பாரதியின் பாடல்களைப் புரட்டிக்கொண்டுவரும்போது ‘இந்த ஆள் எதையோ இடைவிடாது ஏக்கத்துடன் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்’ என்ற உணர்வு ஏற்படுகிறது. விநாயகர் அகவலில் ஆரம்பித்து ‘மனதில் உறுதி வேண்டும்’ வரை எத்தனையோ ‘வேண்டும்’ பாடல்கள். எத்தனை கனவுகள், எத்தனை தவிப்புகள்! ஆனால், இந்தச் சமூகம் அவரது ‘வேண்டும்’ வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவே இல்லையே. அவரை ‘சீட்டுக்கவி’ எழுத வைக்கிறது. அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாட வைக்கிறது. அவரது வேண்டுகோளுக்கு அவர் வேண்டும் ‘பராசக்தி’யும் செவிசாய்க்கவில்லை. ஒருவேளை இவ்வளவு அழகான வேண்டுகோள்களைக் கேட்கும் வாய்ப்பை இழந்துவிடுவதைப் பற்றிய அச்சத்தில்தான் ‘பராசக்தி’ பாரதியின் ஆசைகளை நிறைவேற்றவில்லையோ?
‘ஒளியும் இருளும்’ என்ற கவிதை பாரதியின் மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்று. காதல் தவிர்த்து அவர் எழுதிப் பிரபலமான கவிதைகளெல்லாம் எழுச்சி நிரம்பியவை. வேண்டுகோள் விடுத்தால்கூட அதில் ஒரு கம்பீரம், அதட்டல் இருக்கும், ‘இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ’ என்பதுபோல. ஆனால், இருள் நிரம்பிய நெஞ்சமொன்றின் குமுறலாக இந்தப் பாடல் வெளிப்பட்டிருக்கும்.
‘வான மெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலு மாங்கே
தரையின் மீதுந் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள்மீதும் பரிதியின் சோதி;
மான வன்ற னுளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!’
சூரியனின் வெளிச்சம் எங்கு பார்த்தாலும் வந்து விழுகிறது. தன் மனம் மட்டும் இருளில் புழுங்குவது ஏன் என்று கேட்கிறார். அமைதியான தொனியில் தன் வேதனையைச் சொல்ல ஆரம்பிக்கும் பாரதியை அவரது வழக்கமான வேகம் வந்து ஆட்கொண்டுவிடுகிறது. சோதியின் பாய்ச்சலை, அழகை சன்னத நிலையில் பாடுகிறார்.
சோதி யென்னுங் கரையற்ற வெள்ளம்,
தோன்றி யெங்குந் திரைகொண்டு பாய,
சோதி யென்னும் பெருங்கடல், சோதிச்
சூறை, மாசறு சோதி யனந்தம்,
சோதி, யென்னு நிறைவிஃ துலகைச்
சூழ்ந்து நிற்ப, ஒருதனி நெஞ்சம்
சோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே
சோதியைக் கரையெற்ற வெள்ளம் என்று சொல்லும் பாங்கு என்ன! சோதிச்சூறை, சோதியனந்தம் என்று உளறும் கவிப்பித்துதான் என்ன! இந்தப் பகுதியின் முடிவில் தனது இருள் பற்றி அவருக்கு நினைவு வந்துவிட ஏக்கம் மறுபடியும் வந்து சேர்ந்துகொள்கிறது.
‘டேஸ்ட் ஆர் செர்ரி’ என்ற ஈரானியத் திரைப்படத்தில் ஒரு காட்சி இங்கு நினைவுக்கு வருகிறது. காரில் வரும் ஒருவன் தனது தற்கொலைக்கு உதவுமாறு ஒரு பெரியவரிடம் கேட்டுக்கொண்டு அவரை காரில் அழைத்துச்செல்கிறான். அந்தப் பெரியவர் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார். அவருக்குத் திருமணம் ஆன சில காலம் கழித்து வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு தற்கொலை செய்துகொள்வதற்காகச் செல்கிறார். மல்பெரி மரமொன்றில் தூக்கு மாட்டிக்கொள்ள முயல்கிறார். அவர் எறியும் கயிறு கிளையில் மாட்டிக்கொள்ளாமல் கீழே விழுகிறது.
மரத்தின் மீது ஏறி, கிளையில் இறுக்கமாக முடிச்சுப்போடும்போது அவரது கையில் மிருதுவான ஏதோ ஒன்று படுகிறது. என்னவென்று பார்த்தால் நன்றாகப் பழுத்த மல்பெரி பழம். சாறு நிறைந்ததாகவும் சுவையாகவும் இருக்கிறது. இன்னொன்று, இன்னொன்று என்று சாப்பிடுகிறார். சாப்பிட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தால் மலைக்கு மேலிருந்து சூரியன் எழுந்துகொண்டிருக்கிறது. ‘என்ன அழகான சூரியன், என்ன அழகான காட்சி, என்ன பசுமையான நிலப்பரப்பு’ என்று பரவசத்துடன் விவரிக்கிறார். அப்புறம் மல்பரிகளைப் பறித்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறார். அவர் மனைவி உறங்கிக்கொண்டிருக்கிறார். எழுந்த பிறகு அவரும் மல்பரியை சந்தோஷமாகச் சாப்பிடுகிறார். அதற்குப் பிறகு அவருக்கு வாழ்க்கை முன்பைவிட லேசாக ஆகிறது.
பாரதியின் இந்தக் கவிதையைப் பார்க்கும்போதும் அப்படி ஒரு தற்கொலை மனநிலையில் மரத்தின் மேல் ஏறியவர் போல்தான் தோன்றுகிறார். மரத்தின் மீது ஏறியிருக்கும் கணத்தில்கூட பாரதியின் கண் முன்னே திரைகொண்டு பாயும் சோதி விரிகிறது. அதைப் பார்த்ததும் ஏக்கமும் கரைமீறுகிறது. அதற்கு இடையிலும் சூரிய ஒளியின் வெள்ளத்தை அள்ளிக் குடித்து அதைப் பற்றிப் பாடாமல் இருக்க அவரால் முடியவில்லை. அவருடைய மல்பெரி ‘ஒளி’தான். அந்த ஒளியை அவர் கண் முன்னே கண்டுவிட்டார். ஆனால், தன் அகத்தில் அது வந்துசேரவில்லையே என்கிறார்.
இந்தப் பாடலின் தொடர்ச்சியாக ‘ஞாயிறு-ஸூர்ய ஸ்துதி’ என்ற கவிதையை நாம் நமது வசதிக்காக ஒட்டிவைத்துப் புரிந்துகொள்ளலாம். சூரியனை நோக்கி இப்படிப் பாடுகிறார்:
‘… … …
உடல் பரந்த கடலும்தன் உள்ளே
ஒவ்வோர் நுண்துளியும் விழியாகச்
சுடரும், நின்தன் வடிவை உள்கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்றது இங்கே.
என்தன் உள்ளம் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்அடிக் கீழே
நின்று தன்அகத்து ஒவ்வோர் அணுவும்
நிந்தன் ஜோதி நிறைந்தது ஆகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை ஐயா!’
(எளிமை கருதி சந்தி பிரிக்கப்பட்டிருக்கிறது)
கடல் தனது ஒவ்வோர் அணுவிலும் சூரியனை உள்வாங்கிச் சுடர்வதுபோலே தனது ஒவ்வோர் அணுவும் சூரியனின் ஜோதியை உள்வாங்கிச் சுடர்விட வேண்டும் என்கிறார். முதல் கவிதையின் விரக்தி மனப்பான்மை இந்தக் கவிதையில் மட்டுப்பட்டுத் தெரிகிறது.
இப்படியாகத் தன்னுள்ளே நிலைபெறும் சுடர் ஒன்றை பாரதி தவிப்புடன் தேடிக்கொண்டிருந்திருக்கிறார். பாரதிக்கு மல்பெரி கிடைத்ததா இல்லையா என்பது பற்றி நமக்குத் தெரியாது. ஆனால், நம்மில் பலருக்குப் பல்வேறு தருணங்களில் சூரியனைச் சுட்டிய மல்பெரியாக பாரதியின் கவிதைகள் அமைந்திருப்பது நம் பெரும் பேறு!
முக்கிய செய்திகள்
இலக்கியம்
18 hours ago
இலக்கியம்
18 hours ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
17 days ago