காலரா காலத்துக் காதல்: ஒரு கரோனா கால வாசிப்பு!

By ஆசை

கரோனா காலகட்டத்தில் இலக்கிய வாசகர்கள் பலருக்கும் புத்தகம் படிக்க கூடுதல் நேரம் கிடைத்திருக்கிறது. அவர்களில் பலரும் கொள்ளைநோய்கள் தொடர்பான நூல்கள், குறிப்பாக நாவல்கள் படிப்பதாகத் தெரிகிறது. இவற்றில் முன்னணி இடம் வகிப்பது ஆல்பெர் காம்யுவின் ‘கொள்ளைநோய்’ (தி ப்ளேக்). இந்தக் கொள்ளைநோய் நாவல்கள் பெரும்பாலும் துயரகரமானவை. ஏற்கெனவே, கரோனாவின் கொடும் பிடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நமக்கு இத்தகைய நாவல்கள் மேலும் மன உளைச்சல் தரக்கூடும். கொள்ளைநோய் பின்னணியில் அமைந்த, ஆனால் வாசிப்பதற்கு சுகமான நாவல் என்றால் அது காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் ‘காலரா காலத்துக் காதல்’ (லவ் இன் தி டைம் ஆஃப் காலரா) நாவலாகத்தான் இருக்கும்.

கதை 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நிகழ்கிறது. உலகெங்கும் கொள்ளைநோய்களும் போர்களும் மனித உயிர்களைச் சூறையாடிய காலகட்டம். காலராவுக்கும் போருக்கும் சற்றும் தீவிரத்தில் குறையாத காதல் நோய் வயப்பட்ட ஃப்ளோரண்டினோ அரிஸோவின் காதல் கதையை இந்த நாவல் சொல்கிறது. தந்தி அலுவலகத்தில் வேலை பார்க்கும் 18 வயது ஃப்ளோரண்டினோ ஒரு தந்தி கொடுக்கச் சென்ற வீட்டில் கண நேர அளவுக்குக் காட்சி தருகிறாள் அவ்வீட்டுப் பெண் ஃபெர்மினா டாஸா. அவளைக் கண்டதும் காதலில் விழுகிறான். 13 வயது ஃபெர்மினா டாஸா பள்ளிக்குப் போகும் வழியில் உள்ள பூங்காவில் தினமும் அவளைப் பார்ப்பதற்காகப் புத்தகமும் கையுமாக உட்கார்ந்திருக்கிறான். ஃபெர்மினாவுக்கும் அவன் மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது.

அவர்களது காதல் அடுத்த கட்டமாக கடிதங்களில் தொடர்கிறது. இரண்டு ஆண்டுகள் இப்படிக் கடிதங்கள் மூலமாகவும் வெறும் பார்வை வழியாகவும் தொடரும் காதல் ஃபெர்மினா டாஸாவின் அப்பாவுக்குத் தெரிந்துவிடுகிறது. ஃபெர்மினாவை அவளது இறந்துபோன தாயின் ஊருக்குக் கொண்டுபோய்விடுகிறார். இரண்டு ஆண்டுகள் அங்கே இருந்தாலும் தந்தி வழியாக இருவரது காதல் தொடர்கிறது. முதிர்ச்சி பெற்ற பெண்ணாக ஊருக்குத் திரும்பி வரும் ஃபெர்மினா தனது வீட்டுப் பணிப்பெண்ணுடன் சந்தைக்குச் செல்கிறாள். அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின்தொடரும் ஃப்ளோரண்டினோ அவளுக்கு மிக அருகில் வந்து, ‘மகுடம் சூடிய இறைவிக்கான இடமல்லவே இது’ என்கிறான். ஃபெர்மினா டாஸாவுக்கு திடீரென்று ஒரு உணர்வு ஏற்பட்டு அந்தக் காதலை முற்றிலுமாக மறுக்கிறாள். அது வெறும் மாயையே என்று கருதுகிறாள்.

நிலைகுலைந்துபோகிறான் ஃப்ளோரண்டினோ. தந்தையற்ற அவனை அவனது தாய் தேற்றுவதற்கு எவ்வளவோ முயல்கிறாள். அந்த நிராகரிப்பிலிருந்து அவனால் வெளிவர முடியவில்லை. இதற்கிடையே ஊரிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த இளம் டாக்டர் யூவெனல் அர்பினோவுக்கும் ஃபெர்மினாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஃபெர்மினாவுக்குத் திருமணம் நடைபெற்றாலும் அவள் என்றாவது ஒருநாள் தன்னுடையவளாவாள் என்று நம்பிக்கை கொள்கிறான் ஃப்ளோரண்டினோ. அதற்காக, டாக்டர் யூவெனலின் இறப்பு வரைக்கும் காத்திருக்க நேரிட்டாலும் சரி என்று உறுதிகொள்கிறான். அதேபோல் காத்திருக்கிறான். ஒன்றல்ல, இரண்டல்ல, 51 ஆண்டுகள், 9 மாதங்கள், 4 நாட்கள் காத்திருக்கிறான்.

81 வயது டாக்டர் அர்பினோ, மரத்தின் மேல் ஒளிந்துகொண்டிருந்த தனது செல்லக்கிளியை ஏணியின் மீது ஏறிப் பிடிக்க முயன்றபோது கீழே விழுந்து மரணமடைகிறார். அந்தத் துக்க நிகழ்வுக்கு 76 வயது முதியவரான ஃப்ளோரண்டினோ செல்கிறார். எல்லோரும் துக்கம் விசாரித்துவிட்டுச் சென்ற பின் 71 வயது விதவையான ஃபெர்மினாவைப் பார்த்து, “ஃபெர்மினா உன்னிடம் எனது மாறாத பிரமாணிக்கத்தின் உறுதிமொழியையும் என் நீடித்த காதலையும் சொல்வதற்கான இந்த வாய்ப்புக்காக நான் அரை நூற்றாண்டு காலம் காத்திருந்தேன்” என்கிறார். கணவனை இழந்து ஒரு நாள்கூட ஆகாத ஃபெர்மினா, “வீட்டை விட்டு வெளியே போ. இன்னும் மிச்சமுள்ள உனது ஆயுட்காலம் முழுக்க உன் முகத்தை இங்கு வந்து காட்டாதே” என்று திட்டி அனுப்பிவிடுகிறாள்.

அரை நூற்றாண்டுக்கும் மேலே பொறுமையுடன் கட்டிவைத்திருந்த மனக்கோட்டை ஃப்ளோரண்டினோவுக்குச் சிதைந்துவிட்டது. மறுபடியும் முதலிலிருந்து தொடங்க வேண்டிய நிலைக்கு அவரது காதல் தள்ளப்பட்டிருக்கிறது. சில நாட்கள் கழித்து ஃப்ளோரண்டினோவுக்கு ஃபெர்மினாவிடமிருந்து ஆவேசமாக ஒரு கடிதம் வருகிறது. இதையே காதலாக மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பாக ஃப்ளோரெண்டினோ சிக்கெனப் பற்றிக்கொள்கிறார். ஃபெர்மினாவுக்குக் கடிதம் எழுதுகிறார். மிகை உணர்ச்சி ததும்பாமல் வாழ்க்கை, மரணம், முதுமை ஆகியவற்றைப் பற்றியதாக இருக்கிறது அந்தக் கடிதம். தொடர்ந்து இதுபோல் கடிதங்களை ஃப்ளோரெண்டினோ அனுப்புகிறார். கணவனை இழந்த ஃபெர்மினாவுக்கு இந்தக் கடிதங்கள் ஆறுதல் தருகின்றன. இருவருக்கிடையே மறுபடியும் நட்பு உருவாகிறது.

இதை நட்பு என்ற தளத்திலேயே வைத்திருக்க ஃபெர்மினா விரும்பினாலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் காதல் நோக்கி எடுத்துச் செல்வதற்கே ஃப்ளோரண்டினோ முயல்கிறார். ஒவ்வொரு முறையும் அவருக்குத் தோல்வியே கிடைக்கிறது. இருவரது நட்பையும் ஃபெர்மினாவின் மகள் விரும்பவில்லை; ஆனால், மகனோ இதை ஆரோக்கியமானதாகவே பார்க்கிறார். ஃபெர்மினா தனது கணவனை இழந்து ஓராண்டுக்குப் பிறகு மகதலீனா நதியில் ஃப்ளோரண்டினோவுடன் படகுப் பயணம் மேற்கொள்கிறார். அந்தப் பயணத்தில் ஃப்ளோரண்டினோவின் காதலை ஃபெர்மினா ஏற்றுக்கொள்கிறார். எழுபது வயதுக்கு மேற்பட்ட அந்த இருவரும் உறவுகொள்கின்றனர். அந்தப் படகுப் பயணம் முடிவற்றதாக மாறுகிறது.

ஸ்பானிய மொழியில் ‘காலரா’ என்பது ‘காலரா’ நோயையும் வேட்கையையும் குறிக்கக்கூடியது. இந்த நாவலில் காதல் ஒரு வேட்கை மிகுந்த நோயாக வெளிப்பட்டிருக்கிறது. அதுவும் ஃப்ளோரண்டினோவின் வேட்கை நீடித்து நிற்கக்கூடியதாக, கட்டற்றுப் பாயக்கூடிய நதியாக இந்த நாவலில் காட்டப்பட்டிருக்கிறது. தனது காதல் நிராகரிக்கப்பட்டதிலிருந்து முதிய வயதில் அது ஈடேற்றம் காண்பது வரை ஃப்ளோரண்டினோ 622 பெண்களுடன் உறவுகொள்கிறான். 13 வயது இளம் பெண்ணில் தொடங்கி முதிய பெண்மணிகள் வரை அவன் உறவுகொண்ட பெண்கள் பல வகைப்பட்டவர்கள். உடலின் வேட்கையை இந்தப் பெண்களுக்காக ஃப்ளோரண்டினோ ஒதுக்கிவைத்தாலும் அவனது உளபூர்வமான வேட்கை ஃபெர்மினாவுக்கே உரியது.

டாக்டர் யூவெனல் அர்பினோ கதை நடக்கும் நகரத்தில் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்தியவராகக் காட்டப்படுகிறார். எனினும், அருகிலுள்ள மற்ற பிரதேசங்களில் கொள்ளைநோய் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை நாவலில் சில பகுதிகள் உணர்த்துகின்றன. கொள்ளைநோயால் இறந்தவர்கள் ஊதிப்புடைத்து நதியில் மிதந்துபோகும் காட்சி ஒருமுறை வருகிறது. கொள்ளைநோயால் சில ஊர்களே வெறிச்சோடிப் போய்க்கிடக்கின்றன. இத்தனைக்கும் இடையில் வாழ்வை வாழ்வதற்கான ஒன்றாக மாற்றுவது காதல்தான். அதனால்தான் ‘காலரா காலத்தில் காதல்’ என்று தலைப்பிட்டிருக்கிறார் மார்க்கேஸ்.

காதல் மட்டுமல்ல, மரணம், முதுமை போன்றவற்றைப் பற்றிய அற்புதமான தியானமாக இந்த நாவல் அமைந்துள்ளது. வயதாகிவிட்டால் ஒருவர் தனது கல்லீரலின் வடிவத்தைக்கூட அதைத் தொடாமல் உணர முடியும் என்கிறார் மார்க்கேஸ். முதுமை நம்மை உறுப்புகளின் தொகுப்பாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது. நாவலின் இறுதிப் பகுதியில் ஃப்ளோரண்டினோவும் ஃபெர்மினாவும் உதடுகளில் முத்தமிட்டுக்கொள்ளும்போது இருவரும் மற்றவரின் வாய் துர்நாற்றத்தை உணர்கிறார்கள். எனினும், அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட ஏக்கம் ஒரு புது மணம் கொள்கிறது.

கொத்துக்கொத்தாகக் கொல்லும் கொள்ளைநோய் மரணம்போல நம் உடலிலேயே உறைந்திருக்கும் மரணம் காலத்தின் ரூபம் கொண்டிருக்கிறது. ஃப்ளோரண்டினோ 40 வயதிலேயே தன் முதுமையை உணர்கிறான். காலத்தின் மாற்றங்கள் பேரழகியான ஃபெர்மினா டாஸாவிடம் நிகழ்கின்றன. தி.ஜானகிராமனின் ‘மோக முள்’ நாவலை இது நினைவுபடுத்துகிறது. பாபுவுக்கு தெய்வீக அழகின் உருவாகக் காட்சியளித்த யமுனா 40 வயதில் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கிறாள். ‘யமுனாவுக்கு எப்படி வயதாகும்?’ என்று தி.ஜா.வின் மீது கோபத்துடன் முதல் மூன்று முறை அந்த நாவலை வாசிப்பதை முக்கால்வாசியோடு நிறுத்தியது நினைவுக்கு வருகிறது. அப்படித்தான் ‘ஃபெர்மினா டாஸாவுக்கு எப்படி வயதாகலாம்?’ என்ற கேள்வி நமக்கு எழுகிறது. வாழ்க்கை மீதான காதலை இரண்டு முதியவர்களின் காதல் மூலம் இறுதியில் சித்தரித்து நம் கேள்வியைக் கடக்கிறார் மார்க்கேஸ்.

கரோனா காலத்திலும் வாழ்வின் மீது ஆழ்ந்த பிடிப்பு ஏற்படுத்த காதல் இருக்கிறது என்ற நம்பிக்கை இந்த நாவலின் மறுவாசிப்பில் ஏற்படுகிறது.

1985-ல் ஸ்பானிஷ் மொழியில் வெளியான இந்த நாவலின் அழகிய ஆங்கில மொழிபெயர்ப்பு எடித் கிராஸ்மன் என்ற அற்புதமான மொழிபெயர்ப்பாளரின் கைவண்ணத்தில் 1988-ல் வெளியானது. இந்த நாவலின் திரைப்பட வடிவம் அதே தலைப்பில் 2007-ல் வெளியாகித் தோல்வியுற்றது. இங்கே, ‘மோக முள்’ நாவலுக்கு நிகழ்ந்த விபத்து அங்கே இந்த நாவலுக்கு நிகழ்ந்தது. எனினும், அந்தப் படத்தில் கதை நிகழும் இடங்களின் காட்சிப்படுத்தல், பேரழகுக் கதாநாயகி ஜோவன்னா மெஸ்ஸொஜோர்னா ஆகிய விஷயங்களுக்காக இந்தப் படத்தை அவசியம் பார்க்கலாம்.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

மேலும்