மனுசங்க.. 1: முளைக்கும் செடிகளில் எதுவும் களையில்லை...

By கி.ராஜநாராயணன்

என்னோடு பழகியவர்களைப் பற்றியெல்லாம் எழுத முடியுமா என்று தெரியவில்லை. என்றாலும் முடிந்த மட்டும் பார்க்கலாம்.

என்னைப் போன்ற உதவாக்கரைகள் கிராமங்களில் அபூர்வம்தான்.

‘முளைக்கும் செடிகளில் எதுவும் களையில்லை…’ என்று சமீபத்தில்தான் படித்தேன்.

இதேபோல்தான் மனுசப் பிறப்புக்களிலும் என்றாலும், விதிவிலக்கு எதிலும் இருக்கும் போலிருக்கு.

பூமிக்குப் பாரமாகப் பிறந்துவிட் டோமே என்று, ஒரு நேரம் நினைத்துக் கொண்டதில்லை என்னைப் பற்றி.

பேராசிரியர் பஞ்சு ஒருநாள் சமீபத்தில்தான் கேட்டார் என்னிடம்:

‘‘தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று எப்பவாவது தோன்றியது உண்டா?’’

சிரிப்புதான் வந்தது.

என்னை பேட்டி கண்டபோது, அவர் கேட்ட கேள்விகளில் இதுவும் ஒன்று.

முற்றிய தொழுநோய் வந்து, விரல் கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண் டிருக்கும் நிலையில்கூட, ஒருவன் தற்கொலை செய்துகொள்ளாமல் இருக்கிறான். ஏன்?

‘ஒரு அற்புதம் தோன்றும்; இந் நோய் குணமாகிவிடும்’ என்ற நம்பிக்கையில்தான்!

‘‘சீன் நாயக்கர்’ என்றுதான் அவ ரைக் கூப்பிடுவேன். என்னைவிட அவர் மூப்புதான். அய்ந்தாறு வயசுகூட அதிகம் இருக்கலாம். அவர் என்னை ‘‘யோவ்…’’ என்றுதான் அழைப்பார்.

பொதுவாக கிராமங்களில் இப்ப டிக் கூப்பிடுகிறது இல்லை; முறை சொல்லித்தான் கூப்பிடுகிறது; மாமா மச்சான்; அண்ணன் தம்பி என்று.

ஓரனேர் சம்சாரி அவர். ஜோடி மாடுகள், அதுக்கான கோப்புசம் எல்லாம் இருந்தது. வீட்டில் அவரும், அவரது உடன் பிறந்த அக்காள் மகள் நாச்சியாவும் இருந்தார்கள். நாச்சியாள் பிறந்ததில் இருந்து அந்த வீட்டின் சகல வேலை, பொறுப்பு, சமையல் முதக் கொண்டு யாவும் அவள்தான். அவரை வாய் நிறைய ‘மாமா… மாமா’ என்று கொண்டாடுவாள். அவள் பிறந்தவுடனே வீட்டார், இவள் சீன் நாயக்கருக்குத்தான் என்று தீர் மானித்திருந்தார்கள்.

அம்மா, அப்பா காலமானார்கள். உடன் பிறந்த பெண்களையெல்லாம் கட்டிக் கொடுத்தாயிற்று. ஒரே அண் ணன் பக்கத்து ஊரில் கல்யாணம் செய்துகொண்டு, அங் கேயே போய் நிரந்தரமாகிவிட்டார். இப்போது வீட்டில் இவர்கள் இருவர் மட்டும்தான்.

அந்த வீட்டுக்கு வரும் அவரது சொந்தங்கள், ‘‘என்னப்பா, வயசு காணாதா. அந்தப் பிள்ளை கழுத்தில் ஒரு மூணு முடிச்சு போட்டு கொண்டனைச்கொ..’’ என்பார்கள்.

நாயக்கர் மவுனமாகிவிடுவார். பதிலே பேச மாட்டார். ரொம்ப நெருக்கமானவர்கள் வற்புறுத்திக் கேட்டால் மட்டும், ‘‘அவளை வெளியே எங்கேயாவதுதான் கட்டிக் கொடுக்க வேணும். உடன் பிறந்தாபோல கூடவே இருந்துவிட்டு, வேற மாதிரி பார்க்க முடியலை…’’ என்பார்.

நாச்சியாள் தனிமையில் போய் அழுது கண்ணீர் வடிப்பாள்.

வயசு ஏறிக் கொண்டே போயிற்று இருவருக்கும். என்ன செய்வதென்று தெரியவில்லை.

கரிசல் விவசாயத்தில் கொஞ்சங் கொஞ்சமாக இருள் கவிய ஆரம்பித்தது. வானம் சுருங்கிக் கொண்டே வந்தது.

ரங்கூனில் இருந்து கப்பல்களில் வந்திறங்கிய அரிசி வரத்து நின்று போனது. வங்காளத்தில் பஞ்சம் வந்து ரெண்டு லட்சம் மக்கள் செத்துப் போனார்கள் என்று சொன்னார்கள்.

இரண்டாவது உலகப் போர் பற்றி ஒரு தொடர்கதையைப் போல பத்திரிகைகள் சுவாரஸ்யமாக செய்திகள் கொடுத்துக் கொண்டி ருந்தன. படிக்கத் தெரிந்த இள வட்டப் பிள்ளைகள் வாசித்துச் சொல்ல, வயசாளிகள் கேட்டுத் தெரிந்துகொண்டே இருந்தார்கள்.

வெள்ளைக்காரன் பேரில் இருந்த கோபத்தால் ஜெர்மன்காரனான இட்லர் மேல் மக்களுக்கு ஒரு அபிமானம் உண்டானது.

‘கப்சிப் தர்பார்’, ‘பாசிஸ்ட் ஜடாமுனி’ என்று இட்லர் பற்றியும், முசோலினி பற்றியும் புத்தகங்கள் வந்தன.

விடிஞ்சதும் பத்திரிகைகள் எப்ப வரும் என்று எதிர்பார்க்க ஆரம்பித் தார்கள். அப்போது ரேடியோ எல்லாம் வரவில்லை கிராமங்களுக்கு.

தினப் பத்திரிகை படிப்பது என்று ஆரம்பித்துவிட்டால் ஒரு போதை வஸ்துபோல பற்றிக் கொள்ளும். சீன் நாயக்கருக்கு இந்த நோய் பலமாகவே பற்றிக்கொண்டது. எப்படா விடியும் என்று காத்திருந்து, ஒரு கூறு பருத்தியை எடுத்துக் கொண்டு கடைத் தெருவுக்கு வந்து விடுவார் பீடி வாங்க.

பீடியைச் சுண்டுவதும், பத்திரிகை படிப்பதும் அவருக்கு ஏற்பட்டுப் போனது, கடைசி வரையிலும் அதுவே கதி என்றும் ஆகிவிட்டது.

சம்சாரித்தனம் (விவசாயம்) நின்று போனதால், எதுவும் செய்யாத மனிதர் ஆனார். அதுவே சுகம் என்று ஆகிவிட்டது.

அவருடைய சொந்தக்காரர்கள், ‘இனி, இவர் ஒப்பேற மாட்டார்… ’ என்று தீர்மானித்து நாச்சியாளுக்குக் கல்யாண ஏற்பாடு செய்தார்கள்.

- வருவாங்க...

ஓவியங்கள்: மனோகர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்