எம்.வி.வெங்கட்ராம் எழுதி, சாகித்ய அகாடமி விருதுபெற்ற ‘காதுகள்’ நாவலை அது வெளியானபோது என்னுடைய கல்லூரி நாட்களில் படித்திருந்தேன். ஆனால், அதுகுறித்த மனப்பதிவு எதுவும் அப்போது உருவாகவில்லை. எனக்கு அந்த நாவலின் உள்ளடக்கத்தை அந்தப் பருவத்தில் நெருங்கியிருக்கவே முடியாது என்று தற்போது படித்தபோது தெரிந்தது. தாமச சக்தி என்று கூறிக்கொள்ளும் காளி, முருக பக்தனான மகாலிங்கத்தை ஒலி, காட்சி, வாசனை எனப் பல வடிவங்களில் அரூபமாக அலைக்கழித்து, ஓட ஓட வாழ்க்கையின் ஓரத்துக்கு விரட்டி அல்லல்படுத்தும் அனுபவங்கள்தான் அந்த நாவல். மகாலிங்கம் வேறு யாரும் அல்ல; எம்.வி.வெங்கட்ராம்தான். தான் பட்ட இருபது வருட அல்லல்கள்தான் அந்த நாவல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாத்திகரும் நவீனத்துவருமான சுந்தர ராமசாமியை ‘காதுகள்’ ஈர்க்கவில்லை. முருகனின் அருளால் சாகித்ய அகாடமி கிடைத்தது என்று எம்.வி.வெங்கட்ராம் ஒரு நேர்காணலில் வேறு அப்போது சொல்லிவிட்டார். அதை நண்பர்களிடம் சொல்லிச் சிரித்தார் சுந்தர ராமசாமி. அது அந்த நாவல் மீதான சிரிப்பும்தான். கிறிஸ்து, நபிகள், ஆதிசங்கரர், புத்தர், நீட்சே, பிராய்டு, யுங், ஷோபன்ஹேர், ஸ்பினோசா என எத்தனை பேர் வாழ்க்கையைப் பற்றி உரைத்தாலும், வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு சற்றே உதவினாலும், மனித குலம் இதுவரை எத்தனையோ விதமான அனுபவங்களைக் கடந்திருந்தாலும் இன்றும் ஒரு மனிதனுக்கு நேரும் அல்லது அளிக்கப்படும் நரகம் என்பது தனித்துவமானது; அந்த நரகம் எப்போது, எங்கிருந்து வரும் என்று தெரியாது. அது கண்ணுக்குப் புலப்படும் உலகத்திலிருந்து வர வேண்டும் என்பதுகூட இல்லை. அது மற்றவர்களால் புரிந்துகொள்ளவோ, பெரும்பாலும் தீர்க்கப்படவோ முடியாதது. தீர்க்க முடியாத புதிர்களும் துயரங்களும் இருப்பதால்தானே வாழ்க்கை இத்தனை காலத்துக்குப் பிறகும் சுவாரசியமானதாகவும் நம்மை வேட்டையின் ருசியோடு துரத்த வைத்துக்கொண்டும் அடித்துப் புசித்துக்கொண்டும் இருக்கிறது. அந்தத் தீர்க்க முடியாத புதிரைக் கையாள்வதற்கு நாவலைப் போல உகந்த வடிவம் வேறில்லை.
தன் சொந்த வாழ்க்கையில் மகாலிங்கம் சந்தித்த அத்தனை துயர்களுக்கும் தன் உடலையும் மனத்தையும் ஒப்புக்கொடுத்து மேடையாக்கிய எம்.வி.வெங்கட்ராம் என்ற எழுத்தாளன், நமக்கு அளித்த பரிசுதான் ‘காதுகள்’. இந்த நாவல், அளவில் சிறியதாக இருந்தாலும், நான் படித்த சிறந்த இந்திய நாவல்களில் ஒன்று என்று இதைச் சொல்லத் துணிகிறேன். ‘காதுகள்’ நாவலின் நாயகன் கேட்கும் வசவுகள், பார்க்கும் ஆபாசங்கள், கோர, பின்ன உருவங்கள், அன்றாட வாழ்க்கையில் படும் அல்லல்கள், அவமானங்கள் அத்தனையையும் வாசகனாகப் படிக்கும்போது துயரமாக இல்லை. சில இடங்களில் சிரிப்புக்கூட வந்துவிடுகிறது. இரண்டு பெண் சக்திகள் ஒரு இடத்தில் மகாலிங்கத்தின் காதுபடப் பேசுகின்றன. மகாலிங்கம் அதைக் கேட்கிறான். மகாலிங்கத்திடம் இன்னும் இரண்டே இரண்டு வேட்டிகள்தான் இருக்கின்றன. அதையும் இல்லாமல் ஆக்கி அவனைத் தெருவில் ஓட விட வேண்டும் என்கின்றன. நமக்கு நகைச்சுவையாக உள்ளது. இந்த இடைவெளிதான் நாவலாசிரியன் அடையும் கலை வெற்றி என்று தோன்றுகிறது. வாசகனுக்குக் கிடைக்கும் அந்த இடைவெளிதான் எம்.வி.வெங்கட்ராம் என்ற சிருஷ்டிகர்த்தாவும் மனிதனும் அடைகிற வெற்றியும் ஆழமும்.
மேல்மனம், ஆழ்மனம், நனவிலி, கூட்டு நனவிலி என மனோதத்துவ அறிவு நம் மனதைக் கோடு போட்டு வகைப்படுத்தியிருக்கிறது. ஆனால், ஒருவன் தடுக்கி நரகத்தில் விழும்போது, இந்தக் கோடுகளோ வகைப்படுத்தலோ அவனுக்கு உதவுவதில்லை. அது தனி நரகம்தான். அதன் நுழைவு வழியும் வெளியேறும் வழியும் அவனுக்கு மட்டும்தான். அந்த நரகத்தை முற்றிலும் தாங்கி மாளாமல் மாண்டு அவன் பிறக்க வேண்டும்; அப்படிப் பிறந்துவிட்டால் அது கல்விதான்; அது பரிசுதான்; அது ‘காதுகள்’ போன்ற படைப்புதான். உண்மையிலேயே விசித்திரமான அனுபவங்களை எதிர்கொண்ட எம்.வி.வெங்கட்ராம், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நிதானமாக, அழுத்தமாக எந்தத் தையலும் தெரியாமல் இந்த நாவலை எழுதியுள்ளார். ஒரு வித்தியாசமான களனைச் சொல்லப்போகிறோம் என்ற கிறுகிறுப்போ மோகமோ மிகைப் பேச்சோ எதுவும் இல்லாத படைப்பு ‘காதுகள்’. மனம் என்னும் உயிர் – வேதியியல் - கலாச்சார சாராம்சத்தில் ஒரு விபரீதம் நடந்தால் என்ன ஆகும்? அதை, நம் முன்னர் ஒரு அனிமேஷன் திரைப்படம்போல நிகழ்த்திக் காட்டும் மகத்தான படைப்பு இது.
எம்.வி.வெங்கட்ராமுக்குப் பிற்காலத்தில் காது கேட்கும் திறன் குறைந்துபோனதில் ஆச்சரியமில்லை. அத்தனை சிரமங்களைக் கொடுத்த காதுகள் கொஞ்சம் ஓய்வெடுப்பது நிச்சயம் அவரை மகிழ்ச்சிப்படுத்தவே செய்திருக்கும். அந்த மகிழ்ச்சியும் புரிதலின் நிறைவும் அவரது பிற்காலப் புகைப்படங்களில் தெரிகிறது. காதுகளே வேண்டாம் என்பதுபோலச் சிரிக்கிறார்.
அந்த எம்.வி.வி.தான் சொல்கிறார். “வாழ்க்கையை, என்னை வாழவைக்கிற இந்தச் சமுதாயத்தை இங்குள்ள உயிரினங்களையும் உயிரற்ற சடப் பொருள்களையும் நான் நேசிக்கிறேன். இந்த மண்ணுக்கு, இந்தச் சுழலுக்கு, சூழலுக்கு, இந்த இன்பதுன்பத்துக்கு என்னை அனுப்பிவைத்தது யார் அல்லது எது என்று கண்டுபிடிக்க நான் ஓயாமல் செய்யும் முயற்சிதான் என்னுடைய இலக்கியப் படைப்பு. அதாவது, என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன்” எம்.வி.வி.தானே இதைச் சொல்ல முடியும்!
- தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
2 months ago