புதினங்களில் உரையாடலுக்கு மட்டும்தான் பேச்சுவழக்கைப் பயன்படுத்துவது என்ற எழுதாத விதி ஒன்று கடைப்பிடிக்கப்பட்டுவந்த காலத்தில் ஒட்டுமொத்த படைப்பையும் பேச்சுவழக்கிலேயே எழுதி, புதிய தடத்தை உருவாக்கியவர் கி.ரா. அவர்கள். கரிசல் மக்களையும், அவர்களது மரபுகளையும், பண்பாட்டு விழுமியங்களையும் தனது படைப்புகளின் மூலம் அழுத்தமாக ஆவணப்படுத்தியவர். அவரது நினைவாக நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி மையம் ஒன்றை அவர் பிறந்த இடைச்செவலில் அமைக்க வேண்டும் என்றும், அவர் பெயரில் விருது ஒன்றைத்தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
- தொல். திருமாவளவன்
----------------------------------
கரிசல் என்னும் வட்டாரத்தை எழுதி பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி கி.ராஜநாராயணன் நம்மை நீங்கினார். அவருக்குப் புகழஞ்சலி.
- கமல்ஹாசன்
-----------------------------------
நம் சமகால இலக்கியப் பிதாமகர் கி.ரா அவர்களின் இறுதிச் சடங்கில் தமிழக அரசின் சார்பில் கலந்துகொண்டு அவருக்கு அரசு மரியாதை செலுத்தி வழியனுப்பினோம்.
- தங்கம் தென்னரசு
-------------------------------------
கி.ராஜநாராயணன் தமிழ் பேசினா ஃபைன்கட்டனும்னு க்ளாஸ் லீடர பெயர் எழுதச் சொல்ற ஸ்கூல்ல, வீ ஆர் ட்ரெய்ண்ட் அண்ட் டேம்ண்ட் டு திங்க் இன் இங்க்லிஷ் ஃபார் 14 இயர்ஸ். அப்படி ஒரு வாழ்க்கை முறையில் ஒரு ப்ரைவேட் லைப்ரரியன் பரிந்துரையில் ‘கோபல்ல கிராமம்’ மூலம் அறிமுகமானவர்தான் கி.ரா. அப்புறம் 14, 15 வயதில், ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ அப்படிங்கற பேர் நம்மல இம்ப்ரெஸ் பண்ண, ஒரு குறுகுறுப்புடன் அதை லைப்ரரியன் கிட்ட வச்ச என்னை நினைச்சா எனக்கே சில சமயம் இப்படி இருக்கும். அதன் வழி கி.ரா. இன்னும் பரிச்சயமாகிறார். அவருடைய சிறுகதைகள் நான் வாழாத உலகத்தை மனசுல பதியவச்சுது. எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை. இப்பவும் என்னைப் புன்னகைக்க வைக்கிறார். நிறைவான வாழ்க்கை
- ப்ரியா பவானிசங்கர்
-----------------------------------------
என் மொழியின் வாசத்தை என்னை உணரச் செய்த சிரிப்பு உங்களுடையது. மிஸ் யூ கி.ரா. தாத்தா.
- மாரி செல்வராஜ்
---------------------------------------------
கரிசல் காட்டு சம்சாரி
தன் கதைகளின் மந்தையை
நல்ல வெய்யிலில் மேயவிட்டுவிட்டு
களைப்பில் ஆழ்ந்து உறங்குகிறான்
ஆயிரம் ஆயிரம் கதைகளின்
கழுத்து மணி ஓசைகள்
வெடித்த நிலமெங்கும் பரவுகின்றன
அந்தி கவிழ்ந்து
இரவு கடந்து
பொழுதும் புலர்ந்துவிட்டது
மேய்ப்பன் இல்லாத மந்தைகளுக்கு
இன்று வீடு திரும்ப வழி தெரியவில்லை
கதைகளின் கழுத்து மணியோசைகள்
தன்னந்தனியே அலைந்து திரிகின்றன
- மனுஷ்ய புத்திரன்
-----------------------------------------------
தமிழில் அவர் எழுத்து தனி பாட்டை. எளிய மக்களின் வாழ்க்கை, மொழி, பண்பாடு ஆகியவற்றின் திசை பக்கமாகத் தமிழ் நவீன எழுத்தைக் கழுத்தைப் பிடித்துத் திருப்பியவர் கி.ரா. தொடர்ந்து எழுதவந்தவர்களை ஆகர்சணம் செய்து அவ்வாறே எழுதவும் வைத்தவர். அந்த வகையில், அவரைக் கரிசல் இலக்கியப் பிதாமகர் என்று சொல்வது அவரைச் சுருக்குவதுதான். அவர் தான் வாழ்ந்த பிரதேசத்தை எழுதியதோடு பிறரை அவரவர் மண் குறித்து எழுதும்படி அகத்தூண்டலை உருவாக்கினார். பழமொழி, வழக்குமொழி, சொலவம், வாய்மொழிக் கதைகள் என்று தேடித் தேடிப் பதிந்து தமிழைக் காத்தவர். அவரைப் பின்பற்றி நடு நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு அகராதிகள் உருவாயின. என் ‘தகப்பன் கொடி’ நாவலில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டை மண்டலச் சொல் வழக்குகளைத் தேடிச் சேகரித்து நான் பயன்படுத்தினேன். அதற்கு உந்துதல் கி.ரா அவர்களே. கல்லூரி படிக்கையில் ‘கரிசல் காட்டுக் கடுதாசி’யை ஜூ.வி.யில் படிக்கத் தொடங்கி கி.ரா.வை அறிந்தேன். இன்றும் கி.ரா. என்னை விடவில்லை. இனவரைவியல் சார்ந்த அசலான எழுத்தை வாசிப்பவர் இருக்கும் வரை கி.ராஜநாராயணன் இருப்பார்.
- அழகிய பெரியவன்
------------------------------------------------------
பெருவாழ்வு வாழ்ந்து முடித்துத் தமிழ் இலக்கிய பீஷ்மர் விடைபெற்றார். நைனாவுக்கு அஞ்சலி. பிரபஞ்சனுக்கு பிஎன்எஸ் பாண்டியன் இருந்ததைப் போல கி.ரா. அவர்களுக்கு புதுவை இளவேனில் மகனைப் போல உடனிருந்து கவனித்துவந்திருக்கிறார். சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.
- ஜி.குப்புசாமி
--------------------------------------------------------
கி.ரா. முற்றிலும் சிறந்த ஒரு கதைசொல்லி. நன்கு சொல்லப்பட்ட ஒரு கதை எப்படி நம் நினைவை விட்டு அகலாதோ, அப்படி அவர் புகழ் நீடுவாழும்.
- ராஜசுந்தரராஜன்
---------------------------------------------------------
கடந்த நூற்றாண்டில் உலகம் முழுக்கவே எல்லாச் சமூகங்களும் தத்தம் அளவில் தம் மக்களின் வரலாறுகளையும் சமகால வாழ்வையும் இலக்கியமாக்க முயன்றுகொண்டிருந்தன. இந்தச் செயல்பாட்டில் லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் ஒரு வகைமை என்றால், ஆப்பிரிக்க இலக்கியங்கள் இன்னொரு வகைமை, தெற்காசிய இலக்கியங்கள் அதில் இந்திய இலக்கியங்கள் வேறொரு வகைமை. இவை ஒவ்வொன்றும் தமக்கான பிரத்யேக அழகியல் மொழிகளைக் கொண்டிருந்தாலும் இவற்றின் மையமாய் இருந்தது இவற்றில் தொழிற்பட்ட இலக்கியத்தை ஜனநாயகமாக்குதல் என்ற செயல்பாடே. கி.ரா. அதன் தமிழ் முகமாய் இருந்தார். இந்த சர்வதேசத்தன்மையின் தமிழ்த் தலைமை கி.ரா. என்றே சொல்வேன். அதனால்தான், கி.ரா.வை வாசிக்கும் எவர் ஒருவரும் இவருக்கு அல்லவா நோபல் பரிசு வழங்க வேண்டும் என்கிறார்கள்.
- இளங்கோ கிருஷ்ணன்
முக்கிய செய்திகள்
இலக்கியம்
17 hours ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago