ஊரின் விளிம்பு நிலை வீடுகளுக்கு என்றே சில சங்கடங்கள் உண்டும். தொடர் மழைக் காலங்களில் பாம்புகளின் வளைகள் நீரில் மூழ்கிவிடும். அதனால் அவைகள் ஊர் விளிம்புகளின் வீடுகளுக் குள்ளேதான் வரும். வீட்டுக் கோழிகளின் முட்டைகளை விழுங்கவும், எலிகள், தவளைகளைப் பிடித்து உண்ணவும் பாம்புகள் வரும்.
மழைக் காலங்களில் குதித்துக் குதித்து வேகமாய் வளர்ந்து உயரும் கொக்கரவாளிச் செடிகள் போன்ற செடிகளுக்குள்ளே கோழிகள் போய் மேயும்போது நரிகள் வந்து பதுங்கியிருப் பது தெரியாமல் சிக்கிக் கொள்ளும்.
காலையிலும் மாலையிலும் வீட்டுப் பெண்கள் கோழிகளையும் குஞ்சு, வெடைகளையும் எண்ணி சரிபார்க் கும்போது ஒரு வெடையைக் காணோம்.
வெடையைக் காணோம் என்றதும், மேயப் போன இடத்தில் நரிதான் தூக்கி யிருக்கும் என்று நினைத்துக் கொண்டார்கள்.
நாட்கள் பத்தொன்பது, இருவது என்று ஓடிப்போய்விட்டன. ஒருநாள் சாய்ந்தரம் வெடைக் கோழியின் ஓர் அபயக் குரல் பரிதாபமாகக் கேட்டது. பாட்டிதான் கண்டுபிடித்தாள். சோளத் தட்டைகளின் குவியலுக்குள் இருந்து வருகிறது என்று.
தீ அணைக்கும் வேகத்தில் சோளத் தட்டை முடிகளை எடுத்து வெளியே வீசினார்கள். தீனமான குரல் கொடுத்தது வெடை. பார்க்க அய்யோ என்றிருந்தது. ‘‘தண்ணியக் கொடு… தண்ணியக் கொடு’’ என்றாள் பாட்டி.
ஒரு மாசம் ஆகியும் சாகலையே என்று சொல்லிப் பெண்கள் கண்ணீர்க் கசிய இரக்கப்பட்டார்கள்.
பட்சிகளின் பசி பொறுக்கும் தன்மையை அறிந்துகொண்டோம்.
சரி… காட்டுப் பட்சிகள் என்ன செய்யும் என்று தூங்கா நாயக்கரிடம் கேட்டோம்.
அவர் சொல்ல ஆரம்பித்தார்:
‘‘அதுகளுக்கு காலம் தூரமெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. இந்த மடம் இல்லென்னா சந்த மடங்கிற மாதிரி நாடுவிட்டு நாடு போய் பிழைச்சிக்கிடும். நம்ம மாதிரி பாதை சித்துப் போகப் போகுதா? குறுக்கெ பாஞ்சிப் பறந்தா கோடி தூரமும் ஒரு நொடிதாம்!’’ என்றார் அவர்.
ஆனாலும் ஊர்ப் பட்சிகள் என்று இருக்கே. அதுகளுக்கும் வழி வெச்சிருக்காம்.
பனை ஏறிகள் சொல்லக் கேட்டிருக் கிறேன். பனைமர மட்டை இடுக்குகளில் மீன் இருக்கும் என்று.
இதுக எங்கன இதுக்குள்ளாற வந் துது? அடைமழைக் காலங்கள் உச்சியில் இருந்து மழை நீரு கனமான கயிறு கெனக்கா தொயந்து வடியுமாம். அந்த நீரு வழியா மீனு ஏறிப் போயிருமாம்.
கண்ணாரப் பார்த்துச் சொன்ன பேச்சு இது; கற்பனையில்ல.
ஏத்து மீன்களின் வேகம் அப்படி. இவை போக வானத்தில் இருந்தே மீன் மழை கொட்டும் என்பது.
பசியோடு இருக்கும் மனிதனுக்கு வான் வழியாக வந்து மழையோடு மீன் குவியல் கொட்டுவது என்பது எப்பேர்ப்பட்ட ஆனந்தம்!
மழைக் காலத்தின் இன்னொரு கொடை காளான்கள்; ஈசல்களாகும்!
பாசிப் பருப்பின் இனத்தைச் சேர்ந்த மின்னிக்காயும் மழைக் காலத்தின் கொடைதான். பச்சையாகவே பறித்து உண்ணலாம். முள்ளுக் கத்திரிக்காய்ச் செடிகள், முள்ளு வெண்டைக்காய் இதுகளை எல்லாம் யாரும் விதைக் காமல் தானாகவே முளைக்கும். குழந்தை களிடம் ‘இதுகளை யாரு விளைவிக்கா’ என்று கேட்டால், கடவுள்தான் நமக்காக விளைவிச்சித் தர்றார் என்று குழந்தைகள் பதில் சொல்லும்.
பாவைக்காயைப் போல அதிகக் கசப் பில்லாமல், தரையெல்லாம் கொடியாகப் படர்ந்து, கறி வைக்கக் கிடைக்கும் அதலைக்காய்.
முள்ளிக்காய் செடி என்று ஒரு முள் செடி. அதன் காய்களில் மட்டும் முள் இருக்காது. திரட்சியான சுண்டைக் காய்கள் போலிருக்கும். அதன் காய் களைப் பறித்துக் கொண்டு வந்து அதைப் பலகையால் நசுக்கி, அதன் உள்ளே இருக்கும் விதைகளை அப்புறப்படுத்தி விட்டு புளிக் கறி வைப்பார்கள். அப்படி ஒரு ருசி. சொட்டு நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால் போதும். அடடா!
கண்டங்கத்திரி என்று ஒரு முள் செடி. அபூர்வமான மருத்துவச் செடி. தேடித்தான் கண்டுபிடிக்கணும். எதிர் பாராமல் தட்டுப்படும். ஒருநாள் உத்தியம்மா இதன் பழங்களைக் கொண்டுவந்து தட்டி விதைகளை நீக்கி, அலசிக் கொண்டிருந்தாள். ‘‘அட! இது எப்படி கிடைச்சது?’’ என்று தூங்கா நாயக்கர் கேட்டு சந்தோஷப்பட்டார்.
இது தேடும்போது கிடைக்காது. ஒளிந்துகொள்ளும். விளையாடப் போனப் பிள்ளை நேரத்துக்கு வர வில்லை என்றால் வீடுவீடாகப் போய் கேட்டு விசாரிக்கிற மாதிரி, பார்த்துப் பார்த்துத் தேடித்தான் பிடிக்க வேணும்.
எப்படி இவ்வளவு பழங்கள் கிடைத் தன என்று தூங்கா நாயக்கருக்கு அடங்காத ஆச்சரியம்.
இந்தப் பழத்தின் காரக் குழம்பு என்றால் தூங்கா நாயக்கருக்குப் பிரியம். அவருடைய அம்மா ருசியாகச் செய்வாள்.
எப்போதுமே அம்மாக்கள் செய்யும் ருசி மகிமைகளை மனைவியிடம் புகழ்ந்து சொல்லக் கூடாது என்கிற ‘ரகஸ்யத்தை’ தூங்கா நாயக்கரும் அறிவார். உலகியல் தெரிந்தவர் இவர்.
அம்மா நட்டுக்கு இருந்தவரை, உத் தியம்மா முதல் யாரையும் அடுப்படிக்குள் நுழையாமல் பார்த்துக்கொண்டாள். அகப்பைதான் அவளுக்கு செங்கோல்.
கல்லினால் செய்ததில்லையே உடம்புகள். அம்மாவின் கை தளர்ந்து, அகப்பை நழுவும்போது உத்தியம்மா அதை உறுதியாக பிடித்துக்கொண்டாள்.
- இன்னும் வருவாங்க…
முந்தைய அத்தியாயம்: >மனுசங்க.. 16: உத்தியம்மா!
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago