இருண்ட காலக் கதைகள்
தொகுப்பு: அ.கரீம்
எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி.
தொடர்புக்கு: 99425 11302
விலை: ரூ.200
வெவ்வேறு எழுத்தாளர்களின் பதினேழு கதைகளை ‘இருண்ட காலக் கதைகள்’ என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறார் அ.கரீம். இந்திய அளவில் தற்போது என்னென்ன பிரச்சினைகள் குறித்துப் பொதுத் தளத்தில் விவாதிக்கப்படுகின்றன என்பதை இந்தத் தொகுப்பை வாசித்தாலே புரிந்துகொள்ளலாம். இலக்கியத்துக்குள் சமகாலம் விவாதிக்கப்படுகிறது என்பதே மிக முக்கியமான அம்சம்தான்.
ச.பாலமுருகனின் ‘இங்கே சொர்க்கம் துவங்குகிறது’, ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரனின் ‘அடையாளம்’, சம்சுதீன் ஹீராவின் ‘மயானக்கரையின் வெளிச்சம்’, அ.கரீமின் ‘இன்று தஸ்தகீர் வீடு’ ஆகிய கதைகள், சிறுபான்மையினர் மீது செலுத்தப்படும் அதிகாரம் குறித்துப் பேசுகின்றன. காஷ்மீரின் ஒதுரா கிராமத்திலிருந்து நசிமாவின் மகன் குலாம் கடத்தப்பட்டதும் (இங்கே சொர்க்கம் துவங்குகிறது), ஹாலீத் ராவுத்தரின் பெட்டிக்கடை தீவைத்து எரிக்கப்படுவதும் (அடையாளம்), பிர்தவுஸுக்கு இந்தியக் குடியுரிமை மறுக்கப்பட்டு முகாமில் அடைக்கப்படுவதும் (மயானக்கரையின் வெளிச்சம்), எந்தத் தவறும் செய்யாத சுலைமானும் தஸ்தகீரும் என்ஐஏ அதிகாரியால் தொடர்ந்து தொந்தரவுக்குள்ளாவதும் (இன்று தஸ்தகீர் வீடு) இந்தக் கதைகளின் மையமாக இருக்கின்றன.
இந்திய அளவில் தொடர்ந்து விவாதிக்கப்படும் மற்றொரு விஷயம், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகள். சமூக அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் இது காலந்தோறும் சமகாலப் பிரச்சினையாகவே இருந்துவருகிறது. ச.தமிழ்ச்செல்வனின் ‘என்ன கதை இது?’, அகிலாவின் ‘மாகாளி’ ஆகிய இரு கதைகளும் இந்தப் பொருண்மையின்கீழ் எழுதப்பட்டுள்ள சிறந்த கதைகள். இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ நாவலுக்குப் பிறகு வண்ணார் சமூகத்தின் மீது ஊரின் பெரும்பான்மைச் சமூகம் நிகழ்த்தும் ஒடுக்குதலைப் பற்றி எழுதப்பட்ட முக்கியமான கதை, ‘என்ன கதை இது?’. டோரா புஜ்ஜி பார்க்கும் சிறுமி ஒருத்தி இரு நபர்களால் வன்புணரப்படுகிறாள். ‘வேற ஒரு சாதிப் பிள்ளையா இருந்தா ஊரு இப்பிடி இருக்குமா. நாங்க ஏழைச் சாதி. அதானே நீங்கள்லாம் சும்மாருக்கீக?’ என்ற கேள்வியை இந்தச் சிறுகதை எழுப்புகிறது. ‘மாகாளி’ சிறுகதை நிர்பயா சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
அரசின் கொள்கைகள் மீது கல்லெறியும் கதைகளாக, ஆதவன் தீட்சண்யாவின் ‘காமிய தேசத்தில் ஒருநாள்’, புலியூர் முருகேசனின் ‘கழற்றி வைக்கப்பட்ட மகளின் தலை’ கதைகளைக் குறிப்பிடலாம். சல்மாவின் ‘இருண்மை’யும், வே.பிரசாத்தின் ‘காடர் குடி’யும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை. புறச்சூழலில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதது வீட்டில் அவள் எதிர்கொள்ளும் வன்முறைகள் என்ற புள்ளியை ‘இருண்மை’ கதை தொட்டிருக்கிறது. தெருவில் இறங்கிப் போராடும் பெண்களை, ஆண்கள் நடத்தும் விதம் குறித்த பார்வையும் கதையில் உண்டு. சிறிய கதையாக இருந்தாலும் இயல்பான உரையாடலின் மூலம் கதை விரிக்கும் தளம் பெரியது. ‘காடர் குடி’ பழங்குடியினரின் பிரச்சினையை அதன் தீவிரத்துடன் முன்வைத்து எழுதப்பட்ட கதை. நிலப்பரப்பெங்கும் ஒடுக்கப்படும் பூர்வக் குடிகளின் வலியைக் கச்சிதமாகச் சொல்லியிருக்கிறது. ஷக்தியின் ‘நான் மீண்டும் திரும்புகிறேன்’ சிறுகதை கரோனா பெருந்தொற்றுப் பிரச்சினையின் தீவிரத்தைப் பேசும் கதை.
ஒட்டுமொத்தமாக, இந்தத் தொகுப்பு அதிகாரத்துக்கு எதிரான குரல்களாகப் பதிவாகியிருக்கின்றன. நடக்கும் புறச்சூழல்கள் மீது கேள்விகளையும் விமர்சனங்களையும் இந்தக் கதைகள் முன்வைக்கின்றன. ஏற்கெனவே ஊடகங்களில் தொடர் விவாதப் பொருளாகியிருக்கும் விஷயங்களைச் சிறுகதைக்கான கச்சாப் பொருளாகக் கொள்வது வரவேற்கப்பட வேண்டியது. இதுபோல அரசியலும் இலக்கியமும் இணைவது இன்னும் இன்னும் அதிகரிக்க வேண்டும்.
- சுப்பிரமணி இரமேஷ், ‘எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: ramesh5480@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
23 days ago
இலக்கியம்
23 days ago