குவளைக் கண்ணனின் புதுவெளி

By ஆனந்த்

குவளைக் கண்ணன் என்ற பெயரில் கவிதை எழுதிய ரவிக்குமார் காலமாகிவிட்டார். கவிதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அவருடைய மரணம் யாரும் எதிர்பார்க்காதது. மிகவும் குறுகிய காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்னால் அவருடைய வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

கவிதை பற்றி ஆழமாகச் சிந்தித்தவர். உரையாடியவர். எழுதியவர். அவர் எழுதியுள்ள கவிதைகள் மாயா பஜார், பிள்ளை விளையாட்டு, கண்ணுக்குத் தெரியாததன் காதலன் ஆகிய மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஆழ்மன இருளுக்குள் அஞ்சாமல் புகுந்து புறப்படும் கவிதைகள் இவருடையவை. இருள் கடந்த புதுவெளியின் தரிசனங்களும் உண்டு இவரிடத்தில்.

முதல் மலர்/மலர்ந்து கொண்டிருக்கிறது/வீடுகள்/வயல் வெளிகள், சாலைகள்/அலுவலகங்கள்,அங்காடிகள்/நதியும் மலையும்/கடலும் வனமும்/அண்டசராசரமும்/அம்மலரின் மொட்டுக்குள்தான் இருந்தது/அந்த மலர் எங்கே..?

அக முரண்களும் அதே சமயம் சிறு குழந்தையின் ஆச்சரிய மும் இவரது கவிதைகளில் வெளிப்படுவதைக் காண முடியும். செறிவும் எளிமையும் ஒருங்கே கைவரப் பெற்றவர் அவர்.

ஏற்கனவே உலகில் உள்ளவைகளுக்கு/என்னிடம் பெயர்களைக் கற்கிறது குழந்தை/ஏற்கனவே உலகில் உள்ள ஏற்கனவேயை/அழிக்கக் கற்கிறேன் குழந்தையிடம்

அவரது ஆழ்மன சஞ்சாரங்களைப் பார்ப்போம். என்ன இருக்கிறது நம் ஆழங்களுக்குள்? மேலோட்டமாக நமக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் சிந்தனையோட்டம், உணர்ச்சிக் கொந்தளிப்புகள், உணர்வு நெரிசல்கள், இவற்றுக்கடியில் நம் இருளாழங்களுக்குள் என்ன இருக்கிறது? பூதங்களா, கடவுளரா? என்ன நடக்கிறது அங்கே? அச்சமும் ஆசையும் வெறுப்பும் வன்முறையும் பதுங்கியிருக்கும் ஆசாபாசங்களின் இருட்குகை அங்கே உள்ளதாக மனோவியலாளர்கள் சிலர் சொல்லிப் போயிருக்கிறார்கள். உள்ளே கடந்து சென்றால் உண்மை அறியலாம் என்கிறார்கள் ஞானிகள். புறத்தே உள்ள உலகம் போன்றே அகத்தேயும் எல்லையற்று உலகம் விரிவதாகச் சொல்கிறார்கள் தரிசிகள்.

உள்ளே வெறும் எண்ணங்களும் உணர்ச்சிகளும் நினைவுகளும் மட்டும்தான் ஓடிக் கொண்டிருக்கின்றனவா? அல்லது புறவுலகத்தைப் போலவே அகத்திலும் நிகழ்வுகள், எதிர்வினை, எதிர்கொள்ளல், சந்திப்பு, ஈடுகட்டல், ஒளிந்துகொள்ளல், ஓடிப்போதல், மீண்டு வருதல், சமரசம், தீர்வு எல்லாம் உண்டா?

குவளைக் கண்ணனின் கவிதைகளைப் படிக்கும்போது அங்கும் இவையெல்லாம் நடக்கின்றன என்பதுபோல்தான் தெரிகிறது. சொல்லப் போனால் இங்கே நடப்பதைவிட அங்கே நடப்பது இன்னும் பெருமளவுக்குச் சுவாரஸியமாக இருப்பதுபோல் தோன்றுகிறது.

இவரது கவிதைகள் ஆழ்மனத்தின் அதிசயங்களைப் படம் பிடித்துக் காட்டுபவையாக இருக்கின்றன. கணத்துக்குக் கணம் மாறும் மனவுலகின் மாயாஜாலங்கள் இவரது கவிதைப் பொருளாக அமைகின்றன.

நாள் ஒன்று போக்கிரித்தனமாகப் பிடுங்கிப் போனது/என் மிதவையை (நானுக்குள் கடல்)

என்கிறது ஒரு கவிதை வரி. படிக்கும்போது மனம் அதிர்கிறது. நாள் ஒன்றுதானே ஒவ்வொன்றையும் கொண்டுவந்து தந்தது? நாளொன்றுதானே ஒவ்வொன்றையும் பிடுங்கிக் கொண்டு போனது?

. . .

மேலே கரித்து/ஆழத்தில் தித்திக்கும் இருசுவைக் கடல்/பூரித்துப் பொங்கியெழும்/பொங்குமாங்கடல்/கடல்மீது நான்/கடலுக்குள் நான்/நானுக்குள் கடல்

மீன், கடல் மற்றும் பிற நீர்நிலைகள், அலை, குகை என்று இவரது கவிதைகள் முழுவதும் ஆழ்தளப் பிம்பங்களின் நாட்டியமாக இருக்கின்றன. பிரக்ஞை உள்ளவை, பிரக்ஞை அற்றவை என்ற பாகுபாடு இல்லை இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் பிரக்ஞை இருக்கிறது. எல்லாம் பேசுகின்றன. அனுபவம் கொள்கின்றன. எதிர்வினை புரிகின்றன.

இவரது கவிதைகளில் ’பெண்’ ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறாள். சரியா, சரியா, என்று கேட்கும் சிறு பெண்ணாக இருக்கிறாள். இழுத்துச் செருகிய சேலையுடன் இடுப்பில் கைவைத்துப் பேசும் பேரிளம் பெண்ணாக இருக்கிறாள். மூக்கில்லாதவளாக, காதற்றவளாக, முகமே அற்றவளாக இருக்கிறாள். மீனாக இருந்தவள் கவிஞனை வட்டமிட்டு வட்டமிட்டுக் கட்டித் தழுவியதும் உப்புக்கடல் தித்திக்கத் தொடங்குகிறது. கடைசிப் பெண் நகரத்திலிருந்து வெளியேறியதும் புற்கள் காய்ந்து போகின்றன; மலர்கள் உதிர்கின்றன; காற்றில் சூடேறி ஆண்களின் கண்களில் சிவப்பேற நகரத்துக்குப் பித்துப் பிடித்துப் போகிறது. பெண்மையின் சாந்நித்தியத்தைத் தன் கவிதைகளில் அதன் உச்சகட்டத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் குவளைக் கண்ணன்.

ஆனந்த், கவிஞர், மனநல ஆலோசகர்,தொடர்புக்கு: anandh51ad@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

மேலும்