போர்ஹெஸ்: முடிவற்ற புத்தகம்!

By ஷங்கர்ராமசுப்ரமணியன்

போர்ஹெஸ்
தமிழில்: பிரம்மராஜன்
யாவரும் பதிப்பகம்
வேளச்சேரி, சென்னை-42.
தொடர்புக்கு: 90424 61472
விலை: ரூ.550

தமிழ் நவீன இலக்கிய வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒருவர் ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ். தன் வாழ்க்கையில் ஒரு நாவல்கூட எழுதியிராத போர்ஹெஸ், லத்தீன் அமெரிக்க நாவலின் தந்தை என்று கருதப்படுகிறார். சிறுகதைகளிலேயே நாவலுக்குரிய சம்பவங்களையும் சாத்தியங்களையும் கையாளக்கூடிய போர்ஹெஸ், நாவலின் அனுபவப் பிரம்மாண்டத்தையும் அதன் முடிவின்மையையும் உணரவைப்பதில் வல்லவர். மனிதர்கள் தம் எண்ணங்கள் வழியாகவும், கருத்துருவங்கள் வழியாகவும், கனவுகள் வழியாகவும் வாழும் பாகுபாடற்ற தனிப் பிரபஞ்சங்களை போர்ஹெஸின் புனைவுகளில் பார்க்கலாம். நன்மை, தீமை, மகிழ்ச்சி, துக்கம் முதலியவை அவர் உலகில் தற்செயல்களே.

போர்ஹெஸ் ஒன்பது வயதில் ஆஸ்கர் வைல்டின் ‘தி ஹேப்பி பிரின்ஸ்’ படைப்பை மொழிபெயர்த்தவர்; 12 வயதில் ஷேக்ஸ்பியரின் அத்தனை படைப்புகளையும் ஸ்பானிய மொழியிலும் ஆங்கில மொழியிலும் படித்துத் தேர்ந்தவர். ஆயிரக்கணக்கான நூல்கள் கொண்ட தந்தையின் வீட்டு நூலகம்தான் தன் வாழ்வின் முக்கியமான நிகழ்வு என்று போர்ஹெஸ் கூறுகிறார். அந்த நூலகத்திலுள்ள கலைக்களஞ்சியங்களையும் பிரிட்டிஷ், அமெரிக்க இலக்கியங்களையும் வாசித்து, உலகை அளந்த அனுபவம் கொண்டவர் அவர். வாசிப்பனுபவமும் நேரடி அனுபவமும் ஏற்றத்தாழ்வானதல்ல, இணையான அனுபவமே என்பதைத் தனது படைப்புகள் வழியாக நிரூபித்த கலைஞர் அவர். போர்ஹெஸ் தனது வாழ்நாளில் இந்தியாவையே பார்த்திராதவர். குஜராத், மும்பை, திருச்சிராப்பள்ளி சுருட்டு, நூற்றாண்டுகளாகத் தொடரும் மதக் கலவரங்கள், தீண்டாமை ஆகியவை வெறும் தகவல்களாக அல்லாமல், அகப்பருண்மையுடன் அவர் கதைகளில் பதிவாகியுள்ளன. போர்ஹெஸ் எழுதிய ‘மணல் புத்தகம்’ முடிவேயில்லாத பக்கங்களைக் கொண்டது; ஒவ்வொரு முறையும் புதிய பக்கங்களோடு திறப்பது. அது, இந்தியாவில் தீண்டப்படாத சேரி ஒன்றில் வாங்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. எப்போதும் ஞானமும் புத்தகங்களுமே விலக்கப்படுபவை; தீண்டப்படாதவை; தீக்கிரையாக்கப்படுபவையும்கூட.

அழுத்தமான கதாபாத்திரங்கள், ஆண்-பெண் உறவுகள், குடும்பம், ஊர், கலாச்சாரம், தேசம் சார்ந்த உணர்வுகள் முதலியவையே இலக்கியம் என்று கருதும் பொதுப் போக்குக்கு நேரெதிரானவர் போர்ஹெஸ். உலகில் இதுவரை உருவாக்கப்பட்ட அறிவுகள், கருத்துருவங்கள், எழுதப்பட்ட நூல்கள், தத்துவங்கள், மறைஞானங்கள் முதலியவை கதாபாத்திரங்களாக உரையாடும் கதைகள் இவருடையவை. மனிதனின் ஆளுமை, அடையாளம், பார்வை, உணர்ச்சிகள் மட்டுமல்ல; அவனது விதியையும் நிர்ணயிக்கத் துணிந்த அறிவுதான் போர்ஹெஸின் கதைப்பொருள். அதிலிருந்து அவன் விடுபடுவதற்கு எத்தனிக்கும் முயற்சிகளும் அதற்கான சாகசங்களும் சாத்தியங்களும் சந்திக்கும் குறுக்குவெட்டுப் பாதை அவருடைய உலகமாக உள்ளது. அதனாலேயே அறிவின் சுமை, தளைகள் அற்று குற்றத்தையும் பிறழ்வையும் துரோகத்தையும் தழுவும் மனிதர்கள் போர்ஹெஸ் கதைகளில் காவியத்தன்மையைப் பெறுகிறார்கள்.

க.நா.சுப்பிரமணியம், பிரமிள், சி.மோகன், கால.சுப்ரமணியம் ஆகியோரின் மொழிபெயர்ப்பில் தனித்தனியாகப் பல்வேறு சிறுபத்திரிகைகளில் போர்ஹெஸ் கதைகள் தமிழில் வெளியாகத் தொடங்கி கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் இருக்கலாம். முடிவற்ற வேதங்கள், பல்வேறு சமயங்கள், முப்பது மைல்களுக்குள் மாறும் பண்பாடுகள், பூர்வகுடி நம்பிக்கைகள், தொன்மங்கள் ஆகியவற்றால் பிணைக்கப்பட்டிருக்கும் இந்திய தேசம், தனது தொன்மையான அறிவு மரபையே அனுஷ்டானங்களாகவும் ஆட்சி அதிகாரமாகவும் இன்னமும் தக்கவைத்திருக்கிறது. அந்த வகையில் போர்ஹெஸின் படைப்புலகம் நமக்கு நெருக்கமானது.
தமிழின் சிறந்த கவிஞர்களில் ஒருவரும், ‘மீட்சி’ இலக்கிய இதழின் ஆசிரியரும், மொழிபெயர்ப்பாளருமான பிரம்மராஜன் செய்துள்ள இந்த மொழிபெயர்ப்பு மூலம் போர்ஹெஸின் உலகத்தைத் தமிழ் வாசகர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். 26 சிறுகதைகள், ஏழு கட்டுரைகள் கொண்ட நூல் இது. போர்ஹெஸ் குறித்த அறிமுகம், அவரது சிறுகதைகளைப் பற்றிய குறிப்புகள், புகைப்படங்களோடு சிரத்தையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நூல், போர்ஹெஸ் வாசகர்களுக்கு ஒரு பரிசு.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

மேலும்