வீடில்லாப் புத்தகங்கள் 17 - வியத்தகு இந்தியா!

By திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

‘‘உங்களிடம் ஏ.எல்.பசாம் (A.L.Basham) எழுதிய ‘வியத்தகு இந்தியா’ புத்தகம் இருக்கிறதா?’’ என ஓர் இளைஞர் தொலைபேசியில் கேட்டார்.

‘‘இருக்கிறது. ஆனால், சிவில் சர்வீஸ் படிக்கும் ஒரு நண்பர் அதை வாங்கிப் போயிருக்கிறார்’’ என்றேன்.

‘‘தற்போது அந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்? நானும் ஐ.ஏ.எஸ்., பரீட்சை எழுதுவதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தமிழில் ஏ.எல்.பசாமின் புத்தகம் வேண்டும்? ஆனால், கிடைக்கவே இல்லை. நீங்கள் எங்கே வாங்கினீர்கள்?’’ எனக் கேட்டார்.

‘‘ ‘வியத்தகு இந்தியா’ புத்தகத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பாகச் சென்னை காயித்தே மில்லத் கல்லூரியின் வெளியே உள்ள சாலையோர புத்தகக் கடையில் வாங்கினேன். அது, 1963-ம் ஆண்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்ட புத் தகம். இன்று வரை அதனை யாரும் மீள் பதிப்புச் செய்ததாகத் தெரியவில்லை.

மொழிபெயர்ப்பில் திருத்தங்கள் மேற்கொண்டு, புதிய பதிப்பாக கொண்டு வந்தால் நிச்சயம் பலருக்கும் உதவி யாக இருக்கும். இதன் இ புக் ‘நூலகம்.ஒஆர்ஜி’ (www.noolaham.org ) என்ற இணையதளத்தில் கிடைக்கிறது. இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்’’ என்றேன்

இந்த இளைஞரைப் போலச் சிவில் சர்வீஸ் தேர்வினை தமிழில் எழுதுபவர் கள் இன்று அதிகமாகி வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கான பெரிய குறை தமிழில் துறை சார்ந்த புத்தகங்கள் அதிகம் கிடைப்பதில்லை என்பதுதான். முக்கியமான பல புத்தகங்கள் இன்று மறுபதிப்பு காணவில்லை. இதனாலேயே ஆங்கிலத்தில் பரீட்சை எழுத வேண்டிய நிலை ஏற்படுகிறது.

போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கப் பழைய புத்தகக் கடைகளையும், நூலகங்களையும் நம்பியே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. அதிலும் கிராமப்புறங்களிலும் சிறுநகரங்களிலும் வசித்தபடி போட்டித் தேர்வுக்குத் தயார் செய்பவர்களுக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை என்பதே நிஜம்.

யாராவது ஒரு பதிப்பாளர் சிவில் சர்வீஸுக்கான முக்கியப் புத்தகங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்து, சிறப்பு விலையில் வெளியிட்டால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்பதே பலருடைய எண்ணம்.

இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றை வெகு நுட்பமாகவும், ஆய்வுபூர்வமாக வும் அறிமுகப்படுத்தும் புத்தகமே ‘வியத்தகு இந்தியா’.

ஆர்தர் லுவலைன் பசாம் எனப்படும் ஏ.எல். பசாம் சிறந்த வரலாற்று அறிஞர். லண்டனில் பேராசிரியராகப் பணி யாற்றியவர். விவேகானந்தரின் பெருமை களை உலகுக்கு எடுத்துச் சொல்லிய வர். இவரது தந்தை இந்தியாவில் ராணுவ செய்தியாளராகப் பணியாற்றியிருக் கிறார். ஆகவே, இந்தியாவில் தான் கண்டு உணர்ந்த அனுபவங்களைக் கதைகளாகச் சொல்லி, இந்தியாவின் பண்பாட்டுச் சிறப்புகளைப் பசாமுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

பசாமின் அம்மாவும் ஓர் எழுத்தாளர். ஆகவே, எழுத்திலும் இலக்கியத்திலும் சிறுவயதிலே பசாமுக்கு ஆர்வம் உண்டா னது. பியானோ இசைக் கலைஞராக வர வேண்டும் என்ற ஆசையில் இசை கற்கத் தொடங்கிய பசாம், கல்லூரி நாட்களில் வரலாற்றின் மீதும், சமயங் களின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டார்.

குறிப்பாக, இந்தியாவின் ‘ஆசீவக’ நெறிகுறித்து இவர் தனது டாக்டர் பட்டத்துக்கான ஆய்வுகளை மேற் கொண்டார். ‘ஆசீவகம்’ என்பது கி.மு. 500 - 250 காலப் பகுதியில் நிலவிய மெய்யியல் கொள்கையாகும். இதனை ஏற்றுக் கொண்டவர்கள் ‘ஆசீவகர்கள்’ என அழைக்கபட்டனர். ‘ஆசீவக’ நெறி பவுத்தம், சமணம் போலத் தனித்தன்மை கொண்ட துறவு இயக்கமாகும்.

முறையாகச் சமஸ்கிருதம் கற்றுக் கொண்ட பசாம் இந்தியாவின் பண் பாட்டு வரலாறுகுறித்துத் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் விளைவாக 1954-ம் ஆண்டில் எழுதப்பட்டதே ‘வியத்தகு இந்தியா’ (The wonder that was India).

இந்திய வரலாறுகுறித்து எழுதப்பட்ட முக்கிய நூல்களில் ஒன்றாகக் கடந்த 50 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது பசாமின் புத்தகம். வரலாற்று மாணவர்கள், ஆய்வாளர்கள், எழுத் தாளர்கள், வாசகர்களுக்கான உறு துணை புத்தகமாக இன்றும் இருந்து வருகிறது.

இலங்கை அரசின் சார்பில் ‘கல்வி வெளியீட்டுத் திணைக்களம்’ சிறந்த புத்தகங்களைத் தமிழில் வெளியிட்டுள் ளது. பசாமின் புத்தகமும் அப்படித் தான் மொழியாக்கம் செய்யப்பட்டிருக் கிறது. 1963-ம் ஆண்டு செ.வேலாயுத பிள்ளை, மகேசுவரி பால கிருட்டினன் ஆகியோர் இணைந்து இந்தப் புத்த கத்தை மொழிபெயர்த் துள்ளார்கள்.

பண்டைய இந்திய நாகரிகம் பற்றி இந்தியர் களும் மேல்நாட்டு மாண வர்களும் அறிந்து கொள்ளும் படியாக பசாம் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். கட்டிடக் கலை, சிற்பம், ஓவியம், இசை, நடனம், இலக்கியம், நுண்கலைகள், மொழி, அறிவியற்கலைகள் என விரிந்த தளத் தில் பசாம் இந்தியாவின் பண்பாட்டுச் சிறப்புகளை அடையாளம் காட்டுகிறார்.

கிரேக்க உழவன் தனது மூதாதையர் களின் பண்பாட்டுச் சிறப்புகள் பற்றித் தெளிவற்ற தகவல்களையே அறிந்திருக் கிறான். எகிப்திய விவசாயியும் அப் படித்தான், ஆனால், இந்தியாவில் பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு பின்பற்றப்பட்ட விவசாய நடைமுறை கள், கலை மரபுகள் அப்படியே இன்றும் தொடர்கின்றன. அறுந்து போகாத பண்பாட்டு தொடர்ச்சியே இந்தியாவின் தனிச்சிறப்பு என்கிறார் பசாம். இப்படியான நீண்ட பண்பாட்டுத் தொடர்ச்சி கொண்ட நாடுகளாக இந்தியா வும், சீனாவும் மட்டுமே இருக்கின்றன என்றும் பசாம் குறிப்பிடுகிறார்.

இந்திய சிற்பங்கள் பெண்களைச் சித்தரிக்கிற விதமும், கிரேக்க சிற்பங் கள் பெண்களைச் சித்தரிக்கும் விதமும் ஏன் வேறுபடுகிறது… என்பதற்கு ‘இந்தியா வில் பெண்ணின் அழகே பிரதானமாகக் கருதப்படுகிறது. ஆகவே, பெண்மையின் எழிலைப் பிரதிபலிப்பதாகவே சிற்பங் கள் உருவாக்கபட்டன. கிரேக்க சிற்பங் கள் தாய்மை நிலையின் பல்வேறு பிரதிபலிப்புகளாகும். அங்கே, உடல் அழகுக்கு முக்கிய இடம் இல்லை’ என்கிறார் பசாம்.

இந்தியப் பண்பாட்டினை தொடர்ந்து ஆய்வு செய்கிற பசாம், ‘நகர் வாழ்வோர் பண்பாட்டின் அடையாளமாகவே ‘காம சூத்ரா’ எழுதப்பட்டுள்ளது. அதன் முக்கிய நோக்கம் உயர்குடியைச் சேர்ந்த ஆண் கள் எப்படிக் காமவேட்கையைத் தணித்துக் கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுவதே’ என் கிறார். மேலும் ‘பாலுறவு பற்றிய செய்திகளோ, பெண் களின் காமநாட்டங்களோ அதில் கவனம் பெறவே இல்லை. காமத்தை ஒரு கலையாகக் கொண்டாடும் இந்தியா ஒருபோதும் நேரடியான கலவிச் செயல்பாட்டினை விவரித்து எழுத்திலோ, நுண்கலைகளிலோ வெளிப்படுத்துவதே இல்லை. இந்தியா வில் காமம் ஒரு மறைபொருளே’ என்றும் பசாம் குறிப்பிடுகிறார்.

‘இந்தியாவில் போதுமான அகழ் வாய்வுப் பணிகள் இன்னமும் நடைபெறவில்லை. குறைவான நிதி ஒதுக்கீடும், வரலாற்றைப் பேண வேண்டும் என்ற அக்கறையின்மையுமே இதற்கான முக்கியக் காரணங்கள்’ என்கிறார் பசாம்.

வரலாற்றைத் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல மாற்றி எழுதுவதில் ஆர்வம் காட்டும் அதிகாரவர்க்கம் ஒரு பக்கம். இந்தியாவின் தொன்மைகுறித்து வீண்பெருமைப் பேசி கழிக்கும் கல்விப்புலங்களும் ஊடகங்களும் மறுபுறம். இவர்களுக்கு இடையில் வரலாற்று உண்மைகள் தொடர்ந்து இருட்டடிப்புச் செய்யப் படுகின்றன என்பதே நிஜம்!

- இன்னும் வாசிக்கலாம்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்