சிறார்களுக்கான அறிவியல் அறிமுகக் கதைகள்: குழந்தைகளுக்குப் பிடிக்கும் அழகான புத்தகங்கள்

By பால்நிலவன்

நமது அன்றாட வாழ்வில் அறிவியல் கண்டுபிடிப்புகளின் செய்திகளை எளிமையாகச் சொல்லும் புத்தகங்கள் மிகமிகக் குறைவே. எழுபதுகளின் இறுதிகளில் ''குழந்தைகள் கலைக்களஞ்சியம்'' என்ற வரிசையில் தமிழக அரசு வெளியிட்ட வண்ணமயமான உயர்ரக காகிதங்களில் அச்சிடப்பட்டு வெளியான மிகச்சிறந்த தயாரிப்புகள் 10 தொகுதிகள் வெளிவந்தன. அதன்பிறகு அதைப்போன்ற சிறந்த புத்தகங்கள் வெளிவருவது அரிதாகிவிட்டன. பள்ளிப் புத்தகங்களுக்கு வெளியே தேவைப்படும் சுதந்திரமான ஒரு வாசிப்புக்கான அத்தகைய முயற்சிகள் அதன்பிறகு ஏனோ தொடர்ந்து நடைபெறவில்லை.

தற்போது நீலவால்குருவி பதிப்பகம் அறிவியல் செய்திகளை எளிமையாகத் தருதல் என்ற முனைப்போடு அழகழகான படங்களோடு அறிவியல் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. எண்பதுகளில் சோவியத் ரஷ்யாவிலிருந்து முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட அறிவியல், வரலாறு, இலக்கியம் சார்ந்த வரிசைகளை வெளியிட்டன. முன்னேற்றப் பதிப்பக வெளியீடுகளில் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களை மட்டும் நீலவால் குருவி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய எழுத்தாளர்களின் அறிவியல் நூல்களை எளிய தமிழில் தந்திருப்பவர் எஸ்.தோதாத்ரி. வகைவகையான தலைப்புகளில் சிறார்களுக்கான அறிவியல் அறிமுகக் கதைகள் என்ற வரிசையை உருவாக்கி இப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்புத்தகங்களின் தனிச்சிறப்பு என்றால் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட ஓவியங்களைத் தவறாமல் பயன்படுத்தியுள்ளனர் என்பதுதான். குழந்தைகளை ஈர்க்கும் வகையில் புதிய பொலிவும் அழகோடும் அன்றாட வாழ்வில் அறிவியல் உண்மைகளை குழந்தைகளைப் பிடிக்கும் வகையில் இப்புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும் (பக்.72, விலை ரூ.80) என்ற புத்தகம் காடுகளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை மிகவும் ஆழமாகப் பேசிச் செல்கிறது. வனப்பகுதிகள், நதி, பாலைவனம், ஸ்தெப்பிவெளிகள் போன்றவற்றைக் கொண்டு மனிதன் எவ்வாறு தனது ராஜ்ஜியத்தைக் கட்டியமைத்தான் என்பதை சுவாரஸ்யமாக எடுத்துச் சொல்கின்றது.

அற்புதமான களஞ்சியம் என்ற புத்தகம் (பக்.66, விலை ரூ.70) ரஷ்ய விவசாயம் குறித்துப் பேசினாலும் அது நமது நாட்டுக்கும் பொருந்துவதாகவே உள்ளது. கோதுமை எவ்வாறு தரிசு நிலத்தில் பயிரிடப்பட்டது, கோதுமை தானியத்தின் நண்பர்களும் எதிரிகளும் போன்ற கட்டுரைகளில் கோதுமையை மாற்றி நெல் எனப் போட்டுக்கொள்ளலாம். ஏனெனில் இங்கும் நமது நெல் வேளாண்மைக்கு எலிதான் எதிரி. அங்கும் கோதுமை வேளாண்மைக்கு எலிதான் எதிரி. தானியத்தின் பயணம், நகரத்திற்கு எவ்வாறு ரொட்டி கிடைக்கிறது கட்டுரை முழுக்க முழுக்க உணவு உற்பத்தியும் உணவு விநியோகத்தையும் கிராமப் பொருளாதாரத்திற்கும் நகர வாழ்க்கைக்கமான உறவுகளைப் பேசுகின்றன.

சாமான்கள் எங்கிருந்து வருகின்றன (பக்.88, விலை ரூ.100) என்ற புத்தகம் வாழ்வில் நமக்குத் தேவையான பலவிதமான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைப் பற்றி விரிவாக எடுத்துக்கூறுகினறன. மண்பாண்டத் தொழிலிலிருந்து மாட்டுவண்டி சக்கர உருளைகள் வரை சாதாரண வண்டிகள் செல்லும் கப்பிச் சாலை முதல் ரயில் வண்டிகள் செல்லும் எஃகு தண்டவாளங்கள் வரைக்குமான பணிகளைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லும் முறை அலாதியானது.

பள்ளிப் பைக்கட்டு (பக்.64, விலை ரூ.70) புத்தகம் இந்த வரிசையில் இடம்பெற்ற மற்ற புத்தகங்களிலிருந்து சற்றே மாறுபட்டுள்ளது. சாதாரணமாக ஒரு பள்ளி மாணவனின் பைக்குள் இடம்பெறும் பென்சில், நோட்டுப்புத்தகம் போன்றவை தயாராகும் முறைகளை எடுத்துச் சொல்கிறது. இவையெல்லாம் வனப்பகுதியில் உள்ள மரங்களிலிருந்தே தயாராகின்றன என்பதை ஒரு மாணவன் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மெனக்கெட்டுள்ள விதம் சிறப்பு.

இயற்கையின் நெடுங்கணக்கு (பக்.48, விலை ரூ.60) புத்தகம், மனிதன் இயற்கையின் அத்தனை மாற்றங்களையும் அறிந்துகொள்ளாமல் அவன் இந்த பூமியில் நன்றாக வாழமுடியாது என்பதை வலியுறுத்துகிறது. குளிர்காலத்திலிருந்து மழைக்காலம் மாறும் விதம், மேகத்திலிருந்து ஆலங்கட்டி மழை உருவாகும் விதம் என நமக்கு நன்கு தெரிந்தவற்றைப் பற்றிய விஞ்ஞானபூர்வமான செய்திகளை எளிமையாக எடுத்துச் சொல்கிறது இந்நூல்.

ஒரு நகரின் வீதியிலே (பக்.90, விலை ரூ.100) என்ற புத்தகம் நகரத்தின் வாழ்க்கையில் கிடைக்கும் வசதி வாய்ப்புகளுக்குப் பின்னால் உள்ள மாபெரும் மின்சார அறிவியலைப் பேசுகிறது. நகரின் ரயில் பாதைகளைப் பற்றியும் தரைக்கடியில் செல்லும் பல்வேறு கேபிள் இணைப்புகளைப் பற்றியும் அறிவியல் பூர்வமான செய்திகளைப் புரிகிற மாதிரி எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளது.

மந்திரப் பழத்தோட்டம் (பக்.50, விலை ரூ.60) என்ற புத்தகம் பரிசோதனை முயற்சியில் விளைந்த ஓர் அற்புதமான பழத்தோட்டத்தைப் பற்றிப் பேசுகிறது. சோவியத் யூனியனில் மிக்சூரின்ஸ்க் எனற ஒரு நகரம் உள்ளது. அங்கு காட்டைப்போல இவான் விளாததீமிரவிச் மிக்சூரின்ஸ்க் என்பவர் தனது சொந்த முயற்சியில் பெரிய பழத் தோட்டத்தை உருவாக்கியுள்ளார். உலகில் வேறு எங்கும் கிடைக்காத வகையில் 300 ரகமான பழங்களை அங்கு அவர் உற்பத்தி செய்தார். அவற்றில் முக்கியமானது அபூர்வமான ருசிகளையும் குணங்களையும் கொண்ட ஆப்பிள், பேரிக்காய், செர்ரித் தோட்டமாகும்.

சிறு வயதிலிருந்தே இயற்கையை ஆராய்ந்து செடிகளில் அரிய வகைகளை உருவாக்குவதில் அவர் பாடுபட்டார். அவற்றில் முக்கியமானது ஐந்து சகோதரிகள் என்ற மரம். இங்கு ஐந்துவகையான பேரிக்காய்களை ஒரே மரத்தில் காணலாம். இவ்வைந்து ரகங்களும் சோவியத் நாட்டில் வேறு வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவை. அதேபோல ஒரு பேரிக்காயின் ருசி அவ்வளவு ஒரு தித்திப்பாக இருக்குமாம். அதைக் கடித்தபடியே சுடவைத்த தேநீரைப் பருகினால் அதன் சுவையே தனி என்கிறார்கள். மிக்சூரின்ஸ்கைப் பின்பற்றி அவர் பயிரிடும் ரகங்கள் சோவியத்தின் பல பகுதிகளிலும் தற்போது விளைவிக்கிறார்களாம்.

புதிய புதிய மாற்றங்களை நோக்கி உலகை வடிவமைத்ததில் புத்தகங்களின் பங்கு மகத்தானது என்பதை நாம் மறுக்கமுடியாது. நம் போக்குகளை, ரசனைகளை இன்றைய காட்சி ஊடகங்களும், கணினித் திரைகளும் பெரிதும் மாற்றியுள்ளன. என்றாலும், மனிதனுக்கான பண்புகளும் தேடல்களின் புதிய பாதைகளும் புத்தகங்களின் வழியேதான் தொடங்குகின்றன என்பதை இந்தப் புத்தகங்கள மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. இப்புத்தகங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் பயன்படும்.

தொடர்புக்கு:

நீலவால்குருவி,

178, F, அனுதீப் அபார்ட்மெண்ட்ஸ்,

3-வது பிரதான சாலை,

நடேசன் நகர்,

சென்னை- 92.

செல்பேசி: 98406 03499.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

மேலும்