குட்டிப் பையனாக இருக்கும்போதே ‘டின்டின்’ போன்ற காமிக் புத்தகங்களிலிருந்தும், தமிழ் வாரப் பத்திரிகைகளின் கேலிச் சித்திரங்களிலிருந்தும் ஊக்கம் பெற்ற ஓவியரும், கிராஃபிக் டிசைனரும், எழுத்துரு கர்த்தாவுமான சிவா நல்லபெருமாளுக்கு 27 வயது. தனது 24 வயதிலேயே உலகளவில் கௌரவமாகக் கருதப்படும் எழுத்துரு வடிவமைப்புக்கான SOTA (The Society of Typographic Aficionados) விருதைப் பெற்றவர். அமெரிக்காவின் மேரிலாந்து இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்ட்-ல் மேற்படிப்பை முடித்தவர். சிவாவும் ஜூஹி விஷ்ணானியும் இணைந்து ‘நவம்பர்’ எனும் வடிவமைப்புக் கூடத்தை மும்பையில் நடத்திவருகிறார்கள். ஓவியர் ஆதிமூலம் வரைந்த ஆத்மாநாம் ஓவியத்தைக் காண்பித்து, தமிழில் வரைகலையில் செய்யப்பட்ட சுயாதீனமான சாதனைகளைப் பற்றிப் பேசும் சிவா ஆங்கிலத்தில் எனிமி, கல்குலா, ரீகால் முதலிய எழுத்துருக்களை உருவாக்கி வெற்றிகரமாகச் சந்தைப்படுத்தியவர்.
ஒரு ஓவியராக, ஒரு கிராஃபிக் டிசைனராக எழுத்துரு உருவாக்கத்தில் ஏற்பட்ட ஈடுபாட்டைப் பற்றிச் சொல்லுங்கள்...
நாம் அன்றாடம் வெளியில் செல்லும்போது பார்க்கும் சுவரொட்டிகள், மைல்கல்கள், ஹோட்டல் பலகைகள், செய்தித்தாள்கள், செல்போன்கள், கணிப்பொறித் திரைகள் எல்லாவற்றிலும் எழுத்துகளைத்தானே பார்த்துக்கொண்டிருக்கிறோம். மொழிவழியில் தொடர்புகொள்வதற்கு அடிப்படையான எழுத்துருவை வைத்து நான் சொல்லும் சித்திரக் கதைகள்தான் எழுத்துருக்கள்.
உங்கள் பார்வையில் நல்ல வடிவமைப்பு (டிசைன்) என்பது என்ன?
ஒரு நல்ல வடிவமைப்பு என்பது ஆயிரக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஒரு வடிவமைப்பு என்பது அழகு, அர்த்தம், வடிவம், செயல்பாடு நான்கையும் கொண்டதாக இருக்க வேண்டும். அதேவேளையில், அது நமது கலாச்சாரத்தின் அம்சத்தையும் உள்வாங்கியதாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, குழந்தைகள் உறங்கும் தொட்டிலைச் சொல்லலாம். அது நமது மண்ணில் உருவான அசலான படைப்பு. கைக்குழந்தைகள் உறங்குகையில் சற்றுத் திரும்பும்போது, நாசி அமுங்கி இறந்துபோகும் சம்பவத்தைத் தடுக்க உருவானதே தூளி. குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்தைத் தவிர்க்கும் தீர்வையும் அந்த வடிவமைப்பு தருகிறது. தாயின் கருப்பையில் இருக்கும் பாதுகாப்பு தொட்டில் வடிவமைப்பில் இருக்கிறது.
ஆங்கிலச் சந்தையில் எழுத்துருக்கள் உருவாக்கத்துக்கு மவுசு இருக்கிறதா?
உலக அளவில் எழுத்துருக்கள் துறையில் இது பொற்காலம் என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் எழுத்துருக்களை வடிவமைப்பதும் எளிது. அத்துடன் சந்தையும் அகன்றது. உலகம் முழுக்கவே ஐநூறு எழுத்துரு வடிவமைப்பாளர்களதான் இருக்கிறார்கள். ஒரு சர்வதேசக் கருத்தரங்குக்குப் போனால் 400 பேரை நான் தெரிந்துகொள்ள முடியும். ஆங்கிலத்தில் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ போன்ற செய்தித்தாள்கள் தங்களுக்கென்றே எழுத்துருக்களை பிரத்யேகமாக வடிவமைத்துப் பயன்படுத்துகின்றன. சமீபத்தில், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் பிரத்யேகமான எழுத்துருக்களைக் கொண்டு மறுவடிவமைப்பு செய் துள்ளது.
தமிழுக்கும் பிற பிராந்திய மொழிகளுக்கும் எழுத்துருக்களை வடிவமைப்பதில் வித்தியாசம் இருக்கிறதா?
தமிழைப் பொறுத்தவரை வடிவமைப்பதற்கு எளிமையான மொழி. இந்தியைப் போல அரைவடிவங்கள் எழுத்தில் கிடையாது. ‘சத்ய’ என்று எழுதும்போது இந்தி எழுத்தில் பாதி ‘த’ இருக்கும். பாதி ‘ய’ இருக்கும். ஆனால், தமிழைப் பொறுத்தவரை ‘த’ போட்டு மேலே புள்ளி வைத்தால் (‘த்’) போதும். தமிழ் எழுத்துக்களை முழுமையடைந்த வடிவம் என்று சொல்வேன். வேகமாகவும் வடிவமைக்க முடியும்.
ஒரு நல்ல எழுத்துருவை உருவாக்குவதற்கு எவ்வளவு நாள் எடுக்கும்?
அதிகபட்சம் நான்கு மாதங்கள் எடுக்கும். தலைப்பு தவிர்த்த பிரதியின் எழுத்துருவுக்கு நாட்கள் கூடுதலாகும்.
தமிழ் பதிப்புத் துறையில் எழுத்துருக்களை உருவாக்கும் ஆசை உள்ளதா?
தமிழிலும் இந்தியிலும் புத்தகப் பதிப்பாளர்களுடன் சேர்ந்து புதிய எழுத்துருக்களை உருவாக்க முயன்றுவருகிறேன். ஆனால், இப்போது மென்பொருட்களின் விலை மிகவும் அதிகம். பதிப்பகங்கள் கடந்த இருபது ஆண்டுகளாக வர்த்தகரீதியாகப் பின்னடைவில் உள்ள நிலையில், புதிய தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்திப் பார்ப்பதற்கு உதவும் மென்பொருளில் மூன்று லட்சம், நான்கு லட்சம் செலவழிக்கப் பயப்படுகின்றனர்.
நீங்கள் பங்காற்றிய ‘ஆலி க்ரோஸ்தெக்’ அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்...
உலக மொழிகள், இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் ஒரே வடிவமைப்பில் தெரியும் ‘ஆலி க்ரோஸ்தெக்’ (Oli Grotesk) என்ற எழுத்துருக்களை உருவாக்கும் அணியில் ஆர்யா புரோகித் என்ற வடிவமைப்பாளருடன் சேர்ந்து உருவாக்கியுள்ளேன். வங்காளம், குஜராத்தி, உருது, ஒரியா, தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நந்தனம் மெட்ரோ என்று ரயில் நிலையத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். தமிழில் நந்தனம் மெட்ரோ வேறொரு விதமான எழுத்துருக்களுடன் இருக்கும்போது ஒரு அந்நிய பாவம் இருக்கும். ஆங்கிலத்தில் பார்க்கும்போதும் தமிழில் பார்க்கும்போதும் இணக்கம் இருக்க வேண்டுமென்பதே இதன் அடிப்படை. ஒரு தமிழர் கேரளத்துக்குப் போகும்போது, அவருக்கு இந்தியாவில் இருக்கும் உணர்வும் அதேவேளையில் வித்தியாசமும் இருக்கும். அதுதான் இந்த எழுத்துருக்களில் நாங்கள் விரும்பும் அனுபவம். எழுத்துருக்களுக்குள் ஒரு இந்தியத் தன்மையைக் கொண்டுவர விரும்புகிறோம். அதேநேரத்தில் வித்தியாசத்தையும் ஒவ்வொன்றும் கொண்டிருக்கும்.
நவீன இந்தியாவில் வடிவமைப்பு என்பதைக் கல்வியாகக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் உருவானபோது அது ஐரோப்பிய தாக்கத்தையே எடுத்துக்கொள்கிறது இல்லையா?
ஆமாம். அப்போது பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு, அகமதாபாதில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் பள்ளியை உருவாக்கும்போது, சார்லஸ் மற்றும் ரே ஈம்ஸ் என்ற இரண்டு அமெரிக்க இன்டஸ்ட்ரியல் டிசைனர்களிடம்தான் ஆலோசனை கேட்டார். வடிவமைப்பைச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் வெளிநாட்டில் பயிற்சிபெற அனுப்பப்பட்டனர். அவர்கள் இங்கே திரும்பிவந்து மேற்கத்திய பாணி வடிவமைப்புக் கல்வியை மாணவர்களுக்குப் போதிக்க ஆரம்பித்தனர். ஆனால், இந்திய சுதந்திரத்துக்கு முன்னரே ஒரு கலை இயக்கம் சாந்தி நிகேதனில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அபீந்திரநாத் தாகூர், நந்தலால் போஸ், சத்யஜித் ராய் பங்குபெற்று தாக்கம் செலுத்திய வங்காள மறுமலர்ச்சி இயக்கம் அது. இந்திய ஓவியக் கலை, இந்திய கட்டிடக் கலை மரபிலிருந்து இந்திய வரைகலை வடிவமைப்பு உருவாகியிருந்தால் சூழலே வேறுமாதிரியாக இருந்திருக்கும். அதனால்தான், இந்திய வரைகலை வடிவமைப்பு என்பதற்கு தனி அடையாளம் இல்லாமல்போனது.
வடிவமைப்பை நீங்கள் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கல்வியாகப் பயின்றவர். அந்த அடிப்படையில் இரண்டு சூழல்களையும் மதிப்பிட முடியுமா?
சின்ன வயதிலேயே ‘டின்டின்’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றை விரும்பிப் பார்த்திருக்கிறேன். லட்சக்கணக்கான மக்களை ஈர்ப்பதற்கு அதன் வடிவமைப்பு மிகவும் முக்கியம். தமிழைப் பொறுத்தவரை 1970, 80-கள் முக்கியமான காலகட்டம். ஓர் உதாரணமாக, ‘ஆனந்த விகடன்’ இதழில் மதன், கோபுலு, ஆதிமூலம், மணியம் செல்வன் பணியாற்றிய காலகட்டத்தைச் சொல்லலாம். ஆனால், இந்தப் பத்திரிகையை வடிவமைத்தவர்கள் யாரும் டிசைன் கல்லூரிக்குப் போனவர்கள் அல்ல. இத்தனை பிரமாதமான சாதனையைத் தாங்கள் செய்துகொண்டிருந்தோம் என்று தெரியாத கலைஞர்கள் அவர்கள். வடிவமைப்பவர்களுக்கென்று இந்தியாவில் ஒரு அமைப்பும் உருவாகவில்லை.
இந்தியாவில், தமிழகத்தில் வரைகலை வடிவமைப்பு தொடங்கிய சூழலைச் சொல்லுங்கள்?
அச்சுத் தொழில்நுட்பத்தைச் சார்ந்து வெகுமக்களுக்குக் காட்சிரீதியான தகவல் சொல்வதுதான் வரைகலை. இதழியல், புத்தகப் பதிப்போடு அது ஆரம்பிக்கிறது. அச்சுத் தொழில்நுட்பத்தின் வரலாற்றைப் பார்த்தால், நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள தரங்கம்பாடியில்தான் தமிழ் விவிலியம் முதலில் அச்சிடப்படுகிறது. தமிழில் எழுத்துரு செய்ய ஆரம்பித்து, ஐநூறு வருடங்களாகப்போகிறது. அதில் பயன்படுத்தப்பட்ட எழுத்துருவை நான் திரும்ப மறுபடைப்பு செய்வதற்கான பணிக்காக என்னைச் சேர்த்துள்ளனர். இங்கே அச்சுப் பண்பாட்டோடு சேர்ந்துதான் சுதந்திர உணர்வையும் ஜனநாயக உணர்வையும் நாம் பெற்றோம். ரவீந்திரநாத் தாகூர், காந்தி, அயோத்திதாசப் பண்டிதர், பெரியார் எல்லோருமே தங்களது சிந்தனைகளை அச்சு ஊடகம் வழியாகவே வெகுமக்களிடம் பரப்பினார்கள். அயோத்திதாசர் நடத்திய ‘ஒரு பைசா தமிழன்’ இதழை உதாரணத்துக்குப் பாருங்கள். பாரதியின் வெளியீடுகளைப் பார்க்கும்போது மேற்கத்திய தாக்கத்தை அதிகம் பார்க்க முடியாது. இந்தியக் கட்டிடக்கலை, சிற்பங்களின் தாக்கத்தைப் பெற்றிருக்கின்றனர். ஓவியர் ஆதிமூலம் வடிவமைத்த புத்தகங்களையும் எழுத்துகளையும் பார்க்கும்போது அது இந்திய, தமிழ் மரபிலிருந்து பெற்ற தாக்கங்களைப் பார்க்க முடியும். ‘விகடன்’, ‘கல்கி’ போன்ற வெகுஜன இதழ்களின் வரைகலை வடிவமைப்பு முயற்சிகள் குறித்த ஆய்வுகள் ஏதும் இதுவரை செய்யப்படவில்லை.
நீங்கள் உயர்வாகச் சொல்லும் அச்சு ஊடகங்களின் பொற்காலம் தமிழில் கடந்துவிட்டதா?
1990-களில் உலகமயமாதல் போக்கு தொடங்கியவுடன் பிராந்திய மொழிகள் இரண்டாம் இடத்துக்குப் போய்விட்டன. இதற்கு இணையத் தொழில்நுட்பமும் ஒரு காரணம். 20-ம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 1990 வரை அச்சுப் பண்பாட்டு, பிராந்திய மொழிகளின் வளர்ச்சிக் காலகட்டம் என்று சொல்வேன். 1980-களில் நாம் கண்ட அச்சுப் புத்தகங்களின் நேர்த்தி இப்போது இல்லாததற்குக் காரணம், கணிப்பொறித் தொழில்நுட்பத்தின் வருகையும்தான். கணிப்பொறியில் எழுத்துருக்கள் அதிகம் இல்லாதது நமது சுதந்திரத்தையும் புதுமை நாடலையும் குறுக்கிவிட்டது. 2009-ல்தான் இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் எந்த எழுத்துருவில் உள்ளீடு செய்தாலும் இன்னொரு எழுத்துருவுக்கு மாற்றிக்கொள்ளும் ‘ஓப்பன் டைப்’ தொழில் நுட்பம் வந்தது. ஆனால், அதற்கு முன்பே ஏற்பட்ட சேதம் அதிகம். உலோக அச்சுகளைப் பயன்படுத்தியபோது கூடுதல் சுதந்திரம் பிராந்திய மொழிகளுக்கு இருந்தன. கணிப்பொறித் தொழில்நுட்பத்தில் ஆங்கிலத்துக்கே அதிக முக்கியத்துவம் இருந்தது. அத்துடன் தமிழில் எழுத்துருக்களை வடிவமைப்பது முதலில் மிகவும் சிக்கலாக உணரப்பட்டது. சுழிகள், புள்ளிகள் ஆகியவற்றைக் கொண்ட சிக்கலான மொழி நம்முடையது. ஆங்கிலத்தைப் பொறுத்தவரை உலோக எழுத்துருக்களில் எத்தனை வகைமை இருந்ததோ அதே அளவில் கணிப்பொறியிலும் இருந்தது. தமிழ் செய்தித்தாள்கள் அனைத்தையும் எடுத்துப் பாருங்கள். பிரதிக்கான எழுத்துரு என்பது கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும். தமிழில் புதிய எழுத்துருக்களை உருவாக்குவதற்கான முதலீடும் ஈடுபாடும் இல்லாததும் ஒரு காரணம்.
- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
23 days ago
இலக்கியம்
23 days ago