குழந்தைகளுக்கான எளிமையான, சுவாரஸ்யமான எழுத்து எப்போதுமே தமிழில் குறைவு. அதுவும் உடல்கூறியலில் இப்படி ஒரு புத்தகம்! வாண்டுமாமா மறைந்தும் வாழ்கிறார்!
சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நாம், உடல்நிலை சற்று மோசமடைந்தாலே முடங்கி விடுகிறோம். அதுவரை நமது உடலைப்பற்றி அக்கறை செலுத்துவதற்கு இன்றைய நெருக்கடியான உலகில் நேரம் இருப்பதில்லை. உடல்நிலை மோசமடையும் போதுதான் மருத்துவர்களின் தேவையையும் மருந்து களின் மகத்துவத்தையும் உணர்கிறோம். உடலும் மனமுமாக இணைந்து பயணிக்கும் ‘நாம்’, நம் உடலுக் குள் நடப்பது என்ன என்று யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.
கை, கால், வயிறு என வெளியில் தெரியும் உறுப்புகளும் இதயம், நுரையீரல், கல்லீரல் என்று நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகளும் எப்படிச் செயல்படுகின்றன என்றும் அவற்றின் வளர்ச்சி, அவற்றில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்றும் மருத்துவத் துறைசார்ந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் அவ்வளவாகத் தெரியாது. மூளை போன்ற நுண்ணிய அமைப்பு கொண்ட உறுப்புகள்பற்றி மருத்துவத் துறையினரே தொடர்ந்து ஆய்வுகள் நடத்திவருகிறார்கள். இப்படியான சூழலில் நம் உடல் உறுப்புகள், அவற்றின் செயல்பாடுகள், அவற்றைப் பற்றிய மர்மங்கள்குறித்து மாணவர்களுக்கும் புரியும்படியான எளிய மொழியில் வாண்டுமாமா எழுதியிருக்கும் புத்தகம் இது.
குழந்தைகளின் நாயகன்
தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் மகத்தான சாதனைபுரிந்த வாண்டுமாமா, இன்று வெவ்வேறு துறைகளில் வெற்றிபெற்றிருக்கும் பலரது கற்பனை உலகைக் கட்டமைத்தவர்களில் மிக முக்கியமானவர். ஏராளமான மாயாஜாலக் கதைகள், படக் கதைகளை உருவாக்கியவர். வி. கிருஷ்ணமூர்த்தி எனும் இயற் பெயர் கொண்ட இவர் கெளசிகன், விசாகன், சாந்தா மூர்த்தி என்று பல்வேறு பெயர்களில் எழுதிவந்தார். இப்படிக் குழந்தைகளின் உலகத்திலேயே வாழ்ந்த வாண்டுமாமா, மிகுந்த சிரத்தையுடன் மருத்துவம் தொடர்பான புத்தகங்களை வாசித்து, உடல் உறுப்புகள் தொடர்பான தனது சந்தேகங்களை மருத்துவ நிபுணர்களிடம் கேட்டு, எளிய மொழியில் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
மருத்துவத் துறையில் தனக்கு ஆர்வம் வருவதற்குச் சிறுவயதில் தான் சந்தித்த நாட்டு வைத்தியர்கள், சிகிச்சைக்காக அவர்கள் பயன்படுத்திய பல வண்ண நாட்டு மருந்துகள்தான் காரணம் என்று வாண்டுமாமா குறிப்பிடுகிறார். அதேபோல் ஆங்கில மருத்துவர்கள் பயன்படுத்திய நவீன உபகரணங்களும் மருத்துவம், உடற்கூறு ஆகியவை தொடர்பான ஆர்வத்தை அவருக்குள் விதைத்தன.
எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் ஆனபின்னர், ஒரு மருத்துவ மாணவருக்கு இணை யான உழைப்புடன் மருத்துவம் தொடர்பான பல புத்தகங்களைத் தேடிப் படித்திருக்கிறார் வாண்டுமாமா. நவீன மருத்துவம் மட்டுமின்றி, பல நாடுகளின் பண்டைய மருத்துவ முறைகள், அந்தக் கால மருத்துவர்கள் எதிர்கொண்ட சவால்கள் என்று பல விஷயங்களைத் தேடித் தேடிச் சேகரித்திருப்பதைப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் உணர்த்துகின்றன.
எளிய மொழி
எழுதுவதற்கு மருத்துவ நிபுணர்களுக்கே சிக்கலான விஷயங்களை, குழந்தைகள் உள்வாங்கும் அளவுக்கு மிக எளிய மொழியைப் பயன்படுத்தி விளக்கியிருக்கிறார் வாண்டுமாமா. ‘நமது உடலைப் பற்றித் தெரியுமா?’ என்று நட்பு மிக்க ஒரு ஆசிரியரைப் போல, உரையாடத் தொடங்குகிறார். மெல்ல மெல்ல குழந்தைகளை உடற்கூறு உலகத்துக்குள் இழுத்துக்கொண்டுவிடுகிறார்.
மாயாஜாலக் கதைகளில் கட்டற்ற கற்பனை வளத்துடன் எழுதியிருக்கும் வாண்டுமாமா, இந்தப் புத்தகத்தில் உடற்கூறு தொடர்பான நம்பகமான தகவல்களைத் திரட்டி எழுதியிருப்பது குறிப்பிடத் தக்கது. அதேசமயம், உறுப்புகள் தொடர்பான ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் அந்தந்த உறுப்புகள் தொடர்பான சுவாரஸ்யமான செய்திகள், புராணங்களில் இடம்பெறும் சம்பவங்கள் என்று சேர்த்து எழுத்தில் சுவை கூட்டியிருக்கிறார்.
உடல் பாகங்கள், அவற்றின் உள் உறுப்புகளைச் சுட்டும் வரைபடங்கள் என்று ஒரு பாடப் புத்தகத்துக் குரிய விஷயங்கள் அடங்கிய புத்தகம்தான் என்றாலும், இலகுவான மொழிநடை வாசிப்பைத் தொய்வில்லாமல் தொடரச் செய்கிறது. குறிப்பாக, மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல், ஒரு கதைப் புத்தகத்தைப் படிப்பதுபோல், இதை மாணவர்களால் வாசிக்க முடியும்.
அக்கறையுடனான எழுத்து
அறியப்பட்ட எழுத்தாளர் என்பதால் உடற்கூறு, மருத்துவம் தொடர்பான பல புத்தகங்களிலிருந்து திரட்டிய தகவல்களைச் சரிபார்க்காமலேயே எழுத வாண்டுமாமாவுக்கு மனமில்லை. குழந்தைகளுக்குச் சென்றடைய வேண்டிய தகவல்கள் என்பதால், திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தின் மருத்துவ மனை தலைமை மருத்துவர் டாக்டர் வி. என். பாலகிருஷ்ண
சர்மாவுக்குப் புத்தகத்தின் பிரதியை அனுப்பி, தகவல்களைச் சரிபார்த்திருக்கிறார். இந்தப் புத்தகத்துக்கு மதிப்புரை எழுதியிருக்கும் டாக்டர் வி. என். பாலகிருஷ்ணசர்மா, “இந்தப் புத்தகத்தைப் படிக்கும் மாணவர்களுக்கு இன்னும் விரிவாக உடற்கூறு மருத்துவம்பற்றிப் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படும். யார் கண்டது, எதிர்காலத்தில் அவர்கள் புகழ்பெற்ற மருத்துவர் களாகவும் ஆகலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படி ஒரு நம்பகமான ‘மருத்துவச் சான்றித’ழுடன் வெளியான புத்தகம் இது. தனது இறுதிக் காலத்தில் வாண்டுமாமா எழுதிய புத்தகங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
நமது உடலின் மர்மங்கள்
வாண்டுமாமா
பக்கங்கள்: 224, விலை: ரூ. 225
கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண்: 6123
8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி. நகர், சென்னை - 600 017. தொடர்புக்கு: 044 243648430
ஒரு மருத்துவ மாணவருக்கு இணையான உழைப்புடன் மருத்துவம் தொடர்பான பல புத்தகங்களைத் தேடிப் படித்திருக்கிறார் வாண்டுமாமா.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago