சமகாலத் தமிழ் இலக்கியம் தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி சில தினங்களுக்கு முன்பு ‘தி இந்து’வில் எழுதியிருந்தேன். அதற்கு வந்த ஏராளமான எதிர்வினைகளே இது பற்றி மேலும் எழுதத் தூண்டுதலாக அமைந்தது. முதலில் இதில் உள்ள பிரச்சினைகள் என்ன என்று தெரிந்துகொண்டால்தான் அதைக் களைவதற்கான வழிவகைகளைக் காண முடியும். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் எழுதுபவன் என்ற முறையிலும், என் எழுத்தை ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் கொண்டுசெல்வதற்காக மொழிபெயர்ப்பாளர்களுடன் சேர்ந்து பணிபுரியும் அனுபவத்திலிருந்தும் சிலவற்றைச் சொல்ல முடியும். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்படுவதில் உள்ள தலையாய பிரச்சினை, ஆங்கிலத்தில் நல்ல புலமை உள்ளவர்கள்கூட மொழிபெயர்ப்பில் சறுக்கிவிடுகிறார்கள். காரணம், தமிழின் சமகால இலக்கியத்தில் இவர்களுக்குப் பரிச்சயம் இல்லை. இதன் காரணமாகவே இங்கிருந்து செல்லும் எந்த எழுத்தும் பிரபலமாகாமல் போகிறது. தமிழில் பல எழுத்தாளர்களுக்கும் ரஷ்யன், செக், பிரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மன் போன்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு உள்ளதை அறிகிறோம். ஆனால், சர்வதேச இலக்கிய வரைபடத்தில் அவர்களுடைய பெயர் ஏன் காணவில்லை? கவனியுங்கள், அந்த எழுத்தாளர்களில் பலரும் நோபல் பரிசு பெறத்தக்க அளவுக்குச் சாதனை புரிந்தவர்கள். உதாரணமாக, ப. சிங்காரம், நகுலன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, எம்.வி. வெங்கட்ராம், வண்ணநிலவன் என்று நூறு பேரைச் சொல்லலாம். உலகில் உள்ள அத்தனை முக்கிய எழுத்தாளர்களும் தமிழ்நாட்டில் அறிமுகமான அளவுக்கு நம் எழுத்தாளர்கள் ஏன் வெளிநாடுகளில் அறியப்படுவதில்லை? என் அமெரிக்க நண்பர்களிடம் கேட்டபோது ஒரே பதில்தான் கிடைத்தது. நம் ஆங்கிலம் அவர்கள் அறிந்த ஆங்கிலமாக இல்லை. பிரதியின் உள்ளேயே அவர்களால் போக முடியவில்லை.
எனது அனுபவத்திலிருந்து…
என்னுடைய ‘ஸீரோ டிகிரி’ என்ற நாவலை பிரான்ஸில் வசிக்கும் ஒரு தமிழர் மொழிபெயர்த்தார். அவருடைய வேலையே மொழிபெயர்ப்புதான். மொழிபெயர்ப்பு முடிந்து பிரான்ஸின் முன்னணிப் பதிப்பாளர் ஒருவரிடம் கொடுத்தால், இந்தப் பிரதியை வைத்து எதுவுமே செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். பிறகுதான் தெரிந்தது, அந்த மொழிபெயர்ப்பாளர் அதுவரை இலக்கியப் பிரதி எதையும் மொழிபெயர்த்தது இல்லை. அவர் செய்தது எல்லாம் கட்டுரைகள், ஆவணங்கள், அறிக்கைகள் இன்ன பிற. என்னுடைய இன்னொரு நாவலுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான். இது என்னுடைய நாவலுக்கு மட்டும் அல்ல. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குச் செல்லும் பெரும்பாலான நாவல்களைக் குறித்தும் என் அமெரிக்க நண்பர்கள் இப்படித்தான் சொல்கிறார்கள்.
60 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஓரான் பாமுக்கை எடுத்துக்கொள்வோம். அவர் வசிக்கும் துருக்கியில் யாருமே இலக்கியம் படிப்பதில்லை. நமக்கு அம்பானியின் பெயர் தெரிந்திருப்பதுபோல் ஓரான் பாமுக்கின் பெயர் அந்த நாட்டு மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவ்வளவுதான். ஆனால், ஓரான் பாமுக்கின் பெயர் உலகம் முழுவதும் தெரியும். அவர் என்ன எழுதினாலும் அது ஆங்கிலத்தில் வெளிவந்த உடனே ஜி. குப்புசாமி தமிழில் மொழிபெயர்த்துவிடுகிறார். இப்படி நூற்றுக்கணக்கான பேர் தமிழில் உண்டு. எல்லாம் வெளிநாட்டு எழுத்தாளர்களுக்காக உழைக்கும் தியாகிகள். அந்த வகையில் நம் தமிழ் எழுத்தாளர்கள் துரதிர்ஷ்டசாலிகள்தான். ஒரு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். “அடுத்த ஆண்டு அழைப்பதற்கு உங்கள் மொழியிலிருந்து யாரை சிபாரிசு செய்வீர்கள்?” என்று கேட்டார்கள். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என்றேன். இருவரும் ஆளுக்கு 200 நூல்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவருக்கும் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை என்று பிறகு கன்னடத்திலிருந்து அழைத்தார்கள்.
மொழிபெயர்ப்பில் ஏற்படும் பிரச்சினைகள்
ஓரான் பாமுக் போல் உலக அளவில் பிரபலமான எழுத்தாளர்கள் அனைவரும் அப்படிப் பிரபலமானதற்கு முக்கியமான காரணம், ஆங்கிலத்தில் வந்த சரியான மொழிபெயர்ப்பு. நமக்கு அந்த வசதி இல்லை. உதாரணமாக, சுந்தர ராமசாமியை எடுத்துக்கொள்வோம். தமிழ் எழுத்தாளர்களில் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தவர். அவருடைய ‘ஒரு புளியமரத்தின் கதை’ தமிழில் ஆகப் பெரிதாகப் பேசப்பட்ட நாவல். இதன் முதல் வாக்கியம் இது: ‘முச்சந்தியில் நின்றுகொண்டிருந்தது புளிய மரம். முன்னால் சிமிண்டு ரஸ்தா. இந்த ரஸ்தா தென் திசையில் பன்னிரண்டு மைல் சென்றதும், குமரித்துறையில் நீராட இறங்கிவிடுகிறது.' கவித்துவமும், வாசிப்பவரை முறுவலிக்க வைக்கும் மெல்லிய கிண்டலும் சுந்தர ராமசாமி உரைநடையின் விசேஷம். இது ஆங்கில மொழிபெயர்ப்பில்:
`The tamarind tree stood at a crossroads. The cement road in front of it went due south to land’s end where three seas meet.' மொழிபெயர்ப்பில் சு.ரா-வின் கவித்துவம் காணாமல் போய் மொழி தட்டையாகிவிட்டது. இதுவாவது பரவாயில்லை. பல சமயங்களில் பல தமிழ் எழுத்தாளர்கள் மோசமான மொழிபெயர்ப்பில் மாட்டிக்கொள்கிறார்கள். உதாரணமாக, கல்கியின் பொன்னியின் செல்வனில் ‘அடப்பாவி’ என்ற ஒரு வார்த்தை, You sinner என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதற்கு வெகு அழகாக Good heavens! என்று சொல்லலாம். இப்படி மொழியின் நுணுக்கங்கள் தெரியாமலே வண்டி வண்டியாய்த் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு நடந்துகொண்டிருக்கிறது.
உங்களிடம் டைம் இருக்கிறதா?
ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு விதமான சொல்முறை இருக்கிறது. உதாரணமாக, பிரெஞ்சில் Vous vous appelez comment? (வூ வூ ஸப்பலே கொமோ?) என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு ‘உங்களை நீங்கள் எப்படி அழைப்பீர்கள்?’ என்று வரும். ஆனால் இதன் சரியான பொருள், ‘உங்கள் பெயர் என்ன?’ இதேபோல் Vous avez l’heure? (வூ ஸவே லெர்?) என்றால் அதன் நேரடி மொழிபெயர்ப்பு, ‘உங்களிடம் டைம் இருக்கிறதா?’ ஆனால், உண்மையான அர்த்தம், மணி என்ன? இந்த அர்த்த அபத்தங்களை நம்முடைய இந்திய மொழிகளுக்குள்ளேயே காணலாம். கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் தமிழில் கன்னடத்தின் இலக்கண முறை விளையாட்டாக ஊடுபாவும். ‘ஆட்டோ பிடிச்சிட்டு வந்தீங்களா?’ என்பதை ‘ஆட்டோ பண்ணிண்டு வந்தீங்களா?’ என்பார்கள். ஏனென்றால், கன்னடத்தில் ‘ஆட்டோ மாட்கொண்டு பர்த்தியா?’ என்பதன் நேரடி மொழிபெயர்ப்பே ‘ஆட்டோ பண்ணிண்டு வந்தீங்களா?’ இந்தக் குளறுபடியைத்தான் நம்முடைய ஆங்கில, பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்கள் பெரும்பாலும் எதிர்கொள்கிறார்கள்.
என் வாசகர் வட்டத்தில் உள்ள மாணவி ஒருவரின் ஆங்கில அறிவு அபாரமானது. அவரிடம் என் கதையைக் கொடுத்தேன். அது மிகவும் தட்டையான மொழியில் ஒரு கட்டுரையாக மாறி எனக்குக் கிடைத்தது. ஆனால், அந்த மாணவி இயல்பாக ஆங்கிலம் எழுதினால் நதியில் புது வெள்ளம் பாய்ந்து வருவதுபோல் இருக்கும். ஆனால், மொழிபெயர்ப்பில் மொழி தட்டையாகிவிட்டது. என்ன பிரச்சினை என்றால், இன்றைய மாணவர்களிடம் ஆங்கிலம் மட்டுமே இருக்கிறது. இலக்கியப் பரிச்சயம் இல்லை. அப்படிப்பட்டவர்களாலும் மொழிபெயர்ப்பு செய்வது கடினம்.
எனவே, தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கும்போது மேலே குறிப்பிட்ட பிரச்சினைக ளையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக, மொழிபெயர்க்கப்பட்ட பிரதியை அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரும், இலக்கியப் பரிச்சயமும் உள்ள ஒருவரும் சரிபார்த்துச் செப்பனிட வேண்டியது அவசியம்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
15 hours ago
இலக்கியம்
16 hours ago
இலக்கியம்
16 hours ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
5 days ago