சர்தார் படேல்: யூனிபைர் ஆஃப் மாடர்ன் இந்தியா
ஆர்என்பி சிங், விடாஸ்டா பதிப்பகம், நியூ டெல்லி. விலை: ரூ.795
***********************************************************
செ.இளவேனில்
இன்றைய ஒருங்கிணைந்த இந்திய தேசத்தைக் கட்டமைத்ததில் சர்தார் வல்லபபாய் படேலின் பங்களிப்பை விவரிக்கிறது இந்நூல். புலனாய்வுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரியான ஆர்என்பி சிங் எழுதியிருக்கிறார். கிழக்குப் பிராந்திய சமஸ்தானங்கள், ராஜஸ்தான், ஜோத்பூர், கத்தியவார், போபால், ஜுனாகட், ஹைதராபாத், ஜம்மு மற்றும் காஷ்மீர் முதலான சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைப்பதற்கு இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சரான படேல் எப்படியெல்லாம் தந்திரோபாயங்களைக் கையாண்டார், என்னென்ன சவால்களையெல்லாம் எதிர்கொண்டு இந்தியாவை அவர் ஒருங்கிணைத்தார் என்பதை இந்நூலின் வழியே அறிந்துகொள்ள முடிகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தான் நீங்கலாக இருந்த நிலப்பரப்பில் மட்டுமே 554 சுதந்திர சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றில் 216 சமஸ்தானங்கள் மாகாணங்களோடு இணைக்கப்பட்டன. 310 சமஸ்தானங்கள் 6 ஒன்றியப் பிரதேசங்களாக ஒன்றிணைக்கப்பட்டன. 21 பஞ்சாப் மலை நாடுகள் இமாச்சல பிரதேச மாநிலமானது. இவ்வாறு 554 சமஸ்தானங்களும் 14 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. இந்த மாபெரும் நடவடிக்கைக்கான முழுப் பெருமையும் படேலை மட்டுமே சேரும். அவருக்கு முழுமையான முடிவெடுக்கும் அதிகாரத்தை அளித்திருந்தார் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. ஆனால், காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தமட்டிலும் படேலைத் தள்ளி வைத்திருக்கவே விரும்பினார்.
காஷ்மீரின் முன்னாள் பிரதம அமைச்சரும் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உறுப்பினருமான என்.கோபாலசாமி ஐய்யங்காரின் வழியாக காஷ்மீர் இணைப்பு விவகாரத்தில் மட்டும் தானே நேரடிக் கவனம் செலுத்தினார் நேரு. இதையொட்டி, நேருவுக்கும் படேலுக்கும் இடையே எழுந்த முரண்பாடுகளையும் இந்தப் புத்தகம் விரிவாகப் பேசுகிறது.
சமஸ்தானங்களை இணைப்பதற்கு முழு அதிகாரமும் அளிக்கப்பட்டிருந்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் தான் ஒதுக்கப்படுவது படேலுக்குக் கடும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அதுகுறித்து நேருவுக்குக் கடிதமும் எழுதினார். காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச உறவுகள், ராணுவ நடவடிக்கைகளும் அடங்கியிருப்பதாலேயே தான் இவ்விவகாரத்தில் தனிக் கவனம் காட்டுவதாக படேலுக்குப் பதிலளித்தார் நேரு. எனினும், காஷ்மீர் விவகாரத்தில் நேரு காட்டிய தனிக் கவனத்துக்கு, ஷேக் அப்துல்லாவுடன் அவருக்கு இருந்த நட்பும் நம்பிக்கையுமே முக்கியமான காரணம். தவிர, காஷ்மீர் பிரச்சினையில் தலையிடுவதால் ஹைதராபாத் இணைப்பு விவகாரத்தில் தனக்கு அளிக்கப்பட்டிருந்த முழுச் சுதந்திரத்துக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதில் படேலும் கவனமாக இருக்க வேண்டியிருந்தது.
காஷ்மீர் விவகாரத்திலிருந்து தன்னை விலக்கிவைப்பது பற்றி அதிருப்தியடைந்த படேல், ஒருகட்டத்தில் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்து நேருவுக்குக் கடிதமும் எழுதியிருக்கிறார். காந்தியின் தலையீட்டால், அந்தக் கடிதம் நேருவைச் சென்றடைவதற்கு முன்பே நிறுத்திவைக்கப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவைக்கு எடுத்துச் செல்வதை காந்தியும் படேலும் விரும்பவில்லை என்றும் தெரிகிறது.
