‘எங் கதெ’: யாருடைய பிறழ்வு?

By ஆர்.அபிலாஷ்

இரண்டு குழந்தைகள் கொண்ட கமலம் என்ற இளம் பெண் கணவனை இழந்தவள்; மேல்சாதியைச் சேர்ந்தவள். அவளுடன், கிராமத்தில் வேலையற்றிருக்கும் கீழ்மத்தியவர்க்க இடைநிலை சாதி ஆண் கொள்ளும் ‘தகாத உறவு’, அது ஏற்படுத்தும் சமூக மற்றும் அகச் சிக்கல்கள்தாம் ‘எங் கதெ’யின் களம். இது போன்ற கதைகளில் ஆணுக்குத் தன் காதலி மேல் ஒரு கட்டத்தில் சந்தேகம் ஏற்பட்டு அதன் விளைவாய் வன்முறை விளைந்து இறுதியில் அவன் மோகம் தணிந்து, ‘மனத் தெளிவடைவான்’. ஆகிவந்த இந்தக் கதைப்போக்கை இமையம் திருப்பிப் போடுகிறார்.

இது போன்ற கதைகளில் பெண் பாத்திரம் ஒருசார்புடன் உருவாக சாத்தியம் அதிகம். ஆனால், இமையம் மிகவும் கவனமாய் கமலத்துக்கான வெளியை உருவாக்குகிறார். அவளுடனான உறவே தன் வாழ்வைச் சீரழித்ததாய் விநாயகம் புலம்பும்போதே அவனுடைய தொனியில் சுயபகடியையும் சேர்த்துவிடுகிறார். கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு பலவீனமான கோமாளியாக அவன் தோற்றம் கொள்கிறான். கமலத்தின் மீது விநாயகம் தொடர்ந்து அடுக்கும் குற்றச்சாட்டுகள் ஒரு கட்டத்தில் அவளுடைய நியாயங்களாய் உருமாறுகின்றன.

அவள் விநாயகத்தைப் பொருளாதாரரீதியாகவோ உணர்வுரீதியாகவோ சுரண்டுவதாய்ச் சில காட்சிகளை இமையம் எளிதில் உருவாக்கி வாசகர்களை நெகிழவும் கொதிப்படையவும் வைத்து விநாயகத்தை ஒரு துன்பியல் நாயகனாக உயர்த்தியிருக்க முடியும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. அவள் முடிந்த அளவுக்கு அவனை ஜனநாயகபூர்வமாய் நடத்துகிறாள். ஒருகட்டம் வரையில் அவனையே நம்பி இருக்கிறாள். கடலூரில் சி.இ.ஓ. அலுவலகத்துக்கு அவள் மாற்றம் வரும்போது அவளது சூழலும் சார்புகளும் இயல்பாகவே மாறுகின்றன. வயதான சி.இ.ஓ. அவள்மீது சபலம் கொண்டு நெருக்கடிகள், உதவிகள் மூலம் மெல்லமெல்ல அவளைத் தன்வசப்படுத்துகிறார். இது ஒரு முக்கியமான திருப்பம். சி.இ.ஓ.வின் குடும்பத்தினர், அவள் அவருடன் தொலைபேசியில் பேசிய நேரம், அவள் அவரைக் கொஞ்சி அனுப்பிய குறுஞ்செய்திகளை ஆதாரமாய்க் காட்டி அவள் வீட்டுக்கு வந்து தகராறு பண்ணுகிறார்கள். அப்போது அங்கிருக்கும் விநாயகம், அவளை ஆத்மார்த்தமாய் நேசிக்கும் தன்னை விடுத்து 57 வயதான ஒரு வக்கிர மனிதரை மட்டும் எப்படி இப்படிக் கொஞ்ச முடிகிறது என வியக்கிறான்.

பொருளாதாரரீதியாய் சுயசார்புள்ள அவளுக்கு சி.இ.ஓ.வை விட்டுத் தப்பிப்பது ஒன்றும் சிரமமாய் இருந்திருக்காது. ஆனாலும் அவள் மசிந்துபோகிறாள். இது ஏன் என்பதற்கு நாவலில் நேரடியான பதில் இல்லை. பெண் மனத்தின் புதிர் இது. நாவலில் இமையம் இதைக் கையாண்டிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. விநாயகத்திடம் அவள் எப்போதுமே விறைப்பாய் கவுரவம் குறையாமலே நடந்துகொள்கிறாள். தன் பெற்றோர் மற்றும் மாமனாரின் சொத்துக்களை நிர்வகிக்கிறாள். யாரையும் சாராமல் வாழ்கிறாள். ஆனால் பாலியல் ஆதரவு சார்ந்து அவளுக்குள் ஒரு தடுமாற்றம் எப்போதும் இருந்துவருகிறது. அவள் ஒரு கிழவரிடம் வீழ்கிறாள். விநாயகம் அவளது நடத்தையைச் சுட்டி அவளைக் கடுமையாய் சாட அவள் அதற்கு இரண்டு பதில்கள் அளிக்கிறாள். சி.இ.ஓ. தன்னை மிகவும் தொந்தரவு செய்ததாகவும், கொஞ்ச காலம் அவரை ‘லூசாக்கலாம்’ என நினைத்துக் கொஞ்சலாய்க் குறுஞ்செய்திகள் அனுப்பினதாகவும், ஆனால் மாறாக அவர் தன்னை இறுதியில் ‘லூசாக்கி’விட்டதாயும் சொல்கிறாள். இந்த விடலை விளையாட்டில் அவள் அடையக்கூடிய சிலிர்ப்பு என்னவாய் இருந்திருக்கும்? இமையம் நம்மை ஊகிக்க விட்டுவிடுகிறார்.

“இன்னும் எத்தன மாப்ள மாத்துவ?” என்று கமலத்திடம் அவன் கேட்ட கேள்விக்கு அவள் கேட்ட பதில் கேள்விகளில் உள்ள தனிமையும் கசப்பும் நெஞ்சை உருக்கக்கூடியது. அதுவரை விநாயகத்தின் தனிமையையும் கைவிடப்படலையும் பற்றிப் பேசிவந்த கதை சட்டென அப்பெண்ணின் உலகை நோக்கித் திரும்புகிறது.

கமலம் தன்னைத் தொடர்ந்து மட்டம் தட்டுவதை விநாயகம் ஏற்கிறான். அதை உள்ளுக்குள் ரசிக்கக்கூடச் செய்கிறானோ என நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அவள் சி.இ.ஓ.வைத் தன்னைவிட மேலாக நடத்துகிறாள் என்பது அவனை மிகவும் காயமடைய வைக்கிறது. அவளைக் கொல்லத் தூண்டும் அளவுக்கு வஞ்சினம் கொள்கிறான். அவளிடமிருந்து முற்றுமுழுதாய்ப் பிரிகிறான்.

விநாயகம் அவளை ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதால்தான் அவள் அவனை ஒரு வேலைக்காரனைப் போல் நடத்துகிறாளா? சி.இ.ஓ.வுக்கு அவளை ஆதிக்கம் செய்யும் ‘ஆண்மை’ இருப்பதனால்தான் அவள் அவரிடத்துக் குழைகிறாளா? இக்கதையின் பாத்திரங்களுக்கென்று தனித்த நிரந்தர குணங்கள் ஏதுமில்லை. யாருடன் உறவாடுகிறார்களோ அதன்படி அவரவரது உளவியல் மாற்றங்கொள்கிறது.

விநாயகம்கூட ஒரு தனிமனிதன் அல்ல. ஊரில் அவனைப் போல் பொருத்தமற்ற பெண்ணுடன் உறவு கொண்டு திருமணமாகாமல் திரிந்து வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் முன்பே இருந்திருக்கிறார்கள். பாவாடை அப்படியானவர். ஊர்க்காரர்கள் அவன் ஒருநாள் பாவாடையைப் போல் வீணாகிவிடுவான் என்று எச்சரிக்கிறார்கள். அவனும் ஒரு கட்டத்தில் பாவாடையைப் போலவே ஆகிவிடுகிறான். ஒருவேளை அவன் இறந்துபோன பின் ஊரில் அவனைப் போல் மற்றொரு ‘பாவாடை’ தோன்றலாம். அவனுடைய பிறழ்வு அவன் உருவாக்கியது அல்ல. ஊரின் கதையாடலில் உள்ள ஒரு பிறழ்வான பாத்திரத்தை அவன் ஏற்கிறான். இது ஒட்டுமொத்தமாய் அந்த ஊரின் பிறழ்வின் கதைதானோ எனும் நுட்பமான கேள்வியையும் இமையம் எழுப்புகிறார்.

‘எங் கதெ’ போன்று இவ்வளவு கச்சிதமான, நிறைய மவுனங்கள் கொண்ட படைப்புகள் இப்போது அதிகம் எழுதப்படுவதில்லை. அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஆகியோரின் பிசிறு தட்டாத நவீனத்துவ நாவல் மரபின் ஒரு நீட்சியாகவே இமையம் இருக்கிறார். ‘எங் கதெ’ அதற்கு மற்றொரு சான்று.

- ஆர். அபிலாஷ், ‘கால்கள்’, ‘ரஸிகன்’ ஆகிய நாவல்களின் ஆசிரியர்,
தொடர்புக்கு: abilashchandran70@gmail.com

எங் கதெ
இமையம்
விலை: ரூ. 110
வெளியீடு: க்ரியா,
புதிய எண் 2, முதல் தளம், 17-வது கிழக்குத் தெரு,
காமராஜர் நகர், திருவான்மியூர்,
சென்னை - 600 041
தொலைபேசி: +91-72999-05950
மின்னஞ்சல்: creapublishers@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

11 hours ago

இலக்கியம்

12 hours ago

இலக்கியம்

12 hours ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

4 days ago

மேலும்