பூமணியுடன் ஒரு சந்திப்பு: சாகித்ய விருதால பெருமைப்பட ஏதுமில்ல!

By மு.முருகேஷ்

தமிழின் மகத்தான படைப்புகளுள் ஒன்றான பூமணியின் ‘அஞ்ஞாடி…’ இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருதை வென்றிருக்கிறது. இது பூமணிக்கும் பெருமை, சாகித்ய விருதுக்கும் பெருமை!

“சின்ன வயசுல ஓணான் அடிச்சிக்கிட்டு அலைஞ்சோம். கழுதைக்குப் பின்னாடி ஓலையக் கட்டி விளையாடிக்கிட்டு இருந்தோம். கால்ல செருப்பில்லாம பள்ளிக்கூடத்துக்குத் தினமும் ரெண்டு கிலோ மீட்டர் நடந்தே போயிவருவோம். இல்லாத விளையாட்டுன்னு எதுவுமில்லே. மலையேறுவோம், ஓடைக்குள்ளே, கண்மாய்க்குள்ளே, ஊர்மந்தையச் சுத்தி ஓடியாடுவோம். அணில் வேட்டை, எலி வேட்டைன்னு எல்லா வேட்டையும் உண்டு. இளமைக் காலங்கிறது அவ்வளவு சந்தோசமா இல்லேன்னா எப்படி? அந்த அடியுரம் இல்லேன்னா, எழுதுறது ரொம்ப கஷ்டம்.

எனக்கு எல்லாமே எங்க அம்மாதான். இன்னைக்கு வரைக்கும் நான் எழுதுற மொழி, மற்ற எல்லா விஷயங்களுக்கும் அளவுகோல் அம்மாதான். எங்கம்மா சொன்ன கதைகளும், பாடுன தாலாட்டு, ஒப்பாரி எல்லாமே எனக்கு ரொம்ப உதவியா இருந்திருக்கு. படிக்கிற காலத்திலேயே நான் யாப்பில் செய்யுள்கள் நிறைய எழுதியிருக்கேன். 1966-ல இருந்தே என்னோட கவிதைகள் ‘எழுத்து’ இதழ்ல வந்திருக்கு. யாப்பைக் கற்று மறந்தவன் நான். அப்படி அன்னைக்குக் கத்துக்கிட்டது இன்னைக்கி நாவலைக் கவித்துவமா சொல்லப் பயன்படுது.

வாழ்க்கைங்கிறது எப்பவுமே யதார்த்தத்திலிருந்துதானே புனையப்படும். யதார்த்தத்துல நின்னுக்கிட்டு பூக்கிற விஷயம்தான் சரியானது. இல்லேன்னா, அது இலவம் பஞ்சு மாதிரி அலைஞ்சிக்கிட்டே இருக்கும். சரக்கொன்றைனு ஒரு மரம். அது இங்கே பக்கத்துல இருந்துச்சு. இப்ப வெட்டிட்டாங்கன்னு நெனக்கிறேன். என் வாழ்க்கையில அதை இங்கேதான் பாத்திருக்கேன். அது பூக்குற நேரத்துல ஒத்த இலைகூட மரத்துல இருக்காது. மரமே மொத்தமா பூவாப் பூத்திருக்கும். அப்படித்தான் நான் யோசிச்சுப் பாப்பேன். இலையப் பத்தி எனக்குக் கவலையில்லே. என்னோட படைப்பு மனமும் அந்த சரக்கொன்றை மரத்தைப் போலத்தான்.

என்னோட சிறுபிராயத்து ஞாபகங்கள்தான் ‘அஞ்ஞாடி...’ நாவலோட மையம். சலவைத் தொழிலாளிகள் இருக்காங்கள்ல, அவங்கள புதிரை வண்ணார்னு சொல்வாங்க. அவங்க, தாழ்த்தப்பட்ட மக்களுடைய துணிகளை வெளுக்குறவங்க. அவங்களோட எனக்கும் நல்ல பழக்கமிருந்தது. அதே மாதிரி குடும்பர்கள். அவங்களோட வாழ்க்கையும் எந்த நாவல்லயும் இதுவரை முழுமையா சொல்லப்படலே. இங்கேயும் அன்பான மனிதர்களும், அந்நியோன்யமான உறவுமுறைகளும் இருக்கு. எந்த சாதியப் பத்தியும் கவலையில்லே. அன்பும் அந்நியோன்யமும் இருக்கும்போது, சாதியத் தூக்கித் தூரப் போட்டுடுவாங்க. அதுபோன்ற உறவுகள்தான் ‘அஞ்ஞாடி...’ நாவல்ல நிறைஞ்சிருக்கு.

வரலாற்றை நாம சரியாச் சொல்லணும். சில விஷயங்களை நாம தெரிஞ்சோ தெரியாமலோ சொல்லாமத் தவறிட்டோம். எல்லாஞ் சேர்த்து நமக்கு ஒரு சமூக வரலாறு முழுமையாக் கிடைக்கலே. அடித்தட்டு மக்களைப் பற்றிய ஒரு நாவல்ல அவங்களோட சமூக வரலாறும் சேர்ந்திருந்தா நல்லா இருக்குமேன்னு ரொம்ப நாளா எனக்கொரு ஆசை இருந்துச்சு. 200 வருசத்தை மனசுக்குள்ளே போட்டு ஊறவச்சிக்கிட்டு இருந்தேன். சிவகாசிக் கலவரமும் கழுகுமலைக் கலவரமும் சேர்ந்து எனக்குள்ளே ஒரு கதைக்களனுக்கான ஊற்றா உருவாச்சு.

இந்த நாவல்ல வர்ற மனிதர்களெல்லாம் நம்மோடு வாழ்ந்த மனிதர்கள்தான். வாழ்க்கை எவ்வளவு குரூரமாய் நம்மை வேட்டையாடினபோதும், மனித உறவுகள்ல மனிதநேயத்தோட முக்கியத்துவத்தைச் சக மனிதர்களா இருந்து நம்மிடையே சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் இந்த மனிதர்கள். இன்றைக்குக் குடும்ப முறை சிதைஞ்சு உறவுகளே சுயநலமாகிடுச்சு. எப்படி இதை மீட்டெடுக்குறது? மரத்துப் போயிருக்கிற மனித உணர்வுகளைத் தட்டியெழுப்ப எழுதித்தான் தீர்க்கணும்.

இந்த நாவல்ல வெவ்வேறு வகையான மொழி வழக்குகளப் பயன்படுத்தியிருக்கேன்னு நெறைய பேர் சிலாகிக்கிறாங்க. திருஞான சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றியது பற்றி எழுத தேவாரம் படிச்சேன். இதுக்காக நூறு, இருநூறு புத்தங்களப் படிச்சிருப்பேன். சேக்கிழாரோட பெரிய புராணத்துக்கு திரு.வி.க. உரை எழுதியிருக்கிறதை எல்லாமும் படிச்சேன். மதங்கள்னு உள்ளே வரும்போது எப்படிக் கோர முகத்தோட வருதுன்னு சொல்லி ஆரம்பிக்கலாமேன்னு ஒரு ஐடியா வந்துச்சு. அப்ப எட்டாம் நூற்றாண்டு, அந்த மொழில சொல்றதுதான் சரின்னு பட்டது. நான் படிச்சிருந்த சங்க இலக்கியங்கள் எனக்குப் பயன்பட்டது. இன்னமும்கூட தமிழின் சங்க இலக்கியங்களை ஒரு ரெஃபரன்ஸுக்காக எடுத்துப் படிப்பேன். இங்க உள்ள மக்களோட மொழி நமக்கு ஏற்கெனவே நல்லாத் தெரிஞ்சதுதான். அப்புறம், இவ்வளவு பெரிய நாவல்ல ஒரே மாதிரியான மொழிநடை இருக்கிறதுங்கிறதும் சலிப்பு தரக் கூடாதில்லையா, அதனாலதான் பல வழக்கு மொழிகளை அந்தந்த காலத்தைப் பிரதிபலிக்கிற மாதிரி எழுதினேன்...”

பெரிய பெருமிதங்கள் ஏதும் இல்லாமல் இயல்பாகப் பேசுகிறார் பூமணி. சாகித்ய விருதும் அவரிடம் பெரிய தாக்கங்களை உருவாக்கியதாகத் தெரியவில்லை. “எனக்கு இந்த விருதுகள்மேல பெரிய ஆர்வம் ஏதுமில்ல. சாகித்ய விருதால பெருமைப்பட ஏதுமில்ல. ஏற்கெனவே பல விருதுகள் இந்த நாவலுக்குக் கிடைச்சிருக்கு. இப்ப நாட்டின் தலைநகர்லேர்ந்தும் ஒரு விருது கொடுத்திருக்காங்கன்னு நெனச்சிக்கலாம். ‘எமக்குத் தொழில் எழுத்து’ அவ்வளவுதான்!” சினேகமாகக் கை குலுக்குகிறார் பூமணி.

வாழ்த்துகள் சார்!

- மு. முருகேஷ், தொடர்புக்கு: murugesan.m@thehindutamil.co.in



அஞ்ஞாடி... (நாவல்)

பூமணி

பக்கங்கள் : 1,066

விலை: ரூ. 925

க்ரியா பதிப்பகம், 2/25, முதல் தளம், 17- வது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை - 41.

தொடர்புக்கு: 044-4202 0283, creapublishers@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

2 months ago

மேலும்