நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞர்களுள் ஒருவரான ஞானக்கூத்தன், முன்னோடித்தன்மையைத் தாண்டியும் முக்கியத்துவம் கொண்ட கவிஞர்களுள் ஒருவர். 18 வயதில் தோத்திரப் பாடல்களுடன் தொடங்கிய அவரது கவிதை இயக்கம் 2016-ல் அவர் மரணமடையும் வரை 60 ஆண்டு காலம் நீடித்தது. இந்த நெடிய இலக்கியச் செயல்பாட்டின் ஆவணமாக 2018-ல் வெளியான ‘ஞானக்கூத்தன் கவிதைகள்’ நூல் திகழ்கிறது. ‘நடை’, ‘கசடதபற’ காலங்களில் எழுதிய கவிதைகளுக்காக அதிகம் அறியப்படும் ஞானக்கூத்தன், அந்தக் காலகட்டத்துக்குப் பிறகுதான் அதிகமாக எழுதியிருக்கிறார். தன் இறுதிக் காலம் வரை தொய்வின்றி எழுதியிருக்கிறார் என்பதன் சாட்சியம்தான் இந்தப் பெருந்தொகுப்பு.
நவீனத் தமிழ்க் கவிதை வாசகர்களுக்கு ஞானக்கூத்தன் என்றால், உடனடியாக அவரது பகடி, நகைச்சுவைக் கவிதைகளும் கதைசொல்லும் கவிதைகளும்தான் நினைவுக்கு வரும். இந்தப் பண்புகளெல்லாம் அவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்தாலும் அவரது கவிதைச் செயல்பாட்டின் பிற்பகுதியில் அழகியல் அம்சம் கொண்ட கவிதைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. அவரது கவிச் செயல்பாட்டின் முற்பகுதியில் எழுதப்பட்ட ‘அழிவுப்பாதை’ போன்ற ஒருசில கவிதைகளை விட்டுவிட்டால், பிற்பகுதியில் எழுதப்பட்ட கவிதைகள்தான் செறிவும் அழகும் கூடியவையாக இருக்கின்றன. பெரும்பாலான கவிஞர்களுக்கு ஏற்படும் ‘சென்றுதேய்ந்திறுதல்’ ஞானக்கூத்தனுக்கு ஏற்படவில்லை. அப்படி ஆகாமல் அவரது கவிதையானது தொடர்ந்து பரிணாமம் அடைந்துகொண்டே இருந்திருக்கிறது. இதனால், அவரது கவிமொழி ஒரே மாதிரி இல்லாமல் பலவகைப்பட்டதாக இருக்கிறது. இதனால், ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது சலிப்பு ஏற்படுவதில்லை.
பார்வைக் கவிதைகள்
எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கின்றன ஞானக்கூத்தனின் கவிதைகள். இந்தப் பார்வையானது ஒன்று கதைக் கவிதையாக மாறுகிறது, இல்லையென்றால் காட்சிக் கவிதையாக மாறுகிறது. நவீனத் தமிழ்க் கவிதையில் கதைசொல்லல் என்பது விலக்கி வைக்கப்பட்ட வஸ்துவாக இருந்தாலும், ஞானக்கூத்தன் இறுதி வரை கதை சொல்லிக்கொண்டிருந்தார். அசோகமித்திரனின் சிறுகதைகளில் காணப்படும் பண்பை இந்தக் கவிதைகளில் காண முடியும். ஒருவகையில் அசோகமித்திரனின் கவிதை அவதாரமாகக்கூட ஞானக்கூத்தனைக் கருத முடியும்.