காஷ்மீர் இணைப்பு விவகாரத்தோடு இந்திய அரசமைப்புச் சட்ட நிர்ணய அவையில் கூறு 370 விவாதிக்கப்பட்ட சூழலையும் இந்தப் புத்தகம் விவரிக்கிறது. காஷ்மீருக்குத் தனி அரசமைப்புச் சட்டம் வேண்டும் என்ற ஷேக் அப்துல்லாவின் வேண்டுகோளுக்கு நேரு சம்மதித்ததன் பேரிலேயே அக்கூறு அவையில் விவாதிக்கப்பட்டது. கூறு 370-ன் வரைவை எழுதுவதற்கு கே.எம்.முன்ஷி, என்.கோபாலசாமி ஐயங்கார், ஷேக் அப்துல்லா ஆகியோரைக் கேட்டுக்கொண்டிருந்தார் நேரு. அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் உறுப்பினரான கே.எம்.முன்ஷியின் வரைவு ஷேக் அப்துல்லாவுக்கு நிறைவளிக்கவில்லை. கூறு 370 அவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய ஷேக் அப்துல்லா, விவாதம் நடைபெற்றபோது பகிரங்க வெளிநடப்பு செய்தார்.
காஷ்மீருக்குத் தனி அரசமைப்புச் சட்டம் குறித்து இப்படி விவாதம் சூடுபறந்துகொண்டிருந்த நேரத்தில், நேரு ஐரோப்பியப் பயணத்திலிருந்தார். அவையில் கூறு 370-ஐ ஏற்றுக்கொள்ளச் செய்யும் பொறுப்பை என்.கோபாலசாமி ஐயங்காரிடம் ஒப்படைத்திருந்தார் நேரு. அரசமைப்புச் சட்ட நிர்ணய அவையில் கூறு 370 குறித்து விவாதிப்பதற்கு முன்பு காங்கிரஸ் நாடாளுமன்றக் கூட்டத்தில் இக்கூறை அறிமுகப்படுத்தினார் கோபாலசாமி ஐயங்கார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸில் யாருமே இல்லை. எல்லாத் தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பே கிளம்பியது. மௌலானா ஆஸாத் இக்கூறுக்கு ஆதரவு அளித்தாலும்கூட அது பெயரளவுக்குத்தான் இருந்தது. கடைசியில், படேலின் உதவியைக் கோரினார் கோபாலசாமி ஐயங்கார். எனினும், ஷேக் அப்துல்லாவின் அரசியல் நடவடிக்கைகள் பற்றி படேல் எதிர்மறைக் கருத்தையே கொண்டிருந்தார்.
படேலின் மறைவுக்குப் பிறகு, ஷேக் அப்துல்லா மிகவும் வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எச்சரிக்கைகளை விடுத்தார். கூறு
370-ன் கீழ் உரிய மதிப்பு அளிக்கப்படாவிட்டால் இந்தியாவிடமிருந்து பிரிவதற்குத் தயங்க மாட்டோம் என்று அவர் பேசினார். இந்தியாவுடன் இணைவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்துவதற்குப் பதிலாக, காஷ்மீரில் அரசமைப்புச் சட்ட நிர்ணய அவைக்கான தேர்தலை நடத்தினார் ஷேக் அப்துல்லா. பள்ளத்தாக்குப் பகுதியில் எளிதாக வெற்றிபெற்ற அவர், ஜம்மு பகுதியில் எதிர்த்துப் போட்டியிட்டவர்களின் வேட்பு மனுக்களைச் செல்லாததாக்கி, தன்னை ஜம்மு மற்றும் காஷ்மீரின் பிரதிநிதியாக்கிக்கொண்டார். ஒருவேளை, காஷ்மீர் இணைப்பு விவகாரத்தில் படேலுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? காஷ்மீர் விவகாரம் ஒரு தொடரும் பிரச்சினையாக இருந்திருக்காது என்ற கே.எம்.முன்ஷியின் வார்த்தைகளை மேற்கோள் காட்டியிருக்கிறார் ஆர்என்பி சிங்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago