தென் தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 10-வது புத்தகத் திருவிழா மதுரையில் தொடங்கிவிட்டது. முதல் நாளிலேயே வாசகர்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருந்தன. வழக்கத்தைக் காட்டிலும் புத்தக அரங்குகளின் வரிசை நீண்டிருந்தது. காரணம், கடந்த ஆண்டைவிட 30 அரங்குகள் அதிகம்.
மதுரையில் 2006-ல் தொடங்கிய புத்தகக் காட்சியில் வெறும் 130 அரங்குகள்தான் இருந்தன. இந்த முறை அரங்குகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியிருக் கிறது. 250 அரங்குகள் 2 லட்சம் தலைப்புகள், 10 லட்சம் புத்தகங்கள் பிரம்மாண்டமான அறிவுலகமாக வாசகர்களை வரவேற்கிறது மதுரை புத்தகக் காட்சி.
பாசக்கார வாசகர்கள்
நேற்று மாலை 5 மணிக்குத்தான் புத்தகக் காட்சி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பகல் 12 மணிக்கெல்லாம் கூட்டம் வரத் தொடங்கிவிட்டது. வாசகர்களின் ஆர்வத்தை நன்கு அறிந்திருந்த ‘நியு செஞ்சுரி புக் ஹவுஸ்’, ‘ராமகிருஷ்ண மடம்’ போன்ற பதிப்பகங்கள் முந்தைய நாள் இரவே அரங்கத்தைத் தயார் செய்து, சீக்கிரமே விற்பனைக்குத் தயாராகிவிட்டன.
மதுரை வாசகர்கள் ஊர்ப்பாசம் மிக்கவர்கள். பெரும்பாலான இளைஞர்கள் மதுரையைப் பற்றிய, மண் சார்ந்த புத்தகங்களையே தேடிக்கொண்டிருந்தார்கள். பலர் புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்கள். இப்படியொரு புத்தகம் இருந்தால் எப்படியிருக்கும் என்று வாசகர்களின் கனவுகளை பூர்த்திசெய்த புத்தகங்கள், எதிர்பாராத தருணத்தில் கிடைத்த புதையலைப் போன்ற புத்தகம் என்று ஆத்மார்த்தமான அனுபவங்களைத் தந்துகொண்டிருக்கிறது புத்தகக் காட்சி.
வாசிப்பில் புரட்சி
புத்தகக் காட்சிகள் மதுரை மக்களின் வாசிப்பு பழக்கத்தில் ஒரு புரட்சியையே ஏற்படுத்திவிட்டதாகச் சொல்கிறார்கள் பதிப்பாளர்கள். “மளிகைக் கடைக்குச் சென்று, தேவையானதைச் சொல்லி பொருள் வாங்குவதைப் போல புத்தகம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள், பிறகு பல்பொருள் அங்காடியில் வாங்கிக் குவிப்பதைப் போல புத்தகங்களை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்” என்கிறார்கள் அவர்கள்.
இந்த இடத்தில் கடந்தாண்டு நிலவரத்தைச் சொல்வது அவசியம். அரசு நிர்வாகம், பண்பலை வானொலிகள் முதல் பத்திரிகைகள் வரையிலான ஊடகங்கள், கல்வி நிறுவனங்களின் ஆதரவு போதிய அளவு இல்லாததால், கடந்தாண்டு விற்பனை சரிந்தது. ஆனால், கெட்டதிலும் ஒரு நன்மை உண்டு என்பது போல, இந்தச் சம்பவத்தால் மதுரை புத்தகக் காட்சியைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற ஆவல் புத்தக ஆர்வலர்களுக்கு ஏற்பட்டது.
தற்போது சென்னையில் அரசு செயலராக இருக்கும் உதயச்சந்திரன் மதுரைக்கே வந்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய ஒரு ஆயத்தக் கூட்டத்தை நடத்தினார். அதிகாரிகள், பபாசி நிர்வாகிகளுடன், மண்ணின் மைந்தர்களும் கடும் முயற்சியை மேற்கொண்டார்கள். அதன் விளைவாக வெறும் மாவட்டத் திருவிழாவாக இருந்த மதுரை புத்தகக் காட்சி இந்த ஆண்டு தென்தமிழகத்துக்கான புத்தகக் காட்சியாக விரிவடைந்திருக்கிறது. ‘புத்தக வாசிப்புத் தளத்தில் மதுரை’ என்று பிற்காலத்தில் யாரேனும் கட்டுரை எழுதினால், 2015-ஐ கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டியது இருக்கலாம்.
மதுரை தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரம் மட்டுமல்ல, தென்னகத்தின் புத்தகப் பயன்பாட்டுத் தலைநகரமும் இதுதான் என்று இந்தப் புத்தகக் காட்சி நிரூபிக்கும் என்பது வாசகர்கள் மற்றும் பதிப்பகத்தாரின் நம்பிக்கை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு விழாக்களின் நகர் என்றும் பெயருண்டு. புத்தகத் திருவிழா ஆரம்பமாகிவிட்டதால் செப்டம்பர் 7-ம் தேதி வரையில் மதுரை வாசகர்களுக்குக் கொண்டாட்டம்தான்!
- கே.கே.மகேஷ்,
தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
18 hours ago
இலக்கியம்
18 hours ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
17 days ago