பஞ்சம்தான் பெரிய கொள்ளைநோய்… நாம அதைத் தவிர்க்கத் தயாரா இருக்கணும்!- .கி.ரா. பேட்டி

By சமஸ்

நாம் வாழும் காலத்தின் முதுபெரும் படைப்பாளியும் நூற்றாண்டை நெருங்குபவருமான கி.ராஜநாராயணன் இந்த ஊரடங்கு காலத்தில் எப்படி இருக்கிறார்? எத்தனையெத்தனை நோய்களையும் மக்களின் வருத்தப்பாடுகளையும் பார்த்தவர் அவர்! இந்த ஊரடங்கு காலத்தை அவர் எப்படிப் பார்க்கிறார்? நம்முடைய மூதாதையோரிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள இன்றைக்கு ஏதேனும் செய்தி இருக்கிறதா? புதுச்சேரியில் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பவருடன் பேசினேன்

எப்படியிருக்கிறீர்கள்?

நான் எப்படி இருக்கேன்? வயசு முன்னமே நடமாட்டத்தைக் கொறைச்சுடுச்சு. வீட்டுலயேயும் போன பிற்பாடு முழுக்கவுமே வீடு அடங்கித்தானே கெடக்கேன்? இந்த ஊரடங்குக்கு முன்னம் பார்த்துப் பேச யாராவது வந்துபோய் இருப்பாங்க. இப்ப அதுவும் நின்னுடுச்சு. பேச்சு கம்மியாயிடுச்சு. பேச்சு கம்மியாயிடுச்சுன்னா வந்துபோற ஆட்களை மட்டும் சொல்லலை; போனுல பேசுற ஆளுங்களும்கூடக் கம்மியாயிடுச்சு. கொஞ்சம்போல வாசிக்கிறேன், கொஞ்சம்போல எழுதுறேன். கூட ஆளுங்க இருந்தாலும் தனியாத்தான் கெடக்கேன்.

உங்கள் வாழ்க்கையில் கரோனா மாதிரி எத்தனை கொள்ளைநோய்களைப் பார்த்திருக்கிறீர்கள்?

நெறைய. ஆங்கில மருத்துவம் வரலைன்னா இன்னைக்கு மனித குலம் சாதாரணமா கடந்துபோற பல நோய்கள் நீங்க குறிப்பிடுற கொள்ளைநோய்களாகத்தான் வந்துபோயிருக்கும். நம்ம ஊருல வசவுகள்லகூட அதற்கான தடயங்கள் இருக்கே! ‘நீ கழிச்சல்லபோக!’ன்னு சொன்னா, அது காலரா; ‘நீ காளியாலபோக!’ன்னு சொன்னா அது பெரியம்மை. எனக்குக் காசநோய் வந்தப்போ நான் பொழைக்க மாட்டேன்னுதானே எல்லாரும் நெனைச்சாங்க; ஆங்கில மருத்துவத்துல மருந்து கண்டுபிடிக்கப்பட்டதால பொழைச்சேன். சின்னதும் பெரிசுமா நெறைய வந்துபோகும். பெரிசா நடுங்கவெச்சதுன்னா வைசூரிதான்; அதான், பெரியம்மை.

பெரியம்மை கால அனுபவங்களைக் கொஞ்சம் பேசலாமா? மக்கள் எப்படி அந்தக் காலத்தில் எதிர்கொண்டார்கள்?

ஒரு கிருமி அல்லது நோய் பெரிசா ஆயிடுச்சுன்னா நம்ம ஊர்ல என்ன பண்ணுவாங்கன்னா, மக்கள் அதைக் கும்பிட ஆரம்பிச்சிடுவாங்க. எல்லாம் பயம்தான். வைசூரி வந்துட்டா, ‘மாரியம்மன் இறங்கிடுச்சி’ன்னு சொல்வாங்க. ‘ஆயிரம் கண்ணுடையாள்’னு சாமிக்குப் பேர் வெச்சிருக்காங்களே அது உடம்பு பூராம் ஏற்படுற கொப்புளங்களைத்தான் குறிக்குது. நாட்டு வைத்தியங்ககிட்ட அறிகுறியைக் காட்டுவாங்க. அவங்க சில வழிமுறைகளைச் சொல்வாங்க. சிகிச்சை, மருந்துன்னு எல்லாம் பெரிசா எதுவும் கெடையாது. வேப்ப மரம்தான் நம்மளோட பெரிய ஆயுதம். வீட்டு வாசல்லயே வேப்பங்கொழையைக் கட்டித் தொங்கவிடுவாங்க. அன்றாடம் வீட்டை நல்லா கழுவிவிட்டு, வேப்பிலையை மஞ்சளோடு அரைச்சுக் கரைச்ச தண்ணியத் தெளிச்சுவிடுவாங்க. வேப்பந்தழைகளைப் படுக்கை விரிப்புல நிரவிவிட்டு நோய் கண்டவங்களை அதுல படுக்கப்போடுவாங்க. வேப்பிலையை வெதுவெதுப்பான தண்ணியில ஊறவெச்சி, அதுல குளிப்பாட்டுவாங்க. சாப்பாட்டுல பொதுவா உப்பு, புளி, காரம் குறைப்பாங்க. குளிர்ச்சியான உணவா கொடுப்பாங்க. உடம்பு காத்திரத்துக்காக மீன் கவுச்சி சேப்பாங்க. வீட்டுக்குள்ள நோய் கண்டவங்களைத் தனிச்சுப் பராமரிக்கிறதோட வெளிப்புழக்கத்தையும் குறைச்சுக்குவாங்க. அம்மனுக்கு மாவிளக்கு போடுறேன்னு வேண்டிக்குவாங்க. அதுக்கு அப்புறம் நடக்குறது நடக்குறபடியான கதைதான்.

பெரியம்மைக்கு எவ்வளவோ உயிர்களைக் கடந்த காலத்தில் பறிகொடுத்திருக்கிறோம். எவ்வளவோ நோய்கள் பெரியம்மைபோலவே வந்து சென்றாலும், அது மட்டும் எப்படி பக்தி கட்டுமானத்தோடு சேர்ந்தது? ஏன் காலராவுக்காகக் கோயில்கள் எழுப்பப்படவில்லை; அம்மைக்காகக் கோயில்கள் எழுப்பப்பட்டன?

இந்த அம்மை ஆளைக் கொல்ற அளவுக்கு அபாயத்தைக் கொண்டிருந்தாலும், ஒரு தடவை ஒரு ஆளைப் பிடிச்சா மறுபடி பிடிக்கிறதில்லை. அதாவது, மனுஷனுக்கு அந்தக் கிருமியை எதிர்க்கிற சக்தி கெடைச்சுடுது. அதேபோல, இதுல பிழைக்கிறவங்களுக்கும் பெரிய சிசிச்சை எதுவும் தேவைப்படுறது இல்லை. அதுவா வந்து, அதுவா சரியாகிடுதுல்லா? அதனால, அதுக்கு ஒரு தெய்வ சக்தி இருக்கிறதா நெனைச்சாங்க. அம்மை வந்தால் அதுக்கு எந்த வைத்தியமும் பார்க்கக் கூடாதுன்னு நெனைச்சாங்க. கண் விழியில அம்மைப் புண் விழும். கண் தெரியாமப் போயிடும். அப்பவும்கூட கண்ணீரோட, ‘சாமி நாங்க என்ன குத்தம் செஞ்சோம்’னுதான் கேட்பாங்க. அப்பதான் கோயில் கட்டிக் கும்பிடுறது, கூழ் ஊத்துறது, இல்லாதபட்டவங்களுக்கு உதவுறது இதெல்லாம் வேண்டுதலுக்கான பிராயச்சித்தமா வருது. ஆங்கில மருத்துவத்துல அம்மைக்குத் தடுப்பூசி கண்டுபிடிச்சு, அதைப் போட அரசாங்கத்து ஆட்கள் வந்தபோது, பல ஊர்கள்ல ஜனங்கள் ஊரைவிட்டே ஓடிப் போய்டுவாங்க. தடுப்பூசி போடுறதுக்கு விழிப்புணர்வுக் கூட்டம், பள்ளிக்கூடப் பிள்ளைகள் வழியா பெத்தவங்களுக்குச் சொல்லி அனுப்புறது, ஊருல உள்ள வாத்தியாருங்க, படிச்சவங்க, வீடு வீடா ஏறி பேசிப் புரியவைக்குறதுன்னு நம்மூர்ல அவ்வளவு காரியங்கள் தேவைப்பட்டிருக்கு. அம்மையைத் தாண்டி கோயம்புத்தூர் மாதிரி சில இடங்கள்ல அரிதா பிளேக் மாரியம்மன் கோயில் உண்டு. அதுக்கு ஏன் கோயில்ன்னா ஏற்கெனவே உள்ள பழக்கத்தோட, வேண்டுதலோட தொடர்ச்சியா இருக்கலாம். கரோனாவுக்கு யாரும் கோயில் கட்டுவாங்கன்னு நான் நெனைக்கலை.

பொதுவாக, அண்டை ஊர்களில் பெருநோய்கள் சூழ்கின்றன என்ற தகவல்கள் வரும்போது, எப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஓர் ஊரில் எடுப்பார்கள்? ஊர்க் கட்டுமான உத்தரவு போன்ற நடைமுறை ஏதும் இருந்திருக்கிறதா?

பக்கத்து ஊர்ல ஒரு வியாதின்னு சேதி வந்தாலே, அந்தப் பக்கம் போக்குவரத்தையும் புழக்கத்தையும் குறைச்சிக்குறது இயல்பாவே நடைமுறைக்கு வந்திடும். பொதுவா, ஊர்ல எல்லாரும் சேர்ந்து என்ன பண்ணுவாங்கன்னு கேட்டீங்கன்னா, வைக்கோல் பிரியில வேப்பிலையைச் செருகி செருகி நீளமா தோரணம் மாதிரி கட்டி, ஊர் எல்லையில கட்டிடுவாங்க. அப்படிக் கட்டினா நோய் உள்ளே வராதுன்னு ஒரு நம்பிக்கை. இதேபோல ஊருக்குள்ள ஒரு வீட்டுல வியாதி வந்துடுச்சுன்னாலும், வீட்டுக்கு வெளியில அடையாளமா வேப்பிலைத் தோரணம் கட்டிடுவாங்க; வாசல்லேயே வேப்பிலையும் மஞ்சத் தண்ணீயும் வெச்சிருவாங்க. அது ஒரு அடையாளம்; மத்தவங்க ஜாக்கிரதையா இருக்கணும்கிறதுக்கு. மத்தபடி, பரவுற நோயை யாராலும் தடுக்கவே முடியாதுன்னு எல்லாத்துக்கும் தெரியும். பிரிட்டிஷ்காரன் காலத்துல சுதந்திரப் போராட்டத்துல ஈடுபட்டவங்க அவன் கண்ணுலேர்ந்து தப்பிக்கிறதுக்காக வீட்டு வாசல்ல வேப்பிலையைச் செருகுறது நடக்கும். ஏன்னா, இதைப் பார்த்தான்னாலே அவன் பயந்து ஓடிடுவான்.

உலகெங்கும் கரோனா பரவும் இந்நாட்களில், அது சம்பந்தமான விழிப்புணர்வைக் காட்டிலும் பயம் நம் சமூகத்தை அதிகம் பிடித்து ஆட்டுவதாகத் தோன்றுகிறது. கரோனாவுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மக்களின் பொருட்டு உயிரை விட்டிருக்கும் நிலையில், அவர்களுடைய இறுதிச் சடங்கைக்கூடப் பொது மயானங்களில் மேற்கொள்ள முடியாத அளவுக்கு அந்தந்தப் பகுதி மக்கள் தங்கள் வெறுப்பை உமிழ்வதைப் பார்க்கிறோம். கடந்த காலங்களில் தொற்றுநோயால் இறப்பவர்களின் இறுதிச் சடங்குகள் எப்படி நடக்கும்?

அது ரொம்ப கண்ணியமாகத்தான் நடக்கும். முன்னெச்சரிக்கையா இருப்பாங்க. ஆனா, வெறுக்க மாட்டாங்க. இப்படியான நோய்கள்ல ஒருத்தர் சாகும்போது, ஒரு போர்வையை விரிச்சி, பிரேதத்தை நேரடியா தொடாம ஒரு கம்பால நகர்த்தி அதைப் போர்வைக்குள்ள தள்ளி, தொட்டில் கட்டி அதை மூங்கில் கழியில இணைச்சு தூக்கிட்டுப் போவாங்க. ஆனா, யாரையும் யாரும் ஒதுக்க மாட்டாங்க. சாவு யாரை விட்டு வைக்கும்? சாவு கொடுத்தவனை வெறுக்கலாமா? இன்னைக்குப் பிரச்சினை என்னன்னா அரசாங்கமே பயப்படுது!

ஊர் நெடுக ஒரு தொற்றுநோயால் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் நாட்களில், ஊரின் செயல்பாடு நிறுத்தப்பட்டது மாதிரியான நினைவு ஏதும் இருக்கிறதா?

அப்படி நடக்காது. இப்போ ஒரு ஊருல நெறைய பாதிப்பு இருக்குன்னு வெச்சுக்குங்க, திருவிழா, ஆடல் பாடல், சாம்பிராணி, பத்தி இதையெல்லாம்தான் நிறுத்துவாங்க. அன்றாட ஓட்டம் நிக்காது. கொஞ்சம் ஜாக்கிரதையா அனுசரிச்சு நடந்துக்குவாங்க. இதே சில தெருக்கள்லதான் பாதிப்புன்னு வெச்சிக்கங்க; திருவிழாகூட நிக்காது; சாமி ஊர்வலம் அந்தத் தெருக்கள்ல மட்டும் நடக்காது; ஒருவேளை, அந்தத் தெருவைக் கடந்துதான் போகணும்னாலும், வாத்தியக்காரர்கள் அங்கே மட்டும் வாசிக்க மாட்டாங்க. அமைதியா கடந்துபோயிடுவாங்க. மேலை நாடுகள்ல வினோதமா நான் வேற ஒண்ணு கேள்விப்பட்டிருக்கேன். இத்தாலியில பிளேக் பரவினப்போ, அந்த மக்கள் என்ன பண்ணுனாங்கன்னா, ஊர்கள்லேர்ந்து வெளியேறி மலையில போய் குடியேறியிருக்காங்க. அப்படி மலையிலேயே இருந்த காலகட்டத்துல மக்கள் பொழுதைப்போக்குறதுக்காகச் சொல்லிக்கிட்டதுதான் பின்னாடி ‘டெக்கமரான் கதைகள்’னு வந்துச்சு. ஆனா, எப்படியும் மனுஷக் கூட்டம் உழைச்சு ஆகணும். அது நின்னுச்சுன்னா பெரும் கூட்டம் பசியில சாக வேண்டியிருக்கும்.

கரோனாவை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

என்னைக் கேட்டா, கிருமிங்க கொண்டுவர்ற பெருநோய்கள் எல்லாத்தையும்விட பயங்கரமான கொள்ளைநோய், பஞ்சம்தான். ஒரு ஊரு எல்லாத்தையும் தாங்கி நிக்கும். எப்போ மக்கள் ஊரைவிட்டு குடும்பம் குடும்பமா காலி பண்ணிப் போவாங்கன்னா பஞ்சத்தப்போதான். ஒரு கிராமம் அழியுது, கிராமம் குறையுது, கிராமம் காணாமப்போகுதுன்னா அது நோய்களால அல்ல; பஞ்சத்துனாலதான். நான் கரோனாவைக் காட்டிலும் பஞ்சத்தை நெனைச்சுத்தான் ரொம்ப அச்சப்படுறேன். ஏன்னா, நம்மூர்ல மக்கள் ஊரைவிட்டு வெளியேறுகிற நெலமை கடந்த காலம் முழுக்க எப்போ வந்திருக்குன்னா, வியாதியால இல்லை; பசியாலதான். ஒண்ணும் சாப்பிடுறதுக்கு கிடைக்காட்டா ஊர்ல இருக்க முடியுமா? ‘வேலைக்குக் கூலியா ரூவா வேணாம்; தானியம் கொடு’ன்னு கேட்பாங்க. வரலாறு நெடுக தானியம்தான் முக்கியம். ஊர்ல இருக்கிற பெரிய தலைக்கட்டுங்க வீட்ல இருக்கிற தானியத்தைக் கொஞ்சம் கொடுத்துப்பாப்பாங்க. அதுக்கு மேல அவங்களாலேயும் மக்களைத் தாக்காட்ட முடியாது. ஏன்னா, அவங்களுக்கே தட்டுப்பாடு வந்துடும். அப்பம் என்ன ஆகும்? ஊரைவிட்டே கெளம்பிருவாங்க. இன்னைக்கும் இந்த நாடு அன்னாடங்காய்ச்சிகளோட நாடுதான். அன்னைக்காவது ஊரைவிட்டு கெளம்பி பஞ்சம் பிழைக்க இன்னொரு ஊர் போக முடியும். இன்னைக்கு?

நீங்கள் எத்தனை பஞ்சங்களைப் பார்த்திருக்கிறீர்கள்?

அறுபது வருஷத்துக்கு ஒரு பஞ்சம் நிச்சயம்கிறது பெரியவங்க சொல். அப்போவெல்லாம் அப்படித்தான் நடக்கும். தாது வருஷம் நெருங்கினாலே மக்கள் அஞ்சுவாங்க. என்னோட வாழ்க்கையில நான் ரெண்டு பஞ்சங்களைப் பார்த்திருக்கேன். ‘இடைநாடெல்லாம் பஞ்சம் வந்தாலும் இடைசெவல் சத்திரலப்பட்டிக்குப் பஞ்சம் வந்ததில்லெ’ன்னு சொல்வாங்க. ஆனா, அங்கேயும் பஞ்சம் வந்தது. மழைக் காலத்துலகூட மழை பெய்யாது. அப்படி ஒரு பஞ்சத்துலதான் என் நண்பன் கு.அழகிரிசாமியோட குடும்பமே ஊரைவிட்டுக் கிளம்பி வெளியேறிப்போச்சு. அந்தப் பஞ்சத்துக்குப் பேரு புண்ணாக்குப் பஞ்சம். ஏன் அந்தப் பேருன்னா, மாட்டுக்குப் போடுற புண்ணாக்கை மனுஷன் தின்னு வாழ்ந்த காலம் அது. புண்ணாக்கு வாங்கவும் துட்டு இல்லாதப்போ, காட்டுக்குப் போய் மண்ணைத் தோண்டி கிழங்குகளைக் கொண்டுவந்து, தண்ணில ஊரப்போட்டு, ஆட்டு உரலில் ஆட்டி, அதன் நீரை வடிகட்டிக் கஞ்சி காய்ச்சிக் குடிப்பாங்க. அதுக்கும் வழியில்லாத நிலையில்தான் பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டு வெளியேறுவாங்க. இப்படிப் போகும்போது வயசாளிகளை நடத்திச் செல்ல முடியாது. சுமக்க முடிஞ்சா சுமந்துகிட்டுப் போவாங்க; குழந்தைகள் உள்ள வீடுகள்ல வயசாளிகளையும் சுமந்துகிட்டு, குழந்தைகளையும் சுமந்துகிட்டுப் போறது பெருஞ்சிரமம். அதனால வயசாளிகள், ‘நீங்க போங்க. பிழைச்சிக் கிடந்தா பாத்துக்கிடுவோம்’னு மத்தவங்கள அனுப்பிடுவாங்க. ‘இதுக்காகவா எங்களைப் பெத்தீங்க?’ன்னு சொல்லி, உறவெல்லாம் கட்டிப்பிடிச்சு அழும். அழுது அழுது எல்லாருமே தூங்கிப்போவாங்க. காலையில முதலில் கண் முழிக்குற குடும்பப் பெண் மத்தா எல்லாத்தையும் எழுப்ப, சத்தம் கேட்காமல் தலையில அடிச்சுக்கிட்டே அழுதபடி நகர்ந்துபோவாங்க. வயசாளிகள் அங்கேயே கிடந்து செத்துப்போவாங்க.

நம்முடைய இலக்கியங்களில் எந்த அளவுக்குக் கொள்ளைநோய்கள், பஞ்சங்கள் எல்லாம் பதிவாகியிருக்கின்றன? இன்றைய காலகட்டத்துக்கு அதன் வழி நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி என்று எதைச் சொல்வீர்கள்?

நவீன இலக்கியத்துல ரொம்பக் கொஞ்சம்தான் பதிவாகியிருக்கு. தொ.மு.சி.ரகுநாதன் இருந்தாரே, அவர் ஒருத்தர்தான் தமிழ்நாட்டுல இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் தேடித் தேடி எழுதினார். அவர் வந்து ஒரு பஞ்ச காலத்துல கிராமம் கிராமமாகப் போயி பார்த்திட்டு வந்தவர், பேயறைஞ்ச மாதிரி வந்து நின்னார். ஏன்னா, அங்க கண்ட காட்சிகளை அவரால தாங்க முடியலை. ஊர் இருக்கு. மனுஷாள் இல்லை. வீடு வீடா நுழைஞ்சிப் பார்க்கிறார்; ஒரு மனுஷாள் இல்ல. ஒரே ஒரு வீட்டில மட்டும் நாய் மாத்திரம் இருந்துச்சாம். பேயடைஞ்ச ஊர்ன்னு சும்மாவா சொல்றாங்க! அப்புறம் கு.அழகிரிசாமி எழுதியிருக்கான். அதைத் தாண்டி பெரிசா சொல்ல ஏதும் இல்லை. ஆனா, இப்படியான கொள்ளைநோய்கள், பஞ்சங்கள் இதையெல்லாம் வெச்சி பிரபந்தங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், சித்திரகவிகள், சிந்து பாடல்கள், வாய்மொழிக் கதைகள்ல நெறைய வந்திருக்கு. நல்ல தங்காள் கதை எவ்வளவு வலியைச் சொல்லுது? பொதுவா, இந்த மாதிரி ஆக்கங்களையெல்லாம் திரட்டித் தொகுக்கணும்கிற ஞானம் நமக்கு இல்லைங்கிறதால நெறைய இழந்துட்டோம். அதுக்கு நம்மளோட அறிவுச் சூழலும்கூட ஒரு காரணம். இவங்க மனசுல வெச்சிருக்குற குறிப்பிட்ட வடிவங்களைத்தானே இவங்க இலக்கியமாகவே மதிக்கிறாங்க? ஆக, நெறைய இழந்துட்டோம். என் நெனைப்புல மிச்சம் உள்ள விஷயம் என்னன்னா, இப்படியான கொள்ளைநோய்கள் ஒரு ஊரைக் கடுமையா பாதிக்கும்போது அடுத்து, பசியும் பஞ்சமும் அங்கே குடியேறிடும். அது இப்பம் நடந்துடமா நாம பார்த்துக்கணும்.

இதுபோன்ற இக்கட்டான காலகட்டங்களில் நாம் நம் சமூகத்தைக் காக்க எதைக் கருவியாகக் கொள்வது?

மனிதாபிமானம்தான் ஒரே கருவி. ரொம்ப இக்கட்டான காலகட்டத்துல நம்மோட முன்னோர்கள் அரசாங்கத்தைப் பெரிசா நம்பினதே இல்லை; அப்படி முழுக்க நம்பினா, முழு மோசம் போயிடுவோம்னு அவங்களுக்குத் தெரியும். சாப்பாட்டை அவங்க சிக்கனமாக ஆக்கிக்குவாங்க. இந்த மாதிரி காலத்துல கையிருப்பு என்னவோ அது மட்டும்தானே நிதர்சனம்? சம்சாரிங்க அதை எவ்வளவு காலத்துக்கு நீட்டிக்கணுமோ அவ்வளவுக்குப் பாதுகாப்புப் பண்ணிக்குவாங்க. ஆனா, தன்னளவுலதான் சிக்கனம் இருக்குமே தவிர, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்குறது நிக்காது. கருணை பெருகும். அப்படித்தான் மனித குலம் இவ்வளவு காலமாகத் தன்னைக் காபந்து பண்ணிக்கிட்டு வந்துருக்கு. நம்ம வயிறு நெறைஞ்சுதான்னு நெனைக்காம, நமக்குக் கீழ இருக்கவங்க வயிறு நெறையுதான்னும் பார்த்து, அவங்களுக்கு உதவுற காருண்யம்தான் நாம எப்பவும் கைக்கொள்ள வேண்டிய கருவி!

- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

14 hours ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்