நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள மாதிரிமங்கலம் கிராமத்தில் பகுத்தறிவுக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் நக்கீரன். டெல்டாவின் வளமையையும் அதன் தற்போதைய நிலையையும் கண்கூடாகக் கண்டவர். பொறியியல் படிப்பைத் தொடர முடியாமல் சிங்கப்பூர், மலேசியா, போர்னியோ, மாலத்தீவு ஆகிய நாடுகளில் பல்வேறு வேலைகள் செய்திருக்கிறார்.
'கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர்', 'உயிரைக் குடிக்கும் புட்டிநீர்', 'அலையாத்திக் காடுகளும் அனல்மின் நிலையங்களும்' என பல்வேறு சூழலியல் பிரச்சினைகளைக் கவனத்திற்குக் கொண்டு வந்த எழுத்தாளர் நக்கீரன், 'காடோடி' நாவலில் போர்னியோ காடுகளின் அழிவைப் பதிவு செய்தார். 'நீர் எழுத்து' புத்தகத்தில் தமிழகத்தின் தண்ணீர் வரலாற்றை சங்க இலக்கியங்கள், பெண்கள், சமூக, அரசியல் கண்ணோட்டத்துடன் தண்ணீர் ஆவணமாக எழுதியுள்ளார். தமிழகத்தின் நீர்நிலைகள், ஆறுகள் இணைப்பு, நீராண்மை, நீர் அறிவியல், நீர்ப் பண்பாடு என, 9 பிரிவுகளில் எழுதப்பட்டிருக்கும் இந்நூல், தமிழகத்தின் தண்ணீர் வரலாற்றை ஆச்சர்யப் பக்கங்களுடன் கண் முன்னே விவரிக்கிறது.
சமீபத்தில் சென்னை வந்தவரிடம் இந்தப் புத்தகம் குறித்தும் எழுதப்பட்டதில் இருந்த சவால்கள் குறித்தும் 'இந்து தமிழ் திசை' சார்பாக உரையாடினேன்.
சொந்த ஊருக்குச் செல்லும்போது இப்போது எத்தகைய உணர்வு ஏற்படுகிறது? சூழலியல் எழுத்தாளராக உருவெடுத்திருப்பதற்கு டெல்டா பகுதியில் வளர்ந்ததும் ஒரு காரணமா?
50 ஆண்டுகளுக்கு முன்பு சூழலியல் என்ற சொல்லே இருந்ததா என்பது தெரியாது. எங்கள் வீட்டுக்கு எல்லா பத்திரிகைகளும் வரும். அதில், சூழலியலுக்கு எனத் தனியாக இதழ்கள் இருக்காது. டெல்டா மாவட்டத்தில் பிறந்து வளர்ந்ததால் அதன் வளமையை முழுமையாக அனுபவித்தோம். எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான் காவிரி. காவிரி ஆற்றில் முழு நீரும் வற்றி நாங்கள் பார்த்ததே கிடையாது. கோடைகாலத்தில் கூட ஆற்றுக்குச் சென்று குளிப்போம். ஆற்று மணலில்தான் விளையாடுவோம். இன்றைக்கு ஊருக்குச் செல்லும்போது, ஆற்றில் சில நாட்கள் தண்ணீரைப் பார்ப்பதுகூட அரிதாகிவிட்டது. மணல் என்றால் என்ன என்று எங்கள் வீட்டுக் குழந்தைகள் கேட்கிறார்கள். மணலில் ஒரு அடி குழி தோண்டினால் தண்ணீர் வரும் என்பதை அவர்களால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. இப்போது டெல்டாவில் மணலே இல்லை. ஆற்றுச் சமவெளி என்பதே எவ்வளவு தூரம் மணல் இருக்கிறது என்பதை பொறுத்துதான் அமையும். நாங்கள் விளையாடிய இடத்தில் இப்போது பெரிய பள்ளமே இருக்கிறது. மணல் முழுவதும் அள்ளப்பட்டதன் தடம்தான் அது. அந்த வகையில் பெரிய இழப்புதான்.
உங்களின் இளம்பருவம் வரை கூட ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்திருக்கிறீர்கள். பின்னர் எப்படி அதிலிருந்து வெளியேறுனீர்கள்?
பகுத்தறிவுக் குடும்பம் என்பதால் கடவுளைப் பற்றிக் கவலைப்பட்டது கிடையாது. எந்தக் கடவுளுக்கு எந்தக் கடவுள் உறவுமுறை என்பதுகூட எங்களுக்குத் தெரியாது. சிவனுக்கும் பார்வதிக்கும் முருகன் மகன் என்பதே எனக்கு 6-ம் வகுப்பில் தமிழ்ப் பாடத்தின் வழியாகத்தான் அறிந்தேன். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆன்மிகத் தேடல்கள் அதிகமாகின. என் இளமைப் பருவம் முழுவதும் ஆன்மிக ஈடுபாட்டுடன்தான் இருந்தேன். ஆனால், ஆன்மிகத்தை ஆழ்ந்து படித்தபோதுதான் அதிலிருந்து வெளியேறினேன். வேறு எந்த பகுத்தறிவுக் கருத்துகளையும் படித்து நான் மாறவில்லை. பெரியாரின் எழுத்துகளைக்கூட அப்போது வாசித்திருக்கவில்லை. ஆன்மிகத்தை ஆழ்ந்து படித்தாலே எல்லோரும் நாத்திகவாதியாக மாறிவிடுவார்கள் என்பது என்னுடைய எண்ணம். "எப்படி சாமி கும்பிடுவ, இப்போது இப்படி இருக்கிறாயே என சில நண்பர்கள் கேட்பார்கள். அவர்களிடம், "கும்பிடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள், அதுபற்றி படித்தால் என்னை மாதிரி மாறிவிடுவீர்கள்" என்பேன். 90-களின் தொடக்கம் முதல் 2013 வரை தீவிர நாத்திகனாக இருந்தேன். அதன்பிறகு, எந்த இயக்கமும் கிடையாது, எந்தத் தொடர்பும் கிடையாது.
உங்களுக்கு எழுத்து அறிமுகமானது எப்போது?
சிறுவயதிலேயே வாசிப்புப் பழக்கம் இருந்தது. பத்திரிகைகளுக்கு கேள்வி - பதில்கள் எழுதி அனுப்புவது 5-ம் வகுப்பிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. 9-ம் வகுப்புப் படிக்கும்போதே, பத்திரிகைகளுக்கு கதைகள் எழுதி அனுப்புவேன். பிளஸ் 2 முடித்தவுடனேயே எழுத்தாளனாக மாறிவிட்டேன்.
பொறியியல் படிப்பை முடிக்கவில்லை என்ற வருத்தம் இன்னும் இருக்கிறதா?
முன்பு அந்த எண்ணம் இருந்தது, இப்போது இல்லை. தொலைதூரக் கல்வி மூலம் படிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. கல்லூரிக்குச் செல்லாமலேயே இன்றைக்கு எல்லா கல்லூரிகளுக்குள்ளும் நுழைகிறேன். மதிப்பெண் மட்டும் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்காது என என் வீட்டுப் பிள்ளைகளுக்குச் சொல்கிறேன். கற்றுக்கொண்டே இருப்பதுதான் கல்வி.
வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது முழுநேர எழுத்தாளனாக மாற முடிவெடுத்தது எப்படி?
முழு நேர எழுத்தாளனாக மாற வேண்டும் என்ற முடிவு நான் எடுத்தது அல்ல. எழுத்தாளனாக வாழ வேண்டும் என்றால் ஒரு பைசாகூட கிடைக்காது என்பது தெரியும். அந்த முடிவு எடுப்பதற்குப் பொருளாதார பலம் வேண்டும். தமிழகத்தில் வந்து வாழ முடிவெடுத்தபோது என் மனைவிக்கு அரசுப் பணி கிடைத்தது. அதிலும் பெரிய வருமானம் கிடையாது. அதற்கு முன்பு, நானும் என் மனைவியும் வெளிநாட்டில் சேர்ந்து 2 லட்சம் ரூபாய் சம்பாதித்தோம். முதன்முதலில் என் மனைவி அரசுப் பணியில் சேர்ந்தபோது 22 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம். முன்பு இருந்ததை விட பத்தில் ஒரு பங்கு. அதனால், சிக்கனமாக வாழ முடிவெடுத்தோம்.
எங்களுக்குப் பேராசை இல்லை. அவருக்கு வருமானம் இருக்கிறதே என்ற நம்பிக்கையில்தான் முழுநேர எழுத்தாளராக முடிவெடுத்தேன். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று சொல்வார்கள். என் வெற்றிக்குப் பின்னால் அல்ல, முன்னாலேயே என் மனைவிதான் இருக்கிறார் என வெளிப்படையாகவே சொல்வேன். சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற என்னுடைய உள்ளாசைகள் அவருக்குத் தெரியும். "இப்படியே ஓடிக்கொண்டிருந்தால் எப்படி? எப்போது உங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளப் போகிறீர்கள்?" என்று கேட்பார். குடும்பம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் சமாளித்தவர் அவர்தான். இப்போதும் பேருந்துக் கட்டணம் உட்பட எல்லாவற்றையும் அவரிடம் இருந்துதான் வாங்கிச் செல்கிறேன்.
ஆரம்பத்திலேயே சூழலியலைத்தான் எழுத வேண்டும் என முடிவெடுத்தீர்களா?
நான் அடிப்படையில் புனைவு எழுத்தாளர், கவிஞர். இலக்கிய வட்டத்தில் தீவிரமாக இயங்கும்போது சில எழுத்தாளர்களிடம் சூழலியல் பிரச்சினைகளை எழுத்தில் கொண்டு வர வேண்டும் எனச் சொல்வேன். ஆனால் அது கதைக்காகவில்லை. குடும்பக்கதைகள், உள்ளொளி, அகதரிசனத்தைத்தான் எழுதுவேன் என்றனர். இதனால், சமூகத்தில் என்ன தாக்கம் உண்டாகும்? யாரும் சூழலியல் பிரச்சினைகளை எழுதவில்லை. அதனால், நான் எழுத ஆரம்பித்தேன், என் எழுத்து பிரச்சாரத் தொனியில் இருக்கக்கூடாது என்று தீர்மானித்தேன்.
இன்று நான் வெற்றியடைந்த பிறகு ஒருநாள் இரவில் இந்த இடத்திற்கு வந்துவிட்டதாகக் கருதுகின்றனர். ஆனால், இதன் பின்னால் 40 ஆண்டுகால கடும் உழைப்பு இருக்கிறது. இது அவர்களுக்கும் தெரியும். ஏனென்றால், அவர்களால் எழுத முடியாத எழுத்துதான் இது. நீங்கள் ஒரு இலக்கியவாதியாக இருந்தால் எல்லா இலக்கியங்களையும் படித்து முடித்தால் போதும். ஆனால், சூழலியல் அப்படி கிடையாது. உங்களுக்கு இலக்கியம், வரலாறு, மானுடவியல், இயற்பியல், வேதியியல் என எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு நிறைய உழைக்க வேண்டும். அந்த உழைப்பைக் கொடுக்கத் தயாராக இருந்தால் யார் வேண்டுமானாலும் சூழலியல் எழுத்தாளராக முடியும். என்ன எழுதுகிறோமோ அதற்கு நேர்மையாக இருக்க வேண்டும். 'டிரெண்ட், 'ஃபேஷன்' என எழுதினால் காலியாகி விடுவோம்.
