கவிஞன் கவிதை: செளந்தர்யம் மிளிரும் சொற்கள்

By மண்குதிரை

தமிழ்ச் சங்கக் கவிதைகள் விஷேசமானவை; தமிழர் வாழ்வை அகமாகவும், புறமாகவும் வகைப் படுத்துபவை. ஆனால் இந்தச் சங்கக் கவிதைகளில் ‘தனி மன’ வெளிப்பாடு குறைவு என்று தோன்றுகிறது. அதாவது ‘நான், எனக்கு’ எனத் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும் கவிப் பொருள் பிரதான அம்சமாகப் பெருமளவில் வெளிப்பட்டிருக்க வாய்ப்பில்லை. வெளிப்பட்டிருந்த இடங்களிலும்கூட காதலன், தோழி, தந்தை, தாய், செவிலி போன்ற இரண்டாம் நபர்கள் வந்துவிடுகிறார்கள். அவர்கள் வழியாகப் பிரிவின் துயரம், அன்பு, காமம், இயலாமை ஆகிய தன்மை உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. மேலும் இந்த விவரிப்பின் மூலம் மனித உறவு, நிலக் காட்சிகள் எனப் பரந்துபட்ட ஒரு வாழ்க்கை முறையும் பதிவாகிறது.

ஆனால் இதற்கு நேரெதிராகத் தமிழ்ப் புதுக் கவிதைகளின் ‘தனி மனம்’ என்ற உணர்வு நிலையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தன. ஏனெனில் இருபதாம் நூற்றாண்டில்தான் தனி மனம் என்ற உணர்வு நிலை தீவிரமாக உருவாகிறது. அதை இருபதாம் நூற்றாண்டில் பிறந்த புதுக்கவிதைகளும் பிரதிபலித்தன.

…இன்றைக்குத் தனி மன வெளிப்பாடு விமர்சனத்திற்குரிய அம்சமாகிவிட்டது. அதனால், இந்தத் ‘தன்மைப் பண்புகள்’ பலவீனமான அம்சமா என்று ஒரு கேள்வி இப்போது எழுகிறது. இதைக் காலகட்டம் சார்ந்ததுதான் பார்க்க வேண்டும். மேலும், தனக்கு என்பதில்தான் இலக்கிய சிருஷ்டி இருக்கிறது என்கிறார் க.நா.சுப்ரமண்யம். அதாவது கவிதைகளில் ஆளுமை வெளிப்படும் பண்பை அவர் வரவேற்கிறார். இந்தப் பின்னணியில் இருந்து சுகுமாரனின் கவிதைகளைப் அணுகலாம்.

...1970களின் இறுதியில் எழுதத் தொடங்கிய சுகுமாரனின் கவிதைகள் பல்வேறுவிதமான உணர்ச்சி களின் வழியாகத் தனி மனத்தின் ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்துகின்றன. கவிதைகள் வழியாக உருவாகும் ஆளுமைக்கும், புற உலகுக்கு மான முரண்பாடுகள் அவரது கவித்துவத்தின் ஆதாரமான ஓர் அம்சம். இந்தப் புற உலகை எதிர் கொள்வதற்காக அவர் ‘பொய் முகம்’ தயாரிக்கிறார்; ‘பிழைப்பின் சூத்திரத்தைக்’ கற்றுக்கொள்ள முயல்கிறார். ஆனாலும் இவை எல்லாமும் பொருந்தாமல் ‘பூட்டப்பட்ட பெட்டிக்குள்’ சென்று சேர்ந்துவிடுகின்றன. இந்த முரண்பாடுகள் தன் மீதான இரக்கமாக, தன் மீதான வெறுப்பாகக் கவிதையில் தொழிற்படுகிறது; மனிதர்கள் மீதும், வாழ்க்கை மீதும் நம்பிக்கையையும், அவநம்பிக்கை யையும் மாறி, மாறி ஏற்படுத்துகிறது.

வலிகொண்ட வசீகரன்

சுகுமாரனின் கவிதைகளில் குமிழ்விடும் இன்னொரு அம்சம் பாதுகாப்பின்மை. ரயில்வே பிளாட்பாரத்தில் கைவிடப்பட்ட நிலையில் சுவர் களைப் பாதுகாப்பாக உணர்கிறது ஒரு கவிதை. இன்னொரு கவிதை, நாற்புறமும் சுவர்கள் சூழ நிற்கும்போது, பாதுகாப்பின்மையால் உதவி வேண்டி ஜன்னலை நோக்கிக் கைகளை உயர்த்து கிறது.

சுகுமாரனின் கவிதைகளில் பேசப்படும் காமம், வலிமிகுந்த வசீகரம் கொண்டது. காமத்தைப் பிரயாசையுடன் பலவிதமாக அடையாளப்படுத்த முயல்கின்றன சுகுமாரனின் கவிதைகள். ஒரு கவிதையில் காமம், பறத்தலாக வருகிறது; இன்னொன்று கடல் அலை என்கிறது; உயிரின் ஆகாயம் என ஒரு கவிதை விவரிக்கிறது. அதற் காகக் காமத்தை இந்தக் கவிதைகள் பரிசுத்த மாக, வேதாந்த ரகசியமாக மாற்றவில்லை. இந்தக் கவிதைகளில் வெளிப்படும் காமத்திற்கும் குற்றவுணர்வு உண்டு, சலிப்பு உண்டு, கள்ளத்தனம் உண்டு, ஏமாற்றம் உண்டு. காமம் என்றால் என்ன? உடலுக்கும் மனத்திற்கும் அதில் பங்கு என்ன? போன்ற கேள்விகளும் உண்டு.

‘உடல் வசப்படுத்தியவளின் மனம்/காணாச் சுனை/மனம் வசப்படுத்தியவளின் உடல்/ உருகாத பனிப்பாறை/மனதின் உடலைப் புணரவும்/ உடம்பின் மனதைப் பயிலவும்/தவியாய்த் தவித் திருக்கிறேன்/ ...வண்ணத்துப்பூச்சியெனில்/உடல் மட்டுமல்ல/சிறகு மட்டுமல்ல/காற்றும்’ என்கிறது ஒரு கவிதை.

கவிதை தொழில்நுட்பம்

சுகுமாரன் வடிவ நேர்த்தியில் பிரயத்தனம் கொண்டவர். மொழியிலும் செளந்தர்யத்தை மிளிரச் செய்பவர். கவிதையின் வடிவத்தை ராக ஆலாபனையாக எழுப்புபவர். வார்த்தைகளை அடர்த்தியாக ஒரே இடத்தில் கூட்டி வைப்பதை அவர் அழகியல் மனம் விரும்புவதில்லை. வாசகன் நினைவில் பதியும்படியான கோவையாகக் கவிதை களை ஆக்குகிறார். இது அவர் தொழில்நுட்பம்.

சுகுமாரன் கவிதைகளில் இருந்து ஒரு வரியை உருவி எடுத்தாலும் அவை ஸ்படிகம் போல் பளிச்சிடும். அவரது கவிதைகள் உருவாக்கும் உவமை, உருவங்கள் இந்தப் பளபளப்பை வரிகளுக்கு அளிக்கின்றன. இது சங்க மரபின் தொடர்ச்சி. நவீனத்துவத்தின் ஆரம்பமாகவும் பார்க்கலாம். பிரம்மாண்டமான வானையும், மறையும் சூரியனையும், ஆற்று நீரையும் அவர் உவமைப் பொருளாகக் கொள்கிறார். நமது மந்திரக் கதைகளில் இருந்து அரக்கனின் உயிர் உறங்கும் கிளியையும் அவர் எடுத்துக்கொண்டு அதற்கு தனது உயிரை வழங்குகிறார்.

‘ஒரு பிரம்மாண்டமான சிலந்தி போல/கான்கிரீட் காடுகளுக்கு மேல் அசைகிறது சூரியன்’ என்பதில் அவநம்பிக்கையையும் ‘எளிமையானது உன் அன்பு/ நடு ஆற்றில் அள்ளிய தண்ணீர் போல’ என்பதில் நினைவில் இருக்கும் நம்பிக்கையூட்டும் அன்பையும் உருவப்படுத்துகிறார்.

‘அள்ளி/கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்/நதிக்கு அந்நியமாச்சு/இது நிச்சலனம்/ஆகாயம் அலைபுரளும் அதில்/கை நீரைக் கவிழ்த்தேன்/போகும் நதியில் எது என் நீர்?’ இந்தக் கவிதை மூலம் ஓர் உடலை உருவாக்குகிறார் சுகுமாரன். அதற்கான மனத்தை கவிதையைப் படிக்கும் வாசகன் தன் அனுபவங்களின் வழியாக உருவாக்கிக்கொள்ள வேண்டும். அந்த மனத்திற்கான அரசியல், தத்துவம், காதல், பிரிவு, துயரம், சந்தோஷம் என எல்லாவற்றையும் உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால் கவிதை ஒன்றுதான். இது சுகுமாரனின் கூர்மையான படிமச் சித்திரிப்பு.

கவிதை பிறக்கும் கணத்திற்கும் கவிதை ஆக்கலுக்கும் இடையே சுகுமாரன் எடுத்துக் கொள்ளும் கால இடைவெளி நீண்டதாக இருக்கும் என ஊகிக்க முடிகிறது. இந்தக் கால இடைவெளி கவிதைகளுக்குச் செயற்கைத்தன்மையை அளித்து விட முடியும். ஆனால் சுகுமாரன் கவிதைகளில் அது விநோதமானதாக வெளிப்படுகிறது.

அவர் கவிதைகளில் குஞ்ஞுண்ணி மாஸ்டர், சச்சிதானந்தன், ஆக்டோவியா பாஸ், ஆல்பர் காம்யூ, சில்வியா ப்ளாத் என்று பலரின் மேற்கோள்களைப் பார்க்க முடிகிறது. இந்த ஆளுமைகள் கவி மனத்தில் உண்டாக்கும் பாதிப்புகளைக் கவிதைகளில் உணர முடிகிறது. இந்தப் பாதிப்புகள் கவிதைகளுக்கு ஒரு ரகசியத்தன்மையை கொடுக்கின்றன. அது சமயங்களில் உள்ளுக்குள் ஈர்க்கின்றன; சமயங் களில் அந்நியமாகி விலக்குகின்றன.

கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் பயணப் பட்டுள்ள சுகுமாரன் கவிதைகள் பல மாற்றங்களைச் சந்தித்திருக்கின்றன. ஆரம்பகாலக் கவிதையில் வெளிப்பட்ட அளவுக்கான ஆளுமைப் பண்பு பிற் காலக் கவிதைகளில் இல்லை. சமூக அரசியலையும் நவீன மாற்றங்களையும் பதிவு செய்திருக்கின்றன. அவரது கவிதைகள், வடிவத்தின் தனித்தன்மையை முழுமையாக விட்டுவிடவில்லை. ஆனால் கால மாற்றத்தை உள்வாங்கிக்கொண்டு வடிவ ரீதியாக முயற்சிகளை எதிர்கொண்டுள்ளன. சொற் களின் செளந்தர்யமும் சில கவிதைகளில் குறைந்து வெளிப்பட்டுள்ளன. அதை கவிதையே தீர்மானித் திருக்கலாம்.

தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

5 hours ago

இலக்கியம்

5 hours ago

இலக்கியம்

5 hours ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

மேலும்