கொங்கு மண்டலத்தின் பிரதான நகரான ஈரோடு ஒரு வணிக நகரம். மஞ்சள், துணி, தோல் வணிகம் இங்கு முக்கியத் தொழில்கள். நகர்ப் பகுதியில் வணிகர்களும், கிராமப்புறங்களில் சிறு விவசாயிகளும் கலந்து வாழ்கிறார்கள். எப்போதும் சுறுசுறுப்பாய் இயங்கும் வணிகர்களுக்கும் விவசாயிகளுக்கும் வாசிக்கும் வாய்ப்பும் சூழலும் தொடக்க காலத்தில் இல்லை.
தந்தை பெரியார் வரவுக்குப் பின் குடியரசு அச்சகத்தின் மூலம் சிறு சிறு பிரசுரங்கள் வெளியிடப்பட்டதுதான் ஈரோட்டின் வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்கான தொடக்கம். அப்போது பகத் சிங் எழுதிய நூலை ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற தலைப்பில் தமிழில் பெரியார் வெளியிட்டார். அதனை வெளியிட்ட பெரியாரின் சகோதரர் கிருஷ்ணசாமி நாயக்கருக்கும், மொழிபெயர்த்த பொதுவுடைமை இயக்கத் தலைவர் ப. ஜீவானந்தத்துக்கும் அப்போதைய ஆங்கிலேய அரசு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தது. சிறைத் தண்டனையோடு சித்ரவதையையும் அவர்கள் அனுபவித்த அந்தக் காலம்தான், ஈரோட்டில் சிறுசிறு பிரசுரங்கள் வெளியானதன் தொடக்கம்.
அடுத்ததாய், வாசிப்புப் பழக்கத்துக்கு வித்திட்டவர் ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த தங்கபெருமாள் பிள்ளை. தேசபக்தர், வழக்கறிஞர். இவர் தொடங்கிய வாசகசாலை பல தேசபக்தர்களின் பயிற்சிப் பட்டறையாக விளங்கியது. இந்த வாசகசாலையின் 5-ம் ஆண்டு தொடக்க விழாவில் (1921), ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில் மகாகவி பாரதி சிறப்புரையாற்றினார். அடுத்த சில நாட்களில் உடல்நலக் குறைவால் அவர் காலமான நிலையில், பாரதியின் ‘கடைசி உரை நிகழ்ந்த இடம்’ என்ற பெயரை ஈரோடு பெற்றது.
இத்தகைய முன்முயற்சிகள் இருந்தும், பிற்காலங்களில் பல்வேறு நகரங்களில் கிளை பரப்பிய சிறந்த புத்தக நிறுவனங்கள்கூட ஈரோட்டில் கிளையைத் தொடங்கவில்லை. ஈரோட்டில் வாசிப்பு குறைவு என்ற கருத்துதான் அதற்குக் காரணம். இந்த நிலையில்தான் ஈரோட்டில் புத்தகத் திருவிழாவை நடத்த ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ முயற்சி செய்தது. ஒரு வாசகன் என்ற முறையிலும், கடந்த 2000-ம் ஆண்டு நான் எழுதிய ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ என்ற நூல் இரு பாகங்களாக வெளியிடப்பட்டபோதும் நிறைய பதிப்பாளர்களுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. இது தவிர டெல்லி, கொல்கத்தா, சென்னை எனப் பல்வேறு புத்தகத் திருவிழாக்களைப் பார்வையிட்டதன் தாக்கத்தில் ஈரோட்டில் புத்தகத் திருவிழா தொடங்க முடிவு செய்தேன்.
சென்னை, நெய்வேலியைத் தவிர, வேறு எங்கும் புத்தகத் திருவிழாக்கள் நடக்காத நிலையில், 2005-ல் திருமண மண்டபம் ஒன்றில் 75 அரங்குகளுடன் புத்தகத் திருவிழா தொடங்கியது. புத்தகங்கள் விற்பனையாகாது என்று தயங்கிய பதிப்பகத்தினர் பலரையும் வற்புறுத்தி அழைத்துவந்த காலம் அது.
அதன் பிறகு புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனை யாளர்களை உள்ளடக்கிய கூட்டத்தை சென்னையில் நான்கு முறை நடத்தி எங்கள் பேரவையின் செயல்பாடுகளை விளக்கினேன். நூற்றுக்கணக்கான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றுப் பேசிய அறிமுகமும் அனுபவமும் எனக்கு உதவின. சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் 2000-த்தில் நடந்த புத்தகத் திருவிழாவில் அரங்கு அமைத்து, எனது ‘விடுதலை வேள்வியில் தமிழர்கள்’ நூலை விற்பனைக்கு வைத்தேன். கூடவே, புத்தகத் திருவிழா நடத்துவது குறித்த அனுபத்தையும் அங்கு கற்றுக்கொண்டேன்.
ஈரோடு புத்தகத் திருவிழாவின் இரண்டாம் ஆண்டு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் 150 அரங்குகளுடன் வளர்ந்தது. தற்போது 230 அரங்குகளுடன் விரிவடைந்துள்ளது. தரத்துக்கு நாங்கள் கொடுத்த முக்கியத்துவம் இந்த வளர்ச்சியை எங்களுக்குத் தந்துள்ளது. வெளிநாட்டுப் புத்தக நிறுவனங்களையும் வரவழைத்துள்ளோம். மாநிலம் தழுவிய புத்தகத் திருவிழாவாக ‘ஈரோடு புத்தகத் திருவிழா’ தற்போது பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாகக் கொண்டுசெல்ல வேண்டும் என்பது எங்கள் லட்சியம். அதனை நிறைவேற்றும் பணியில் மக்கள் சிந்தனைப் பேரவை தொடர்ந்து இயங்கும்.
- த. ஸ்டாலின் குணசேகரன்,
தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை, ஈரோடு.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
11 hours ago
இலக்கியம்
11 hours ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
17 days ago