ஜூலை 6: ஆத்மாநாம் நினைவு தினம்
நாளை நமதே
கண்களில் நீர் தளும்ப இதைச் சொல்கிறேன்
இருபதாம் நூற்றாண்டு செத்துவிட்டது
சிந்தனையாளர் சிறு குழுக்களாயினர்
கொள்கைகளை
கோஷ வெறியேற்றி
ஊர்வலம் வந்தனர் தலைவர்கள்
மனச் சீரழிவே கலையாகத் துவங்கிற்று
மெல்லக் கொல்லும் நஞ்சை
உணவாய்ப் புசித்தனர்
எளிய மக்கள்
புரட்சி போராட்டம்
எனும் வார்த்தைகளினின்று
அந்நியமாயினர்
இருப்பை உணராது
இறப்புக்காய்த் தவம் புரிகின்றனர்
என் ஸக மனிதர்கள்
இந்தத் துக்கத்திலும்
என் நம்பிக்கை
நாளை நமதே
ஆத்மாநாமின் ஆளுமையை முழுமையாகப் பிரதிநிதித்துவம் செய்யும் கவிதை இது. மென்மையும் உரத்த தன்மையும் சேர்ந்தொலிக்கும் கவிதைகள் அவருடையவை. நமது வாழ்க்கையின் வெவ்வேறு சந்தர்ப்பங்கள் மற்றும் அனுபவச் சூழல்களின் பின்னணியில் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய வரிகளை அவர் எழுதியிருக்கிறார். 'நாளை நமதே', பிரத்யேக உரையாடல் தொனியைக் கொண்ட ஆத்மாநாமின் சிறந்த கவிதைகளில் ஒன்று.
பாரதி, பாப்லோ நெரூதா போன்ற பெருங்கவிஞர்களைப் போலக் கவிதையை, சமூக நடவடிக்கையாக மாற்ற ஆசைப்பட்ட ஒரு குரல் ஆத்மாநாம். கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியலையும், பறத்தல் தன்மையையும், விந்தையையும் தக்கவைத்துக்கொண்டே தன் விரிந்த கரங்களால் மானுடத்தையும் தழுவ முயன்ற பிஞ்சுக் கைகள் அவருடையவை.
'நாளை நமதே' கவிதை இருபதாம் நூற்றாண்டைப் பற்றி பேசுகிறது. இப்போது படிக்கும்போது 21-ம் நூற்றாண்டுக்குத்தான் முழுமையாக அச்சுஅசலாக இது பொருந்தும் என்று நாம் வாதிட இயலும். 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாசகரோ, 23-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாசகரோ இதைப் படிக்க நேர்ந்தாலும் சமகாலத் தன்மையை இக்கவிதையில் உணர நேரலாம்.
இதுதான் இக்கவிதையின் அழகு. வாழ்க்கையும் லட்சியங்களும் மனிதர்களும் தொடர்ந்து இற்று விழுவதைப் பார்க்கிறார் ஆத்மாநாம். புரட்சி, போராட்டம் என்ற செயல்பாடுகளுடன் மட்டுமல்ல, வார்த்தைகளிலிருந்தே அந்நியமாகிவிட்டனர் மக்கள் என்கிறார். ஆத்மாநாமைப் பொறுத்தவரை மொழியும் வார்த்தைகளும் கனவையும் லட்சியங்களையும் நேசத்தையும் சேகரித்துவைத்திருப்பவை. 'சக மனிதர்கள்' என்று எழுதாமல் 'ஸக மனிதர்கள்' என்று ஆத்மாநாம் விளிக்கிறார்.
மொழியின் கனவு கவிதை என்றால் அந்தக் கனவின் இளம் உருவகம் ஆத்மாநாம். அதனால்தான் அவரால் இப்படிச் சொல்ல முடிந்தது: “என்னுடைய கனவுகளை உடனே அங்கீகரித்துவிடுங்கள் / வாழ்ந்துவிட்டுப் போனேன் என்ற நிம்மதியாவது இருக்கும்”.
மானுடம் மீது தீராத ஆசையும் நம்பிக்கையும் கவிஞனுக்கு இன்னும் இருக்கிறது. காலம் தனது ஒட்டுமொத்த துயரங்களின் சிலுவைச் சுமையையும் சில கலைஞர்களின் தோள்மீது வைத்துவிடுகிறது. அந்த சிலுவைச் சுமைப் பொறுப்புக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கத் தன் கவிதைகள் வழியாக முயன்றவர் ஆத்மாநாம். இளமையிலேயே பல்வேறு மனநெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்துகொண்டவர்.
சமகாலக் கவிதைக்கான கூர்ந்த அழகியல், உரையாடல் தன்மை, மவுனம் இவற்றைத் தன் பண்புகளாக வைத்திருந்த ஆத்மாநாம் கவிதைகள் அன்றாடப் பயன்பாட்டுத் தன்மையையும் கொண்டவை. அவருக்கு அந்தப் பிரக்ஞை இருந்துள்ளது.
தன் கவிதைகள் மானுடத்தின் துயரங்கள் களையும் சாசுவதமான குணமூட்டிகள் என்று அவர் மிகையாகக் கருதியிருக்கவில்லை. களைத்த ஆன்மாவுக்கு ஒரு தேநீர். ஒரு ஆரோக்கியமான சூப். ஒரு எளிய எலுமிச்சைப் பானகம். ஆத்மாநாமின் பயன்பாட்டுத் தன்மையையும் அவை கொண்டிருக்கும் ஆரோக்கியத்தையும் இன்றைய கவிஞர்கள், கவிதை வாசகர்கள் அணுகிப்பார்க்க வேண்டும்.
*
ஆத்மாநாம் எனும் புனைபெயரில் எழுதிய கவிஞரின் இயற்பெயர் S.K. மதுசூதன். 1951-ல் பிறந்தவர். கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஆத்மாநாம் சென்னையில் வளர்ந்தவர். குழந்தைகளுக்கான ஆடைத் தொழிலகத்தை சிறிதுகாலம் சொந்தமாக நடத்தினார். 28 வயதில் Affective Disorder எனும் மனநோயால் பாதிக்கப்பட்ட ஆத்மாநாம் 1984-ல், தமது 33-ம் வயதில் தற்கொலை செய்துகொண்டார். அவரது வாழ்நாள் காலத்தில் வெளிவந்த கவிதை தொகுப்பு 'காகிதத்தில் ஒரு கோடு'.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
8 hours ago
இலக்கியம்
8 hours ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
10 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
17 days ago