இப்போது மேலும் எளிமையாக ‘பாரதி கவிதைகள்’! இளைய தலைமுறைக்கு ஏற்ற வகையில் எளிமையாக சந்தி பிரித்திருக்கிறார் பழ. அதியமான். தமிழின் முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவர்.
பாரதி பாடல்களை சந்தி பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்போது, ஏன் தோன்றியது?
என் மகளிடம் (அப்போது அவள் 5-ம் வகுப்பு) பாரதியின் ஒரு கவிதையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னேன்; அவள் திணறினாள். எனக்குத் ‘திடுக்’கென்றது. பிறகு, முதுகலை தமிழ் படித்தவர், ஊடகவியலாளர், பொறியாளர் என்று சிலரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னால் அவர்களும் திணறினார்கள். இவர்கள் அனைவரும் தமிழ்வழியில் படித்தவர்களே. இந்தத் தலைமுறையினரால் படிக்க முடியவில்லை என்பதால் ஒரு நல்ல கவிதையை விட்டு விடுவது சரியா? பாரதியை எவரும் எளிதில் படிக்கும் வகையில் கடினமான சந்திகளைப் பிரித்துப் படிக்க வசதி செய்துதர வேண்டும் என்ற எண்ணம் இப்படித்தான் தோன்றியது.
சந்தி பிரிப்பது என்பது ‘அலக் அலக்காக’ பிரிப்பதல்ல. கடின சந்தியை மட்டும் பிரிப்பது.
சந்தி பிரிக்காதது:
கன்னாணுந் திண்டோட் களவீரன் பார்த்தனொரு
வின்னா ணொலி கேட்ட மேன்மைத் திருநாடு.
சந்தி பிரித்தது:
கல்நாணும் திண்தோள் களவீரன் பார்த்தன்ஒரு
வில்நாண் ஒலி கேட்ட மேன்மைத்திருநாடு.
சந்தி பிரிப்பு மட்டுமல்ல, பாரதியின் சொற்களுக்குப் பொருள் தர வேண்டிய தேவையும் ஏற்பட்டுவிட்டது.
நின்னையே ரதிஎன்று நினைக்கிறேனடி! செல்லம்மா
தன்னையே சசிஎன்று சரணம் எய்தினேன்
இந்தப் பாடலில் ‘சசி’ என்பதற்கு என்ன பொருள்? சசி என்றால் இந்திராணி, நிலவு என்றெல்லாம் பொருள் உண்டு. இந்தப் பொருளெல்லாம் புலப்பட்டால் கவிதை மேலும் பளிச்சென்று நம் முன்னால் பிரகாசிக்குமல்லவா! இப்படி எண்ணற்ற சொற்களுக்குப் பொருள் தந்திருக்கிறேன்.
எத்தனை ஆண்டு உழைப்பு இது? என்ன மாதிரி சிரமங்கள், சிக்கல்களை எதிர்கொண்டீர்கள்?
10 ஆண்டுகள் உழைப்பு இது. அலுவலக நேரம் போக கிடைக்கும் நேரங்களிலெல்லாம் இதற்காக உழைத்திருக் கிறேன். சிக்கல்கள் என்று பார்த்தால் பாடபேதங்கள்தான் முதல் சிக்கல். அடுத்தது, அருஞ்சொற்பொருள் தருவதில் ஏற்பட்ட சிக்கல். ‘கதலி’ என்றொரு சொல் பாஞ்சாலி சபதத்தில் இடம்பெற்றுள்ளது. வாழைப்பழம், காற்றாடி போன்ற பொருள்கள் அங்கே பொருந்திவரவில்லை. பல அகராதிகள், நிகண்டுகள், அறிஞர்கள் பலர் என்று தேடி அலைந்தும் பலன் இல்லை. பாரதியே ‘கதலி’ என்பது ஒருவகை மான் என்று பொருள் குறித்துவைத்திருப்பது அறிந்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனினும், ‘சங்கரனைத் தாங்கும் நந்தி பத சதுரம்’ என்ற தொடரின் பொருள் திருப்திகரமாக இன்னும் கிடைக்க வில்லை. இப்படி எஞ்சியிருக்கும் ஐயங்களின் பட்டியல் இரண்டு பக்க அளவில் உள்ளது.
சந்தி பிரிக்கும்போது ஓசைநயம் பலியாகிவிடுமல்லவா? ஓசைநயம் குறைபட்ட பாரதி இன்றைய தலைமுறையைக் கவராமல் போய்விடும் அபாயம் இருக்கிறதல்லவா?
பாரதியின் கவித்துவத்தில் சொல்லின்பம் ஒரு முக்கியமான பகுதி. எனினும், ஊடாடும் உணர்ச்சியும் பொருளும்தான் மிகவும் முக்கியம். ‘அமுதூற்றினையொத்த இதழ்களும் நிலவூறித் ததும்பும் விழிகளும்’ என்பதில் கிடைக்கும் சுகானுபவம் ‘அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் நிலவு ஊறித் ததும்பும் விழிகளும்’ என்று சந்தி பிரிக்கும்போது சற்று குறைகிறதுதான். ஆனால், ஒருமுறைக்கு இருமுறை அதைப் படித்துப் புரிந்து சேர்த்து வாசித்து, பொருள் மனத்துக்குப் போகும்போது இயல்பாகவே சந்தி சேர்ந்து ஓசை இன்பம் கிடைத்துவிடும்.
இந்தப் பணியைத் தொடங்கிய பிறகு பாரதியில் நீங்கள் கண்டடைந்த ஆச்சர்யங்கள் பற்றி சொல்லுங்கள்.
ஆச்சரியமூட்டும் சொற்பிரயோகம், உணர்ச்சிக் குமுறல் போன்றவற்றைத் தாண்டி வேறு பலவும் பாரதியிடம் ஆராயவும் அனுபவிக்கவும் உள்ளன. அர்ஜுனன் பாரதிக்குப் பிடித்த மகாபுருஷனாகக் காட்சியளிப்பது ஏன் எனத் தெரியவில்லை. எடுத்ததற்கெல்லாம் பார்த்தனே (அர்ஜுனன்) பாரதி முன் வந்து நிற்கிறான். கடந்த பிறவிகளைப் பேசும் ஒரு கற்பனையில் தான், அர்ஜுனனின் மனைவி என்கிறான் பாரதி. இப்படி பார்த்தன் வரும் இடங்கள் ஏராளம். இதுபோல், என்னளவில் புதிய விஷயங்கள் பல கிடைத்துள்ளன.
பாரதியை வருங்காலத் தலைமுறையிடம் கொண்டுசேர்க்க வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
காலத்துக்கேற்ப பாரதியைக் கொண்டுசேர்க்க சந்தி பிரித்த இந்தப் பதிப்பும், சமீபத்தில் வெளிவந்த உரைப் பதிப்பும் தொடக்கப் புள்ளிகள். பாரதிக்குச் சொல்லடைவு தயாரித்துத் தரலாம். பாரதி கவிதைகளில் இடம்பெறும் வரலாற்று, இதிகாச மாந்தர்கள், சம்பவங்களைத் தொகுத்து மேலும் விவரம் சேர்த்துக் களஞ்சியம் தயாரித்துத் தரலாம. காலத்துக்கேற்ப, பாரதியைப் பொருளோடு கணினியிலும் இணையத்திலும் ஏற்றி வைக்கலாம். இன்னும் யோசித்தால் வேறு பலவும் சொல்ல முடியும்.
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
பாரதி கவிதைகள்
பதிப்பாசிரியர்: பழ. அதியமான்,
விலை: ரூ.750,
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை, நாகர்கோவில்-629001, தொலைபேசி: 04652-278525
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago