மேற்கிலிருந்து சென்ற நூற்றாண்டில் அறிமுகமானாலும் சிறுகதை வடிவத்தில் மிகச் சீக்கிரத்திலேயே மேதைமை வாய்ந்த படைப்புகளும் படைப்பாளிகளும் வெளிப்பட்ட மொழி தமிழாகும். உரைநடை இலக்கியத்தின் தீராத யுவப்பருவத்தைத் தக்கவைத்திருக்கும் வடிவம் சிறுகதை என்று சொல்லலாம். இன்னமும் மிச்சமிருக்கும் களங்கமின்மை, வியப்பு, அனுபவங்களைக் கூர்மையாகப் பார்க்கும் பார்வை, விதவிதமான களங்களையும், வெளிப்பாட்டு முறைகளையும் சாகசத்தோடு முயன்றுபார்க்கக்கூடிய களம் சிறுகதையே. தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் வெளிப்பட்ட சாதனைகளின் பின்னணியில் பார்க்கும்போது, தற்காலத்தில் எழுதப்படும் சிறுகதைகளில் புதுமையும் சாகசமும் கூர்மையும் குன்றித் தேங்கியிருக்கும் நிலையை உணர முடிகிறது. எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்த்திருக்கும் இரண்டு இளம் சிங்களச் சிறுகதைப் படைப்பாளிகளான தக்ஷிலா ஸ்வர்ணமாலி, இஸுரு சரமர சோமவீர இருவரின் சிறுகதைத் தொகுப்புகளையும் ஒருசேரப் படிப்பது இன்றைய சிறுகதை வடிவம் குறித்துப் பிரதிபலிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது.
வேற்றுக் கலாச்சாரம், வேற்று மொழிப் பின்னணியிலிருந்து மொழிபெயர்க்கப்படும் கதைகளைப் படிப்பதற்கான வாசகத் தேவை என்னவென்பதையும் தொகுத்துக்கொள்கிறேன். நமக்குப் பரிச்சயமற்ற நிலம், பழக்கவழக்கங்கள், உணவு, ஆண் - பெண் உறவு, நடத்தைகள் ஆகியவற்றின் மீது நமக்கு இருக்கும் ஈர்ப்பும், அவற்றைத் தெரிந்துகொள்வதற்கு நமக்கு இருக்கும் குறுகுறுப்பும்தான் அடிப்படை என்று தோன்றுகிறது. சிங்கள எழுத்தாளர்கள் எழுதியிருக்கும் இந்தச் சிறுகதைகள், தமிழகத் தமிழர்களின் உணர்வுக்கு நெருக்கமான ஈழத் தமிழர்களைப் பெரிதும் பாதித்த சிங்களப் பேரினவாதம் நிகழ்ந்த நிலத்திலிருந்து... சிங்களப் பின்னணியிலிருந்து எழுதப்பட்டவை. ஆனாலும், இவர்கள் இருவரின் சிறுகதைகளிலும் போர், அரசியல் ஆகியவற்றின் சின்னச் சின்னத் தடயங்கள் தென்பட்டாலும் கதைகளின் மையம் போரோ, இலங்கையைப் பாரதூரமாகப் பாதித்த அரசியலோ அல்ல. இந்தச் சிறுகதைகளைப் படிக்கும்போது, சிங்களர்களின் வாழ்க்கை, அவர்களது நிலத்தின் இயற்கை, பழக்க வழக்கங்கள் கேரளத்தை ஒத்திருப்பதுபோலத் தோன்றுகின்றன. ஆண்-பெண் உறவுகளில் கூடுதலான சுதந்திரமும் நெகிழ்ச்சியும் உருவாகியிருக்கும் கலாச்சாரமாக இந்தக் கதைகளைப் படிக்கும்போது தோன்றுகிறது. ரப்பரும் சிகப்பரிசியும் மேடுபள்ளமாக இருக்கும் தோட்டத்தின் நிழல்களில் இருக்கும் வீடுகளும் காட்சியாக நமக்குத் தெரிகின்றன. இந்த வித்தியாசங்களைக் கடந்தால் அங்கே ஆணும் பெண்ணும் அன்பும் கோபதாபமும் வேற்றுமைகளும் வெறுமையும் தனிமையும் எனப் பொதுவான வஸ்துகள்தான் இந்தக் கதைகளிலும் நிறைந்திருக்கின்றன.
