இப்போ பார்த்தா என்னென்னமோ பண்டங்களும், பதார்த்தங்களும் கால்ல மிதிபடுது. மக்கள் தின்னு தீர்க்கிறார்கள். அப்போ கிராமத்துல வயசாளிகளுக்கு என்றே சில குறிப் பிட்ட பலகாரங்கள் இருக்கும். அதில் பொரி மாவும் ஒன்று. ‘பொக்குவாய்க்கு பொரி மாவு’ என்பது சொலவடை. பல் லில்லாத பெரிசுகள் பக்கத்தில் இந்தப் பொரி மாவை வைத்துக்கொண்டு துளித் துளியாய் வாயில் அள்ளிப்போட்டுக் கொண்டு, குப்குப்பென்று உதடு பிதுங்கப் பிதுங்க குதப்பி விழுங்குவதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
குருவய்ய நாயக்கருக்கு மேலேயும் கீழேயும் உள்ள அத்தனை பற்களும் பூராவுமே நல்ல ஆட்டம் கண்டுவிட்டது.
குருவய்ய நாயக்கர் சொன்னார்:
‘‘கேட்டுக்கோரும் ரெங்கய்ய நாயக் கரே… காலையிலேர்ந்து ஒண்ணுமே சாப்பிடலை. மத்தியானத்துக்கு மேலே வூட்டுக்குப் போனா, சரியா வேகாத குருதவாலிக் கஞ்சிதான் இருக்கும். கடிச்சிக்கிட தேங்காச் சில்லு. என்னத்தெப் பேச… என்னத்தெ சொல்ல. மனசு ரொம்ப விட்டுப்போச்சிய்யா…’’
அவர் சொல்வதைக் கேட்டுக்கொண் டிருந்தவர்களுக்கு ‘அடடா!’ என்றிருந்தது.
‘‘வீட்டுல யாரும் இல்லெ. எல்லாருமெ காட்டுக்குப் போயிருந்தாக…’’
‘‘பெறவு?’’
‘‘பெறவென்ன செய்ய? குருதவாலி அரிசிப் பருக்கைகளெப் பிழிஞ்சி வெச்சிட்டு, அந்தக் கஞ்சித் தண்ணீரைக் குடிச்சிட்டு வந்தேம்’’ என்றார்.
‘இந்த பல்லுக இருந்ததுலேயும் கூட்டில்லெ… இல்லாததுலேயும் கூட் டில்லெ என்று சடைத்துக்கொண்டார்.
வயசாயிட்டாலே சங்கடந்தாம் என்று தோன்றியது.
ஒரு வயசாளியெ வீட்டைவிட்டு விரட்ட வேற ஒண்ணுமே செய்ய வேண்டாம். ஒரு பத்து நாட்களுக்கு தொடர்ந்தாப்புல இப்படி பருக்கை பருக்கையா சோத்தை வடிச்சிப் போட்டாலே போதும். சொல்லா மெப் பெறயாம ஓடியே போய் விடுவார்கள்.
குருவய்ய நாயக்கரோட சம்சாரம் காலமாயி ரெண்டு வருஷம்தாம் ஆவுது. அதுக்குள்ளேயே மனுசன் பாதி செத்துப் போயிட்டாரு இவரு.
மனுச உடம்புல சத்துங்க குறையக் குறைய வாய்க்குள்ளெ இருக்கிற பல்லுகளும் ஆட்டம் கண்டுரும் போல.
சரி, பல்லைக் கட்டிக்கிடலாமேன்னு தோணுகிறவர்களுக்கு, அந்தக் காலத் திய மூடநம்பிக்கைகள் குறுக்கே புகுந்து குழப்பம் பண்ணும்.
அந்த மூடநம்பிக்கைகள்ல ஒண்ணு தான் ‘போட்டோ எடுத்தா ஆயுசு கம்மியாயிரும்’ என்பதும்.
செத்துப்போன பொறவு, டவுணுக்கு ஆளை அனுப்பிவெச்சு, போட்டோ புடிக் கிறவனைக் கூட்டியாந்து, நாடிக் கட்டோட படம் எடுத்து கண்ணாடி போட்டு மாட்டி வெச்சியிருக்கிறதை இப்பவும் சில கிராமத்து வீடுகள்ல பார்க்கலாம்.
‘‘பல்லு கட்டிக்கிடலாம், கட்டிக்கிட லாம்தான். ஆனா…’’ என்று வார்த்தை களை ரப்பராட்டம் இழுக்கிறவர்களிடம் ‘என்ன சொல்ல வர்றீங்க’ன்னு கேட்டால், ‘‘அதுக செத்துப் போனவங்களோட பல்லுகதானாமில்ல’’ என்பார்கள்.
‘‘திட்டாந்தரமா எப்பிடி சொல்லுதிய அப்படி?’’ என்று கேட்டால், ‘‘அப்பிடி பல்லு கட்டீட்டு வந்தவுக பக்கத்துல வந்தாலே பொண நாத்தம் அடிக்கே…’’ என்பார்கள்.
இருட்டைப் பேயாக நினைத்துப் பயந்த காலம் அது. ‘பேட்ரி லைட்’ என்கிற டார்ச் லைட்டுகள் வந்த பிறகுதான் பேய்கள், ஜடாமுனிகள், அஞ்சு கண் ணன்கள், ஒத்த கொம்பன் எல்லாம் போனது தெரி யாமல் ஓடிப் போயின.
கனவுகளில் எத்த னையோ வகைப்பாடுகள் உண்டு. மனுசாளுக்கு வந்த கனவுகளை எல் லாம் திரட்டி வெச்சு எழுதினாக்கா எவ்வளவு சுவாரஸ்யங்களும், பயங் களும், அதிர்வுகளும் ஏற்படும்!
குருவய்ய நாயக்கர் ஒரு ராத்திரியில் தான் கண்ட ஒரு கனவைப் பத்தி சொன்னார். அந்தக் கனவுல அவர் தாகத்தினால் தொண்டை வறண்டு, நாக்கு வெளியே தள்ளி ரொம்பவும் தவிச்சாராம். தாங்க முடியாத அப்படியொரு தாகமாம் கனவுல. தண்ணி கேட்டு பக்கத்துல இருக்கிற ஆளுங்களை எல்லாம் ‘அய்யோ… அய்யோ’ என்று குரல் கொடுத்து எழுப்பிப் பார்த்திருக்கிறார். ஆனால் தொண்டையிலேர்ந்து குரல் எழும்பவே மாட்டென்கிறதாம் அவருக்கு. அங்ஙன இங்ஙன புறளவும் முடியலையாம் உருளவும் முடியலையாம் அவருக்கு.
நாம எங்கே படுத்துக்கிடக்கிறோம் என்று உற்று கவனிச்சிருக்கார். அது அம்மன் கோயில் திருணை மாதிரி மெல்லிசா அடையாளம் தெரியுதாம். அந்த இடத்தில் அதுவரைக்கும் கூட்டமா கூடி பதினைஞ்சாம்பிள்ளை விளையா டிக்கொண்டிருந்தவர்கள், அந்த விளை யாட்டை வேடிக்கை பார்த்துக்கொண் டிருந்தவர்கள் எல்லாருமே அந்த இடத்தைவிட்டு போய்விட்டதாக தெரி கிறது. இப்போது அவர் அடுக்கி வைக்கப் பட்ட எருமூட்டத்தின் மேல் மல்லாந்து படுத்துக்கிடப்பதாகத் தெரிந்திருக்கிறது.
எப்பவோ காலமாகிவிட்ட அவரு டைய பிரியமுள்ள சம்சாரம் அவரு டைய உலர்ந்துபோன நாக்குல சொட்டுச் சொட்டாக பஞ்சுப்பால் பிழிந்துவிட்டிருக் கிறாள். உடனே முழிப்புத் தட்டி குருவய்ய நாயக்கர் முழித்துவிடுகிறார். தனது வீட்டின் திண்ணையில்தான் படுத்திருந்திருக்கிறார்.
ஒரு மடக்குத் தண்ணீர் கிடைத்தால் தேவலை. கதவைத் தட்ட முடியாது யாரும் வர மாட்டார்கள்.
ஓலைப் படல் வைத்து மறைக்கப்பட்ட குளிப்பிடத்தில் ஒரு பானை தெரிகிறது. தண்ணீர் இருக்குமா அதில்?
தகையோடு பிரிந்த ஆத்துமா தண்ணீர் தேடி மாட்டுத் தோல் ஊற வைக்கும் பள்ளத்தைப் பார்த்துப் போனதாம் தண்ணீர் குடிக்க!
தன்னுடைய சித்தி, பிரசவத்தின்போது குழந்தை பிறந்தவுடன் தாகம் தாங்கமுடி யாமல் தண்ணீர் தண்ணீர் என்று கெஞ்சி யும் யாரும் கொஞ்சம்கூட கிணுங்க வில்லையாம். தண்ணீர் குடித்தால் பிறப்புறுப்பில் சீழ் பிடித்துவிடுமென்று யாரும் தண்ணீர் கொடுக்க மறுத்துவிட்டார்களாம்.
பிறந்த குழந்தையைக் குளிப்பாட்ட வும், வெளியேறும் நஞ்சைப் புதைக்கவும் வீட்டுக்கு வெளியே ஒரு சிறிய குழி தோண்டி வைத்திருப்பார்கள்.
குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து, சேனை வைக்கும் ஆளை கூப்பிடும் கவனத்தில் மற்றவர் கள் எல்லாம் இருந்தபோது, சித்தி ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு வேகமாகப் போய், அந்த குழந்தையைக் குளிப் பாட்டிய தண்ணீரை இரு கைகளையும் சேர்த்து வைத்துக்கொண்டு அள்ளி அள்ளிக் குடிப்பதைப் பார்த்தவர் குருவய்ய நாயக்கர்.
பசி வெறி, தாக வேறிகூட இப்படி செய்ய வைத்துவிடும்தான்.
அதிகாலையில் கிழக்கே விடிவெள்ளி தெரிந்தது குருவய்ய நாயக்கருடைய பிள்ளையாண்டான் வாசக் கதவைத் திறந்துகொண்டு, மாடுகளுக்குப் பருத் திக்கொட்டை, ஆட்ட வந்தபோது ‘அப்பா வைக் காணலையே…’ என கவனித் தான். ஆனாலும் தேடவில்லை. மந்தைக் குப் போயிருக்கலாம் என்று நினைத் துக்கொண்டான். குருவய்ய நாயக்கர் போனவர் போனவர்தான்.
இந்த ஊரிலிருந்து இப்படியான பல காரணங்களை முன்னிட்டு பல கிழவ னார்கள் காணாமலேயே போயிருக் கிறார்கள். ‘உபயோகி; தூர எறி’ என்பது இப்போ வந்ததுதான் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், கெட்டிக்கார கிழவ னார்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டாமா..?
ஓவியங்கள்: மனோகர்
- இன்னும் வருவார்கள்…
முந்தைய அத்தியாயம்:>மனுசங்க.. 20: ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago