மொழி ஒரு பண்பாட்டின் அடையாளம்: சா.தேவதாஸ் நேர்காணல்

By மு.முருகேஷ்

சா. தேவதாஸ், தமிழின் குறிப்பிடத் தகுந்த விமர்சகர்களில் ஒருவர். மொழிபெயர்ப்பாளர். கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளராக இருந்து ஓய்வு பெற்று ராஜபாளையத்தில் வசித்துவருகிறார். இதுவரை ஆறு கட்டுரை நூல்களையும், 25 மொழி பெயர்ப்புகளையும் தமிழுக்குத் தந்துள்ளார். இடலோ கால்வினோ, பாப்லோ நெருடா, ஹென்றி ஜேம்ஸ் போன்றவர்களின் முக்கியப் படைப்பு களை மொழிபெயர்த்துள்ளார். இவர் மொழிபெயர்த்த ‘லடாக்கிலிருந்து கவிழும் நிழல்’ எனும் நூலுக்காக, 2014-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது.

தமிழில் உங்களை ஈர்த்த மொழி பெயர்ப்பாளர்களைப் பற்றிச் சொல்லுங்கள்.?

க.நா. சுப்ரமண்யம், த.நா.குமாரசாமி, ஆர்.சண்முக சுந்தரம் ஆகியோரின் மொழிபெயர்ப்புகள் என்னை மிகவும் ஈர்த்தவை. அவர்களுடைய மொழிபெயர்ப்புகளை வாசித்ததுகூட என்னை மொழிபெயர்க்கத் தூண்டியதில் ஒரு காரணியாக இருக்கலாம். க.நா.சு.வின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த தேவமலர் மற்றும் மதகுரு இன்றும் என்னை வசீகரிக்கும் படைப்புகளாக உள்ளன.

ஒரு மொழிபெயர்ப்பாளனின் சவாலாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

நமக்கு அதிகம் அறிமுகமில்லாத இன்னொரு மொழியின் அர்த்தத்தையும், அந்த மொழி சார்ந்த கலாசாரத்தையும் உயிர்ப்போடு கொண்டுவருவதே ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கான சவால். அதேபோல், ஒரு கதையின் உருவத்தை மட்டும் கொண்டுவராமல், உள்ளடக்கத்தையும் சேர்த்தே கொண்டுவரும் சவாலை மொழிபெயர்ப்பாளன் சந்திக்க வேண்டியுள்ளது.

தமிழின் குறிப்பிடத்தக்க விமர்சகராகவும் அறியப்பட்டிருக்கிறீர்கள். தமிழின் விமர்சனப் போக்கு இன்றைக்கு எப்படி உள்ளது?

குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை. ஒரு படைப்பை அதனளவில் ஆழ்ந்து படித்து விமர்சிக்கும் போக்கு இங்கு அதிகமில்லை. சில பத்திரிகைகளில் மதிப்புரைகள் வருகின்றன. மற்றபடி, ஒரு படைப்பைத் தேடிப் பிடித்து படித்து, அதன் சிறப்பை, அதன் மீதான சரியான மதிப்பீட்டைச் சொல்லும் அக்கறையில்லாத நிலையே நீடிக்கிறது.

நீங்கள் ஈடுபாட்டுடன் மொழிபெயர்த்த எழுத்தாளர்கள் பற்றிச் சொல்லுங்கள்..

நான் மொழிபெயர்த்த எழுத்தாளர்களில் மிலன் குந்தேரா என்னை மிகவும் ஈர்த்தவர். ‘ஆர்ட் ஆப் தி நாவல்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். ஐரோப்பிய நாவல் வரலாற்றின் தொடக்கம் செர்வான்டிசிலிருந்து தான் தொடங்குகிறது என்கிறார். நாவல் என்பது தீவிரமான மன உணர்வுகளைக் கையாளும் என்பதற்கு மாறாக இலேசான மனநிலைகள் மற்றும் அபத்தங்களையும் அவர் கேலியாக எழுதிப் பார்த்துள்ளார். இடலோ கால்வினோ எனக்குப் பிடித்த ஆசிரியர். அவருடைய விவரணை அருமையானது. நடை மிகவும் சுவாரசியமாக இருக்கும். யாரும் வாசிக்க இயலும். ஆனால் அதற்குள் தனது கதையை எங்கே வைத்திருக்கிறார் என்பதைப் பார்ப்பது சிரமமானது.

ஒரு புத்தகத்தை மொழிபெயர்க்க வேண்டும் என்று முடிவு செய்யும்போது என்னென்ன அம்சங்களைக் கவனிப்பீர்கள்?

நம் சூழல் என்னவாக இருக்கிறது, இங்கு இப்போதைய தேவையென்ன என்பதை முதலில் கவனத்தில் கொள்வேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக் குரல், நவீன பெண்ணியச் சிந்தனைகளின் போக்கு, விளிம்பு நிலை, நாடோடிகளின் வாழ்வியல் சிக்கல்கள் இவற்றைப் பிரதிபலிக்கும் எழுத்துகளைத் தேர்வு செய்து அறிமுகம் செய்வேன். ஆப்பிரிக்க, அரபு மொழி ஆசிரியர்களையும் தேடிக் கண்டெடுத்து அறிமுகம் செய்வேன்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புகளின் பின்னணியில் அரசியல் பார்வை இயங்குகிறதா?

நான் எப்போதும் இடதுசாரி மனோபாவம் கொண்டவன்தான். ஆனால் எந்த அமைப்பிலும் இல்லை. எப்போதும் ஒரு படைப்பாளனுக்குள் எதிர்ப்புக்குரல் இருந்துகொண்டே இருக்க வேண்டும். எனது ஆரம்பகால நண்பர்கள், நான் வாசித்த புத்தகங்கள், இந்த சமூகம் குறித்த எனது புரிதல் இவற்றின் வழியாகத்தான் நான் இந்த மனநிலையை வந்தடைந்தேன். சே குவேரா, பகத் சிங் போன்ற ஆளுமைகளின் எழுத்துகளை அறிமுகப்படுத்துவதில் எனக்கு இன்னமும் தீவிரம் இருந்துவருகிறது.

நீங்கள் மிகவும் விரும்பிச் செய்த மொழிபெயர்ப்பு நூல் எது?

‘பாப்லோ நெருடா நினைவுக் குறிப்புகள்’ எனக்கு மிகவும் பிடித்தமான மொழிபெயர்ப்பு. வாசித்த நண்பர்கள் பலரும் அந்த மொழிபெயர்ப்பு அவர்களது மனதை ஊடுருவியதாகச் சொன்னார்கள். இன்னொரு நூல் ‘பிளாட்டரோவும் நானும்’ என்கிற ஸ்பானிஷ் நாவல். இதனை எழுதியவர் கவிஞர் விமனஸ். கவிஞர் எழுதிய நாவல் என்பதால், வித்தியாசமான விவரிப்புகளும், அழுத்தமான உரையாடல்களும் நிறைந்தது.

ஒரு நூலை மொழிபெயர்க்க வேண்டுமென்கிற தூண்டுதலை எப்படி பெறுகிறீர்கள்?

பல விதங்களில் பெறுவேன். ‘பிளாட்டரோவும் நானும்’ நூலை நண்பர் ராணிதிலக் சொன்னதன் பேரில்தான் மொழிபெயர்த்தேன். கருத்துப்பட்டறை பரமன் சொல்லித்தான் ‘பாப்லோ நெருடா நினைவுக் குறிப்புகள்’ நூலை மொழிபெயர்த்தேன். சில நூல்களைப் பதிப்பாளர்கள் சொல்லியும் மொழிபெயர்த்திருக்கிறேன்.

இந்த நூலை நாம் மொழிபெயர்த்திருக்கலாமே என்று உங்களை எண்ண வைத்த நூல் எது?

கவிஞர் ஆனந்த் மொழிபெயர்த்து காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள ராபர்ட்டோ கலாசோ எழுதிய ‘க’ எனும் இத்தாலிய நாவல்.

உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவரும் இக்காலச் சூழலில் இனி வட்டார இலக்கியமென்பது சாத்தியம்தானா…?

சாத்தியமில்லையென்றேதான் நினைக்கிறேன். வட்டார மொழிப் படைப்புகளை மொழிபெயர்ப்பது மிகவும் சிரமம். தமிழக தென் மாவட்டங்களில் எழுதுகிற கரிசல் மண் சார்ந்த இலக்கியப் படைப்புகளை இந்திய மொழிகளில்கூட நம்மால் இன்னும் கொண்டுபோக முடியவில்லையே. அப்புறம் எப்படி சர்வதேச அளவில் அவற்றைக் கொண்டுபோக முடியும்? மக்களின் வட்டார அளவிலான பேச்சு வழக்கினை உயிர்ப்போடு இன்னொரு மொழியில் அப்படியே கொண்டுபோய் சேர்க்க முடிவதில்லை. மொழி என்பது ஒரு பண்பாட்டின் அடையாளம். வட்டார வழக்குச் சொற்களை அதன் ஆழமான அர்த்தத்தோடு மொழிபெயர்ப்பது மிகவும் சிக்கலான ஒரு விஷயமாகவே இன்னமும் இருக்கிறது.

தற்போது நீங்கள் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நூல்?

லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கார்லோஸ் பியூன்திஸ் எழுதிய ‘டெத் ஆப் ஆர்ட்டோனியா கிரஸ்’ எனும் நாவலை மொழிபெயர்த்துவருகிறேன். அரசியல் சார்ந்த வரலாற்றுப் பின்புலத்தோடு பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நாவல் தமிழுக்கு மிக முக்கியமான வரவாக இருக்கும்.

இன்றைக்குத் தமிழில் மொழிபெயர்ப்புக்கான வரவேற்பு எப்படியுள்ளது?

கடந்த நான்கைந்து ஆண்டுகளாகத் தமிழில் மிகச் சிறப்பான முறையில் மொழிபெயர்ப்பு நூல்கள் வருகின்றன. முன்பு வாசகர்கள் மூல நூலின் ஆசிரியர் யார் என்பதைப் பார்த்துதான் மொழிபெயர்ப்பு நூல்களை வாங்கிப் படிப்பார்கள். ஆனால், இன்றைய வாசகர்களோ இது யாருடைய மொழிபெயர்ப்பு என்பதைப் பார்த்து வாங்கும் அளவிற்கு இருக்கிறார்கள்.

சார்லஸ் டார்வின், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற அறிவியலாளர்களைப் பற்றியும் நீங்கள் அறிமுகம் செய்துள்ளீர்கள்.

சார்லஸ் டார்வினின் 200-ம் ஆண்டு நிறைவையொட்டி ஒரு புத்தகத்தைத் தொகுத்தேன். ஏனெனில் டார்வின் தத்துவம் என்பது அறிவியலைத் தாண்டியும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் அறிஞர்களையும் பாதித்திருக்கிறது. ஸ்டீபன் ஹாக்கிங்கைப் பொறுத்தவரை அத்தனை உடல் குறைபாடுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை நெருக்கடிகளையும் தாண்டி அவருக்கு அறிவியலின் மேல் இருக்கும் பிரியம் என்னை அவர் மீது ஆர்வம்கொள்ள வைக்கிறது. அமர்த்திய சென் மீதும் எனக்கு ஈடுபாடு உண்டு. தனி வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் மிகவும் நேர்மை யான, ஆரோக்கியமான ஆளுமை அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்