ஸ்ரீரங்கத்துத் தேவதைகளின் நாயகன்

By சந்திரசேகர்

சுஜாதா இறந்த பின் சென்னையில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் இலக்கியவாதிகள் பலரும் திரைத்துறைப் பிரபலங்களும் கலந்துகொண்டனர். சுஜாதாவின் எழுத்தைப் பற்றி கு. ஞானசம்பந்தன் போன்றோர் பேசியபோது அரங்கத்தில் கைத்தட்டலும் விசிலும் பறந்தன. அதன் பின்னர் வைரமுத்து பேசியபோது சொன்னார்: “அஞ்சலி நிகழ்ச்சியில் கைதட்டக் கூடாது என்பது மரபு. விசில் அடிக்கக் கூடாது என்பது மரபு. பல மரபுகளை உடைத்த எழுத்தாளனின் அஞ்சலி நிகழ்ச்சியில், அவற்றைச் செய்வதைவிட வேறு பெரிய அஞ்சலி என்னவாக இருக்க முடியும்?” மரபின் ஆழத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு, பின் அதனை உடைத்தவர்தான் சுஜாதா.

அவரது கதைமாந்தர்கள் பல தரப்பட்டவர்கள். பெரும்பாலும் சாதாரண நடுத்தர வர்க்கத்தினர்; சுஜாதாவின் பார்வையில் அவர்கள் ‘ஏறக்குறைய நல்லவர்கள்; பெரும்பாலும் கோழைகள். பணக்கார சௌகரியங்களுக்குத் தொட்டும் தொடாத இடத்தில் இருப்பவர்கள். பக்தி, காதல், பரிவு, பாசம், தியாகம், நேர்மை போன்ற குணங்களைத் தேவைக்கும் அவசரத்துக்கும் ஏற்பச் சற்று மாற்றிக்கொள்பவர்கள். சமூகம் வாசல் கதவைத் தட்டுவதைக் கேட்காதவர்கள்’. ஸ்ரீரங்கத்து தேவதைகளில் வருபவர்கள் ஏழைப் பிராமணர்களும், இவரது இள வயது சிநேகிதர்களும், பாட்டிகளும் மாமாக்களும். அதிபுத்திசாலிகளும், நான் இந்த உலகத்தைச் சார்ந்தவனே அல்ல என்ற இறுமாப்புள்ள மேதாவிகளும், சாதாரண நடுத்தர வர்க்கத்தை ஒரு அற்பத்தனத்தோடு பார்ப்பவர்களும் இவரது கதைகளில் உலாவுவதுண்டு. இவரது கதை உலகத்தில் ஆண்களிடம் எளிதில் ஏமாறும் வெகுளிப் பெண்களும் உண்டு; புத்திசாலி ஆணவப் பெண்களும் உண்டு.

அவரது நகைச்சுவையின் அம்சங்கள் என்ன என்று அவரது பாணியில் ‘குடலாப்பரேஷன்’ செய்து பார்த்தால் சாதாரண விஷயத்தைச் சற்றே மிகையாகச் சொல்வதும், தன்னைத் தானே கேலி செய்துகொள்வதும், புத்திசாலித்தனமான வார்த்தைகளும் என்று கூறலாம். (“டிவியிலிருந்து பேட்டிக்கு அழைத்தார்கள். டிவி என்றால் பொம்மை தெரியுமே என்ற அல்ப ஆசையுடன் சரி என்றேன்” – சுஜாதா)

ஒரு சில சொற்றொடர்களை அவர் அடிக்கடி பயன்படுத்துவார். ‘பசித்த புலி தின்னட்டும்’, ‘ஜல்லி அடிப்பது’, ‘பகலில் பசு மாடு தெரியாது’, ‘கால் இஞ்ச் கருணை’, ‘கடிகார மூளை’, ‘கெட்ட காரியம்’ போன்றவை உடனே நினைவுக்கு வருகின்றன. ‘அவள் புன்னகை மட்டும் அணிந்திருந்தாள்’ என்று எழுதும்போது அதில் புத்திசாலித்தனமும் குறும்புத்தனமும் ஒருசேர மிளிரும். அதுதான் சுஜாதா.

ஒரே மாதிரியான எழுத்து என்ற வலையிலிருந்து தப்பித்தவர் சுஜாதா. துப்பறியும் கதைகள், அறிவியல் கதைகள், வரலாற்றுக் கதைகள், சமூகக் கதைகள், குழப்பக் கதைகள் (!) என்று எதையும் அவர் விட்டுவைக்கவில்லை. புனைகதைகளைத் தவிர்த்து பல நல்ல கவிதைகளையும் கவிஞர்களையும் வாசகர் வட்டத்திற்கு அறிமுகப்படுத்தியவர். ஹைக்கூக்களைப் பிரபலப்படுத்திய வர்களில் முக்கியமானவர்.

தனது எழுத்து தீவிர இலக்கியமாக மதிக்கப்படவில்லை என்கிற வருத்தமும் கோபமும் அவருக்கு இருந்தது. அவரிடம், தங்கள் எழுத்து இலக்கியமா என்று ஒரு பேட்டியில் கேட்டபோது ‘சிலது இலக்கியம். சிலது இலக்கியமல்ல’ என்று கூறினார்.

கணேஷ்-வசந்த் கதைகளையும் பல பொழுதுபோக்குக் கதைகளையும் எழுதிய அதே சுஜாதாதான் ‘தனிமை கொண்டு’, ‘காணிக்கை’, ‘வீடு’, ‘நகரம்’, ‘ஒரு லட்சம் புத்தகங்கள்’ போன்ற மிகச் சிறந்த சிறுகதைகளையும் எழுதினார். ‘கனவுத் தொழிற்சாலை’, ‘எப்போதும் பெண்’ போன்ற நாவல்களையும் எழுதினார். தனித்து வைத்துத் தராசிலிட்டால் இந்த ஆக்கங்கள் இலக்கிய மதிப்பில் தாழ்ந்தவை அல்ல என்பது விளங்கும். நிறைய எழுதியதால் பல நல்ல கதைகள் கவனிக்கப்படாமல் போய்விட்ட அபாயமும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். ‘ஹாஸ்டல் தினங்கள்’, ‘மண் மகன்’ போன்றவை உதாரணங்கள். பெரும்பாலும் தொடர்கதைகள் எழுதியதால் அவற்றின் பத்திரிகை சார்ந்த கட்டாயங்களும் அவரது வீச்சைச் சற்றே தொய்வடையச் செய்துவிட்டன. இருந்தாலும் பல சிறுகதைகளில் இவரது இலக்கியத் தரம் மின்னும்.

‘பார்வை’ என்ற சிறுகதையில் கண் தெரியாத இளைஞரும் சுஜாதாவும் பேசுவதுபோல் ஒரு காட்சி வரும். அந்த இளைஞர் சுஜாதாவிடம் கூறுவார்: “உங்கள் கதைகளைப் படித்திருக்கிறேன். ஒரு சிலது சிறந்த கதைகள். சிலது குப்பை. யு ஆர் கேபபிள் ஆஃப் சம் குட் ரைட்டிங்” என்று.

ஒருவேளை இதுதான் சுஜாதாவைப் பற்றி சுஜாதாவின் நேர்மையான விமர்சனமோ?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்