டிசம்பர் 21 அன்று மாலை ஆறு மணி அளவில் சார்வாகன் (1929-2015) காலமாகிவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். 1929-ம் ஆண்டு செப்டம்பர் 7 அன்று பிறந்த சார்வாகன் 86 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார். ஊர்ப் பக்கத்தில் கல்யாணச் சாவு என்று சொல்வார்கள். ஆனால் சார்வாகனின் மரணத்தைக் குறித்து அப்படிச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால், சார்வாகன் என்ற மகத்தான படைப்பாளி பற்றி நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை. இப்போதுகூட அவரைப் பற்றிய தகவல்களை டாக்டர் ஹரி னிவாசன் என்ற அடையாளத்தில்தான் தேடி எடுக்க முடிந்தது. மறுநாள் அவரது மரணச் செய்திகூட அந்தப் பெயரில்தான் வந்தது.
சார்வாகன் இரண்டு துறைகளில் சாதனை புரிந்தவர். ஒன்று தொழுநோய் மருத்துவம். இன்னொன்று, இலக்கியம். தொழுநோயால் பாதிக்கப்பட்ட கைகளை மீண்டும் சரியாக்குவதில் சார்வாகன் கண்டுபிடித்த முறைகள்தான் இன்றும் உலக அளவில் அவர் பெயரிலேயே வழங்கப்படுகின்றன. இதற்காக அவர் 31 ஆண்டுகளுக்கு முன்பே பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார்.
சார்வாகன் கதைகள்
இலக்கியம் வாசிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து சார்வாகன் என்ற பெயரைத் தெரியும். ஆனால் படித்திருக்கவில்லை. சென்ற ஆண்டு சமகால இலக்கிய முன்னோடிகள் பற்றித் தொடர்ச்சியாக ஒரு பத்திரிகையில் எழுதத் தொடங்கியபோது நான் முதலில் எடுத்த எழுத்தாளர் சார்வாகன். அதை ஓர் இன்ப அதிர்ச்சி என்றே சொல்ல வேண்டும். உலகச் சிறுகதை இலக்கியத்தில் நாம் யாரையெல்லாம் சாதனையாளர்கள் என்று கொண்டாடுகிறோமோ அதற்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் இருந்தன சார்வாகன் கதைகள்.
ஒருநாள் அவரைத் திருவான்மியூரில் அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது என் வலைப்பதிவில் எழுதியிருந்த குறிப்பு இது:
“இன்று மாலை (நவம்பர் 21) நாலரை மணியிலிருந்து ஆறரை வரை சார்வாகனுடன் பேசிக்கொண்டிருந்தேன். கால எந்திரத்தில் ஏறி ஏதோ சத்ய யுகத்திலோ அல்லது த்ரேதா யுகத்திலோ போய் விழுந்ததுபோல் இருந்தது. அந்த இரண்டு மணி நேரத்தையும் என் வாழ்நாளில் மறக்கவே இயலாது. அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது அவர் எழுத்தாளர் மட்டும் இல்லை; அதற்கும் மேலே என்று தெரிந்தது. எத்தனையோ மகான்களைப் பற்றிப் படித்திருக்கிறேன். ஆனால் அன்று அப்படிப்பட்ட ஒருவரைச் சந்தித்தேன். தி.ஜானகிராமன் ‘மோகமுள்’ளில் எழுதியிருக்கும் ரங்கண்ணாவைப் போன்ற ஒரு மகாத்மா சார்வாகன். ரங்கண்ணாவுக்கு சங்கீதம். சார்வாகனுக்கு மருத்துவம். இலக்கியத்தைவிடவும் பெரிய விஷயங்கள் உலகில் இருக்கின்றன என்பதை இன்று தெரிந்து கொண்டேன்.”
சார்வாகனிடம் பேசிக்கொண்டிருந்தபோது அரசு ஊதியத்தைத் தவிர அவர் வேறு எந்த நோயாளிடமிருந்தும் கட்டணம் வாங்கியதில்லை என்பதைப் போகிறபோக்கில் சொன்னார். நான் ஆச்சரியப்பட்டதைப் பார்த்துவிட்டு, “மருத்துவம் என்பது சேவை. சேவை செய்ததற்காக ஒருவர் காசு வாங்க முடியுமா?” என்று அவர் என்னைப் பார்த்து ஆச்சரியத்துடன் கேட்டார். இந்தக் காலத்தில் எப்படி இதுபோல் உங்களால் இருக்க முடிகிறது என்று கேட்டேன். என் தமிழுக்கும் என் வாழ்க்கைக் கோட்பாடுகளுக்கும் காரணம் என் தாத்தா கிருஷ்ணய்யர்தான் என்றார்.
