அன்புள்ள முதலமைச்சருக்கு…

By ஜூரி

ஜனநாயகம், சோஷலிசம், மதச்சார்பின்மை, பாரபட்சமற்ற நிர்வாகம், நேர்மை, சர்வதேசப் பார்வை, மனிதாபிமானம் ஆகிய பண்புகள் கொண்ட நேரு, நம் நாட்டின் முதலாவது பிரதமராக அமைந்தது நம்முடைய அதிர்ஷ்டம். இந்தப் பண்புகளோடு, முதலமைச்சர் களுடன் அவர் கொண்டிருந்த உறவைப் பற்றியும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மாதத்துக்கு இருமுறை அவர்களுக்குக் கடிதங்களை எழுதும் வழக்கத்தை, பிரதமராகப் பதவியேற்ற 2 மாதங்களுக்குப் பிறகு தொடங்கினார். தன்னுடைய மறைவுக்கு சில மாதங்களுக்கு முன்னர் வரை – அதாவது, 1963 டிசம்பர் வரை - தொடர்ந்தார்.

30 ஆண்டுகளுக்கு முன்னால் ஜி. பார்த்தசாரதி அவற்றை 5 பெரிய தொகுதிகளாக வெளியிட்டிருந்தார். அவற்றிலிருந்து சிறந்த கடிதங்களைத் தொகுத்து மாதவ் கோஸ்லா, ‘லெட்டர்ஸ் ஃபார் எ நேஷன்’ என்ற பெயரில் தொகுத்திருக்கிறார். குடியுரிமை, தேசிய அடையாளம், ஜனநாயக அமைப்புகளைக் கட்டியெழுப்புவது, தேசிய திட்டமிடல், போரும் சமாதானமும், வெளியுறவுக் கொள்கை, மறைந்த தேசியத் தலைவர்கள் என்று பல விஷயங்கள்குறித்து இந்தக் கடிதங்களில் நேரு விவரித்திருக்கிறார். கடிதங்களின் பின்னணியையும், நேருவின் சிந்தனைகளில் ஏற்பட்ட முதிர்ச்சியையும் நாம் விளங்கிக்கொள்ளும் வகையில் காலவரிசைப்படி இந்தப் புத்தகம் தொகுக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம்களை தாஜா செய்கிறோமா?

ஒரு சமுதாயம் தனது சிறுபான்மையினரை எப்படி நடத்துகிறது என்பதைக்கொண்டே உலகம் அந்தச் சமுதாயத்தை மதிப்பிடும் என்பதை அறிந்தவர் நேரு. முதல்வர்களுக்கு அவர் எழுதிய கடிதங்களில் சிறுபான்மையினர் மீதான அவருடைய அக்கறை துல்லியமாக வெளிப்படுகிறது.

‘மத்திய அரசு முஸ்லிம்களை தாஜா செய்கிறது என்ற சிலரின் விமர்சனம் தவறானது. சிறுபான்மையாக இருந்தாலும் முஸ்லிம்கள் இந்நாட்டில் கணிசமாக வாழ்கின்றனர். விரும்பினாலும் வேறு எங்கும் போக முடியாதபடி இங்கே வாழ்கின்றனர். பாகிஸ்தான் எப்படிச் சீண்டினாலும், அங்கு வாழும் இஸ்லாமியர் அல்லாத பிற இனத்தவர் எப்படி நடத்தப்பட்டாலும், நம் நாட்டுச் சிறுபான்மை மக்களைக் கண்ணியமாக நாம் நடத்த வேண்டும். அவர்களைப் பாதுகாப்பதுடன் இந்நாட்டின் சட்டம் தரும் அனைத்து உரிமைகளையும் அவர்களுக்கும் வழங்க வேண்டும்’ என்று ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் மீது இந்தக் கடிதங்களில் அவர் வைத்த விமர்சனங்கள் மிகவும் கூர்மையானவை: ‘ஆர்.எஸ்.எஸ். என்பது நாஜி இயக்கத்தைப் போலவே தனித்துச் செயல்படும் சேனையாகும். ஜெர்மனியில் நாஜி இயக்கம் எப்படி வளர்ந்தது என்று எனக்குத் தெரியும். அதன் தேசப்பற்று பிரச்சாரம், ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவை நடுத்தர வர்க்கத்தினரையும் ஏழைகளையும் கவர்ந்தன. அதன் பிரச்சாரத்தில் மயங்கி ஆயிரக்கணக்கில் மக்கள் அதில் சேர்ந்தார்கள்.

ஜெர்மனியை மாபெரும் வல்லரசாக்குவேன் என்று கூறியவரின் பின்னால் திரண்டனர். அதன் பிறகு ஜெர்மனியால் பிற நாடுகளுக்கு சொல்லொணாத துயரங்கள் ஏற்பட்டன. ஜெர்மனியுமே தனக்கு ஏற்பட்ட அழிவைச் சீரமைக்கப் போராடிக்கொண்டிருக்கிறது.’

கலப்புப் பொருளாதாரம் ஏன்?

இந்தியாவில் தயாரித்து, இந்தியாவை விற்கும் இந்தக் காலத்தில் நேருவின் பொருளாதாரச் சிந்தனைகளைப் பற்றிய சில திறப்புகளை இந்தப் புத்தகம் நமக்கு வழங்குகிறது. நேரு எழுதுகிறார்: ‘ஜனநாயகச் சமூகத்தில், கலப்புப் பொருளாதாரக் கொள்கை தவிர்க்க முடியாதது என்றே நினைக்கிறேன்; அரசுத் துறை நிறுவனங்கள் முக்கியமான உற்பத்தித் துறைகளிலும் அடித்தளக் கட்டமைப்புத் துறைகளிலும் பெரும் பங்கு வகிக்கும்; தனியார் துறைக்கும் முக்கிய இடம் இருக்கும். ஆனால், திட்டமிட்ட பொருளாதாரத்தில், தனியார் துறையானது தேசியத் திட்டத்துக்கு இணக்கமான வகையில் சில கட்டுதிட்டங்களுக்கு உட்பட்டேயாக வேண்டும்’.

தோல்வியை எதிர்கொள்ளும் கண்ணியம்

சீனப் போரில் ஏற்பட்ட தோல்விகுறித்து முதலமைச்சருக்கு அவர் எழுதிய கடிதமும் மிக முக்கியமானது. தோல்வியை எதிர்கொள்ளும் கண்ணியம் தலைமைப் பொறுப்புக்கு எவ்வளவு அவசியமானது என்பதை அந்தக் கடிதம் நமக்கு உணர்த்துகிறது.

இந்தக் கடிதங்கள் யாவும் ஒருவழிப் பாதையாக இருந்திருக்கவில்லை. முதலமைச்சர்களின் கடிதங்களுக்கு நேரு விரிவாகப் பதிலும் போட்டிருக்கிறார். ஒரு வகையில் இந்த தேசத்துடன் ஒரு மாபெரும் தலைவர் நிகழ்த்திய உரையாடல் என்றும் இந்தக் கடிதங்களைச் சொல்லலாம்.

வலுவான, பன்மைத்தன்மை கொண்ட இந்தியாவைக் கட்டமைப்பதற்கான பெருமுயற்சியில் மாநில முதல்வர் களின் துணை எவ்வளவு முக்கியம் என்பதை அறிந் திருந்தவர் நேரு. எனவேதான், வெற்றுச் சம்பிரதாயமாக அமைந்துவிடாமல், ஆத்மார்த்தமான உரையாடலாக இந்தக் கடித உறவு அமைந்திருந்தது. நேருவின் 125-ம் ஆண்டில் இந்தக் கடிதங்கள் மறுபடியும் புத்தக வடிவில் வெளியாகியிருப்பது மிகவும் பொருத்தம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE