வாசிப்பு என்று பொதுவாகச் சொன்னாலும், அதில் உட்பிரிவுகளாகப் பல்வேறு வாசிப்பு முறைகள் இருப்பதை அறிவோம். இலக்கிய வாசிப்பு என்பது எப்போதுமே பொதுவாசிப்போடு ஒப்பிடுகையில் எல்லா காலத்திலும் சிறுபான்மைதான். அதிலும், உலகமயமாக்கத்தினால் இலக்கிய உலகம் ஜனரஞ்சகப்படுத்தப்பட்டிருக்கும் இன்றைய நாட்களில், இலக்கிய வாசிப்பு – இன்னும் குறிப்பாக, நவீன இலக்கிய வாசிப்பு ‘புரியாமல்’ இருக்கிறது என்ற குற்றச்சாட்டை அதிகமாகவே கேட்டுக்கொண்டிருக்கிறோம். புரிவதில்லை என்பதோடு வேறு சில குற்றச்சாட்டுகளும் நவீன இலக்கியத்தின்பேரில் உண்டு. ‘வறட்டுத்தனமாக இருக்கிறது’, ’கதையே இல்லையே’, ’மிகவும் மெதுவாகச் செல்கிறது’ போன்ற எரிச்சல் மிகுந்த குற்றச்சாட்டுகளோடு தமிழின் மிக முக்கியமான படைப்பாளி ஒருவரைப் பற்றி சமீபத்தில் காதில் விழுந்த இன்னொரு புகார்: ‘வாசகனை மதிக்காமல் தனக்காகவே எழுதிக்கொண்டிருக்கிறார்’.
அநேகமாக, மேற்கண்ட விமர்சனங்களை எதிர்கொள்ளாத நவீனத் தமிழ் எழுத்தாளரே இருக்க முடியாது. மொழிபெயர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் வசைகள் இன்னும் சற்று அதிகம். கொஞ்சம் நிதானமாக இந்தக் குற்றச்சாட்டுகள் யாரிடமிருந்து வருகின்றன என்று கவனித்தால், பெரும்பாலும் ஆரம்ப நிலை வாசகர்களாலும், ஜனரஞ்சக எழுத்துகளுக்கு மட்டுமல்லாமல், மரபான இலக்கிய வாசிப்புக்குப் பழக்கமானவர்களாலும் மட்டுமே எழுப்பப்படுகின்றன என்று தெரியும். உண்மையில், நவீன இலக்கியம் அவ்வளவு கடினமானதா, குழப்பமானதா, வாசகரை மதிக்காததா?
ஆரம்ப நிலை வாசகர்களைப் பொறுத்தவரை அவர்களிடம் இந்தப் பிரச்சினையின் காரணத்தை எளிதாகப் புரியவைத்துவிடலாம். ஜனரஞ்சக வாசகர்களிடம் இலக்கிய வாசிப்பைப் பற்றி விரிவாக விளக்கினால், பெரும்பாலும் புரிந்துகொண்டுவிடுவார்கள். சிக்கல், மரபான இலக்கிய வாசகர்களிடம்தான். நிச்சயமாக, காதுகொடுத்தே கேட்க மாட்டார்கள்.
சரி, அப்படி என்னதான் இருக்கிறது இந்த நவீன இலக்கியத்தில்? உண்மையில், இலக்கியம் என்பது ஒன்றுதான். புராதனமோ நவீனமோ, அது வெளிவந்த காலத்தைப் பொறுத்தே பெயரிடப்படுகிறது. சங்கப் புலவர்களுக்கும், இன்றைய சபரிநாதன், இசை, ஃபிரான்சிஸ் கிருபாக்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு? பயிற்சியற்ற வாசகனுக்கு இவர்கள் யாருடைய கவிதைகளுமே புரியப்போவதில்லை. அப்படியென்றால், சிக்கல் இலக்கியத்தில் இல்லை, வாசிப்பில்தான் என்பது ஓர் எளிய உண்மை.
எல்லா இலக்கியமும் அடிப்படையில் ஒன்றுதான். அந்தந்த ரசனைக்கு உட்பட்டவர்கள் அவரவர்களுக்கான பிரதிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். கேளிக்கைக்காக எழுதப்படாமல், தீவிர வாசிப்பைக் கோருகின்ற நவீன இலக்கியம் என்ற பிரதி உண்மையில் ‘புரியவைப்பதற்காக’ எழுதப்படுவதில்லை என்று சொன்னால், மரபாளர்கள் அதிர்ச்சியடையலாம். மறைபொருளாக ‘உணர்த்துவது’தான் ஓர் இலக்கியப் படைப்பின் நோக்கமாக இருக்க முடியும். வெளிப்படையாக ஒரு கருத்தைச் சொல்வதற்கு இலக்கியம் என்ற கருவியை ஒரு கலைஞன் கையில் எடுக்க வேண்டியதில்லை. அவன் எழுதுவதற்காக மனதில் சேகரமாகியிருப்பவை தர்க்கரீதியான அறிக்கைகள் அல்ல. அவற்றைச் சொல்வதற்கு அவன் ஒரு பூடகமான மொழியைத்தான் பயன்படுத்துகிறான். அவனுடைய எழுத்தை வாசகன் ஓர் அரூப ஓவியத்தைப் பார்ப்பதைப் போலவும், வார்த்தைகளற்ற வாத்திய இசைக்கோவையைக் கேட்பதைப் போலவும்தான் அணுகவேண்டியிருக்கிறது.
உயர்ந்த இலக்கியங்கள் எல்லாமே, எல்லா காலங்களிலும் இவ்வாறு வெளிப்படையாக, உரக்கப் பேசாமல், உணரவைப்பதாகவே இருக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். இலக்கியம் என்பதே ஓர் அகமொழியால் எழுதப்படுவது. வார்த்தைகளுக்கிடையே இருக்கும் மெளனங்களைச் செவிமடுப்பதற்கு வாசிப்புப் பயிற்சி தேவை. ஒவ்வொரு இலக்கியப் பிரதியும் தனது மேற்பரப்புப் பிரதியுடன் உட்பிரதி ஒன்றையும் கொண்டிருக்கிறது. வெளிப்பார்வைக்குத் தெரியாத அந்தப் பிரதேசத்துக்கு ஒரு தேர்ந்த வாசகன் தன் கற்பனையால் எளிதாகச் சென்றடைந்து விடுகிறான். உணர்த்தப்படும் விஷயத்தை வாசகன் பற்றிக்கொள்ளும்போது அப்படைப்பு வெற்றி பெறுகிறது.
வாசிப்பு என்ற இந்த அக அனுபவத்தை நமது கல்விப் புலம் கற்றுத் தருவதில்லை. இலக்கியத்தை வகுப்பறை விரிவுரைகளால் விளக்கிவிட முடியாது என்பதை நம்முடைய ஆசிரியர்களில் பெரும்பாலோர் உணர்வதில்லை. அவர்கள் நமக்குப் பயிற்றுவிப்பதெல்லாம் குழந்தைக்குத் தாய் ஸ்பூனில் ஊட்டுவதைப் போன்ற உள்ளீடுகள் மட்டுமே.
இலக்கியத்துக்கு நிதானமான வாசிப்பும், கவனமான வாசிப்பும் அடிப்படைத் தேவைகள். உண்மையான படைப்பாளி வாசகனை அலட்சியப்படுத்துபவன் அல்ல. அவனே வாசகனுக்குப் பெரும் மதிப்பையும், உயர்ந்த இடத்தையும் அளிப்பவனாக இருக்கிறான். தன் வாசகன் மீது அவன் கொண்டிருக்கும் நம்பிக்கைதான் அவனது பூடக மொழிக்கும், பொருள் மயக்க உத்திகளுக்கும் காரணங்களாக இருக்கின்றன. பொழுதுபோக்குக்காகவும், பரபரப்புக்காகவும் எழுதுபவர்களுக்கு எந்நேரமும் தன் வாசகர்கள் மீது ஐயமிருக்கிறது. அவர்களுக்குப் புரியுமோ, பிடிக்குமோ என்ற அவநம்பிக்கையே அவர்களிடம் நிறைந்திருக்கிறது. காட்சிபூர்வமாக இதைச் சொல்ல வேண்டும் என்றால், வாசகனின் இடத்துக்குத் தனது எழுத்தை எழுத்தாளன் வந்து தருவதற்கும், படைப்பாளியின் இடத்துக்கு வாசகன் சென்று பெற்றுக்கொள்வதற்கும் இடையிலான வேறுபாடு எனலாம். தீவிர வாசிப்புப் பயிற்சி பெற்றிருப்பவன், படைப்பாளிக்கு எப்போதும் பெரும் சவாலாகவே இருப்பவன். படைப்பாளி வேண்டி விரும்புவதும் இத்தகைய சவாலையே.
நிதானமான வாசிப்பில் படைப்பின் ரகசியங்கள் ஒவ்வொன்றாகப் புலப்படுவதுதான் ஆகச்சிறந்த வாசிப்பின்பம். வாசகனின் வாழ்க்கை அனுபவங்களும், அவன் கற்பனைகளும் இலக்கியப் படைப்பின் உயிர்நாடியைத் தொட்டுவிடும்போது, அக்கணத்தில் படைப்பாளியும் வாசகனும் அவ்விலக்கியப் பிரதியோடு ஒன்று கலந்துவிடுகின்றனர். இலக்கியத்தின் நோக்கம் முழுமை பெறுவது இச்சங்கமத்தில்தான்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
23 days ago
இலக்கியம்
23 days ago