யுத்தம் எனும் இச்சை 

By ஷங்கர்ராமசுப்ரமணியன்

இச்சா
ஷோபா சக்தி
வெளியீடு : கருப்புப் பிரதிகள்
ரூ. 270/-
8610242696

துயரம், இழப்பு, மரணம், சித்ரவதைகள், ரத்தக் கோரங்கள் நிகழ்ந்த பிறகு சொல்லப்படுகையில் அவை எத்தனை கொடூரமானதாக இருந்திருந்தாலும் அவை கதையாய், காவியத்தின் சுவையாய் ஆகிவிடுகின்றன. காலத்தின் தொலைவில் நினைவெல்லாம் துய்க்கும் பொருளாகிறது. தீவிரமும் அதேவேளையில், சுவாரசியமும் பொதுத்தன்மையும் கொண்ட சர்வதேசக் கதையாக தமிழ் நவீன இலக்கியம் மாறுவதற்கு இனப் படுகொலையும் யுத்தமும் தேவையாக இருந்திருக்கிறது. அந்தக் கதையாடலின் நட்சத்திரமாக எழுந்த கதைசொல்லி ஷோபா சக்தி. தமிழ் நவீன இலக்கியத்தில் அவலத்தின் அத்தனை லட்சணங்களையும் கொண்டு யுத்தச் சுவையைத் தனது தனித்தன்மையான அழகியலாக ஆக்கியவர். யுத்தம் என்ற பெரிய பாம்பின் வாயாகத் திகழும் காமம், வாலான மரணத்தைக் கவ்வ முயன்றுகொண்டேயிருக்கும் படைப்புதான் ‘இச்சா’. காவியச் சுவைகள் என்று ஒன்றைக்கூட விடாமல், நகைச்சுவை வரை அனைத்துக் குணங்களையும் சேர்த்து ஷோபா சக்தி சமைத்த துல்லியமான சர்வதேச உணவு ‘இச்சா’.

இதற்கு முந்தைய ‘பாக்ஸ்’ நாவலில் இலங்கையின் ஒரு கற்பனைப் பிராந்தியத்தை வைத்துக் கதைசொன்ன ஷோபா சக்தி, இதில் கற்பனை மொழியான ‘உரோவன்’ மொழியில் ‘ஆலா’ எழுதியிருக்கும் குறிப்புகளின் மொழிபெயர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு நாவலைப் படைத்துள்ளார். ‘இச்சா’, புராணிகக் கதைகளும் கதாபாத்திரங்களும் தலையிட்டுக் கொண்டேயிருக்கும் நாட்டார்புலப் பின்னணி கொண்ட துப்பறியும் நாவல். யுத்தம், வன்முறை, காமம் சார்ந்த பொன்மொழிகள் நூறையாவது இந்த நாவலிலிருந்து பொறுக்கியெடுத்துவிட முடியும். தமிழ், இந்திய, சிங்களத் தொன்மங்கள், பழமொழிகள், நாட்டார் பாடல்கள் கதாபாத்திரங்களிலும் நீண்டு நிழலையும் சுமைகளையும் விட்டுள்ள தடயங்களைப் பார்க்க முடிகிறது.

வெள்ளிப்பாவை என்ற ஆலா

‘இச்சா’, இலங்கையில் இரண்டாயிரத்துக்குப் பிறகு புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலிருந்த போர்நிறுத்த காலகட்டம் முடிந்த இறுதிப் போர் தொடங்கும் காலகட்டத்தில் மையம் கொள்கிறது. கிறிஸ்துவின் கடைசி இரவில் தொடங்கும் கதை, உலகெங்கும் நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களில் மையம்கொண்டு, உலகம் முழுக்க அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட மக்கள் அனைவரும் வாதைப்பட்ட இயேசுவாக மாறும் சித்திரம் ஒன்றை ஆசிரியர் வரைகிறார்.

இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த ஈஸ்டர் ஞாயிறில் நின்று தன் இலக்கை நோக்கி நாவல் நிலைகொள்கிறது. இலங்கையில் தாயை விட்டுவந்திருக்கும் கதைசொல்லி, அம்மாவையோ உறவினர்களையோ தொடர்புகொள்ள இயலாமல் அலைக்கழிந்துகொண்டிருக்கும்போது, குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் புகைப்படத்தில் மர்லின் டேமி என்ற வெள்ளைப் பெண்ணின் புகைப்படத்தைப் பார்க்கிறான். கதைசொல்லிக்கு அறிமுகமான அந்த மர்லின் டேமிதான், ஆலா சிறையிலிருந்து ‘உரோவன்’ மொழியில் எழுதிய குறிப்புகளைக் கொடுத்தவள். 1989-ல் ஒரு அடைமழைக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இலுப்பங்கேணியில் பிறந்த வெள்ளிப்பாவை என்ற ஆலா, பாலினரீதியாகவும், சாதியம், இனவாதம், அரசு பயங்கரவாதம் என அனைத்துவகையிலும் சிறுவயதிலிருந்து சந்தித்த துயரங்களையும் அதிலிருந்து தப்புவதற்குச் செய்த முயற்சிகளையும் ‘இச்சா’ அதிநுட்பத்துடன் சொல்கிறது.

சிறையிலிருந்து விடுதலை பெறாமலேயே இறந்துபோகிறாள் ‘ஆலா’. ஆனால் அவள் குறிப்புகளில் சிறையிலிருந்து விடுதலையடைந்து, ஐரோப்பா போய் ஒரு குழந்தைக்குத் தாயான பிறகே இறக்கிறாள். மரணம் மகத்தான சம்பவமாக இருக்க வேண்டுமென்று நினைத்த ஆலாவுக்கு அப்படி நிகழவில்லை. ஆனால், அவளது அழிந்த உடலையும் ஆன்மாவையும் அவள் எழுத்துகளாக மாற்றி அமரத்தன்மையை அடையும் முயற்சியே அவளது குறிப்புகள்.

இலங்கைத் தமிழர் வாழ்வென்பது, சிங்களர்களின் வாழ்வோடு இணக்கமாக இருந்ததன் அடையாளங்களையும் பொதுவில் பகிர்ந்துகொண்ட வெகுஜனப் பண்பாட்டுக் குறிப்புகள் வழியாக, ஆலாவின் குழந்தைப் பருவம் நமக்கு முன் உருக்கொள்கிறது. சிங்கள இனவாதம், தமிழ் கிராமங்களில் சிங்களர்களின் ஆக்கிரமிப்பு, புலிகளின் ஆயுதப் போராட்டம் வலுவடைவதில் கழியும் ஆலாவின் வாழ்க்கையில், குடிக்கத் தண்ணீர் கேட்டு காட்டுக்குள் புலி இளைஞர்கள் குறுக்கிடுகின்றனர். ஆலாவின் வாழ்க்கை மட்டுமல்ல, இளுப்பங்கேணி என்ற கிராமத்தினுடையதும் அந்த நாளில் புரட்டிப் போடப்படுகிறது. ஆலா, பெண் ஆயுததாரியாக ஆகும் நிலையில் நாவல் இடைவேளையில் வேகமெடுக்கிறது.

ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களிடமும்

ஆயுத பாவிப்பு, வன்முறை, போராளித்துவம் மீதான ஈர்ப்பு எப்படிச் செயல்படுகிறது; பாலுறவு இச்சையின் ஆற்றலிலிருந்து அது எப்படியான ரசவாதத்தை மேற்கொள்கிறது என்பதை ‘ஆலா’வின் தொடக்கக் கால போராளி வாழ்க்கையிலும், தளபதி சுல்தான் பப்பாவினுடனான லட்சியக் காதலிலும் விரிவாகவே நாவலாசிரியர் நிகழ்த்தியும் பேசியும் விடுகிறார். உடலின் எல்லைகளை உணர்த்தும் மனத்தின் புனைவுகளும் லட்சியங்களும் சிதைந்துபோகும் சிறைக்கொடுமைகள் இந்த நாவலிலும் விரிவாகப் பேசப்படுகின்றன.

‘ஆலா’வின் குறிப்புகள் சிறையோடு முடியவில்லை; நிக்கோஸ் கசன்சாகிஸின் ‘இயேசுவின் கடைசி சபலம்’ படைப்பை ஞாபகப்படுத்துவது. ஐரோப்பாவுக்குத் திருமணம் வழியாகத் தப்பித்துச் சென்றதாக ஆலா எழுதியிருக்கும் புனைவுதான் இந்த நாவலைத் தப்புவிக்கிறது. இறந்த காலம், அதன் நினைவுப் பதிவுகள், அவற்றிலிருந்து உருவான ஆளுமைத் தாக்கத்திலிருந்து மனிதனால் விடுதலையடைய முடியுமா? அவள் ஏன் தன் கற்பனையிலும் அத்தனை இடர்மிகுந்த ஒரு வாழ்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

காதல், வீரம், தியாகம், அன்பு, மனிதாபிமானம் எல்லாவற்றையும், “உயிருள்ள ஆலாப் பறவையொன்றை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கடைசியில் கேட்பதன் மூலம் ஆலா என்னும் பறவையின் சிறகுகளைக் கற்பனைகளாக மாற்றிவிடுகிறான் கதைசொல்லி. பறக்காதது அனைத்தும் துயருறுவதாக, துயரைப் படைக்க வல்லதாக உள்ளது. லட்சியத்துக்கும் லட்சியமின்மைக்கும் இடையில் நாவல் முழுக்கவும் மனிதர்கள் பயணித்துக்கொண்டிருக்கின்றனர். இனம், அடையாளம், மொழிவாதம், நடத்தைகள், குறிப்பாக பாலியல் நடத்தைகள் என்று கெட்டிப்பட்ட கருத்துருவாக்கங்களிலும் தொடர் பழக்கங்களிலும் தீமையை நோக்கிச் சரிந்துகொண்டிருக்கின்றனர்.

ஷோபா சக்தியின் முந்தைய நாவல்கள் எதுவும் தராத மன அழுத்தத்தை, இருள் மூட்டத்தை, செயல் உறைந்த நிலையைத் தருவதாக இந்த நாவல் இருக்கிறது. நாவலாசிரியனின் நோக்கமும் இதுவாக இருக்கலாம்.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,
தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

மேலும்