நவீன இலக்கியவாதிகளிடையே சூழலியல் பேசுபொருளாகவில்லை என்ற விமர்சனம் இன்னும் உங்களுக்கு இருக்கிறதா?
அத்தகைய எண்ணம் முன்பு இருந்தது. ஆனால், இப்போது பேசிப் பேசி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பு 'மரத்தில் ஒரு பறவை அமர்ந்திருந்தது' என பொத்தம்பொதுவாக எழுதினர். இப்போது, 'காகம் உட்கார்ந்திருந்தது, மரங்கொத்தி உட்கார்ந்திருந்தது' என எழுதுகின்றனர். வேறு துறை ரீதியாக எழுதினால் கூட, சூழலியல் ரீதியாக தவறாகிவிடக் கூடாது என்பதற்காக என்னிடம் சந்தேகம் கேட்கின்றனர். மகிழ்ச்சி. இந்த நிலைமை இன்னும் மாறும். இளைய தலைமுறை எழுத்தாளர்கள் இதில் அதிக கவனம் செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எழுத்தாளராக உங்களுக்குத் தாமதமாக அங்கீகாரம் கிடைத்ததாகக் கருதுகிறீர்களா?
அப்படி நினைக்கவில்லை. ஏனென்றால், நான் 40 வயதுக்குப் பிறகுதான் முழுநேரமாக எழுத ஆரம்பித்தேன். 19 வயதில் எழுதியதை கணக்கில்கொள்ள முடியாது. திட்டமிட்டு வந்ததால் தாமதமாக எழுத்துலகில் நுழைந்ததாகக் கருதவில்லை. நிறைய இலக்கியவாதிகள் எனக்கு நண்பர்களாக இருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் என்னை இலக்கியவாதியாக மதிக்கின்றனர். 'ஒருபடி இவன் முன்னேறிவிட்டான்' என்று வேண்டுமானால் அவர்கள் நினைக்கலாம். நான் புகழை அடைவது குறித்து எண்ணவில்லை. நம் வேலையைச் சரியாகச் செய்தால் அங்கீகாரம் கிடைக்கும் என்றுதான் நினைத்தேன்.
தமிழகம் சார்ந்த நீர் வரலாறு குறித்து 'நீர் எழுத்து' என எழுத முடிவெடுத்தது எந்தப் புள்ளியில்..?
தமிழில் 'மறைநீர்' என்ற சொல்லை உருவாக்கியது நான்தான். அது பேசுபொருளானது. அதன்பிறகு 'புட்டிநீர்' எழுதினேன். அதனால், பலரும் எனக்குத் தண்ணீர் பற்றி நிறைய தெரியும் என்று நினைத்தனர். எனக்குக் காட்டைப் பற்றித் தெரிந்த அளவுக்குத் தண்ணீரைப் பற்றித் தெரியாது. அதன்பிறகுதான் தண்ணீர் பற்றிய தேடல் அதிகமானது. தமிழ்ப் பண்பாடு என்பது நீரை அடிப்படையாகக்கொண்ட பண்பாடு. சங்க காலங்களில் நீர்வளமையுடன் இருந்த தமிழ்நாடு, இந்த நிலைமைக்கு வந்தது ஏன், எப்படி வந்தோம் என ஆய்வு செய்தேன். அதற்கான ஆய்வுப் புத்தகங்களைத் தேடினேன், கிடைக்கவில்லை. நாம் ஏன் எழுதக்கூடாது என்று முடிவெடுத்து, எழுதினேன்.
நீர் குறித்துப் புதிய தமிழ் வார்த்தைகளை உருவாக்குவதில் இருந்த சிரமங்கள் என்ன?
சங்க இலக்கியங்களில் வாசிப்பு உள்ளவன் நான். தண்ணீர் சார்ந்து பல ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றை நீக்க வேண்டும் என்பது எண்ணம் இல்லை. தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட ஒரு பண்பாட்டில் தண்ணீர் சார்ந்த சொற்கள் நிச்சயமாக இருந்திருக்கும். குறிப்பாக, cloud burst என்பதை இன்றுவரை நேரடி மொழிபெயர்ப்பாக 'மேக வெடிப்பு' என்றே சொல்லி வருகின்றோம். cloud burst என்பது சூழலியல் மாற்றங்களால் ஏற்பட்ட அண்மைக்கால நிகழ்வு என்றுதான் நினைத்திருந்தேன். சங்க இலக்கியங்களைப் படிக்கும்போதுதான், அப்போதே இத்தகைய நிகழ்வுகள் நடந்ததற்கான பதிவுகள் இருந்ததை அறிந்தேன்.
டெல்டா மாவட்டங்கள், குன்னூரில் இன்றுவரை 'நீரிடி' என்ற வார்த்தை புழக்கத்தில் இருக்கிறது. இந்த வார்த்தைகள் என்னுடைய கண்டுபிடிப்பு அல்ல, அவை மீள் கண்டுபிடிப்புகள். நான் பெருமையாக நினைக்கும் விஷயம் 'ஆலி' என்ற வார்த்தை. 'ஆலங்கட்டி என்ற வார்த்தையில் உள்ள 'ஆலம்' என்ற சொல் குறித்தத் தேடலின் விளைவே இந்த வார்த்தை. 'ஆலம்' என்ற சொல் இன்னும் திராவிட மொழிகளில் புழக்கத்தில் உள்ளது. ஒரு மொழியின் சொற்கள் என்பவை மொழியைச் சார்ந்தது மட்டுமல்ல. அவை அந்த நிலத்தின் பண்பாட்டு வளமையை குறிப்பவை. 'நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை, என்னிடமே எல்லாம் இருக்கின்றன' என்பதை உணர்த்தத்தான் இந்த மீள் கண்டுபிடிப்புகள்.
சூழலியல் சார்ந்த தமிழ் வார்த்தைகளை எந்தக் கட்டத்தில் தொலைத்திருப்போம் எனக் கருதுகிறீர்கள்?
தமிழகத்தில் பல்வேறு மொழிகளைக் கொண்ட ஆட்சியாளர்கள் இருந்திருக்கின்றனர். அதனால், பல மொழிகள் பரவின. உதாரணமாக, முகாலயர்கள் காலத்தில் உருதும், நாயக்கர்கள் காலத்தில் தெலுங்கும் நுழைந்தது. ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி உள்ளே வந்தது. அதனால், தமிழில் இருந்த சொற்கள் மறைந்துவிட்டன. பல மொழிகள் கலந்த ஒரு பண்பாட்டுச் சூழலில் இம்மாதிரி நடக்கும்தான். அதனால், பல இடங்களில் நம் மொழியில் சொற்களே இல்லையோ என்ற மயக்கநிலை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அதைப் போக்க வேண்டும்.
புத்தகத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று, பேராசிரியராக இருந்திருந்தால் இன்னும் மேம்படுத்தி எழுதியிருக்கலாம் என்ற எண்ணம் இன்னும் இருக்கிறதா?
நிச்சயமாக. இந்தப் பணி ஒரு பல்கலைக்கழகம் செய்து முடித்திருக்க வேண்டியது. அதில் ஏதாவது உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கிறதா? அவர்கள் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இப்புத்தகத்திற்காக நெடும் பயணம் செல்ல முடிவெடுத்தேன். நான் வசதி படைத்தவன் கிடையாது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். ஒரு குறிப்பிட்ட பயணத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றனர். நான் பேராசிரியராக இருந்திருந்தால் அந்தப் பணம் பல்கலைக்கழக மானிய நிதியில் இருந்து கிடைத்திருக்கும்.
தமிழக நீர் வரலாற்றுக்கு ராஜஸ்தான் சென்றேன். மிகக்குறைவான தண்ணீர் வளம் உள்ள ராஜஸ்தானில் எப்படி மேலாண்மை செய்கின்றனர், அது தமிழகத்துக்குப் பொருந்துமா என்பதை அறிவதற்காகச் சென்றேன். இன்னும் சிறப்பான வாய்ப்புகள் அமைந்திருந்தால் இமயமலை வரை சென்றுகூட அதன் தோற்றுவாய்களை ஆராய்ந்திருக்கலாம். ஆனால், அதற்கான பொருளாதாரம் அமையவில்லை. கையில் கொஞ்சம் பணம் இருக்கும்போது பயணம் மேற்கொண்டு எழுதியதுதான் 'நீர் எழுத்து'.
சூழலியலை எளிய மொழியில் எழுதுவதில் சவால்கள் இருந்திருக்குமே?
இல்லை. அதுதான் என்னுடைய பலமே. ஊடகங்கள் ஒரு கட்டுரையைக் கேட்டால் ஒரு வருடம் கழித்துக்கூட அக்கட்டுரையைக் கொடுத்திருக்கிறேன். அக்கட்டுரை என்னைத் திருப்திப்படுத்த வேண்டும். ஒரு கட்டுரையை எத்தனை முறை நான் செம்மைப்படுத்துகிறேன் என்பது எனக்குத்தான் தெரியும். முதலில் ஒரு எழுத்தாளனாக எழுத வேண்டும், பின் வாசகனாக வாசிக்க வேண்டும். அதன்பின் ஒரு கிராமத்து வாசகனாக வாசிக்க வேண்டும். கடைசியில் ஒரு குழந்தை படித்தால் இது புரியுமா என்பதற்கு வாசித்துப் பார்க்க வேண்டும். இந்த நடைமுறைகளால் குறைச்சலாகத்தான் எழுதியிருக்கிறேன். ஆனால், சரியாக எழுதியதால் தான் பலரிடம் சேர்ந்திருக்கிறது. யார் படித்தாலும் புரியும் என்ற நிலையை அடைந்திருக்கிறேன்.
ஒரு எழுத்தாளன் எதிலும் திருப்தியடைய மாட்டான். ஒரு நாவலை எழுதுவதற்கு 6 ஆண்டுகள் ஆய்வு செய்து வைத்திருக்கிறேன். ஆனால், ஏதோ ஒன்று குறையாக இருக்கிறது. என்னவென்று தெரியவில்லை. ஆனால், நான் என்னுடைய உள்ளுணர்வை நம்புகிறேன். 'நீர் எழுத்தை இன்னும் நன்றாக எழுதியிருக்கலாமோ' என்று தோன்றுகிறது. என்றைக்கு நாம் நம் எழுத்தில் திருப்தியடைகிறோமோ அன்றைக்கு நாம் 'ரிட்டையர்ட்' ஆகி விடுகிறோம். வாசிப்பிலும் என்னைத் திருப்திப்படுத்தவே முடியாது. அநேகமாக நான் சாகும்போது, கையில் புத்தகத்துடன்தான் சாவேன் என நினைக்கிறேன். ஒரு நாளுக்குக் குறைந்தது 300 பக்கங்கள் வாசிக்கிறேன். பல வேலைகள் செய்துகொண்டிருந்தபோதும் வாசிப்புதான் என்னை இயக்கியது. என் மனைவியும் காலையில் "உங்கள் முதல் மனைவியைப் பார்த்தாச்சா" என்றுதான் கேட்பார்.
அடுத்து என்ன எழுதப் போகிறீர்கள்?
இப்போதுதான் நிம்மதியாக மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன். புனைவா அபுனைவா என்பதில் சிறு குழப்பம். இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பலவற்றுக்கு வீட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். அதனால் கொஞ்சம் ஓய்வில் இருக்கிறேன். அப்படியே இருக்க முடியாது. விரைவில் எழுத வேண்டும்.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago