் துணியில் கத்தி களும் அசோகச் சிங்கங்களும் வளைந்தாடின. வேகமானது இசை. எல்லாரும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தபோதே இரண்டாவது கம்பத்தின் உச்சியில் மூவர்ண முடிச்சு அவிழ்ந்தது.
பிரதமர் சிவப்பு விரிப்புப் போட்ட மேடைமேல் ஏறி நின்றார். முன்னாலிருந்த மைக்கை முகத்துக்கு நேராக வைத்துக்கொண்டார். பேச்சைத் தொடங்கினார்.
ஸ்டாஃப் காலேஜின் சப்ளை டிப்போவில் கோதுமை மாவு வாங்க நின்றிருந்த சரஸ்வதி டீச்சர் பக்கத்தில் பாரா நின்ற சிப்பாயிடம் தெளிவான ஹிந்தியில் சொன்னாள். “எவ்வளவு நேர்த்தியான இங்கிலீஷ், இல்லையா?”
சிப்பாய் “ஹாங்க்ஜீ” என்று ஹிந்தியில் முனகினான்.
மாவுப் பையைத் தூக்கிக்கொண்டு வெளியே வரும்போதும் பிரதமரின் இனிமையான குரல் டீச்சரின் கூடவே வந்தது. “சுதந்திரம் அடைந்து பத்தாண்டுகளுக்குள் நாம் கணிசமாக முன்னேறியிருக்கிறோம். நல்ல தொடக்கம். ஆனால் இது போதாது. நாம் சென்றடைய வேண்டிய இலக்குகள் தொலைவில் இருக்கின்றன. நாம் செல்லவேண்டிய தூரம் அதிகமாக இருக்கிறது. நமது தேசம் தன்னிறைவு பெற்றதாக மாற வேண்டும். நமக்கு இன்னும் தொழிற்சாலைகளும் அணைக்கட்டுகளும் வேண்டும். அவைதான் நவீன யுகத்தின் ஆலயங்கள். அப்படி நாம் முன்னேற வேண்டுமானால் நமக்குப் பாதுகாப்பு வேண்டும். அதற்கான பட்டறை இது. சிறு குழந்தை வளரும்போதுதான் நோய்கள் அதிகம் தாக்கும். அப்போதுதான் அதற்குப் பாதுகாப்பு அதிகமாகத் தேவைப்படும். நமது நாடும் இப்போது பால்ய பருவத்தில் இருக்கிறது. அதற்குப் பாதுகாப்பு அவசியம். பாதுகாப்புக்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டியதில்லை என்று சிலர் சொல்ல லாம். அவர்களிடம் நான் சொல்ல விரும் . . .”
ஸ்டாஃப் காலேஜ் மேட்டிலிருந்து இறங்கும்போது பிரதமரின் குரல் வெறும் ஒலியாக மட்டுமே டீச்சருக்குக் கேட்டது.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago