டால்ஸ்டாயின் கடைசி நாட்கள்
திருவல்லிகேணியில் உள்ள நடைபாதை புத்தகக் கடையில் புத்தகம் தேடிக் கொண்டிருந்த போது, ‘கொரலென்கோ’ எழுதிய ‘கண் தெரியாத இசைஞன்’ இருக்கிறதா என்ற ஒரு குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.
20 வயது இளைஞன் ஒருவன் நின்றிருந்தான். கடைக்காரர் அந்தப் புத்தகம் இல்லை என்றதும். ‘அன்னை வயல்’ இருக்கிறதா என அவன் திரும்பவும் கேட்டான். அதுவுமில்லை என்றதும், ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகம் ஏதாவது இருந்தால் கொடுங்கள் எனக் கேட்டான்
இப்படிப் பழைய புத்தகக் கடைகளில் ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகங்களைத் தேடுகிறவர்கள் என்று ஒரு தனிப் பிரிவினர் இருக்கிறார்கள். எந்தப் பழைய புத்தகக் கடைக்காரரைக் கேட்டாலும் ரஷ்ய பதிப்புகளுக்கு என்றே தனி வாசகர்கள் இருப்பதாகவே கூறுகிறார்கள்.
சோவியத் ரஷ்யாவின் ’ராதுகா பதிப்பகம்’ ரஷ்யப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட அளவு, வேறு எந்தப் பதிப்பகமும் செயல்பட்டதில்லை.
உலகெங்கும் ரஷ்ய இலக்கியங்கள் தீவிர கவனம் பெற்றது போலவே, 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் இலக்கியச் சூழலிலும் தனி கவனம் பெற்றன.
டி.எஸ்.சொக்கலிங்கம் மொழி பெயர்த்த ‘டால்ஸ்டாய்’ எழுதிய ‘போரும் அமைதியும்’ நாவல் தமிழில் தீவிரமாக வாசிக்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட ரஷ்ய சிறுகதைகளின் தொகுப்பை பாஸ்கரன் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். இது போலவே ‘துர்கனே’ எழுதிய ‘ரூடின்’, ‘குப்ரினின் யாமா’, ‘கார்க்கி’ படைத்த ‘தாய்’ போன் றவை ‘ராதுகா பதிப்பகம்’ வருவதற்கு முன்பாகவே தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட சிறந்த ரஷ்ய நூல்கள்.
நான் ரஷ்ய இலக்கியங்களை ‘ராதுகா பதிப்பகம்’ வழியாகவே வாசித்து அறிந்து கொண்டேன். அழகிய பதிப்பும், அச்சு நேர்த்தியும், சிறப்பான ஓவியங்களும் தேர்ந்த கட்டமைப்பும் கொண்ட ‘ராதுகா பதிப்பக’ வெளியீடு கள் இணையற்றவை. ‘ராதுகா’ என்றால் ‘வானவில்’ என்று அர்த்தம். குழந்தைகளுக்காக அவர்கள் வெளியிட்ட புத்தகங்கள் அத்தனை அழகானவை.
லியோ டால்ஸ்டாய், தஸ்தா யெவ்ஸ்கி, இவான் துர்கனேவ், ஆன்டன் செகாவ், புஷ்கின், குப்ரின், கோகல், மாக்சிம் கார்க்கி, சிங்கிஸ் ஐத்மாதவ், மிகைல் ஷோலகவ், விளாதிமிர் கொரலென்கோ என நீளும் ரஷ்ய எழுத்தாளர்களின் புத்தகங்கள் நேரடியாக ரஷ்ய மொழியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டன. ரா.கிருஷ்ணையா, நா.தர்மராஜன், பூ.சோமசுந்தரம் ஆகியோர் இந்த நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்.
சோவியத் யூனியன் உடைந்தபோது ‘ராதுகா பதிப்பகம்’ மூடப்படுகிறதே என நான் மிகவும் வருந்தியிருக்கிறேன். இலக்கியம் மட்டுமின்றி அரசியல், பொருளாதாரம், தத்துவம், அறிவியல், வரலாறு, மருத்துவம், பொறியியல், குழந்தைகள் கதைகள் என ராதுகா, மீர், மற்றும் முன்னேற்றப் பதிப்பகம் ஆகியவை வெளியிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் தமிழ் வாசகனுக்குப் புதியதொரு வாசலைத் திறந்துவிடுபவையாக அமைந்தன.
‘டால்ஸ்டாய்’ குறித்து ஆங்கிலத் தில் ஆண்டுதோறும் புதிது புதி தாகப் புத்தகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. புத்தம் புதிய மொழிபெயர்ப்புகளும் வெளியாகின் றன. அவரது புகழ்பெற்ற நாவல்கள் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சி தொடராகவும் வெளியாகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மைக்கேல் ஹாஃப்மான் இயக்கத்தில் வெளிவந்த ‘தி லாஸ்ட் ஸ்டேஷன்’ என்ற திரைப்படம் டால்ஸ்டாயின் இறுதி நாட்களைப் பற்றியது. இதில் பிரபல நடிகர் கிறிஸ்டோஃபர் பிளம்மர் டால்ஸ்டாயாகச் சிறப்பாக நடித்திருந்தார்
தமிழிலும் முப்பதுக்கு மேற்பட்ட டால்ஸ்டாயின் புத்தங்கள் வெளியாகி இருக்கின்றன. அவரது வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களைத் தொகுத்து ‘விக்டர் ஸ்கெலோவ்ஸ்கி’ எழுதிய ‘லெவ் டால்ஸ்டாய்’ என்ற நூல் தான் டால்ஸ்டாயின் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட மிகச் சிறந்த புத்தகம். ‘ராதுகா பதிப்பகம்’ இதனை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறது.
மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரம் டால்ஸ்டாய் பற்றி ஒரு முழுநீள நாடகம் எழுதியிருக்கிறார். அதை பழைய புத்தகக் கடையில் வாங்கினேன். டால்ஸ்டாயின் 150-வது ஆண்டு விழாவையொட்டி எழுதப்பட்ட இந்த நாடகத்தைக் கங்கை புத்தக நிலையம் 1987-ல் வெளியிட்டுள்ளது.
கலைமாமணி பி.ஏ.கிருஷ்ணன் குழுவினரால் மேடையேற்றப்பட்ட இந்த நாடகம் பின்பு வானொலியிலும் ஒலிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது. கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் இந்நாடகப் பிரதியை எடிட் செய்து உதவியதோடு, நாடக ஒத்திகைகளிலும் உடனிருந்து மேம்படுத்தியிருக்கிறார்.
சமுத்திரம் எழுதிய நாடகமும் ‘தி லாஸ்ட் ஸ்டேஷன்’ திரைப்படம் போலவே டால்ஸ்டாயின் இறுதி நாட்களை விவரிக்கிறது. ஒரு பக்கம் டால்ஸ்டாயைத் தனது ஞானகுருவாகக் கருதும் செர்க்கோவ், மறுபக்கம் தன்னையும் குடும்பத்தையும் கவனிக்காமல் பொறுப்பற்ற முறையில் டால்ஸ்டாய் நடந்து கொள்கிறார் எனக் குற்றம் சாட்டும் மனைவி சோபியா, இந்த இருமுனைகளுக்கு இடையில் ஊசலாடும் டால்ஸ்டாயின் நிகழ்வுகளே நாடகமாக விரிகின்றன.
மேடை நாடகங்களுக்கே உரிய உணர்ச்சி பொங்கும் வசனங்களுடன் கதாபாத்திரங்களின் மோதல்களை முதன்மைபடுத்தி சு.சமுத்திரம் நாடகத்தை எழுதியிருக்கிறார். வாசிப்பில் இந்நூல் தரும் அனுபவத்தை விட நிகழ்த்திக் காணும்போது வலிமையாக அமையக்கூடும்
டால்ஸ்டாயின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கிறார் என செர்க்கோவ் அரசிடமிருந்தும் ரஷ்ய திருச்சபையிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புகளை அந்நாளில் சந்தித்தார். ஆனாலும் அவர் டால்ஸ்டாயின் தீவிர விசுவாசியாகவே செயல்பட்டார்
மறுபக்கம் டால்ஸ்டாயின் மனைவி சோபியா, தனது கணவர் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. ஆகவே வருமானத்துக்கான முக்கிய வழியாக உள்ள அவரது எழுத்துகளின் பதிப்புரிமையை எதற்காகவும் விட்டுத் தர முடியாது எனச் சண்டையிட்டார்.
இந்த நாடகத்தில் மாக்சிம் கார்க்கி டால்ஸ்டாயை சந்திக்கும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் அவர்களுக்குள் நடைபெறும் உரையாடலில் எழுத்தாளன் என்பவன் எப்படியிருக்க வேண்டும்? எதை எழுத வேண்டும் என்பது குறித்த டால்ஸ்டாயின் வாதங்களை சமுத்திரம் அப்படியே கையாண்டிருக்கிறார்.
டால்ஸ்டாயின் வாரிசுகளில் அவரது இளைய மகள் சாஷா மட்டுமே தந்தை யின் மகத்துவத்தை அறிந்திருந்தாள். மற்றவர்கள் அவர் மீது நன்மதிப்பு கொண்டிருக்கவில்லை. அவரது மூத்த மகன் செர்ஜி சூதாடுவதிலும் குடிப்பதிலும் வீணாகிப் போயிருந்தான். அடுத்தவன் டால்ஸ்டாயைக் கடுமையாக வெறுத்தான்,. இப்படி பிள்ளைகளுடன் அவருக்கு இருந்த உறவானது கசப்பானதாகவே மிஞ்சியது.
தனது வாழ்க்கையின் கடைசி நாட்களில் தீராத மனத் துயரில் டால்ஸ்டாய் வீட்டைவிட்டு வெளியேறும் சூழல் உருவானது, இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதைச் சு.சமுத்திரம் விவரித்துக் கூறுகிறார்
டால்ஸ்டாய் தனது உயில் மூலம் தனது ஒட்டுமொத்த எழுத்துக்களையும் ரஷ்ய மக்களுக்காக எழுதி வைக்க வேண்டும் என விரும்பினார். இதை அவரது மனைவி சோபியா அனுமதிக்கவில்லை. இந்த முயற் சிக்குத் துணை செய்யும் ஏமாற்று காரன் எனச் செர்க்கோவைக் குற்றம் சாட்டினாள். வீட்டைவிட்டு வெளியேறிய டால்ஸ்டாய் நோயுற்று அஸ்தபோவ் ரயில் நிலையத்துக்கு வருவதும், அவருக் குச் சிகிச்சை அளிக்கப்படுவதும், மரணத் தறுவாயில் அவர் பேசும் தனிமொழியு மாக நாடகம் நிறைவு பெறுகிறது.
நவீன நாடகங்களை நிகழ்த்தும் ஆர்வமுடைய குழுவினர் யாராவது இதை நிகழ்த்தினால் நிச்சயம் வரவேற்பு கிடைக்கும் என்றே தோன்றுகிறது.
- இன்னும் வாசிப்போம்...
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramiki@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago