நமது புராணங்களில் காணப்படும் ‘திருமலை தெய்வம் தனது திருமணத்துக்காக குபேரனிடம் வாங்கிய கடனை இன்றுவரை அடைத்தபாடில்லை’ என்ற மையக்கருத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு, ‘பெருமாளே-2’ கதையை உருவாக்கியுள்ளார் கதாசிரியர். நேர்த்தியான மேடையாக்கம், சிந்திக்க வைக்கும் நகைச்சுவை கலந்த வசனங்கள், மையக்கருத்துக்கு உயிர் கொடுக்கும் வகையில் மேடையில் தோன்றும் நடிகர்கள் என ’பெருமாளே - 2’ நாடகம் தனக்கான வெற்றியைத் தானே தேடிக்கொள்கிறது. எம்.மதுவந்தியின் ‘தியேட்டர் ஆஃப் மஹம்’ இந்நாடகத்தை வெற்றிச் சித்திரமாக ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது.
‘பெருமாளே-1’ நாடகத்தில் ஒரு குப்பத்தைக் களமாக்கியிருந்த கதாசிரியரும் வசனகர்த்தாவுமான ஜி.ராதாகிருஷ்ணன், 5 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘பெருமாளே - 2’வை முதல் பாகத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் புத்தம் புதிதாக உருவாக்கியுள்ளார். இந்த இரண்டு நாடகங்களுக்கும் அந்த ஏழுமலையான் பாத்திரத்தைத் தவிர, வேறு எந்த தொடர்பும் கிடையாது.
முந்தைய நாடகத்தில் பெருமாளாக நடித்திருந்த சுதர்ஷன் ‘பெருமாளே - 2’விலும் மிக இயல்பாக நடித்துள்ளார். இந்த 5 வருட இடைவெளியில் அவர் உடலளவில் சிறிதளவுகூட மாற்றமின்றி சீராக பராமரித்து வரும் நிலையில், நடிப்பில் மட்டும் நல்ல முதிர்ச்சியை காண்பிக்கிறார். அதுவும் மதுவந்தியுடன் மோதும் காட்சிகளில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பெருமாளையே எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்கவரும் செருக்கு நிறைந்த வழக்கறிஞர் ‘பட்டமங்கலம் பெரிய பிராட்டி’ என்கிற பாத்திரமாகவே மாறிவிடுகிறார் மதுவந்தி. எவரையும் நொடிப்பொழுதில் தூக்கி எறிந்து பேசும் வல்லமை, மிடுக்கு நடை, கம்பீரப் புன்னகை என தன் பாத்திரத்துக்கு மெருகு ஏற்றியிருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் மதுவந்தி மேடையில் சவால்விட்டு வலம் வரும்போதெல்லாம், ‘கெளரவம்’ படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்துக்கு மெல்லிசை மன்னர் இசையமைத்த தீம் மியூஸிக்கை பொருத்தமாக பயன்படுத்தியுள்ளனர். இந்த இசை உத்தி, மேடையில் காட்சிக்கு ஏற்றத்தைக் கொடுக்கிறது. கடைசி காட்சியில் தன் உணர்ச்சி மிகுந்த நடிப்பால் பார்வையாளர்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறார் மதுவந்தி. (அவரின் தந்தை ஒய்.ஜி.மகேந்திரன் பாணியிலேயே).
அவரது நேர்மையான நல்ல மகனாகவும் வக்கீலாகவும் சுரேஷ்.எஸ்.செளந்தர், இந்த நாடகத்தில் தன் இயல்பான நடிப்பால் வேறொரு பரிமாணத்துக்குச் சென்றுவிடுகிறார். இறை அருளால் அவர் நீதிபதியானவுடன், தன் தாய்க்கே சவால் விடும்போதும், மனைவிக்கு பயந்து நடக்கும்போதும் அவர் இருவிதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்துவதை, அவருடைய குருநாதர் ஒய்.ஜி.மகேந்திரன் பார்த்தால் பெருமை கொள்ள வாய்ப்பிருக்கிறது. வளமான குரலை ஏற்ற இறக்கங்களோடு அவர் பயன்படுத்தியிருப்பதை பாராட்ட வேண்டும். அவரே இந்நாடகத்தின் இயக்குநர். அதையும் செவ்வனே செய்துஇருக்கிறார்.
சுரேஷ். எஸ்.செளந்தரின் மனைவியாகவும், மாமியாருக்கு உதவும் வக்கீலாகவும் வலம்வரும் வித்யாலட்சுமிக்கு, அவரது குரல் வளம் மிகப்பெரிய சொத்து. மாமியாரின் குணங்களை அப்படியே பிரதிபலிக்கும்போது கைதேர்ந்த நடிகையின் முதிர்ச்சி தெரிகிறது. ரசிகர்களின் மனங்களிலும் இடம் பிடிக்கிறார். அவரின் தந்தையாக நடிக்கும் இளைஞர் சூரஜ், சென்னைத் தமிழில் பேசியபடி மேடையில் தோன்றும் போதெல்லாம் ஒரே கலகலப்பு. அவரின் சம்பந்தியின் (பட்டமங்கலம் பெரிய பிராட்டி) கார் ஓட்டுநராக வருகிறார். அதுவும் தன் சம்பந்தி தன்னைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதற்கான காரணத்தை பெருமாளிடம் கூறுவது, நாடகத்துக்கு தலைசிறந்த பங்களிப்பு. சிறிய பாத்திரமானாலும் தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் உயர்ந்து இடம்பிடிக்கிறார் தனலஷ்மி. நாடகத்தை நடத்திச் செல்லும் பாகவதராக சாய்ராம், அழகான ஒப்பனையுடன் இனிமையான குரலில் பாடவும் பேசவும் செய்கிறார்.
இரண்டையும் ஒரே சமயத்தில் செய்வது சற்று கடினமானது. ஆனால் இரண்டையும் சமநிலையில் தன் அனுபவம் மூலம் சர்வ லாவகமாகக் கொண்டு செல்கிறார் சாய்ராம். அவருக்குப் பின்பாட்டாக வரும் பாலாஜி பாடுவதில் மட்டும் அல்லாமல், தன் சேஷ்டைகளாலும் நம் கவனத்தை ஈர்க்கிறார். பட்டமங்கலம் பெரிய பிராட்டி மற்றும் பெருமாளின் ஒப்பனையில் புருஷோத்தமனின் கைவண்ணம் நன்கு தெரிகிறது. சேட்டா ரவி ஒளி அமைத்துள்ளார்.
2 மணி நேரம் போனதே தெரியாமல், நம்மை நாடகத்தோடு ஒன்ற வைக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தரமான நாடகத்தைப் பார்த்த மனநிறைவோடு வீடு திரும்பலாம்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
24 days ago
இலக்கியம்
24 days ago