தோழர் பி.சீனிவாசராவ் எழுதிய ‘தலைமறைவு வாழ்க்கை’ என்ற சிறிய புத்தகத்தில், கரிசல்காட்டில் அவர் வாழ்ந்த தலைமறைவு வாழ்க்கையில் ஒரு சம்சாரி சீனிவாசராவை ராச்சாப்பாட்டுக்கு அழைத்துப் போகிறார். நல்ல பசி இவ ருக்கு. ஆனாலும், அந்த ரசமும் குதிரை வாலி அரிசிச் சோற்றையும் அவரால் சாப்பிட முடியவில்லை. அந்தச் சம்சாரி வேகமாகப் பிழிந்து பிழிந்து சாப்பிடு வதை அதிசயமாகப் பார்த்துக்கொண்டி ருந்ததாகச் சொல்லுகிறார்.
முதன்முதலில் ரங்கூனில் இருந்து நெல்லரிசி வந்து இங்கே விற்கும்போது ரூபாய்க்கு எட்டுப் படி அரிசி கிடைத் தது என்று சொன்னால், இப்போது நம்பவே மாட்டார்கள். அதோடு அதனுடைய ருசியையும் சொல்லணும். கரிசல்காட்டுக்காரனுக்கு நெல் அரிசி்ச் சோறுதான் ருசியான பலகாரம். ஓட்டல் களைப் பார்த்து அவன் ஓடியதுக்கு இதுவும் ஒரு காரணம்.
சின்னப் பையனாக இருந் தப்போ, ஓட்டல்களில் பாம்பே ரவையில் ஆக்கிய உப்புமாவை ரொம்ப விரும்பி உண்பேன். அதையெல்லாத்தையும்விட ஓட்டல்களில் ரவா தோசை அப்படி ஒரு ருசி அந்தக் காலத்தில்.
நான் இது ஒருபக்கம். இன்னொரு பக்கம் என்னைப் புரட்டிப் போட்டது அந்தக் காலத்து ஓட்டல்களின் பூரிக் கிழங்கு. அந்தக் கிழங்குக்கும் பூரிக்கும் அப்படி ஒரு கொண்டாட்டம்!
அந்தக் கிழங்கின் ருசியைப் பற்றி ரசிகமணியிடம் சொன்னேன். உற்சாக மாகிவிட்டது அவருக்கு. ‘‘அந்தக் கிழங்கை வைத்துக்கொண்டு ஒரு ஹிண்டு நியூஸ் பேப்பரையே சாப்பிட்டு விடலாமே’’ என்றார் அவர். அதை நாங்கள் மற்றவர்களிடம் சொல்லிச் சொல்லி இப்பவும் சிரிப்போம்.
அந்தக் காலத்தில் அந்த உருளைக் கிழங்கின் அப்படியான ருசிக்குக் காரணம்? ஊட்டியின் குளிர், மண், அந்த மழைதான்!
இப்போது உருளைக் கிழங்கு எந்தத் தரையிலும் விளைவதால் ருசியும் தரை மட்டமாகிவிட்டது. வெள்ளைப் பூண்டி லும்கூட மலைப் பூண்டின் ருசி தரைப் பூண்டுக்குக் கிடையவே கிடையாது.
சென்னையில், ஒரு பிரபலமான கல்யாணத்துக்கு நாரணதுரைக் கண்ணன், கு.அழகிரிசாமியை அழைத் துக்கொண்டு போனார். அங்கே பாதாம்கீர் தந்துள்ளார்கள். அருமையாக இருக்கிறதே என்று விரும்பி வாங்கிக் குடித்தார்களாம். கு.அழகிரிசாமியால் மட்டும் குடிக்கவே முடியலையாம். என்ன செய்கிறதுனும் தெரியல. இதை என்னிடம் அவனேதான் சொன்னான். நானும் பாதாம்கீர் குடித்தது இல்லை.
அது எப்படியிருக்கும் என்று கேட் டேன். ‘‘அதை ஏம் கேக்கிற. ஒரே மூட்டப் பூச்சி வாடை அடிக்குது. கொண்டா கொண்டான்னு வாங்கி வாங்கி மொக்குரான்க’’ என்று அப்போது அப்படிச் சொன்னவன், அதே பாதாமில் தயாரித்த பாதாம் அல்வாவைச் சாப்பிட என்னை கோந்தப்ப நாயக்கன் தெருவில் இருந்த ஆரிய பவனுக்கு அழைத்துச் சென்றவனும் அவனே!
கிராமப்புறங்கள்ல நாங்கள் தின்னு அனுபவிச்ச பலகாரப் பண்டங்கள் கருப் பட்டித் தோசை, கருப்பட்டிப் பணியாரம், சுசியம், சினைக் கொழுக்கட்டை, உளுந்த வடை, ஆமைவடை, முந் திரிக் கொத்து, மாவு உருண்டை, முறுக்கு வகைகளெல் லாம் இப்போ இப்படித்தான்.
ஏழை சம்சாரி வீடுகளில் அப்போ தெல்லாம் தோசைக்குப் போட்டாலே கொண்டாட்டம்தான்.
பள்ளிக்கூடத்தில் வாத்தியார் கேட் டாராம். ‘‘ஏண்டா நீ நேத்துப் பள்ளிக் கூடத் துக்கு வரலை?’’ என்று. அதுக்கு அந்தப் பையன் ‘‘நேத்து எங்க வீட்டுல தோசைக் குப் போட்டிருந்தார்கெ சார். அதான் வரல’’ என்று பதில் சொல்லியிருக்கான்.
இந்தப் பையன் பெரியவனாகி, பட் டணத்துக்குப் போய் மிட்டாய்க் கடையை முதன்முதலில் பார்க்க நேர்ந்தபோது தான் ‘பட்டிக்காட்டான் முட்டாய்க் கடையை முறைச்சுப் பார்த்ததுபோல’ என்கிற பேச்சு வந்திருக்கும்போல!
ஆனால், நான் முதன்முதலா முறைச் சுப் பார்த்தது திருநெல்வேலி போனப்ப நிலக்கண்ணாடி வைச்ச முட்டாசுக் கடையைத்தான். அந்த நிலக்கண்ணாடி யில் நமது மூஞ்சி முகரை எல்லாம் பளிச்சென்று தெளிவாத் தெரியும். அதை தரமான அசல் பெல்ஜியம் கண்ணாடி என்பார்கள். அதுசரி, இருந்துட்டுப் போகட்டும்.
இந்தக் கண்ணாடிங்க முடி திருத்துற கடைங்கள்ல இருக்கிறது சரி. வித விதமா இனிப்புகளை நிறுத்துப் போடுற கடைகள்ல ஏன் வைக்கணும்?
ஒருநாள், கு.அழகிரிசாமியின் மாமனார் சந்திரஹரியிடம் இந்த சந்தேகத் தைக் கேட்டேன். அவர் சொன்னதைக் கேட்டு அழகிரிசாமி முதல் எல்லோருமே சிரிச்சோம்.
திருநெல்வேலியில் லாலாக்கடை அல்வா பிரிசித்தி பெற்றது. இந்த லாலாக்களில் ஒருத்தர் தேசிய விடுதலை இயக்கத்திலும், நெல்லையில் நடந்த போராட்டங்களிலும் பங்கேற்றுப் பிரி சித்திப் பெற்றார்.
தமிழ்நாட்டுப் பலகாரங்களில் கீர்த்தி பெற்றது என்று பலதைச் சொல்லலாம். ருஷ்ய நாட்டில் இருந்து வந்த பிரதமர் குருஷேவ்வுக்கு, நெய்யில் சுட்ட ஒரு உளுந்த வடையைக் கொடுத்தார்களாம். தின்னு பார்த்துவிட்டு இன்னொண்ணு கிடைக்குமா என்று கேட்டார் என்பார்கள்.
பயணம் போகும்போது உண்ணக் கொண்டுபோக என்றே நம்மிடம் பலது உண்டு. ஒருநாள் ‘கப்பல் குழம்பு’ பற்றிக் கேள்விப்பட்டேன். இதுவும் பலநாட்கள் தாக்குப்பிடிக்குமாம்.
கிருபானந்த வாரியார் ஒருநாள் தண்ணீர் விடாமல் செய்யும் குழம்பைப் பற்றிச் சொன்னார்.
குற்றாலத்தில் பெரிய அண்ணியார் (ரசிகமணி அவர்களின் வீட்டம்மா) சிறப்பாக ஆக்குவார் என்று கேள்விப் பட்டுள்ளேன்.
நாங்களே ஒருநாள் ரசிகமணி அவர் களிடம் இதுபற்றிக் கேட்டோம். அவர் சிரித்துக் கொண்டே கேள்விப்பட்டா மட்டும் போதுமா? சாப்பிட்டும் பார்க்க வேண்டாமா என்று கேட்டார். மறுநாளே எங்களுக்கு அது அண்ணியாரிடம் இருந்து கிடைத் தது. ஆனந்தமாக உண்டு மகிழ்ந்தோம்.
எதை, எப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் குறித்து வைத்துக்கொள் கிற புத்தியெல்லாம் எங்களுக்கு இல்லை. அந்தப் பள்ளிக்கூடத்தில் நாங்கள் படிக்கவில்லை.
ருசித்து அனுபவிச்சுச் சாப்பிடுகிறது என்பதையே சொல்லிக்கொடுக்க வேண்டியதிருக்கிறது.
- இன்னும் வருவாங்க…
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago