ஆ.மாதவனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதும் மலையாள ஊடகங்களிலிருந்து நண்பர்கள் சிலர் தொலைபேசி வாயிலாக அழைத்தார்கள். எல்லாரிடமிருந்தும் வேறுபாடில்லாமல் ஒரே கேள்வி எழுந்தது, “இந்த எழுத்தாளருக்கு 82 வயது என்கிறீர்கள்.
நீண்ட காலமாக எழுதிக்கொண்டிருப்பவர் என்கிறீர்கள். இதுவரை அவருக்கு ஏன் சாகித்ய அகாடமி விருது அளிக்கப்படவில்லை?”. பதிலாக “அதுதான் இப்போது கொடுத்துவிட்டார்களே?” என்று மழுப்பத்தான் முடிந்தது. அது சமாளிப்பல்ல; ஒரு சீரிய இலக்கிய வாசகன் தனக்குத்தானே சொல்லிக்கொண்ட ஆறுதல்.
ஆ. மாதவன் 1950-களிலிருந்து எழுதிவருபவர். தொண்ணூறுகளின் நடுப்படுதிவரை அவருடைய படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. அவர் பரவலாக அறியப்பட்டவரல்லர். பெரும் அங்கீகாரங்கள் எதுவும் அவருக்கு அளிக்கப்பட்டதில்லை. 2010-ம் ஆண்டு விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் அளித்த விருதுதான் அவருக்கு வழங்கப்பட்ட குறிப்பிடும்படியான அங்கீகாரம்.
மூன்று நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் அவரிடமிருந்து நவீன இலக்கியத்துக்குக் கிடைத்திருக் கின்றன. பள்ளிப்பருவம் முதலே எழுத்தில் ஈடுபாடு கொண்டு எழுத்தாளர் ஆக விரும்பிய மாதவனுக்கு வாழ்க்கை அதற்கான வாய்ப்புகளைக் கஞ்சத்தனமாகவே அனுமதித்திருக்கிறது. ஒருவேளை அவர் முழு நேரமும் இலக்கியப் படைப்பாளியாக இருந்திருந்தால் அவரது படைப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம். இன்னும் அதிகமான விருதுகளும் அங்கீகாரங்களும் பெற்றிருக்கலாம்.
ஆனால் மாதவனின் நிறைமனம் அவற்றைப் பொருட்டாக நினைக்கவில்லை. தமிழ் இலக்கியத்தில் தனக்கென்று ஓர் இடம் இருக்கிறது என்ற உண்மையையே அவர் பெரிதாக எண்ணினார். அது முற்றிலும் உண்மை. தாமதமாகவேனும் ஒரு தேசிய அங்கீகாரம் அவரைத் தேடி வந்திருப்பது அதை உறுதிப்படுத்துகிறது.
திருவனந்தபுரத்தில் குடியேறிய நெல்லைத் தமிழ்க் குடும்பத்தின் சந்ததி ஆ. மாதவன். பள்ளியில் பயிற்று மொழியாக அமைந்தது மலையாளம். தனது ஆர்வத்தால் தமிழைக் கற்றுக்கொண்டவர். அன்றைய கால அளவில் மிகப் பரவலாகப் புழங்கிய திராவிட இயக்க இதழ்களே தன்னை வாசிக்கவும் எழுதவும் தூண்டின என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆரம்ப காலக் கதைகள் பலவும் திராவிட இயக்க இதழ்களிலேயே வெளிவந்திருக்கின்றன. அந்தக் கதைகள் அவருக்கு அந்த வட்டத்தில் நட்சத்திர மதிப்பையும் அளித்திருக்கின்றன.
அந்தக் கதைகளில் திராவிட இயக்க எழுத்துகளின் சாயல் தென்பட்டாலும் மாதவனின் கதைகள் மாறுபட்டவையே. அறுபதுகளில் இடதுசாரி இயக்க இதழ்களில் அவருடைய படைப்புகள் இடம்பெற்றன. அங்கும் அவரது கதைகள் இடதுசாரி யதார்த்தவாதக் கதைகளிலிருந்து விலகியவையாகவே இருந்தன. திராவிட இயக்கச் சார்பு அவருடைய மொழியையும் இடதுசாரி அரவணைப்பு அவருடைய சமூகப் பார்வைக்கும் அடிப்படையாக அமைந்தன. அதன் மீதே அவருடைய படைப்புலகம் உருவானது. தமிழும் மலையாளமும் புழங்கும் திருவனந்தபுர வாழ்க்கை அவரது படைப்புலகுக்குப் பண்பாட்டுச் செறிவைக் கூட்டியது. இரு மொழிகளின், இரு மரபுகளின் கலப்பில் உருவான வாழ்க்கையையே தனது படைப்பின் மையமும் பொருளுமாக ஏற்றுக்கொண்டார்.
வட்டார வழக்கை ஓர் இலக்கிய உத்தியாக அல்லாமல் தான் வாழும் வாழ்க்கைச் சூழல் மீதான நம்பிக்கையாகவே மேற்கொண்டார். அவரது மூன்று நாவல்களில் எந்த நாவலும், அவர் எழுதிய எழுபதுக்கும் அதிகமான சிறுகதைகளில் எதுவும் அவரது வாழ்க்கைச் சூழலைத் தாண்டி எழுதப்பட்டதல்ல. குறிப்பிட்ட வட்டார வாழ்க்கையை முன்வைக்கும் படைப்புகள் அதைக் கடந்து உலகளாவிய மனித வாழ்க்கையின் கதையாக மாறும் விந்தை அவரது எழுத்துகளில் உயிர்ப்புடன் செயல்படுகிறது. இதுவே ஒரு படைப்புக் கலைஞராக அவர் மதிக்கப்படுவதற்கான ஆதாரம்.
மாதவன் நாவலாசிரியராகவும் சிறுகதையாளராகவும் இயங்கியவர். எனினும் அவரை முதன்மையாகச் சிறுகதையாளர் என்றே குறிப்பிட வேண்டும். அவரது சிறுகதைகள் யதார்த்தவாதப் பிரிவைச் சார்ந்தவை. அன்றாட வாழ்வில் நமது பார்வைக்குத் தட்டுப்படும் மனிதர்களும் நிகழ்ச்சிகளுமே அவரது புனைவுலகிலும் இடம்பெறுகின்றன. அவை நமக்குச் சாதாரண மனித நடவடிக்கைகளாக மட்டுமே பார்வையில் பட்டுக் கலைந்துபோகின்றன.
நமது பார்வைக்கு அகப்படாத அந்த உலகின் இயக்கத்தை மையமாகக் கொண்டது மாதவனின் கலைப்பார்வை. அந்தச் செயல்களில் காணப்படும் நன்மையும் தீமையும் அந்த மனிதர்களின் இயல்பு என்று எந்த மிகையும் சார்பும் இல்லாமல் சித்தரிக்கப்படுகின்றன. குற்றமும் காமமும் பழிவாங்கலும் இயல்பான மனித குணங்களாகவே முன்வைக்கப்படுகின்றன. அவை பற்றி நாம் கொண்டிருக்கும் கருத்துகளை அவர்கள் மீது சுமத்திப் பார்க்க அனுமதிக்காத வகையிலேயே அந்தச் சித்தரிப்புகள் அமைகின்றன.
திருவனந்தபுரம் நகரத்தின் மிகப் பெரும் சந்தையான சாலைக் கம்போளத்தில் கடை வைத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தவர். அந்த வணிக உலகில் கண்டவையும் கேட்டவையும் அவருக்குள்ளிருந்த எழுத்தாளனுக்கு இயல்பாகக் கிடைத்த மூலப் பொருட்கள். சாலைப் பின்னணியில் அவர் உருவாக்கிய கதைகளே அவரைத் தேர்ந்த சிறுகதையாளராக நிலைநிறுத்தின எனலாம். அவரது தனித்துவத்தைக் கவனப்படுத்தியது 1974-ல் வெளிவந்த ‘கடைத் தெரு கதைகள்’.
‘புனலும் மணலும்’, ‘கிருஷ்ணப் பருந்து’, ‘தூவானம்’ ஆகியவை ஆ.மாதவன் எழுதிய நாவல்கள். சிறுகதைகளுடன் ஒப்பிடும்போது அவரது நாவல்கள் சற்று சோபை குறைந்தவைதாம். ஆனால் அவை எடுத்துக்கொண்ட பொருள் காரணமாகத் தவிர்க்கவியலாத இடத்தைப் பெற்றிருப்பவை. குறிப்பாக முதல் இரண்டு நாவல்கள். ‘புனலும் மணலும்’ நாவல் திருவனந்தபுரம் நகரத்துக்குள் ஓடும் கரமனையாற்றின் கரையில் வாழும் மனிதர்களைப் பற்றியது.
உருவ அழகில்லாத பங்கியின் மேல் அவளுடைய அம்மாவின் துணைவரான அங்குசாமி மூப்பன் காட்டும் உதாசீனமும் வன்மமும் அவை ஏற்படுத்தும் சிக்கலுமே நாவலின் மையம். அதனூடே இயற்கையை மனிதன் தனது பேராசைக்கு இரையாக்கிக்கொள்ளும் மூர்க்கத்தன்மை பற்றிய துணைப் பிரதியும் இயங்குகிறது. ஆண் பெண் உறவின் தீராச் சிக்கலைக் காமத்தின் பின்புலத்தில் விவாதிக்கும் நாவல் ‘கிருஷ்ணப் பருந்து’. வடிவ ஒழுங்கும் நுண்மையான சித்தரிப்பும் கொண்டது. தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாக அதைத் தயக்கமின்றிக் குறிப்பிடலாம்.
அநேகமாக ஆ.மாதவனின் படைப்புலகின் களம் திருவனந்தபுரம் நகரத்தின் சாலைக் கம்போளமும் அதன் சுற்றுப்புறங்களுந்தான். இந்த இடத்தையும் மனிதர்களையும் மாதவனையும் இன்னொரு திருவனந்தபுரத்து எழுத்தாளரான நீல.பத்மநாபனையும்போல மலையாள எழுத்தாளர்கள்கூட உயிர்ப்புடன் சித்தரித்ததில்லை. இரு பண்பாடுகளின் சாரம் இந்த எழுத்துகளில் ஊறியிருப்பதுதான் காரணம் என்பதும் தெளிவாகிறது.
ஆ.மாதவன் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தபோது அளிக்கப்படாமல் காலந்தாழ்த்தி விருது வழங்கப் பட்டிருப்பது இலக்கிய வாசகர்களுக்குக் குறைதான். எனினும் அவரது வாழ்நாளிலேயே இந்தத் தேசியப் பெருமை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறையை நிவர்த்திசெய்கிறது. நவீனத் தமிழின் தனித்துவமான படைப்பாளி ஒருவர் மேலும் அதிகமான வாசகர்களின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட இந்த விருது உதவும். இந்த விருதின் மூலம் தனது மனத்தில் நீண்ட காலமாக எழுதத் திட்டமிருக்கும் பெரும் நாவலைப் பூர்த்தி செய்யும் உத்வேகம் ஆ. மாதவனுக்குத் தோன்றலாம். இரண்டும் தமிழுக்கு வளம் சேர்ப்பவையே.
கட்டுரையாளர் -
கவிஞர், நாவலாசிரியர்.
தொடர்புக்கு: nsukumaran@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
2 months ago