சமீபத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் 100 பேருடன் தொடங்கப்பட்டுள்ள பொள்ளாச்சி டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் மூலம் ஆண்டுக்கு 100 பிற மொழி நூல்களைத் தமிழில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இது குறித்து, மறைந்த பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் மகன் ம.மாணிக்கத்துடன் பேசியதிலிருந்து…
தொழிலதிபரான உங்களுக்குப் பிற மொழி நூல்களைத் தமிழில் வெளியிடும் எண்ணம் எப்படி வந்தது?
எனது தந்தையார் விட்டுச்சென்ற பணிகளின் தொடர்ச்சியே இது. என் தந்தையார் செய்ததை அப்படியே செய்யக் கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளேன். அதனால், காலத்துக்கேற்ப நம்மிடம் இல்லாத அயல் மொழி நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவருவதற்காக ‘பொள்ளாச்சி டாக்டர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய’த்தைத் தொடங்கியுள்ளேன். இதன் இயக்குநராக சிற்பி பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். செல்லப்பன், பிரேமா நந்தகுமார், கவிஞர் புவியரசு, தேவதாஸ், ஜி. குப்புசாமி உட்பட 100 மொழிபெயர்ப்பாளர்கள் இந்த மையத்தில் உள்ளனர். ஆண்டுக்கு 100 புத்தகங்கள் வரை மொழிபெயர்க்கத் திட்டமிட்டிருக்கிறோம்.
மொழிபெயர்ப்பைத் தேர்வுசெய்தது ஏன்?
ஆங்கிலத்தில் எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் பல லட்சம் புத்தகங்கள் உள்ளன. அவற்றில் 80 சதவீதத்தை ஜப்பானியர்கள் ஒரு மாதத்தில் மொழிபெயர்த்துவிடுகிறார்கள். ஆனால், இங்கு நிலைமை வேறு. இங்கே நூல் என்றாலே ஒன்று புனைவு சார்ந்த நூல்கள், அல்லது சமையல் மற்றும் ஜோதிடக்கலை நூல்கள்தான் உள்ளன. அறிவியல் தொழில்நுட்பம், மனித வளம், வர்த்தக மேலாண்மை போன்ற துறைகளுக்கான நூல்கள் தமிழில் இல்லை. எனவே, அவற்றைத் தமிழில் கொண்டுவர மொழிபெயர்ப்பைத் தேர்வுசெய்தேன்.
அப்படியென்றால் புனைவுகளை மொழிபெயர்க்கப் போவதில்லையா?
அப்படி நான் சொல்லவில்லை. மொழி பெயர்ப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள், மற்றும் பரிந்துரையாளர்கள் என மூன்று குழுக்களைக் கொண்டே எங்கள் மையம் இயங்குகிறது. இதில், பரிந்துரையாளர்கள் எந்த மொழிப் புத்தகத்தை வேண்டுமானாலும் கொடுக்கலாம். மதிப்பீட்டாளர்கள் அவற்றைப் பரிசீலித்த பின்னர் அது மொழிபெயர்ப்பாளரின் பொறுப்புக்கு வரும். ஆகவே, நாங்கள் புனைவுகளைப் புறக்கணிக்கவில்லை. எனினும், அறிவியல் தொழில்நுட்பம், மனித வளம் சார்ந்த நூல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். எங்கள் மையத்தில் மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்ப்புப் பணியைச் செய்ததும் நாங்களே விற்பனை வேலைகளைச் செய்வோம்.
வாசிப்பு அருகிவரும் காலகட்டத்தில் இந்த மொழிபெயர்ப்பு நூல்களை எப்படிக் கொண்டுசேர்க்கப்போகிறீர்கள்?
இன்றைக்கு வாசிக்க மாட்டேன் என்று யாரும் சொல்லவில்லை. யாருக்கு எது தேவையோ அதை நாம் கொடுக்கவில்லை. வாசகர் வட்ட நிகழ்ச்சிகள், புத்தகக் காட்சிகள் என நிறைய நிகழ்ச்சிகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். வர்த்தமானன் பதிப்பகம் இணை பதிப்பாளராக எங்களுடன் இணைந்து நூல் விற்பனையைக் கவனிக்கவுள்ளார்கள்.
எத்தனை நூல்கள் தயாராக இருக்கின்றன?
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதிய ‘பியாண்ட் 2020’ ஆங்கில நூல் தமிழில் வருகிறது. அதேபோல், தத்வாஸ்கியின் ‘பாவப்பட்டவர்கள்’, கலீல் ஜிப்ரானின் ‘மணலும் நுரையும்’, டார்வின் கோட்பாட்டை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ‘த பிளைண்டு வாட்ச்மேக்கர்’ (தமிழில்: ‘பரிணாமத் தச்சன்’) போன்ற நூல்களையும், சமஸ்கிருத ஸ்லோகங்களின் கருத்தைக் கொண்டுள்ள தமிழ் இலக்கியப் பாடல்களை ஒன்றாகத் தொகுத்து ‘சிந்தனை ஒன்றுடையாள்’ என்ற நூலையும் வெளியிடவுள்ளோம்.
இந்த நூல்கள் எங்கள் தந்தையாரின் நினைவு தினமான அக்டோபர் 2-ம் தேதியன்று வெளியாகின்றன. இப்போதைக்கு ஆங்கில நூல்கள் மட்டும்தான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. விரைவில் பிரெஞ்சு, சீனம், ஜப்பானிய மொழி நூல்களையும் தமிழில் கொண்டுவருவோம்.
- எம். மணிகண்டன்,
தொடர்புக்கு: manikandan.m@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago