அசல் எழுத்தாளர்களின் படைப்புகள் மக்களை சேர ஒரே வழிதான்..

By தங்கர் பச்சான்

கி.ரா. அப்பாவுக்கு, தமிழக அரசு இதுவரை எந்த ஒரு எழுத்தாளனுக்கும் இல்லாத மரியாதையை அளித்திருக்கிறது. அரசு மரியாதையுடன் அவரை நல்லடக்கம் செய்திருக்கிறது. அத்துடன் அவருக்கு உருவச்சிலையும் எழுப்ப இருக்கிறது. இதற்குப் பிறகாவது - சில விதிவிலக்குகள் போக - இத்தலைமுறையும் எதிர்காலத் தலைமுறையும் கி.ரா.வின் படைப்புக்களையும், தீவிர இலக்கியத்தையும் தேடி ஓடுவார்களா?

பக்கத்து மாநிலம் கேரளாவில் மக்களும், அரசாங்கமும் ஒரு தீவிர எழுத்தாளனை எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? புதினங்களை, சிறுகதைகளை, கவிதைகளை, கட்டுரைகளை பணம் கொடுத்து அவர்கள் வாங்கிப் படிக்கிறார்கள்.

தமிழகத்தில் எழுத்தாளனின் நிலை எவருக்காவது தெரியுமா. அதுகுறித்த அக்கறையும் பொறுப்பும் எவருக்காயினும் இருக்கின்றதா? பாரதியையும், புதுமைப் பித்தனையும் வறுமையிலேயே வைத்திருந்து நோயுடன் கொன்றதை அறிந்திருக்கவில்லையா. எழுத்தாளர்கள் அனைவரும் வாழும்போது யாருக்காகவோ எழுதுகிறார்கள் என நினைப்பவர்களுக்கு எழுத்தாளனைப் பற்றி அறிய என்ன அக்கறை இருக்கிறது.

அறுபது ஆண்டுகள் வேறெந்த தொழிலும் செய்யாமல் மாதச் சம்பளம் பெறாமல் மாய்ந்து மாய்ந்து எழுதிய கி.ரா.வுக்கு வாழ்நாளில் அவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட படைப்புகளுக்கும் சேர்த்து வருமானமாக எவ்வளவு தொகை கிடைத்திருக்கும் என எண்ணுகிறீர்கள். அதைப் பற்றி கவலைப்படாதவர்களிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது. சொந்தமாக பெரிதாக நில புலன்களும் இல்லாமல், சிறிதளவு இருந்தும் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லாமல் புதுச்சேரி அரசாங்க கருணையினால் குறைந்த வாடகைக்கு வழங்கிய 400 சதுர அடி கொண்ட அரசு குடியிருப்பில்தான் கி.ரா. 28 ஆண்டுகாலம் வாழ்ந்து மறைந்தார்.

ஒரு மாபெரும் மேதையின் வாழ்வு இவ்வாறுதான் முடிந்திருக்கிறது.

100 ரூபாய் விலையுடைய புத்தகம் விற்றால் அதைப் படைத்த எழுத்தாளனுக்கு 10% தான் உரிமைத் தொகையாக கிடைக்கும். அதுகூட அதைப் பதிப்பிக்கும் பதிப்பகம் நேர்மையான வழியில் கணக்கு காட்டினால் மட்டுமே கைக்கு வரும். நாமெல்லாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழகத்தில் ஒரு தீவிர எழுத்தாளனின் நூல் இரண்டாயிரம் படிகள் விற்றால் அது மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. ஒரு தரமான எழுத்தாளன் வாழ்நாள் முழுக்க எழுதினாலும் 25 நூல்களுக்கு மேல் வெளிக் கொண்டுவர முடியாது. அதில் கி.ரா.தான் உச்சம். ஒரு மூன்றாம் தரமான தமிழ் திரைப்படம் வெளியான அடுத்த நாளே எத்தனை கோடி வசூல் செய்தது எனும் கணக்கை முந்தித் தருவதற்கு அலையும் ஊடகங்களும், அதைக்கேட்டு பெருமைப்பட்டுக் கொள்ளும் ரசிகர்களாகிய மக்களும் இருக்குமிடத்தில் இதையெல்லாம் பேசுவது பெருங்குற்றம்தான்!

கி.ரா. எனும் எழுத்தாளன் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலோ வேறு எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் இன்று உலகம் அறியப்பட்ட எழுத்தாளன். அவரது படைப்புகள் உலகின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் கொண்டாடியிருக்கும். டாலர், யூரோ, பவுண்ட் கணக்கில் உரிமைத் தொகை கிடைத்திருக்கும். செல்வந்தனாக உலகின் சிறந்த எழுத்தாளர்களின் வரிசையில் நிறுத்தி போற்றப்பட்டிருப்பார்.

எந்தெந்த படைப்புகள் மக்களிடத்தில் சேர வேண்டுமோ, அவ்வாறான நூல்கள் அரசு பொது நூலகங்களில் சென்று சேர்வதில்லை. அப்படியே பெறப்படும் நூல்களைக்கூட வைப்பதற்கு அலமாரி இன்றி செல்லரித்துக் கிடக்கின்றன. அரசு மதுபானக் கடைகளில் செய்து தரப்படும் வசதிகளில் பத்தில் ஒரு பகுதிகூட ஒரு நூலகத்திற்கு செய்து தருவதில்லை. அரசு நூலகங்கள் பதிப்பாளர்களிடமிருந்து வாங்கும் முறைகளில் இந்தப் புதிய அரசாவது இலக்கியப்பூர்வமான அணுகுமுறையைக் கையாள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் இருந்தும் ஒன்றுகூட அவர் வாழும் காலத்தில் அவருடைய எண்ணங்களை பதிவு செய்யவில்லை. நானே சிலரிடம் பேசியபொழுது வேண்டுமானால் சென்னைக்கு அழைத்து வந்தால் செய்யலாம் என்றார்கள்.

இறுதிச்சடங்கில் ஒரு எழுத்தாளனுக்கு அரசு மரியாதை கிடைப்பதாலோ, இறந்த பின் அவனுக்கு உருவச்சிலை எழுப்புவதாலோ மட்டும் அவனது எண்ணங்கள் நிறைவேறுவதில்லை. அவனது படைப்புகள் அவன் நினைத்தபடி மக்களிடத்தில் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்றே ஒவ்வொரு அசல் எழுத்தாளனும் விரும்புவான். மற்றபடி வாழும்போது தரப்படும் விருதுகளின்பெருமையெல்லாம் சில நாட்களுக்குத்தான்.

கி.ரா. விற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்த நேரம் அது. முப்பது ஆண்டுகளுக்கு முன் அப்பொழுது ஒரு சில படங்களில் ஒளிப்பதிவாளனாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். சொந்தமாக வாகனம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு பணவசதி இல்லை. சென்னைக்கு புதுச்சேரியிலிருந்து நேரடி பேருந்து கிடைக்காததால் இருவரும் திண்டிவனத்திற்கு வந்தோம். திருவள்ளுவர் பேருந்து நிறுத்தத்தில் நெடுநேரம் காத்திருந்த நிலையில் எந்தப் பேருந்திலும் அமர்ந்து பயணிக்கும் வகையில் இடம் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் ஒரு பேருந்தில் ஏறினோம். அப்பாவின் வயது எழுபதை நெருங்கிக் கொண்டிருந்தது என்பதால் அவர் நின்று கொண்டே பயணிப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நடத்துநரின் இருக்கை தவிர அனைத்தும் நிரம்பியிருந்தன. நின்றபடி பயணச்சீட்டு வழங்கியவரிடம் சென்று கி.ரா.வைப் பற்றி சுருக்கமாகக்கூறி நடத்துநருடைய இடத்தில் கி.ரா. அமர்ந்து கொள்ள அனுமதி கேட்டேன். நடத்துநர் அதைப்பற்றி காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. விருது பெற்றிருந்த நேரம் என்பதால் அதைக் குறிப்பிட்டு மீண்டும் அனுமதி கேட்டேன். சாகித்ய அகாடமி விருது என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை.

பக்கத்திலிருந்த அன்புள்ளம் கொண்ட பயணிகளும் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஒருவருக்கும் அந்த முதுமையடைந்த மாமேதைக்கு தங்களின் இருக்கையைத் தர மனசில்லை.

அப்பா அந்த வலியை அப்போது காண்பித்துக் கொள்ளவேயில்லை. பின்பு ஒரு நாள் பேச்சுவாக்கின்போது,

“இவுங்கல்லாம் மரியாத குடுப்பாங்கண்ணா நெனச்சி எழுதறோம். இதெல்லாம் கேரளாவுல நடக்காது தெரியுமோ” என்றார்.

கி.ரா. போன்ற அசல் எழுத்தாளர்களின் படைப்புகள் மக்களுக்கு சேர இனி வருங் காலங்களில் ஒரே வழிதான் உள்ளது. அதுதான் பக்கத்து மாநிலங்களில் உள்ளதுபோல் கட்டாய தாய்மொழி வழிக்கல்வி. ஆட்சியின் தொடக்கத்திலேயே தனது சிறப்பான திட்டங் களாலும், செயல்பாடுகளாலும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் புதிய தமிழக அரசு இவ்வாண்டிலிருந்தே முதல் கட்டமாக பத்தாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.

இனிவரும் தலைமுறை தமிழில் கல்வி பயிலாமல் தமிழ் மொழிக்கோ எழுத்தாளனுக்கோ தமிழ் இலக்கியத்திற்கோ இங்கு இடமில்லை. இப்பொழுது உள்ளதுபோல் எதிலும் தமிழ் நடைமுறையில் இல்லாமல் தமிழ்நாடு என எதிர்காலத்திலும் வழங்கப்படும். தமிழர்கள் என அழைத்துக் கொள்ளும் தமிழினம் ஆங்கில எழுத்துக்களின் மூலம் தமிழை எழுதுவார்கள்; தமிழைப் படிப்பார்கள். ஆங்கிலம், பிறமொழி பேசி தமிழ் மாநாடும் நடத்துவார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்