மனிதர்களைத் தீராமல் உற்றுநோக்கிக்கொண்டே இருந்திருக்கிறார் ஞானக்கூத்தன். வீட்டுக்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, எங்கெங்கும் இந்த உற்றுநோக்கல் தொடர்கிறது. மனிதர்களை மட்டுமல்ல; பொருட்கள், விலங்குகள் என்று அவரது பார்வை படாத இடமே இல்லை. அந்த உற்றுநோக்கல் கனிந்து கவிதையாகிறது, அந்தக் கவித்துவம் முறுகிய கணத்தில் ஞானக்கூத்தனின் கண்கள் வழியாக நாம் அந்தக் காட்சிகளைப் பார்க்கிறோம். ‘தண்ணீரை விட்டு முதல் படிக்கட்டில்/ வந்தமர்ந்த ஈரத் தவளைகள் தங்கள் மணித் தக்காளிக் கண்கள் கொண்டு/ என்னைப் பார்த்துத் தாடைகளால் ஏளனம் செய்கின்றன’ (சேலையில் வரைந்த சரீரம்) என்ற வரிகள் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
இணை நிகழ்வு
இயற்கை தன்பாட்டில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தன் கண்ணில் படும் காட்சித் துணுக்குக்கு அர்த்தமேற்றுகிறார் கவிஞர். அது அர்த்தமாக மட்டுமல்லாமல், இணை நிகழ்வாக ஆகிவிடுகிறது. ‘படுத்துக் கிடந்தன மேகங்கள்/ போகும் இடம் எதுவென்று/ முடிவு செய்யாமல்’ (எழுந்துகொள்கிறாயா?) என்பது போன்ற வரிகள் இந்த அர்த்தமூட்டலுக்கான தூய நிலையைக் கொண்டிருக்கின்றன. தனது விளக்கத்துடன் கவிஞர் இயற்கையை அணுகினாலும் அதன் அர்த்தமின்மையையும் தூய காட்சிநிலையாக நம்மால் தரிசிக்க முடிகிறது. இது தவிர, அப்படியே காட்சியைப் பதிவும் செய்கிறார். ‘அசையாமல் கிடக்கும் ஏரியில்/ சிறிய பூச்சிகளின் கால்கள்/ எழுப்பிய அலைகள் ஓரடி தூரமும் போகவில்லை’ (ஏரி) எனும்போது, நமது ஞாபக அடுக்கில் தேங்கிய இதுபோன்ற அனுபவங்கள் ஒரு முழு ரூபம் கொண்டு நம் நாவில் தித்திக்கின்றன. ஒரு பாகல் செடியின் தோற்றம் முதல் அதன் வளர்ச்சி, வியாபகம் என்று இறுதியில் உணவுக்காகப் பாகற்காய் நறுக்கப்படுவது வரை அதன் வாழ்க்கையை ஞானக்கூத்தன் கூடுதல் சொற்கள் இன்றி, அலங்காரம் இன்றி அடுக்கும்போது, அங்கே பாகலின் பச்சை வாசனையும் கசப்புச் சுவையும் ஒருங்கே கவிதையில் பிறந்து நம்மைத் தழுவுகின்றன (பாகல்). இன்னொரு கவிதையில் ‘விளக்கில் தீ வெள்ளரி விதைபோல் எரிகிறது’ (ஓசை) எனும்போது காட்சி இன்பமும் சொல்லின்பமும் ஒன்றுசேர்கின்றன. ஒருவகையில், இரண்டும் பிரிக்க முடியாதவைதானே!
பிற்காலக் கவிதைகளில் மனித வாழ்வின் இருப்பு குறித்த விசாரணையும் ஞானக்கூத்தனிடம் சேர்ந்துகொள்கிறது. இது இருத்தலியல் தொனியில் இல்லாமல், கீழை நாட்டுத் தத்துவார்த்த தொனியில் ஒலிக்கிறது. இந்தியக் கவித்துவ, தத்துவ மரபில் ஞானக்கூத்தனுக்கு இருந்த பிடிப்பின் காரணமாக இது சாத்தியப்பட்டிருக்கிறது. குருதியின் குரலை ஒரு நாயின் குரல்போல உருவகித்து எழுதிய கவிதையில் ‘தன்னையும் ஒரு மறுகரையையும்/ பிரிக்கும்/ ஒரு நதியைக் கடக்க அது குரைக்கிறது’ (குருதியின் குரல்) என்ற கவிதையில் இது நன்றாக வெளிப்படுகிறது. ‘ரயில்வே நிலையத்தின்/ மரத்தடி நிழலில்/ படுத்துக் கிடக்கும் இவன்/ யார் யாருக்கெல்லாம்/ அயல் ஆனானோ?’ (அயல்) என்ற வரிகளும் இதற்கு உதாரணம். ‘குன்றுகளைக் காட்டிலும் கனமுள்ள சோகங்களைத்/ தூக்கிக் கொண்டு நடக்க மனதில் பயிற்சி வேண்டாமா?’ (பயிற்சி) என்பது போன்ற வரிகளை அவரது தொடக்க காலக் கவிதைகளில் அநேகமாகக் காணவே முடியாது. ‘உலகம் இருக்கிறதா இல்லையா என்று/ ஆழ்மனதில் எல்லோருக்கும் ஒரு சந்தேகம்/ அதனால்தான் எதையும்/ தொட்டுப் பார்க்கத் தோன்றுகிறது’ (ஸ்பரிசம்) என்ற வரிகளில் மேலைத் தத்துவமும் கீழைத் தத்துவமும் ஒன்றாக முயங்குகின்றன.
தமிழில் முக்கியக் கவிஞர்களின் கணிசமான கவிதைகளில் ஒரு பெண் பாத்திரம் இடம்பெறும். நகுலனுக்கு ‘சுசீலா’, கலாப்ரியாவுக்கு ‘சசி’ என்றால், ஞானக்கூத்தனுக்கு ‘ஞானாட்சரி’. இந்த ஞானாட்சரி வெறும் காதலியாக மட்டுமல்ல; அப்பாலை உலகத்திலிருந்து நடுவே இருக்கும் விலக்க முடியாத திரையைத் தாண்டியும் ஞானக்கூத்தனை நோக்கி நீளும் விரலாகவும் இருக்கிறாள். ‘பின்தொடர வேண்டிய/ பெண்மணி ஒருவர் என்/ பின்னே வராதது போல/ நெஞ்சிலொரு கற்பனை’ (பின் தொடராத பயணி) வரிகளில் வரும் பெண்மணி பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் ஞானாட்சரியாகக் கூட இருக்கலாம்.
ஞானக்கூத்தனின் அரசியல்
சந்தேகமில்லாமல் நவீனக் கவிதையின் பெருங்கவிஞர்களுள் ஒருவர் ஞானக்கூத்தன். மேசை நடராசரில் ஆரம்பித்துக் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் வரை அவரது கவிதையில் இடம்பெற்றிருக்கிறார்கள். சாமானியர்கள் மீதான கரிசனமும் அக்கறையும் ஞானக்கூத்தனின் கவிதைகளில் நிரம்பியிருக்கின்றன. ஆனால், அரசியல் – அரசியலர்கள் தொடர்பான அவருடைய பார்வையை விமர்சனம் என்று தட்டுக்குள் கடந்துவிட முடிவதில்லை. குறிப்பாக, தமிழ் அரசியல் அல்லது திராவிட அரசியல் தொடர்பான வெறுப்புணர்வு எவ்வளவு முக்கியமான பிரச்சினையையும்கூட இங்கே அசட்டையாகப் பார்க்கப் பழகிவிட்டிருக்கிறது என்பதற்கு ஞானக்கூத்தனின் புகழ்பெற்ற ‘எனக்கும் தமிழ்தான் மூச்சு/ ஆனால்/ பிறர் மேல் அதை விட மாட்டேன்’ கவிதையை உதாரணமாகச் சொல்லலாம். இந்தி ஆதிக்க உணர்வுக்கும், இந்தித் திணிப்புக்கும் எதிராகத் தமிழகம் கொந்தளிப்பில் உழன்றுகொண்டிருந்த காலகட்டத்தில் வெளியான கவிதை இது. தமிழ் மொழியா பிற மொழிகளை ஆதிக்கம் செய்கிறது?
கால விளையாட்டு
சில கவிதைகளில் ஞானக்கூத்தன் காலத்தை வைத்து விளையாடுகிறார். கடந்த காலத்தில் சென்று எதிர்காலத்தைப் பார்க்கிறார், நிகழ்காலத்தை நிறுத்தி வைக்கிறார். ‘மாயவெளி’, ‘அந்தப் பக்கமாய்ப் போகிறவன்’, ‘அழிவுப்பாதை’, ‘மழைநாள் திவசம்’, ‘தொல் பசி’ போன்ற கவிதைகள் இதற்கு உதாரணம். ‘பசி கொடியது. அதனினும் கொடுமை/ கடந்த காலத்துக்குப் போய் பசித்திருப்பது’ என்பது இதன் உச்சம். ஞானக்கூத்தனின் மிகச் சிறந்த கவிதை என்று சொல்லத்தக்க ‘அழிவுப்பாதை’ கவிதையில் காலம் சிறுசிறு நறுக்குகளாக வெட்டப்படுகிறது. படச் சுருளில் பதிவான காட்சிகள்போல முன்பின் எல்லாம் தெரிகின்றன. பாம்பாட்டியை வேடிக்கை பார்க்கச் சென்றவன் பாம்பாட்டியின் வசியத்துக்கு அகப்பட்டுவிடுகிறான். அது ஒரு மாயவசீகரிப்பு. அதனுள்ளிருந்து காட்சிகளைப் பார்ப்பது வேறு வகையான பார்வை. ‘மேயக் குனிந்த மாடு மாற்றிற்று/ உட்கார்ந்திருந்தவன் எழுந்து மாற்றினான்/ பறந்த கூளம் விழுந்து மாற்றிற்று’ என்று ஒவ்வொன்றும் தங்கள் நிலைகளை மாற்றுவதன் தொடர்ச்சியாகவே நிகழ்காலம் உயிர்கொள்கிறது. ‘மகுடியின் தலையே ஒருநாக பூஷணம்/ நீல நித்திலத் திராவக மயக்கம்’ என்று ஞானக்கூத்தனின் கவிமொழி பித்துக்கொள்கிறது. அவரது வழக்கமான நடையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நடையைக் கொண்டது இந்தக் கவிதை. இந்தக் கவிதையை அணுஅணுவாக அவிழ்த்துப் பார்க்க முயல்வதே பெரும் அனுபவம்.
இந்தத் தொகுப்பு ஞானக்கூத்தன் என்கிற கவியாளுமையை முழுமையாக நம்மிடம் முன்வைக்கும் சிறந்த நூல். நவீன கவிதை வாசகர் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய தொகுப்பு இது. இதைச் சிறந்த முறையில் தொகுத்திருக்கும் ஞானக்கூத்தனின் புதல்வர் திவாகர் ரங்கநாதனும், நல்ல பதிப்பாகக் கொண்டுவந்திருக்கும் காலச்சுவடு பதிப்பகமும் பாராட்டுக்குரியவர்கள்.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in
---------------------
ஞானக்கூத்தன் கவிதைகள்
ஞானக்கூத்தன்
பதிப்பாசிரியர்: திவாகர் ரங்கநாதன்
காலச்சுவடு வெளியீடு
669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001.
தொடர்புக்கு: 96777 78863
விலை: ரூ.895
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago