காலையில் நாவல்... மாலையில் சிறுகதை...

By செய்திப்பிரிவு

காலையில் நாவல்... மாலையில் சிறுகதை...

ஜெயமோகனின் வாசகர்களுக்கு இந்த ஊரடங்குக் காலம் ஒருவகையில் கொண்டாட்டமானதாக மாறியிருக்கிறது என்று சொல்லலாம். ஏற்கெனவே தனது இணையதளத்தில் வெண்முரசு வரிசையில் 25-வது நாவலை எழுதிக்கொண்டிருக்கும் ஜெயமோகன், தற்போது தினம் ஒரு சிறுகதையையும் எழுத ஆரம்பித்திருக்கிறார். ஊரடங்குக் காலத்துச் சிறுகதைகளின் எண்ணிக்கை நாற்பதை நெருங்குகிறது. அவற்றில் ‘நற்றுணை', ‘ஆழி', ‘பத்து லட்சம் காலடிகள்' ஆகிய கதைகள் முக்கியமானவை என்று மதிப்பிடுகிறார்கள் விமர்சகர்கள். காலையில் நாவல், மாலையில் சிறுகதை என்று முறைவைத்துப் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ஜெயமோகனின் வாசகர்கள். ஊரடங்கு நீடித்தால், வெண்முரசுக்கு இணையாக ராமாயணத் தொடர் நாவல் ஒன்றைத் தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழ் இலக்கியத்தில் கொள்ளைநோய்

தமிழ் இலக்கியத்தில் கொள்ளைநோய் குறித்த பதிவுகள் வெகு அபூர்வமாகவே காணக் கிடைக்கின்றன. புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’ கதையில், மலேரியாவால் செத்துமடியும் கூட்டம் பற்றி சின்ன குறிப்பு இருக்கிறது. தி.ஜானகிராமனின் ‘செம்பருத்தி’ நாவலில் ஒரு பாத்திரம் காலராவுக்குப் பலியாகிறது. சு.வெங்கடேசனின் ‘காவல்கோட்டம்’, சு.வேணுகோபாலின் ‘நுண்வெளி கிரகணங்கள்’ என ஆங்காங்கே கொஞ்சம் பதிவாகியிருக்கின்றன. பரந்த அளவில் கொள்ளைநோய் அனுபவங்கள் நம் இலக்கியத்தில் பதிவாகவில்லை. என்ன காரணம்? சமீபத்தில் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் எழுத்தாளர் கி.ரா., “நம்மளோட அறிவுச் சூழலும்கூட ஒரு காரணம். இவங்க மனசுல வெச்சிருக்குற குறிப்பிட்ட வடிவங்களைத்தான் இவங்க இலக்கியமாகவே மதிக்கிறாங்க” என்றார். இலக்கியம் படைத்த வர்க்கத்தினர் கடந்த காலங்களில் கொள்ளைநோய்ப் பிரச்சினையை எதிர்கொள்ளாதது ஒரு காரணம் என்றும் விமர்சனங்கள் வருகின்றன. இப்போது அப்படி இல்லை. ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் கரோனாவின் பாதிப்புகள் கதைகளாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கரோனாவை மையமாக வைத்து சிறுகதைகளை எழுதச்சொல்லி க.நா.சு. பெயரில் ஒரு போட்டியை அறிவித்திருக்கிறது ‘யாவரும்’ பதிப்பகம். அந்தக் கதைகளெல்லாம் தொகுக்கப்படும்பட்சத்தில், ஒரு நல்ல ஆவணமாக இருக்கும்.

ஊரடங்கில் புத்தகக்காட்சி!

உலகப் புத்தக தினத்தை ஒட்டி சென்னை பெரியார் திடலில் சுயமரியாதை பிரச்சார இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் புத்தகக்காட்சி நடைபெறுவது வழக்கம். அப்போது பதிப்பகத்தின் புத்தகங்கள் 50% தள்ளுபடி விலையில் வாசகர்களுக்கு விற்பனை செய்யப்படும். ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு அந்த புத்தகக்காட்சி நடைபெறவில்லை. என்றாலும், “வயிற்றுக்குச் சோறிடுதல்போல அறிவுப் பசியைத் தீர்ப்பதற்குப் புத்தகங்களை 50% தள்ளுபடியுடன் தரும் திட்டத்தை இந்த ஆண்டும் நடத்திடுவதில் நாம் பின்வாங்கவில்லை” என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. அதன்படி தற்போது முன்பதிவு மட்டும் நடைபெறுகிறது. வாசகர்கள் நேரில் வந்து நூல்களை வாங்க முடியாத சூழல். பணமும் உடனடியாகச் செலுத்தத் தேவையில்லை. மே 10-ம் தேதி வரை புத்தகங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம். தொடர்புக்கு: 9626657609, 7639818254.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

மேலும்