நமது வாழ்விருப்பில் நுழையும் ஒரு சுழிப்பு, ஒரு அதீத தருணம், ஒரு விசித்திர இழுப்பு, ஒரு திருப்புமுனை, ஒரு சந்திப்பு என்ற அடிப்படையில் தக்ஷிலா ஸ்வர்ணமாலி, இஸுரு சரமர சோமவீர இருவருக்கும் சிறுகதை சார்ந்து அழகியல், கச்சிதம் இரண்டும் கைவந்திருக்கிறது. மங்கிய மைத்தீற்றல்களால் புகைமூட்டமாகக் கதாபாத்திரங்களை, அவர்கள் ஆண், பெண் என்பதே மெதுவாகத் தெரிவதுபோல அந்தரங்க மொழியில் சன்னமான தொனியில் தக்ஷிலா ஸ்வர்ணமாலி தன் கதைகளை உருவாக்குகிறார். அந்தரத்தில் கதையை ஆரம்பித்து உரையாடல் வழியாகவே கதை நகர்ந்து பூர்த்தியாகியும் விடுகிறது. பொது வரையறைக்கு அப்பால் உள்ள உறவுகளுக்குள் இருக்கும் தவிப்பும் மௌனங்களும் உரையாடும் கதைகள் இவருடையவை என்று சொல்லிவிட முடியும். ‘அந்திமக் காலத்தின் இறுதி நேசம்’ கதையும், ‘பொட்டு’ கதையும் அபூர்வமானவை.
ஒரு பகல் கனவைப் போல ‘அந்திமக் காலத்தின் இறுதி நேசம்’ சிறுகதை ஆரம்பிக்கிறது. மரணத்தை நோக்கி இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிழவர், சக்கர நாற்காலியில் வீட்டு வாசலில் ஒரு இளம்பெண்ணைப் பார்த்து தனது இறுதி நேசத்தைப் பகிரும் கதை இது. ஒரு அற்புதம்போல இந்தக் கதை நிகழ்கிறது. ஆனால், எதையோ பகிர்வதற்காக யாருக்காகவோ தனிமைவாசத்தில் காத்திருக்கும் எல்லோருடைய எதார்த்தத்தைத் தீண்டுவதாகவும் இந்தக் கதை இருக்கிறது. உள்ளடக்கம், வெளிப்பாடு இரண்டிலும் புதுமை, அதீதம் என்ற எதையும் தக்ஷிலா ஸ்வர்ணமாலி முயலவில்லை. ஆனால், இந்தக் கதைகளில் கேட்கும் ஓர் அந்தரங்கக் குரல் அபூர்வமானது.
இஸுரு சரமர சோமவீரவை வன்மையான அனுபவங்களுக்குள் செல்லும் மொழியைக் கொண்ட வலுவான சிறுகதையாளர் என்று சொல்ல முடியும். கதை தொடங்கும்போதே திண்மையான குரல் கேட்கிறது. வேறு வேறு களங்கள், உள்ளடக்கங்களுக்குள் புறப்படும் புதுமை நாட்டமும், அதே வேளையில் குழந்தைத்தனமான கண்களும், கூர்ந்த பார்வையும் இவரின் கதைகளில் தொழிற்படுகின்றன. ‘திருமதி பெரேரா’ சிறுகதை உள்ளே சிரிப்பைக் கொண்ட மிகத் துயரமான கதை. தன்பாலின உறவில் ஈடுபாடுடைய ஆணின், பொதுச் சமூகத்தில் வெளிப்படுத்த முடியாத தாபமும் துயரமும் கலாபூர்வமாக வெளிப்படும் கதைகள் ‘நீரணங்குத் தீரம்’, ‘அன்பின் நிமாலிக்கு’. நீரணங்குகள் குறித்து தேவதைக் கதைகளைப் போலத் தொடங்கி, அதை வெளிப்படுத்த முடியாத பாலியல் தேர்வுடன் இணைப்பதில் சோமவீர பிரமாதமாக வெற்றி கண்டிருக்கிறார். ‘எனது மீன்’, ‘நீலப் பூச் சட்டை’ கதைகள் சோமவீரவின் சாத்தியங்களைத் தெரியப்படுத்துபவை.
பெரிதாக மாறாத, அலுப்பான அன்றாடத்துக்குள் நுழையும் விசித்திர விலங்கு போன்று நம்மைப் பீடிக்கும் ஒரு தருணத்தை, ஒரு பருவத்தை, ஒரு அச்சத்தை, ஒரு கனவை, ஒரு ஆசையைத்தான் சிறுகதை என்னும் வடிவம் கையகப்படுத்துகிறதுபோலும். கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான ரிஷான் ஷெரிப் தனது மொழிபெயர்ப்பின் வழியாகப் போருக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்ட சிங்கள அன்றாடங்களை ஆண், பெண் கலைஞர்கள் இருவரின் பார்வைகளிலிருந்தும் நமக்கு விண்டு அளித்துள்ளார்.
- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in
**************************************
அந்திமக் காலத்தின் இறுதி நேசம்
தக்ஷிலா ஸ்வர்ணமாலி
திருமதி பெரேரா
இஸுரு சரமர சோமவீர
தமிழில்: எம்.ரிஷான் ஷெரிப்
ஆதிரை வெளியீடு
விற்பனை உரிமை: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: ரூ.150
முக்கிய செய்திகள்
இலக்கியம்
15 hours ago
இலக்கியம்
15 hours ago
இலக்கியம்
15 hours ago
இலக்கியம்
15 hours ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago