ரசிகமணி செய்த திருத்தம்

By இரா.நரேந்திர குமார்

'ஓம்' என்ற சொல்லுக்குத் தமிழ்ச் சொல் தேடினான் பாரதி. 'தம்பிரான் தோழர்' எனச் சுந்தரரை சைவம் போற்றியது. அதிலிருந்து 'காம்ரேடு' என்னும் தமிழ்ச் சொல்லுக்கான தமிழ் வடிவாக 'தோழர்' என்ற சொல்லை திரு.வி.க அறிமுகப்படுத்தினார். 'ரெனைஸன்ஸ்' (Renaissance) என்பதை வ.வே.சு. அய்யர் 'மறுமலர்ச்சி' என்றாக்கினார். மு.வ., சீருடையை வழக்குக்குக் கொண்டுவந்தார்.

'கல்ச்சர்' (Culture) என்னும் ஆங்கிலச் சொல் லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாகப் 'பண்பாடு' என்பதைப் பயன்பாட்டுக் கொண்டுவந்தவர் நம் ரசிக மணி. வானொலிகூட ரசிகமணியின் பங்களிப்பே.

மாணிக்கவாசகப் பெருமானின் சிவபுராணத்தில் ரசிகமணி ஒரே ஒரு எழுத்தில் செய்த திருத்தம் எண்ணியெண்ணி வியக்கத் தக்கது.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லா நின்ற இத் தாவரச் சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்.

உயிர்களின் பரிணாம வளர்ச்சி பற்றி இந்தப் பாடல் பேசுகிறது என்பார்கள். உயிர்களின் படிநிலை வளர்ச்சியில் அஃறிணைப் பொருளான 'கல்' இடையில் ஏன் வந்தது எனக் கேட்ட ரசிகமணி ஒரு திருத்தமும் சொன்னார். ஏட்டுச்சுவடி ஒன்றிலிருந்து அடுத்தடுத்துப் பிரதிகள் எடுத்தபோது 'கல்லா மனிதராய்' என இருந்ததை முந்தைய வரிகளின் சாயலில் 'கல்லாய் மனிதராய்' என்று யாரோ எழுதிவிட்டார் என்கிறார் ரசிகமணி. 'கல்லா மனிதர்' என ரசிகமணி செய்த சிறு திருத்தம் பாடலுக்கே தனி வனப்பினை ஊட்டி அற்புதமாகப் புரியவைக்கிறது.

'கல்லா மனிதராய்' திருத்தம் தொடர்பாக ஒரு முறை எழுத்தாளர் கி.ராஜநாராயணனும், ஜீவாவும் பேசிக்கொண்டிருந்தார்களாம். கம்பராமாயணத்தில் ரசிகமணி திருத்தம் செய்தது தொடர்பாக, டிகேசியைக் கடுமையாக மேடைகளில் விமர்சித்தவர் ஜீவா. ஜீவாவிடம் தான் குறிப்பிட்டவற்றை கி.ரா., தனது 'அன்னப்பறவை' நூலில் சொல்கிறார். 'சிவபுராணம் பாடல் மனிதனின் பரிணாம வளர்ச்சியை ஒவ்வொரு கட்டமாகச் சொல்லிக் கொண்டுவருகிறது. புல், பூண்டு, புழு, பறவை, விலங்கு இப்படியாக வளர்ந்துவந்த மனிதன் திடீரென்று கல்லாக மாறுகின்றதாகச் சொல்கிறது பாடல்.

அதாவது உயிர் வஸ்து, ஜட வஸ்துவாக மாறுவதாகச் சொல்கிறது. உயிர் வஸ்துவின் வளர்ச்சியைப் பற்றிச் சொல்லிக்கொண்டு வரும்போது ஜடவஸ்துவான அந்தக் கல்லுக்கு அங்கே என்ன ஜோலி? மிருக வளர்ச்சி முற்றி மனிதன் காட்டு மிராண்டியாக வாழ்ந்தான். அப்புறம்தான் அவன் மனித நிலைக்கு வந்தான். ஆகவே ரசிகமணி டிகேசி அவர்கள் மனித வளர்ச்சிக்கு இடைஞ்சலாக இருந்த கல்லை அகற்றிவிட்டு 'கல்லா மனிதனாய்' காட்டுமிராண்டி மனுஷனாய் என்ற சின்னத் திருத்தம் செய்திருக்கிறார். பாடலின் சந்தமும் குறையவில்லை' என்று சொல்லியிருக்கிறார்.

சில நிமிடங்கள் அமைதிகாத்த ஜீவா சொன்னாராம்: 'எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்யணுமே. டி.கே.சியின் திருத்தங்கள் எல்லாத்தையும் நான் பார்க்கணும்'.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE