வெண்ணிற நினைவுகள்: மௌனத்தின் மொழி

By திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

மௌனப் படங்களின் வெற்றி நாயகனாக இருந்த சார்லி சாப்ளின், பேசும் படம் வந்தபோதும் மௌனப் படங்களையே எடுத்துவந்தார். முக பாவங்களின் வழியாகவே உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட முடியும்போது, எதற்காக உரையாடல்கள் என்ற கேள்வி அவரது மனதில் இருந்தது. ஒரு நடிகனுக்கு மௌனப் படம்தான் அதிகபட்ச சாத்தியத்தை வழங்குகிறது என்கிறார் சாப்ளின். ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படம்தான் அவரது முதல் பேசும் படம். தான் ஒரு குறிப்பிட்ட மொழியில் பேசுவதை மற்ற நாட்டு மக்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்று சாப்ளின் நிறைய யோசித்தார். ஆனால், பேசும் படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக, அவரது ‘தி கிரேட் டிக்டேட்டர்’ படம் பெரும் வெற்றி பெற்றது.

1910-ல் மௌனப் படங்கள் வெளிவரத் தொடங்கின. இந்தியாவில் தாதா சாகேப் பால்கே மராட்டியில் மௌனப் படத்தை 1913 முதல் தயாரிக்க ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாக நடராஜ முதலியார் தென்னிந்தியாவின் முதல் மௌனப் படத்தை 1917-ல் தயாரித்தார் அதன் பெயர் ‘கீசகவதம்’. இந்தப் படம் அடைந்த வெற்றியை அடுத்து பலரும் மௌனப் படங்களை இயக்க ஆரம்பித்தார்கள். மௌனப் படங்களின் அழகு அதன் கறுப்பு - வெள்ளைக் காட்சிகள். சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் அசைவதுபோலவே வேகமாகக் காட்சிகள் மாறக்கூடியவை. நடிகர்களின் க்ளோசப் காட்சிகளே பிரதானம். பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் காதல் திரைப்படங்கள். இரண்டுக்கும் மொழி தேவையில்லைதானே! பஸ்டர் கீட்டனின் மௌனப் படங்கள் வேடிக்கையானவை. அதேநேரம், தனித்துவமிக்க கருவைக் கொண்டவை. பேசும் படங்கள் வந்த பிறகு, மௌனப் படங்கள் தயாரிப்பது நின்றுபோனது. மௌனப் பட நாயகர்கள் ஒதுக்கப்பட்டார்கள். சினிமா பேசத் தொடங்கியவுடன் அதன் போக்கும் வணிகமும் மாறத் தொடங்கின. சினிமா ஒரு கலை என்றபோதும் அதைப் பெரும் வணிகமாக மாற்றியது ஹாலிவுட். இன்றும் ஹாலிவுட் சினிமாவின் பிரதான நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டுமே. ஆனால், உலகின் பிற தேசங்களில் சினிமா வணிகமாக மட்டும் கருதப்படவில்லை. ஒருபுறம் வணிக சினிமா இருந்தாலும், மறுபுறம் பண்பாட்டையும் மக்கள் வாழ்வையும் பிரதிபலிக்கும் கலைப் படங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருந்தன.

மௌனப் படங்களின் யுகம் முடிந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு முழு நீள மௌனப் படத்தை வண்ணத்தில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு எழுந்தது பாராட்டுக்குரியது. ‘பேசும் படம்’ என்ற அவரது திரைப்படம், இந்திய சினிமா வரலாற்றில் தனித்துவமானது. 1987-ல் வெளிவந்த ‘பேசும் படம்’ திரைப்படத்தை எழுதி இயக்கியவர் சிங்கீதம் சீனிவாச ராவ். கமல்ஹாசன், அமலா, டினு ஆனந்த் முக்கியக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். கௌரிசங்கர் ஒளிப்பதிவு. வேலை தேடும் இளைஞன் கதாபாத்திரத்தில் கமல் நடித்திருக்கிறார். சாப்ளினின் புகழ்பெற்ற கதாபாத்திரம் அது. சாப்ளின் நடித்த மௌனப் படங்களைப் பாருங்கள். பெரும்பாலும் சாப்ளின் வேலை தேடியே அலைந்துகொண்டிருப்பார். வேலை கிடைத்தால் அங்கே அவர் செய்யும் குழப்பங்கள் மிகவும் வேடிக்கையானவை. முடிவில் அவருக்கு வேலை போய்விடும். இந்த வேலை தேடும் முயற்சிக்கு ஊடாக அவர் ஓர் இளம்பெண்ணைச் சந்திப்பார். அவர்களுக்குள் மெல்லிய காதல் உருவாகும். கிட்டத்தட்ட இதுபோன்ற ஒரு கதைக்களத்தைத்தான் இப்படத்துக்கும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

சாப்ளினின் ‘சிட்டி லைட்ஸ்’ திரைப்படத்தைப் பாருங்கள். அதுவும் ஒரு மௌனப் படமே. அதில் நகரக் காட்சிகளை மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக, வீதியில் சாப்ளின் செல்லும் காட்சியும், அதன் பரபரப்பான இயக்கமும், பேப்பர் விற்கும் சிறுவர்களும், கடையைச் சுத்தம் செய்யும் பெண்ணும், வீதியில் அவசரமாகச் செல்லும் மனிதர்களும் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பார்கள். குப்பையில் ஒரு ரோஜாப்பூ கிடப்பதைக் கண்டு, அதைக் குனிந்து எடுக்க சாப்ளின் முற்படுவார். அப்போது பேப்பர் விற்கும் சிறுவர்கள் அவரது கால்சட்டையின் கிழிந்த பகுதியை இழுத்து மேலும் கிழிக்க முற்படுவார்கள். சாலையில் ஒரு மலரைக் கண்டெடுக்கும் சாப்ளினின் மறுவடிவம்போலத்தான் ‘பேசும் பட’த்தில் அமலாவைச் சந்திக்கிறார் கமல்.

துணிக் கடையில் உள்ள அழகான சட்டைகளைக் கமல் வேடிக்கை பார்க்கும் காட்சியும், போதையில் மயங்கிய நபரைக் காப்பாற்றும் காட்சியும் முக்கியமானவை. இவை மௌனப் படங்களில் தவறாமல் இடம்பெறும் காட்சிகளாகும். சட்டையின் கையை மட்டும் கமல் துவைக்கும் அழகும், வேலை தேடி வரிசையில் நிற்கும் காட்சியில் சற்றே ஒதுங்கி காரின் மீது சாய்ந்து நின்றபடியே கமல் அமலாவைப் பார்க்கும் விதமும், அமலா காதணி வாங்க முற்படும்போது, கமல் உதவும் காட்சியில் பார்வையிலேயே தன் காதலை வெளிப்படுத்தும் விதமும் கமல்ஹாசனின் நிகரற்ற நடிப்பின் சாட்சியங்கள். அதுபோலவே அமலாவும் தனது முக பாவங்களின் வழியாகவே மனதை வெளிப்படுத்துகிறார். ஒரு வார்த்தை பேசிக்கொள்ளாத அவர்களின் காதல் அற்புதமானது.

‘பேசும் படம்’ காதலைச் சொன்ன படம் என்றாலும், அதற்குள்ளும் ஒரு வில்லன் உண்டு. பணக்காரக் கணவனைக் கொல்ல அவன் மனைவி முயல்கிறாள். அவளால் அனுப்பி வைக்கப்பட்ட கொலையாளி கமலை பணக்காரன் என நினைத்துக்கொண்டு கொல்வதற்கு முயற்சிசெய்கிறான். அவனது செயல்கள் வேடிக்கையானவை. குறிப்பாக, ஐஸ் கத்தியை அவன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மௌனப் பட யுகத்தில் திரைப்படங்கள் பெரிதும் அரங்குக்குள்ளாகவே படமாக்கப்பட்டன. ஒன்றிரண்டு வீதிகள், கடைகள், மதுவிடுதி அல்லது ஒரு பங்களா இவைதான் கதையின் களம். அதற்குள் கதாபாத்திரங்கள் வந்துபோவார்கள். ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டுமே கேமரா நகரும். மற்ற நேரங்களில் கேமராவுக்குள் கதாபாத்திரங்கள்தான் அங்குமிங்குமாக நடந்துபோவார்கள். மௌனப் படங்களின் சண்டைக் காட்சிகள் மிகவும் வேடிக்கையானவை. அடித்துப் பிடித்துத் துரத்தித் தப்பிக்கும் வேடிக்கைகளைக் கண்டு அரங்கமே வெடித்துச் சிரிக்கும். ‘பேசும் பட’மும் இதுபோலவே ஆனந்தபவன் என்ற கமல் குடியிருக்கும் இடம். வீதி, சிக்னல் மற்றும் புஷ்பக் என்ற ஸ்டார் ஹோட்டல் எனக் குறிப்பிட்ட களத்துக்குள்ளாகவே கதை நிகழ்கிறது.

மௌனப் படங்களுக்கு இசை முக்கியமானது. அதுவே படத்தின் வேகத்தைத் துரிதப்படுத்தும். கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை அடையாளம் காட்டும். அதை மிகச் சரியாகக் கையாண்டிருக்கிறார் எல்.வைத்தியநாதன்.

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வதில் கமல்ஹாசன் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர். அந்தச் சாதனை வரிசையில் ‘பேசும் படம்’ முக்கியமானது.

- எஸ்.ராமகிருஷ்ணன், ‘சஞ்சாரம்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writerramki@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்