மனுசங்க.. 31: மாட்டுக்காரப் பையன்!

By செய்திப்பிரிவு

இறந்தவுடன் உடம்பைக் குளிப்பாட்டுதல் என்கிற ஒரு வழக்கம் உண்டு. நெருங்கிய சொந்தங்களைக் கூப்பிட்டு உடம்பின் தலையில் எண்ணெய் தொட்டு வைக்கச் சொல்வார்கள்.

இருப்பில் வைக்கும் எண்ணெய் கெட்டுப்போகாமல், காறல் விழாமல் இருக்க ஒரு மண்குடம் எண்ணெய்க்கு ஒரு வட்டுக் கருப்பட்டியை நான்காக உடைத்துப் போட்டு வைப்பார்கள்.

நல்லது பொல்லதுகளுக்கு வரும் வசதிப்பட்டவர்கள் வந்தால் அவர்களின் உடம்பில் இருந்து கருப்பட்டி வாடை அடிக்கும்.

இப்பேர்ப்பட்ட எண்ணெயைப் போலப்பர், சோற்றுக்கு மட்டுமே விட்டுக் கொள்வார். தலையின் சிகையிலோ, உடம்பிலோ தேய்த்து வீணாக்க மாட்டார்.

உடம்பு முழுவதும் விலையுயர்ந்த நல் லெண்ணெயைத் தேய்த்துக் கொண்டு அலைபவர்களைப் பார்க்கும் போதெல்லாம், தனக்கு மட்டும் கேட்கும் படியாக ‘கோட்டிக்காரப் பயல்க; விருதாக் கோட்டிக்காரப் பயல்க’’ என்று சொல்லிக்கொள்வார்.

அவருக்கு ரெண்டே பிள்ளைகள். அவன்களும் தகப்பனாரைப் போலத் தான். அந்த ஊரில் அந்த வீட்டில் கடேசி யாக ஒரு ‘கொண்டை நாயக்கர்’ இருந் தார். அதுக்குப் பிறகு அந்த ஊரில் ஆண்கள் யாவரும் கொண்டைகளைக் கைவிட்டு கிராப்புக்கு வந்துவிட்டார்கள். அடேயப்பா எவ் வளவு எண்ணெய் மிச்சம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

கழுகுமலை மாட்டுத்தாவணி (சந்தைக்குப் போய் வந்த தரகு வெங்க டாச்சலக் கவுண்டர் ஊருக்கு வந்ததும் ‘‘ஒலகமே சேக்குக்கு (கிராப்புக்கு) திரும் பீட்டது. கொண்டெ வச்ச ஆம்பளையவே கண்ணுல தட்டுப்படலே என்று சொல் லிச் சொல்லி அதிசயப்பட்டார்.

கடேசியாக அந்த ஊர்க்காரர்கள் கொண்டையப் பார்த்தது தவில் வாசிப் பவர்களிடம் மட்டும்தான். ரெண்டு தவில் வாசிப்பவர்கள் போட்டிப் போட்டு மாறி மாறி வாசிக்கும்போது எந்தத் தவில் காரருக்குக் கொண்டை அவிழப் போகி றது என்று அந்த ஊர்க் குழந்தைகள் வேடிக்கை பார்க்க முடியாமலாகி விட்டது.

கடேசியாக தவில்காரர்களே கொண் டைக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்து முடித்து வைத்துவிட்டார்கள்.

பொத்தய்யா தாத்தாவுக்கு என்ன வயசு என்று யாருக்கும் தெரியாது. அவருக்கே தெரியாது. இந்த வயசு களை யாரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதும் கிடையாது.

யாரிடமாவது கேட்டால், ஏதாவது ஒரு முக்கிய சம்பவத்தைச் சொல்லி, அப்போ நானு ஒம்பது வயசு’’ என்பார்கள். நாம தான் கூட்டிக் கழிச்சுப் பாத்துக்கிடணும்.

இன்னும் சில கிழவனார்கள் ‘‘ஏமுலே கேக்கெ; எனக்கென்னெ நீ பொண்ணு தரப் போறியா?’’ என்று கேட்டு மடக்கு வார்கள்.

குரல் எட்டாத தொலைவில் இருப் பவர்கள், ‘‘வேண்டியதுதாம் மோரைக் கட்டைக்கு’’ என்பார்கள்.

ஆனாலும் சில கிழங்கள் வயசைக் கேட்டால் சொல்லும். அவர்கள் வீட்டுக் குக் குறிப்பு (ஜாதகம்) பார்க்க வரும் சோதி டனிடம் அந்த வீட்டிலுள்ள அத்தனை குறிப்புகளையும் பார்க்கச் சொல்லி தந்துவிடுவார்கள். அப்போது சோதிடன் பார்த்து முதலில் சொல்லுவது வயசுதான்.

பொத்தய்யா சின்ன வயசில் இருந்தே உயரம் கம்மிதான். அவர் பிறப்பதற்கு முன்னாடியே அய்யா இறந்துபோனார். பிறந்ததும் அம்மாவும் இறந்துபோனாள். தாய்ப்பால் இல்லாமல் வளர்ந்ததாலோ என்னமோ, வளர்ச்சி நின்று போனது. பெரிய்யக் கூட்டுக் குடும்பத்தில் ஒரு அனாதரவாக வளர்ந்தார், எடுப்பார் கைப்பிள்ளையாக.

அவரோடு உடன்பிறந்த பிறப்பிகள் மொத்தம் பதினோரு பேர். அவருடைய வீட்டில் தடுக்கி விழுந்தால் ஒரு பிள்ளை மேல்தான் விழணும்.

ஏன் இப்படி வதவத என்று பிள்ளை களைப் பெற்றீர்கள் என்று யாரும் கேட் பது இல்லை. பெய்கிற மழைகளெல்லாம் நம்மளைக் கேட்டுக்கொண்டா பேய் கிறது என்று பதில் சொல்வார்கள்.

‘‘காத்தடிக்குது தாழை பூக்குது’’ என்பார்கள். அந்தக் கால வழக்கப்படி பொத்தையாவும் பள்ளிக்கூடத்டை எட் டிப் பார்க்காமலேயேதான் வளர்ந்தார்.

இருந்த ஒரு பள்ளியும் ஏட்டுப் பள்ளி தான். ரொம்பநாள் கழிச்சிதான் புத்தகப் பள்ளியே வந்தது.

அவர்கள் வீட்டுத் தொழுவே ரொம்ப அகலமானது நீளமானது. மாடுகள் மேய்க் கும் வேலையாட்கள் தங்கிக்கொள்ளவே கூரைகள் வேய்ந்த அறைகள் உண்டு. இவர் அதில் ஒன்றில் தங்கிக்கொண்டார்.

அவனால் வேலை ஒன்றும் செய்ய ஏலாது. பாவம்; இருந்தூட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டார்கள் வேலையாட் கள். இவரை ‘சின்ன மொதலாளி’ என்று சொல்லி தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.

வேலையாட்களுக்குப் பின்னாலேயே இவரும் மாடுகள் மேய்க்கப் போய் வரு வார். நாளா சரியாக இவருக்கு மாட்டுக் கார மொதலாளி என்ற பேரும் ஏற்பட்டது. மாடுகளுக்கு மத்தியில் இவர் நின்று இருந்தால் இருக்கிறதே தெரியாது; காரணம் இவர் மாடுகளின் உயரம்தான் இருப்பார். அழுக்கு வேட்டியை அவ் வளவு சுலபத்தில் மாற்ற மாட்டார். அழுக் குத் துணியில் ஒரு சுகம் கண்டு விட்டார்.

இவரிடம் சலைவைக்காரி அழுக்கு வேட்டியை வாங்கப் படாதப் பாடுபட வேண்டியது இருக்கும்.

மாட்டுக்காரப் பையன்களோடு பழகிப் பழகி காட்டுப் பாடல்கள் பாடல் கற்றுக்கொண்டார்.

காட்டுப் பாடல் என்றால் அதை வீட்டுல பாடக்கூடாது.

போன்ற பாடலை வீட்டுல பாட முடியாதெ!

‘கள்ளிப்பழம் திங்கச் சொல்லி…’

கம்மாய்க்குள் மாடுகளை இறக்கிவிட் டால் பிறகு அதுகள் சாமானியமாக வெளியேறாது. மரத்து நிழல்களில் இவர்கள் ஓடிப் பிடித்து விளையாட, விளையாடும்பேதே பாட்டுகள் பாட என்பதெல்லாம் வசதி.

எந்தப் பாட்டை எங்கே பாடுவது என்பதெல்லாம் பொத்தய்யாவுக்குத் தெரியாது. ஒருநாள் அவருடைய பெரியம்மாக்களில் ஒருத்தி, ஒரு வேலையாளைத் தேடி அந்தப் பக்கம் வந்தபோது பாட்டுச் சத்தம் கேட்டு, யாரு பாடுறது என்று போனால் பொத்தையா முதுகை வாசல் பக்கம் காட்டிக்கொண்டு, தலையை ஆட்டி ஆட்டிப் பாடுகிறான்.

‘அத்தே மக சங்கர வடிவெ

கட்டத்தாம் வேணும்

ஆறரை ரூபா பரிசத்தெயும்

போடத்தாம் வேணும்

குச்சுலுக்குள்ளே கோரம்பாயெ

விரிக்கத்தாம் வேணும்

கொறட்டுக் கம்பு வேடிக்கெயெ

பாக்கத்தாம் வேணும்

கொறட்டுக் கம்பு வேடிக்கெயெ

பாக்கத்தேம் வேணும் வேணும்…’

அவருடைய பெரியம்மாவுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் வந்து வீட்டு பொம்பளயாட்களிடம் சொல்லிச் சிரித்தாள்.

‘‘பயலுக்குக் கலியாண ஆசை வந்திட்டது போலிருக்கே…’’

‘‘ஞாயமான ஆசைதாம்…’’

‘‘இந்தக் குள்ளப் பயலுக்கேத்த ஒரு குள்ளச்சி எங்கே கிடைக்கப் போறா?’’ அதுபடியேதான் ஆயிற்று.

பொத்தையா பல வகையிலும் துண்டுபட்டுப் போனார்.

- இன்னும் வருவாங்க…

முந்தைய அத்தியாயம்: >மனுசங்க.. 30: அதுவும் மழைக்காலம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

மேலும்