இலக்கிய வாசலான நூலகம்
வேலூரில் காவல்துறையில் தமிழ் சுருக்கெழுத்தாளராக இருந்திருக்கிறார் கிருஷ்ணய்யர். ஒரு பிராமணர் காவல் துறையில் இருப்பதே அபூர்வம். அதிலும் அப்போது மேட்டுக்குடியினரிடையே தமிழ் நீசபாஷையாகக் கருதப்பட்ட காலம். அந்தக் காலத்தில் கிருஷ்ணய்யர் தன் சமூகத்தையே பகைத்துக்கொண்டு தமிழ் கற்றதை ஒரு கலகச் செயலாகத்தான் பார்க்க முடியும். பெரியதொரு நூலகமும் வைத்திருந்திருக்கிறார் கிருஷ்ணய்யர். “அந்த நூலகத்தில் படித்ததுதான் இன்னமும் நிற்கிறது; என் கதையில் நீங்கள் ஒரு லகுவான மொழி நடையைப் பார்த்தால் அதற்குக் காரணமும் அந்த நூலகம்தான். தமிழ் மட்டுமல்லாமல் உலக இலக்கியம், வரலாறு என்று எல்லா வகையான நூல்களும் அதில் இருந்தன” என்றார் சார்வாகன். கிருஷ்ணய்யர் ஒரு காந்தியவாதியும்கூட. அதுதான் என்னிடமும் தொடர்கிறது என்று, தான் அணிந்திருந்த கதர் வேட்டியைக் காண்பித்தார். காந்தியத்தோடு இடதுசாரிச் சிந்தனையும் கொண்டவராக இருந்தார் சார்வாகன். (புனைபெயரை சார்வாகன் என்று வைத்துக்கொண்டதுகூட அதனால்தான்.)
பல ஆயிரம் பக்கங்கள் எழுதக்கூடிய அளவுக்கு விஷயங்களை வைத்திருந்தார் சார்வாகன். 1954-லிருந்து ஆறு ஆண்டுகள் இங்கிலாந்தின் மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். லண்டனில்தான் திருமணமே நடந்தது. எண்பதுகளில் மூன்று ஆண்டுகள் போர்ட்லண்ட் நகரில் இருந்தார். அதையெல்லாம் எழுதுங்கள் எழுதுங்கள் என்று நான் சொல்லிக்கொண்டிருந்தபோது “எதற்காக எழுதணும், யார் படிக்கிறாங்க? இன்றைய தலைமுறைக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லையே?” என்று ஆழ்ந்த துயரத்துடன் கேட்டார். அப்போது அவருடைய பேத்தி அவரிடம் வந்து ஏதோ ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுப் போனார். சார்வாகன் என்னைப் பார்த்துச் சிரித்தார்.
உள்ளுணர்வு என்ற ஒரு விஷயம் இருக்கத்தான் செய்கிறது போலும். அடுத்த தீபாவளிக்கு இருக்க மாட்டேன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். டிசம்பர் பதினைந்தாம் தேதியிலிருந்தே சார்வாகனைப் பார்த்துவிட்டு வர வேண்டும் என்று உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது. இதோ இதோ என்று கிளம்பிக்கொண்டிருந்தபோது 21 அன்று மரணச் செய்தி. ஐந்து நிமிடங்களுக்கு மேல் சார்வாகனின் உடலின் அருகே நிற்க முடியவில்லை. வெடித்து அழுதுவிடுவேன் போலிருந்தது. நம் எழுத்துலக முன்னோடி ஒருவர் அனாதையாக இறந்ததுபோல் தோன்றியது.
சார்வாகன் பாரவி பற்றி அடிக்கடி குறிப்பிட்டதுண்டு. பாரவிதான் தன்னோடு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நண்பராக இருக்கிறார் என்றார். மரண வீட்டில் பாரவி என்னிடம் சொன்னார்: “சார்வாகனுக்குக் கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் கொஞ்சம்கூடக் கிடைக்கவில்லை. அவர் பெயரே யாருக்கும் தெரியவில்லை.”
எனக்கு அழுகை வந்தது. எப்பேர்ப்பட்ட மேதைகளை நாம் அறிந்துகொள்ளாமலேயே அனுப்பிவைத்துக் கொண்டிருக்கிறோம்.
நான் அழுதது இன்னொன்றுக்காகவும். அறுபதுகளின் முற்பகுதியில் ‘எழுத்து’ காலகட்டத்தில் தான் எழுதிய ஐம்பது அறுபது கவிதைகளை எனக்கு அனுப்பிவைத்து “உங்களைச் சந்தித்த பிறகு இதுவரை பிரசுரமாகாத இந்தக் கவிதைகளைப் பிரசுரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது; உங்களுக்கு யாரேனும் பதிப்பாளரைத் தெரியுமா?” என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தார். 55 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதைகள்! அவருடைய சிறுகதைகளின் தொகுப்பை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதெல்லாம் அவர் அறுபதுகள், எழுபதுகளில் எழுதியவை. அதற்குப் பிறகு சுமார் நாற்பது ஆண்டுகளாக அவர் எழுதவில்லை. காரணம், நாம் வாங்கிக்கொள்ளத் தயாராக இல்லை.
அருகில் நின்றுகொண்டிருந்த அசோகமித்திரன் போகலாமா என்று கேட்டார். அசோகமித்திரனும் அழகியசிங்கரும் நானும் ஆட்டோவில் கிளம்பினோம். மயிலாப்பூர் போய் இவரை விட்டுவிட்டு தி.நகர் போங்கள் என்றார் ஆட்டோ ஓட்டுநரிடம். எவ்வளவோ சொல்லியும் கேளாமல் வீட்டில் விட்டுவிட்டுத்தான் போனார் அசோகமித்திரன்.
- சாரு நிவேதிதா, எழுத்தாளர்,
தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago