சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில், அச்சு ஊடகங்கள் தோன்ற ஆரம்பித்திருந்த காலகட்டத்தில்தான் தமிழகத்தில் வெகுமக்கள் கலாச்சாரம் உருவாக ஆரம்பித்திருந்தது. ஆனால் அன்று அந்தத் தளத்தில் இயங்கிக்கொண்டிருந்த நிகழ்கலை கலைஞர்கள் மீது நாளிதழ்களோ பத்திரிகைகளோ துளியும் கவனம் செலுத்தவில்லை.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட நாடகக் கலைஞர்களைப் பற்றி எழுபதுகளில் நான் ஆய்வு செய்த போது, சமகாலத் தமிழ், ஆங்கில அச்சு ஊடகங்களில் எந்தக் குறிப்பையும் காண முடியவில்லை. இந்த விளிம்புநிலைக் கலைஞர்களை ஒரு பொருட்டாகவே ஊடகங்கள் கருதவில்லை என்று உணர முடிகிறது.
எனக்குக் கிடைத்த சொற்ப தகவல்களையும் அரசு ஆவணங்களிலிருந்துதான் பெற முடிந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் இத்தகைய நோக்கு தொடர்ந்தது. சினிமா ரசனை வளராமல் போனதற்கும், அத்துறை பற்றி ஒரு தீவிர அக்கறை வளராததற்கும் இத்தகைய புறக்கணிப்பு ஒரு காரணம். நாடகம், சினிமா ஆகியவை பாமரர்களின் பொழுதுபோக்குகள்தானே. ஆகவே இவற்றைக் கண்டுகொள்ளத் தேவையில்லை என்ற மனப்பான்மையே ஓங்கியிருந்தது
ஒரு முக்கியமான பதிவு
அவ்வாறு கண்டுகொள்ளாமல் விடப்பட்டவர்களை மட்டுமல்லாமல், இன்றும் கவனிக்கப்படாமல் இயங்கிக்கொண்டிருக்கிறவர்கள் பற்றியும் ஒரு முக்கியமான பதிவை வெளி ரங்கராஜன் இந்நூலின் மூலம் செய்திருக்கிறார். இந்நூலின் மூலம் கலைஞர்களைப் பற்றி மட்டுமல்ல, அவர்கள் ஈடுபட்டிருந்த நிகழ்கலைகளைப் பற்றியும் வாசகர்களுக்கு ஒரு பரிச்சயம் கிடைக்கிறது.
நாடகக் கலைஞர் கமலவேணி, ஆர்மோனியம் காதர் பாட்சா போன்றவர்களைப் பற்றி எழுதுகிறார். சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கைக்குழந்தையுடன் சிறை சென்றவர் கமலவேணி. தேவதாசி பாரம்பரியத்தில் வந்த பாலாமணி என்ற நாடகக் கலைஞரைப் பற்றி ஒரு கட்டுரை உள்ளது. (நூற்றிப்பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் பயணம் செய்த பிரெஞ்சு எழுத்தாளர் பியரி லோட்டி மதுரையில் பாலாமணியின் ஒரு சமஸ்க்ருத நாடகத்தைப் பார்த்த அனுபவத்தை இந்தியா நூலில் பதிவுசெய்திருக்கிறார்).
மேடையிலும் திரையிலும் தோன்றிய பபூன் ஷண்முகத்தைப் பற்றிய கட்டுரையில் இவர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு ஒரு முன்னோடி என்கிறார் ஆசிரியர். இன்று நாடகத் துறையில் இயங்கிக்கொண்டிருக்கும் காந்திமதி மேரி, தோல்பாவைக் கூத்து ராமசந்திர புலவர் புகைப்படக் கலைஞர் மோகன்தாஸ் வடகரா இவர்களைப் பற்றியும் வாசகர்கள் அறிய முடிகிறது. பபூன் ஷண்முகத்தின் உருவப்படம் போன்ற பல அரிய புகைப்படங்களைத் தேடிப்பிடித்து வெளியிட்டிருக்கிறார் ஆசிரியர்.
துடும்பு இசை, பாகவதமேளா நாடகம் பற்றியும் மறைந்துகொண்டிருக்கும் கைசிக நாடகம் பற்றிய கட்டுரை, கட்டைக்கூத்து மீட்டுருவு செய்யப்பட்ட கதை இப்படி மொத்தம் இருபது கட்டுரைகளில் ரங்கராஜன் இந்திய நிகழ்கலை வரலாற்றுக்கு ஒரு அரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
சே. ராமனுஜத்தின் முன்னுரை இந்நூலுக்கு நல்லதொரு பின்புலத்தைக் கொடுக்கிறது. இதைப் படிக்கும்போது இன்னும் ஆய்வுக்குட்படுத்தபட வேண்டிய உடுமலை சரபம் முத்துசாமி கவிராயர், நாடகம், சினிமா இரண்டிலும் கால் பதித்த வேல்சாமி கவிராயர் போன்ற மறக்கப்பட்ட ஆளுமைகள் பலர் இருந்திருப்பது நினைவுக்கு வருகிறது. சினிமா காமிராவுடன், நுண்படம்,(microfilming) எண்ணியப்படுத்தல் (digitization) போன்ற தொழில்நுட்ப வசதிகள் இப்போது நம்மிடம் இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு, இவர்களைப் பற்றி இன்று கிடைக்கும் விவரங்களை ஆவணப்படுத்த வேண்டும்.
இந்தப் புத்தகத்தில் பேசப்பட்டிருக்கும் ஆளுமைகள் பற்றிய விவரங்கள் கிடைத்த மூலத்தைப் பதிவுசெய்தால் அந்த விவரங்களின் நம்பகத்தன்மை கூடுவது மட்டுமன்றி இந்தத் துறையில் ஆய்வு செய்ய முற்படுபவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும். அதே போல சொல்லடைவு தயாரிக்கப்பட்டுச் சேர்க்கப்பட்டிருந்தால் இந்நூல் இன்னும் பன்மடங்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். பிறப்பு, இறப்பு ஆண்டுகள் ஆகிய விவரங்கள் தரப்படாதது போன்ற குறைகள் இருந்தாலும், ஆய்வு மாணவர்களுக்கு ஒரு புதிய தளத்தை இந்நூல் திறந்துவைக்கிறது.
வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்,
வெளி ரங்கராஜன், அடையாளம் பதிப்பகம், 1205/1,
கருப்பூர் சாலை, புத்தாநத்தம்.621310,
விலை:ரூ.100. தொடர்புக்கு: 04332273444
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago