நம் மொழி மீதும், நம் பண்பாடு மீதும் அளப்பரிய பெருமிதம் கொண்டிருப்பவர்கள் நாம். ஆனால், அந்தப் பெருமிதத்துக்கு உண்மையான காரணமாக இருப்பவர்களை மறப்பதையே கடமையாகக் கொண்டிருக்கிறோம் நாம். அப்படி மறக்கப்பட்டவர்களில் ஒருவர் சாம்பசிவம் பிள்ளை.
தமிழின் மகத்தான சாதனைகளில் ஒன்று வையாபுரிப்பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு வெளியான சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் வெளியான பெரும் அகராதிதான் த.வி. சாம்பசிவம் பிள்ளை உருவாக்கிய ‘மருத்துவ அகராதி’ (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்). 1938-ல் வெளியாக ஆரம்பித்த இந்த அகராதி ஏழு நூல்களாக, கிட்டத்தட்ட 7 ஆயிரம் பக்கங்களில் வெளியானது. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைச்சொற்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.
மருத்துவச் சொற்களோடு (குறிப்பாக சித்த மருத்துவம்), வேதியியல், தாவரவியல் போன்றவற்றுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதால் அந்தத் துறைகள் தொடர்பான சொற்களும் இந்த அகராதியில் இடம் பெற்றிருக்கின்றன. ஒரு தனிமனிதராக இப்படிப் பட்ட அருஞ்சாதனையை சாம்பசிவம் பிள்ளை நிகழ்த்தியிருப்பது நம்மை மலைக்க வைக்கிறது.
வெளிவந்த காலத்திலிருந்து பொதுச் சமூகத்தின் பாராமுகத்துக்கு இலக்காக இருந்துவரும் இந்த நூல் குறைந்த அளவிலான அறிஞர்கள், சித்த மருத்துவ அறிஞர்கள் போன்றோர் வட்டத்தில் மட்டும் புழங்கியது துரதிர்ஷ்டவசமானது. சில ஆண்டுகளுக்கு முன் சாம்பசிவம் பிள்ளையைப் பற்றி வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய கட்டுரை முக்கியமானது. அந்தக் கட்டுரையில் “இந்த அகரமுதலி பற்றியும் இதனை உருவாக்கிய மேதையினையும் தமிழுலகம் போதுமான அளவு அறியவோ, போற்றவோ இல்லை. பெருமுயற்சியால் திருவினையாக்கிய டி.வி. சாம்பசிவம் பிள்ளை தம் வாழ்நாளில் இந்த அகராதியை அச்சு வடிவில் முழுமையாகக் காணவும் கொடுத்துவைக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இப்படிப்பட்ட அரிய நூலை மீள்பதிப்பு செய்யும் முயற்சியில் ‘தமிழ்ப் பேராயம்’ ஈடுபட்டிருப்பது வரவேற்கத் தக்கது. இந்த மருத்துவ அகராதியின் முதல் தொகுதி (அகரம் முதல் ஔகாரம் வரை உள்ள சொற்கள்) சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து மற்ற தொகுதிகளும் வெளியாகும் என்று தெரிகிறது.
இந்த மீள்பதிப்பு முயற்சியை வரவேற்கும் அதே நேரத்தில் வருத்தமளிக்கும் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். தமிழ் தொடர்பான பெரும்பாலான செயல்பாடுகளைப் பீடித்திருக்கும் நோய் இந்த நல்முயற்சியையும் விட்டுவைக்கவில்லை. அதுதான் ‘தூயமொழிவாதம்’. ‘மொழியைத் தூய்மைப்படுத்துதல்’ என்பதன் பேரில் முதல் தொகுதியில் விளையாடியிருக்கிறது பதிப்புக் குழு. ‘இரத்தம்’ என்ற சொல் பிழையானது என்றும் ‘அரத்தம்’ என்ற சொல்லே சரியானது என்றும் அதனால் மூல நூல் ஆசிரியர் ‘இரத்தம்’ என்று குறிப்பிட்டிருக்கும் இடங்களிலெல்லாம் ‘இ(அ)ரத்தம்’ என்று மாற்றியிருக்கிறோம் என்றும் பதிப்பாசிரியர் குறிப்பிட்டிருக்கும் கொடுமை ஓர் உதாரணம்.
பிற மொழி மோகத்தைப் போலவே ‘மொழித்தூய்மை’ மோகமும் மொழியின் தேய்வுக்குக் காரணமாகிவிடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு அகராதியைத் திருத்தி, விரிவாக்கி வெளியிடுவது என்பது வேறு விஷயம். ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி முதலான அகராதிகள் அப்படித்தான் வெளியிடப்படுகின்றன. ஆனால், மீள்பதிப்பு செய்யும்போது மூல ஆசிரியரின் மேல் கைவைக்க யாருக்கும் உரிமை இல்லை. எழுத்துப் பிழைகள், மோசமான இலக்கணப் பிழைகள் போன்றவற்றைத் திருத்தலாம். ஆனால், இரத்தத்தை ‘அரத்தம்’ என்று ஆக்குவது போன்ற செயல்கள் அத்துமீறல்! எனினும், இத்தகைய குறைகளை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு பதிப்புக் குழுவுக்கு இன்னமும் இருக்கிறது.
எல்லாவற்றையும் தாண்டி, நம் மொழியில் நிகழ்ந்த சாதனைகளுள் ஒன்றைத் தமிழர்கள் இப்போதாவது சிக்கெனப் பற்றிக்கொண்டால் நல்லது.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
18 days ago
இலக்கியம்
18 days ago