கிராமம் என்றாலே வறுமையான, படிக்காத, நாகரிகமற்ற மனிதர்கள் வாழுமிடம் என்றொரு பிம்பம் உள்ளது. இன்னொரு பக்கம் கிராமம் என்பது பசுமையான, எளிமையான, சூது வாது தெரியாத அற்புதமான மனிதர்கள் வாழுமிடம் என்ற பிம்பமும் நம்மிடம் இருக்கிறது. இந்த எதிர் எதிரான இரண்டு பிம்பங்களும் மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. உண்மை யில் இவை இரண்டும் உருவாக்கப்பட்டு கட்டமைக்கபட்ட பிம்பங்களே.
இன்று கிராமத்தின் இயல்பும், வாழ்க்கை முறையும், பொருளாதார நிலையும் மாறியுள்ளது. பைக், டிராக்டர், செல்போன், இணையம், பேஸ்புக், கிரிக்கெட், நூடுல்ஸ், வீடியோ கேம் என சகலமும் கிராமத்துக்குள் வந்துவிட்டன. கிராமம் தன்னுடைய இயல்பான அடையாளத்தை உதறி, புதிய தோற்றம் கொண்டுவிட்டது. ஆனாலும் சாதியும் ஒடுக்குமுறையும் கிராமத்தைவிட்டு இன்னமும் விலகவே இல்லை.
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் 150 வருஷங்களுக்கு முன்பு எப்படி இருந்தது என்பது குறித்து, தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை ‘ஒரு இந்திய கிராமத்தின் கதை’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் எழுதப் பட்ட இந்த நூலை சரவணன் மொழி யாக்கம் செய்திருக்கிறார். சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
வட்டிக்கு விடுபவர், வைத்தியர், வாத்தியார், ஆசாரி, மாடு மேய்ப்பவர், விவசாயி என பல்வேறு மனிதர்கள் குறித்தும்; அவர்களின் வாழ்க்கைமுறை பற்றியும் இதில் ராமகிருஷ்ண பிள்ளை விவரித்திருக்கிறார். அத்தோடு கிராமத் துக்கு வரும் பாம்பாட்டி செய்யும் அற் புதங்கள், குறத்தியின் வருகை, குறி சொல் பவர்களின் வருகை, கிராமத்தில் நடை பெறுகிற கூத்து பற்றியெல்லாம் சுவா ரஸ்யமானத் தகவல்களைத் தருகிறார்.
அவரது குடும்பத்தில் ஆயுதபூஜையையொட்டி, எப்படி பாரத ஏடுகளுக்கு பூஜை செய்து பாடுவார்கள் என்பதையும், பாரதம் படிக்கும் பழக்கம் எப்படி கிராமத்தில் வேரூன்றியிருந்தது என்பதையும் விவரித்துள்ளார்.
100 வருஷங்களுக்கு முந்தைய கிராம வாழ்க்கையை ‘ஒரு இந்திய கிராமத்தின் கதை’ விவரிக்கிறது என்றால், 50 வருஷங்களுக்கு முந்தைய தென்தமிழக கிராமம் ஒன்றின் வாழ்க் கையை விவரிக்கிறது ந.முருகேச பாண்டியன் எழுதிய ‘கிராமத்து தெருக்களின் வழியே’ என்ற புத்தகம்.
உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தில், முருகேச பாண்டி யன் தனது சொந்த ஊரான சமயநல்லூர் கடந்த 50 ஆண்டுகளில் அடைந்துள்ள அரசியல், பொருளாதார, பண்பாட்டு மாற்றங்கள் குறித்து விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
கடந்த காலம் என்பது மொழியின் வழியே நினைவுகளாக எல்லோருக் குள்ளும் பதிவாகியுள்ளது. மொழி என்பது முன்னர் எப்போதோ நடைபெற்ற சம்பங்கள் அல்லது அனுபவங்களின் நினைவாக இருப்பதனால்தான் ‘வர லாறு' சாத்தியப்படுகிறது. இன்று நம் கண் முன்னால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் யாவும் வரலாற்றின் தொடர்ச்சிகள். ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் மன அடுக்குகளில் பதிவாகியுள்ள அனு பவங்கள் ஏராளம். கொண்டாட்டங் களுக்கும் துயரங்களுக்கும் காரணமான மனம், காலப்போக்கில் சிலவற்றை மறந்துவிடுகிறது. சிலவற்றை விடாப் பிடியாகத் தக்க வைத்துக் கொள்கிறது என தனது முன்னுரையில் இந்நூலை எழுதிய காரணத்தைச் சொல்கிறார் முருகேச பாண்டியன்.
கிராமத்தின் 50 ஆண்டுகாலச் சாட்சியாக தன்னை உணரும் முருகேச பாண்டியன், ‘‘கிராமத்தில் சாதி, மதம், தொழில் என ஒவ்வொருவரின் அடையாளமும் எல்லையும் வரையறுக் கப்பட்டுள்ளது. உண்மையில் கிராமம் என்பது கண்காணிப்புக்கு உட்பட்ட இறுக்கமான அமைப்பு’’ என்கிறார்
‘பேய்களும் முனிகளும் உறைந் திடும் கிராமத்துவெளிகள்’ என்ற அத்தி யாயத்தில் கிராமத்தில் பேய் குறித்த பயம் எப்படி ஏற்படுகிறது? எதனால் பேயை நம்புகிறார்கள் என அதன் உள வியல், சமூகக் காரணங்களை ஆராய்கிறார்.
மனிதனின் அடிப்படை உணர்ச்சியான பயத்துக்கும், பேய் நம்பிக்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நீலி, பேய்ச்சி, முனியப்பன், காடமர் செல்வி எனப் பேய்களுக்குத் தமிழர்கள் சூட்டிய பெயர்கள் ஏராளம்.
தற்கொலை, அல்லது விபத்தில் அகால மரணம் அடைந்த மனித உயிர்கள் பேய்களாக உலாவும் என்பது கிராமத்தில் வலுவான நம்பிக்கையாக இருந்தது. முனிகள் என்பவை கொஞ்சம் நல்லது செய்பவை. ஆனால் அவை கோபம் மிக்கவை. உச்சிவேளைகளில் அல்லது நள்ளிரவுகளில் முனி உலா வரும்போது மனிதர்கள் எதிரில் வந்தால் அடித்துப் போட்டுவிடும் என்ற பயம் மக்களிடையே இருந்தது.
சிறுவர்களிடம் பேய் குறித்த பயத்தைப் பெரியவர்களின் பேச்சுகளே தூண்டிவிட்டன. இன்று அறிவியல் வளர்ச்சியின் காரணமாக மின்சாரம் வந்தபிறகு பேய்கள் இல்லை என மனம் நம்பியபோதும், இருட்டில் தனியே நடக்கும்போது பேய் பயம் விலகவில்லை என்பதுதான் உண்மை எனக் கூறுகிறார் முருகேச பாண்டியன்.
இது போலவே கிராமத்துக்கு வரும் மணியாட்டிகள் பற்றிய அவரது நினைவுக்குறிப்பு மிக முக்கியமானது.
அறுவடை நேரம் கிராமத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உட்கார நேரம் இருக்காது. அந்த மாதத்தில் மணியாட்டிக்காரர்கள் ஊருக்குள் நுழைவார்கள். அவர்களுக்கு நாழிக்காரர் என்று இன்னொரு பெயர் இருந்தது. வெள்ளையிலான நீள அங்கியை உடலில் அணிந்திருப்பார்கள். தலையில் வெள்ளைத் தலைப்பாகை. அதில் பித்தளைப் பிறை இருக்கும். பிறையின் நடுவில் மயிலிறகு செருகப்பட்டிருக்கும். வெண்கலத்தினால் ஆன பெரிய மணியை வைத்திருப்பார்கள். தோளில் நெல் வாங்குவதற்கு பெரிய பையைக் கோர்த்திருப்பார்கள். இன்னொரு கையில் கம்பு இருக்கும்.
இடது கையில் வைத்திருக்கும் மணியை ஆட்டிக்கொண்டே வீடு வீடாகப் போவார்கள். வீட்டு வாசலில் நின்று மணியை ஆட்டியவாறு பாடத் தொடங்குவார்கள். அந்தப் பாடல் வாழ்த்துவது போலிருக்கும். ‘‘பொலி பெருக… பட்டி பெருக… களம் பொலிக…’’ என்று வாழ்த்துவார்கள். இதனால் கேட்பவர்களுக்கு மன நிறைவு ஏற்படும்.
நெல் கொண்டுவந்தால் நாழி அளவு நெல் பிடிக்கும் மணியைக் கவிழ்த்துப் பிடித்து இரு தடவைகள் நெல்லை வாங்கிக்கொள்வார்கள். நெல் அல்லது பணம் வாங்கிய வீட்டுச் சுவரில் காவிக் கட்டியினால் ஏதோ கிறுக்கிவிட்டுப் போவார்கள்.
இந்தப் புத்தகத்தின் மிகச்சிறப்பான கட்டுரை கிராமத்தில் இருந்த சிறார் விளையாட்டுகள், நினைவில் இருந்து அதைத் துல்லியமாக ந.முருகேச பாண்டியன் விவரிக்கும் விதம் ஆச்சர்யமூட்டுகிறது.
வானத்தில் கொக்கு பறக்கும்போது கூடவே கைகளை உயர்த்திக்கொண்டு ‘கொக்கு பூ போடும்…’ என நம்பி “கொக்கு பற பற” என கத்திக் கொண்டு ஒடும் சிறார்களைப் பற்றி வாசிக்கும்போது நாமும் கொக்கின் பின்னால் ஓடுகிறோம்.
கிராமத்துக்கு வருகை தரும் குடுகுடுப்பைக்காரர், பூம் பூம் மாட்டுக் காரர், பந்தயம் கட்டி இரவு பகலாக சைக்கிள் ஒட்டும் சாகசகாரர் என கிராமத்துக்குள் வந்து போன மனிதர் களையும் மறக்காமல் பதிவு செய்திருக் கிறார்.
180 பக்கங்களுக்குள் ஒரு கிராமத்தின் 50 ஆண்டுகால மாற்றங்களை ஆவணப்படம் போல காட்சிப்படுத்திக் காட்டியுள்ளார் ந.முருகேச பாண்டியன். அவ்வகையில் இதை ஒரு முக்கிய சமூக ஆவணமாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இன்னும் வாசிப்போம்...
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com
முந்தைய அத்தியாயம்: >வீடில்லாப் புத்தகங்கள் 45: எரியும் பசி!
முக்கிய செய்திகள்
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
2 months ago