பண்டைய மக்கள் பொருட்களை வாங்குவதற்குக் காசுகளைப் பயன் படுத்தியுள்ளனர். காசுகள் புழக்கத்துக்கு வருவதற்கு முன்பாகச் சில கனிகளையும் கிளிஞ்சல் போன்ற பொருட்களையும் பண்டங்கள் வாங்க இடைப் பொருட்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தியாவில் கி.மு. 6-ம் நூற்றாண்டிலிருந்து கார்ஷா பணம் வணிகத்தில் பயன்படுத்தப்பட்டதை புத்த ஜாதகக் கதைகளிலிருந்து அறிய முடிகிறது. பாணினி தமது அஷ்டாத்யாயி என்னும் நூலில் கார்ஷா பணம் நிக்ஷ்கா, சதமாணா போன்ற ஏழு வகையான காசுகளைக் குறிப்பிட்டுள்ளார். வேத காலத்துக்குப் பிறகு முத்திரைக் காசுகள் தயாரிக்கப்பட்டன. இத்தகைய முத்திரைக் காசுகள் தமிழகத்தில் அழகன்குளம், வீரசிகாமணி, காவிரிப்பூம்பட்டினம் போன்ற ஊர்களில் கிடைத்துள்ளன.
சங்க காலத்தைச் சார்ந்த பெருவழுதிக் காசுகள், மலையமான் காசுகள், கொல்லிப் புறைக் காசுகள், குட்டுவன் கோதைக் காசுகள், செழிய செழியன் நாணயங்கள் போன்ற காசுகளைக் கண்டறிந்து தமிழர்க்குப் பெருமை சேர்த்தவர் தொல்காப்பிய விருது பெற்ற நாணவியல் அறிஞர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி. தமிழகத்தில் பல இடங்களில் ரோமானியக் காசுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சங்க காலத்துக்குப் பிறகு ஆட்சி செய்த பல்லவர், பாண்டியர், சோழர், விசயநகர மன்னர்களும் காசுகளை வெளியிட்டுள்ளனர். இக்காலத்தில் செம்பு, வெள்ளி, தங்கம் ஆகிய உலோகங்களில் காசுகளை அச்சாக்கியுள்ளனர்.
மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர் முதலிய இடங்களை மையமாகக் கொண்டு ஆட்சி செய்த நாயக்க மன்னர்கள் காசுகளை வெளியிட்டுள்ளனர். இவர்கள் செப்புக் காசுகளையே அதிகமாக வெளியிட்டுள்ளனர். சில பொன், வெள்ளிக் காசுகளையும் அச்சிட்டுள்ளனர். வேலூர் நாயக்கரால் வெளியிடப்பட்ட காசுகள் இதுவரை கிடைக்கவில்லை.
விசுவநாத நாயக்கர்
மதுரை விசுவநாத நாயக்கர் வெளியிட்ட சில காசுகளில் ஒருபுறம் ‘பாண்டியன்’ என்றும் மறுபுறம் ‘விஸ்வநாதன்’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. பாண்டியரை அடுத்து ஆட்சி செய்த நாயக்கர்கள் தாங்களே பாண்டியர் எனக் கருதிவந்தனர். பாண்டியரின் இரட்டைக் கயல் முதலில் மதுரை நாயக்கரின் அரசச் சின்னமாக இருந்துள்ளது. விசுவநாத நாயக்கர் வெளியிட்ட காசுகளில் ‘விஸ்வநாதன், விசிவ, ஸ்ரீவீர’ என்றும் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காசில் ‘கிட்டணப்ப நாயக்கர்’ என்றும் வீரப்ப நாயக்கர் காசுகளில் ‘வீ’ என்றும் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காசில் ‘ஸ்ரீகிருஷ்ண’ என்றும் முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் காசுகளில் ‘முத்துகிருஷ்ண, வராஹ, திருவேங்கட’ என்றும் முத்துவீரப்ப நாயக்கர் காசில் ‘வீ’ என்றும் திருமலை நாயக்கர் காசுகளில் ‘திருமலா, தி, நா’ என்றும் சொக்கநாத நாயக்கர் காசுகளில் ‘சொ’ என்றும் முத்துவீரப்ப நாயக்கர் காசுகளில் ‘ஸ்ரீரங்க’ என்றும் இராணி மங்கம்மாள் காசுகளில் ‘ம, ஸ்ரீமங்கம்மா, ஸ்ரீமங்கமா, மங்கமா’ என்றும் விசயரங்க சொக்கநாத நாயக்கர் காசுகளில் ‘ஸ்ரீரங்கராய’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளன.
தஞ்சை நாயக்கர்
தஞ்சை நாயக்கர் வெளியிட்ட காசுகளில் செவ்வப்ப நாயக்கரின் காசுகளில் ‘சிவாபராய், சிவபநாயக்கர், சிவபராய, ச, சி’ என்றும், அச்சுதப்ப நாயக்க காசுகளில் அச்சுபராய, ‘அச்சுதப, அச்த, அச்த’ என்றும் இரகுநாத நாயக்கர் காசுகளில் ‘ரகுநாத, ரகுணாத, ரகுணாத, ரகுநாத, ராயரகுநாதன், ராயரகுனாதன், விசையரகுனாத’ என்றும் கோவிந்த தீட்சிதர் காசில் ‘கோவிந்ததய்ய’ என்றும் விசயராகவ நாயக்கர் காசுகளில் ‘விஜயராகவ, ஸ்ரீவிசுயராகவ, ஸ்ரீராகவ’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளன.
இவ்வெழுத்துக்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், நந்தி நாகரி, நாகரி ஆகிய மொழிகளில் உள்ளன. சில காசுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழியில் மணிப்பிரவாள நடையில் பொறிக்கப்பட்டுள்ளன. கிரந்த எழுத்துகள் வரும் இடங்களில் கூட்டெழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. அரசர் பெயர்களைக் காசுகளில் சொற்சுருக்கமாகவே குறித்துள்ளனர். ஒரு வரி முதல் மூன்று வரி வரை எழுத்துப் பொறிப்புக்கள் காணப்படுகின்றன.
நாயக்கர் காசுகளில் உள்ள உருவங்களைத் தெய்வ உருவங்கள், அரசர் அரசியர் உருவங்கள், உயிரின உருவங்கள் என மூன்று வகையாகப் பகுக்கலாம். திருமால், அனுமன், கருடன், இராமன், சீதை, கூர்ம அவதாரம், இலட்சுமி, நரசிம்மர், சரசுவதி, கணபதி, கஜலட்சுமி, நர்த்தன கிருஷ்ணன், மச்சவதாரம்,சிவன், பார்வதி, முருகன், துர்க்கை, வேணு கோபாலன், உமாசகிதமூர்த்தி, வீரபத்திரர், அம்மன், வருணன், கங்காதரமூர்த்தி போன்ற இறையுருவங்கள் காணப்படுகின்றன. அரசர், அரசியர் உருவங்கள் தனித்தும் இறைவனை வழிபடுவது போலவும் காணப்படுகின்றன. சில காசுகள் தெய்வம், மனிதர் எனப் பகுத்தறிய இயலாவண்ணம் தெளிவற்றுக் காணப்படுகின்றன.
இரகுநாத நாயக்கர்
மீன், காளை, அனுமன், கருடன், மயில், பாம்பு, ஒட்டகம், கொக்கு, புருசாமிருகம், பன்றி, சிங்கம், அன்னம், பசு போன்ற உயிரினங்கள் காணப்படுகின்றன. கேடயம், கத்தி, குத்துவாள் போன்றவை சில காசுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இரகுநாத
நாயக்கர் கடல் வணிகத்தில் ஆர்வங்கொண்டு தரங்கம் பாடியில் டேனிஷ்காரர்கள் வணிகத்தின் முக்கியத்துவத்தை அறிந்து காசுகளை வெளியிட்டுள்ளார். அதில் கப்பல் உருவம் பொறித்த காசுகளையும் வெளியிட்டுள்ளார். இராஜகோபாலச் சக்கரப் பொன், இராஜகோபாலன் மாடை, இராஜகோபாலி பணம், வெள்ளிக்காசு போன்றவற்றையும் நாயக்கர் மன்னர்கள் வெளியிட்டுள்ளனர்.
நாயக்க மன்னர்களும் பொதுமக்களும் திருக்கோயில்களுக்குக் கொடையாகக் காசுகளை வழங்கியுள்ளனர். தேவிகாபுரம் பிரகதாம்பாள் கோயில் பங்குனி உத்திரத் திருநாளுக்கு அடப்பம் மல்லப்ப நாயக்கரின் அரசப் பிரதிநிதி நயினியப்ப நாயக்கர் என்பவர் செவ்வப்ப நாயக்கர் புண்ணியமாகக் காசுகளைக் கொடையாக வழங்கியதைக் காண முடிகிறது. திருக்கோட்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில் வழிபாட்டுக்கும் உணவளிப்பதற்கும் காசுகளை முதலாக வைத்த செய்தி கல்வெட்டில் கூறப் பட்டுள்ளது. பாபநாசம் நிவாசப் பெருமாள் கோயிலில் தீபம் ஏற்றுவதற்கு கோவிந்த தீட்சிதரின் ஆணைப்படி மூன்று பணம் வழங்கப்பட்டதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. நெடுங்குன்றத்தில் மார்கச்சகாய பண்டிதர் என்ற மருத்துவரை நியமித்து அவருக்கு மாதமொன்றுக்கு ஆறு பணம் வழங்கியதை இரகுநாத நாயக்கர் கல்வெட்டால் அறிய முடிகிறது.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago