பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம்

By செய்திப்பிரிவு

தமிழில் தற்போது எழுதிவரும் ஆண் எழுத்தாளர்களுக்கு இணையாகப் பொருட்படுத்தக்கூடிய அளவில் பெண் எழுத்தாளர்கள் அதிகம் இல்லை என்று சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் எழுதியிருந்தார். அத்துடன், “பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள் மூலம் ஊடக பிம்பங்களாக ஆனவர்கள். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்குப் பெண்களாகத் தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது” என்றும் கூறியது தமிழ் இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பெண் எழுத்தாளர்கள் சந்திக்கும் விமர்சனங்களை வரலாற்றுப்பூர்வமாக எழுத்தாளர் அம்பை இக்கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.

வெகு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் எழுத்தாளர் (ஆண் எழுத்தாளர்தான்!) ஒரு மூத்த ஆண் எழுத்தாளருக்கு எழுதிய கடிதத்தில் என் கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ‘அம்பையின் கதைகளைப் படிக்கும்போது அவர் உடல் ரீதியாகத் திருப்தியுறாதவர் என்று தெளிவாகத் தெரிகிறது’ என்ற தொனியில் அமைந்திருந்தது அவர் விமர்சனம். கருணை உள்ளம் கொண்ட அந்த மூத்த எழுத்தாளர், அந்தக் கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார் தன் கருத்தொன்றையும் கூறாமல். உடனே அந்தக் கடிதம் எழுதியவர் எழுதியிருந்த கதைத் தொகுப்பு ஒன்றைப் படித்தேன். தாங்க முடியவில்லை. ‘திருப்தியுற்றவர்கள் கதைகளின் தரம் இதுதான் என்றால், நல்லவேளை நான் திருப்தியுறவில்லை’ என்று தோன்றியது.

பெண் எழுத்து குறித்தும், பொதுவாகப் பெண்களைக் குறித்தும் இருக்கும் இந்த நோலாமை தமிழ் இலக்கிய விமர்சன மரபிலும், தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு தொடர் கண்ணியாக இருந்துவருகிறது. கல்வியை, உரிமைகளை, வெளிப்பாட்டுக்கான நியாயமான இடத்தைக் கோரும் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் குறையுள்ளவர்கள், அந்தக் குறை பாடுதான் அவர்களை எல்லா வகையிலும் செயல்படத் தூண்டுகிறது என்ற எண்ணம் பல காலமாக இருந்துவருவதுதான்.

இந்தக் குறைகள்தான் என்ன? அழகின்மை, தோற்றப் பொலிவின்மை, ஓர் ஆணின் துணையின்மை, பெண்களுக்கு இருக்கக்கூடாத அதீத காம இச்சைகள் இவைதான் பெண்களை இயக்கும் அடிப்படையான குறைகள்/காரணங்கள் என்ற கருத்து தொடர்ந்து நிலவிவருகிறது. அத்தனையும் பெண் உடல் மேல் கட்டப்பட்டவை. இவை மட்டும் இல்லாதிருந்தால் பெண்ணின் செயல்பாடும் வெளிப்பாடும் வேறு மாதிரி இருந்திருக்கும் என்ற நோக்கு. பெண் மட்டும் ஆண்கள் உவகையுறும் “பெண் தன்மை” கொண்டவளாக இருந்திருந்தால் சரித்திரத்திலும் இலக்கியத்திலும் அவள் பங்கு வேறு வகைப்பட்டிருக்கும் என்ற கணிப்பு.

பாரதி எழுதிய விமர்சனம்

இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. சக்ரவர்த்தினி பத்திரிகையில் பாரதியார் 1906-ல் பெண்கள் அரசியல் உரிமை கோருவதைப் பற்றி எழுதும்போது, இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஒரு முறை தி. ஜானகிராமனின் கதை ஒன்றைக் குறித்து குகப்ரியை விமர்சித்தபோது, “குகப்ரியை மாமி மடியாக எழுதுபவர்” என்று தி. ஜானகிராமன் பதிலளித்தார் என்று குகப்ரியை என்னிடம் குறிப்பிட்டதுண்டு. ஒரு பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆபாசமான முறைகளில் எழுத்திலும் செயலிலும் என்னைக் கேவலப்படுத்திய பெரும் கவிஞர் கூறியதெல்லாம், இவள் சுதந்திரமானவள் அதனால் நடத்தை கெட்டவள் (நடத்தை கெட்டவள் எனக் குறிப்பிடும் பெண்கள் இத்தகையவர்கள் கணிப்பில் எப்படிப்பட்டவர்கள் என்ற விளக்கங்களை ஆராய்ச்சி செய்யப் பல பக்கங்களும் அசாத்தியப் பொறுமையும் வேண்டும்) என்பதுதான். சமீபகாலத்தில், திருமணம் செய்துகொள்ளாத அல்லது தனிப் பெண்ணாக வாழும் பெண் எழுத்தாளர்களை “உய்விக்க” வரும் சில ஆண் எழுத்தாளர்கள் வைக்கும் முதல் கட்டுப்பாடு இலக்கியக் கூட்டங்களுக்குப் போகக் கூடாது, கவிதைகள் எழுதக் கூடாது என்பதுதான். ஓர் ஆணின் மேலான துணை கிடைத்த பின் ஒரு பெண்ணுக்கு இவை எல்லாம் தேவையா என்ன? இப்படி உய்விக்கப்பட ஆதரவு தராத பெண்களுக்கு ஊடகங்களிலோ வேறு எங்காவதோ வேலை கிடைத்துவிட்டால் தொலைபேசியில் இரவு கூப்பிட்டு “யாருடன் உறவு கொண்டதால் (அவர்கள் இதற்கு உபயோகிக்கும் விரசமான மொழி வேறு) இந்த வேலை கிடைத்தது?” என்று கேட்கும் ஆண் எழுத்தாளர்களையும், தொடர்ந்து இரவில் தொலைபேசியில் கூப்பிட்டு, விரசமாகப் பல ஆண் எழுத்தாளர்கள் பேசுவதால் இரவு வேளைகளில் தொலைபேசித் தொடர்பையே துண்டித்துவிடும், அஞ்சலட்டைகளில் அருவருக்கத்தக்க படங்களை சிலர் வரைந்து அனுப்பித் தொடர்ந்து செய்யும் இம்சைகளால் வீட்டையே மாற்றிய பெண் எழுத்தாளர்களையும் எனக்குத் தெரியும். இவற்றை எல்லாம் பார்க்கும்போதும், இது குறித்து எங்களுக்குள் நாங்கள் பேசிக் கொள்ளும்போதும், சமீபத்தில் பெண் எழுத்து மற்றும் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை நோக்கும்போதும், பெண் வெறுப்பு என்பது எவ்வளவு தீவிரமான, இன்னும் பெயரிடப்படாத மனநோய் என்பது தெரிகிறது.

இலக்கிய உலகில் பெண்ணுக்கு அளிக்கப்படும் இடம் எந்த வகையிலும் ஆணின் இடத்தைக் குலைக்கக் கூடாது, அது இரண்டாம் நிலையிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் தொடர்ந்து இருக்கும் ஒன்றுதான். ராஜம் கிருஷ்ணனின் மலர்கள் நாவலுக்கும், ஜெகச்சிற்பியனின் திருச்சிற்றம்பலம் நாவலுக்கும் முதல் பரிசு ஆனந்த விகடனில் பகிர்ந்து அளிக்கப்பட்டபோது, அவை தொடர்களாக ஆனந்த விகடனில் வெளிவரத் தொடங்கின. தாயற்று, தான் வளரும் உறவுக்காரர்களின் குடும்பத்தில் சிறுமைபடுத்தப்படுவதால் தாழ்வு மனப்பான்மையால் வாடும் ஒரு பெண்ணைப் பற்றிய கதையாகப் பல பக்கங்கள் கொண்ட நாவல் மலர்கள். திருச்சிற்றம்பலம் நாவலைவிட மிகப் பெரியது. மலர்கள் நாவலில் பாதிகூட முடிந்திராதபோது ராஜம் கிருஷ்ணனுக்குக் கடிதம் போயிற்று, ஜெகச்சிற்பியனின் நாவல் தொடர் இன்னும் ஓர் அத்தியாயத்துடன் முடிவதால் மலர்கள் நாவலையும் அடுத்த ஓர் அத்தியாயத்துடன் முடிக்கும்படி. ஒரே பரிசு பெற்ற ஓர் ஆண் எழுத்தாளரின் நாவல் முடியும்போது பெண் எழுத்தாளரின் நாவல் தொடர்ந்து வருவது அவரை அவமானப் படுத்துவதாகும் என்ற நோக்கில் எழுதப்பட்ட கடிதம். சென்னைக்கு வெளியே இருந்த ராஜம் கிருஷ்ணன் விரைந்து வந்து நாவலைத் தேர்ந்தெடுத்தவர்களில் ஒருவரான, கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதனை அணுகி, தனக்கு நியாயம் கிடைக்கும்படிச் செய்யக் கோரினார். கி.வா.ஜ. எடுத்துக் கூறிய பின்தான் மலர்கள் தொடர்ந்து தொடராக வந்தது.

பெண்களின் பொறுப்பு?

நாற்பதுகளில் குமுதினி திவான் மகள் நாவலை எழுதியபோது அதை வெளியிடப் பத்திரிகைகள் முன்வரவில்லை. காரணம் அதில் கலப்புத் திருமணம் இருந்தது. பிறகு அது தொடராக மணிக்கொடியில் வெளிவந்தது. ஒரு பிரபல பதிப்பாளர் ஒரு முறை ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபோது, என் பேராசிரியரைச் சந்திக்க வந்தார். அப்போது நானும் அங்கே இருந்ததால் என்னைப் பேராசிரியர் அறிமுகப்படுத்தியபோது, சம்பிரதாயத்துக்கு என்னையும் எழுதும்படிக் கூறி, என் எழுத்துக்களை வெளியிட ஆர்வமிருப்பதாகக் கூறினார். கூறிய உடனேயே நம் பண்பாட்டைக் குலைக்காமல் எழுதும் எதையும் தான் வெளியிடத் தயார் என்று சேர்த்துக்கொண்டார். என் எழுத்து பண்பாட்டைக் குலைப்பது என்ற முடிவுக்கு அவர் முதலிலேயே வந்திருந்தார் என்பது தவிர, பண்பாட்டை நிலைநிறுத்துவது பெண்களின் பொறுப்பு என்ற கருத்தும், பண்பாட்டுக்கான விளக்கம் ஒன்றும் அவரிடம் இருந்தது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவர் வெளியிடக்கூடிய புத்தகங்களை நான் எழுதவில்லை என்பது வேறு விஷயம்.

எழுத்துக்கான மரியாதை

எழுத்தை அதன் இலக்கியத் தன்மை கொண்டு அளந்த நல்ல கணங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்திருக்கின்றன. கௌரி அம்மாள் எழுதிய கடிவாளம் நாவலுக்கு வ.ரா. முன்னுரை எழுதினார். மங்கை என்ற பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த குகப்ரியைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. குமுதினி, சாவித்திரி அம்மாள், சரஸ்வதி அம்மாள், ராஜம் கிருஷ்ணன், குகப்ரியை, அநுத்தமா, ஆர். சூடாமணி போன்ற எழுத்தாளர்களின் நாவல்களையும் கதைகளையும் மட்டுமல்ல, அவர்கள் ஆங்கிலத்திலிருந்து செய்த பல மொழிபெயர்ப்புகளையும் வெளியிட கலைமகள் போன்ற பத்திரிகைகள் முன் வந்தன. குமுதினி போன்ற எழுத்தாளர்களுக்கு ஆங்கில இலக்கியத்துடன் நல்ல பரிச்சயம் இருந்ததுடன் மொழிபெயர்ப்பின் அவசியத்தையும் நன்கு உணர்ந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். ஆங்கில இலக்கியத் தின் பல நல்ல எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் சூடாமணி. எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் எழுதியவர். அப்படி எழுத என்னைத் தூண்டியவர். பல ஆண் எழுத்தாளர்கள் தீபாவளிக் கதைகளை தீபாவளி மலர்களுக்கும், அரைப் பக்க ஒரு பக்கக் கதைகள், மோதிரக் கதைகள் என்று மற்ற பத்திரிகைகளுக்கும் எழுதிக் குவித்துக் கொண்டிருந்தபோது தனக்குப் பிடித்ததை மட்டும் எழுதியதுடன், என் கவனத்தைச் சிறப்பான இலக்கியத்தின்பால் திருப்பியவர்.

இலக்கிய விமர்சனம் என்பது ஒருவரின் ஜனநாயக உரிமை என்பதில் யாருக்கும் மறுப்பேதும் இல்லை. பெண்-ஆண் என்ற இரு பாலாரின் எழுத்துக்களும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் அவை பெண்ணின் தோற்றத்தையும், “அளவுக்கு மீறிய” என்று சிலர் கணிக்கும் இச்சைகளையும், அவள் உடல் மற்றும் வாழ்வு குறித்த கற்பிதங்களையும் ஆதாரமாகக் கொண்ட இலக்கிய அபத்தங்களாக இருக்கக் கூடாது. குன்றுபதேசம் செய்வது தமிழ் இலக்கிய மற்றும் பதிப்பு உலகில் காலம்காலமாக இருக்கும் வியாதி. அதற்கு இலக்காகப் பெண்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் பேனாவை எடுத்து எழுதியோ, மேடையில் பேசியோ, வலைதளத்தில் எழுதியோ பெண்கள் உய்வுறப்படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை கருணை உள்ளம் இவர்களுக்கு!

பெண்கள் என்றால் உருகும் குணம். இத்தகையவர்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான். பெண்கள் தங்கள் வெளிப்பாட்டுக்கான வழிகளையும், தரங்களையும் நிர்ணயிக்க வல்லவர்கள். ஆசான்களைத் தேர்ந்தெடுக்கவும் ஒதுக்கவும் தெரிந்தவர்கள். பெண்களுக்காக இத்தனை சொல்பவர்கள், அவரவர் சொந்த வெளிப்பாடு உய்யும் வழியைப் பார்த்துக்கொண்டால் இலக்கியச் சரித்திரத்தில் இருக்கும் மௌனங்களையும், ஒதுக்கல்களையும் களைய முடியும். அப்படிக் களைய வேண்டியதுதான் இப்போதைய தேவையும்கூட.

இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

16 hours ago

இலக்கியம்

16 hours ago

இலக்கியம்

16 hours ago

இலக்கியம்

16 hours ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

மேலும்