த
மிழ் ஆய்வுலகில் மிக முக்கியமான இடத்தை வகிப்பது மறைமலையடிகள் நூலகம். அந்த நூலகத்தின் தோற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர் தாமரைச் செல்வர் வ.சுப்பையாபிள்ளை. அந்த நூலக வளர்ச்சிக்குத் தனது அளப்பரிய ஆற்றலைச் செலுத்தியவர் அவரது மருமகன் இரா. முத்துக்குமாரசுவாமி. ‘நூலக உலகில் நல் முத்து’ என்று போற்றப்படும் முத்துக்குமாரசுவாமி (வயது 80) கடந்த செவ்வாய் அன்று காலமானார்.
உலக அளவில் தமிழ் அறிஞர்கள் பலரின் ஆய்வுகளில் உதவியவர் முத்துக்குமாரசுவாமி. தமிழாய்வு தொடர்பான குறிப்புதவிகளைத் தனது நினைவுகளிலிருந்தே தந்து உதவுவார். கிடைக்காத குறிப்புகள் எங்கே கிடைக்கும் என்பதையும் கூறி, அவை கிடைக்கவும் ஆவன செய்யும் தன்மை இவருக்குண்டு என்று பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் ம.ரா. அரசு குறிப்பிடுகிறார்.
இந்தியாவின் முதல் முயற்சி!
மறைமலையடிகள் நூலகத்தில் நூலகப் பொறுப்பாளராக முத்துக்குமாரசுவாமி பதவிவகித்தபோது பல முன்மாதிரியான முயற்சிகளை முன்னெடுத்தார். ‘இந்திய நூலகத் தந்தை’ என்று அழைக்கப்படும் தமிழகத்தைச் சார்ந்த எஸ்.ஆர்.ரங்கநாதனின் ‘கோலன் பகுப்பு வரிசைப் பட்டியல்’ (Colon Classification System) உலகின் மிக முக்கிய நூலக பகுப்பு வரிசைப் பட்டியலில் இடம்பெற்றது. கோலன் பகுப்பு முறையைப் பயன்படுத்தி இந்தியாவில் முதல்முயற்சியாக எஸ்.ஆர். ரங்கநாதனும் முத்துகுமாரசுவாமியும் இணைந்து தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் மூலமாக 39 ஆண்டுகளில் வெளியான 1,008 நூல்களையும் பகுப்புப் பட்டியலிட்டு, கோலன் பகுப்பு முறையின் குறியீடுகளுக்கு மாற்று அட்டவணை கொடுத்தனர். கூடவே, ரோமன் எழுத்துகளுக்கும், பகுப்பு எண்களுக்கும் இணையாகத் தமிழில் பட்டியல் எழுதும் முறை புகுத்தப்பட்டு முன்மாதிரியான நூல் பட்டித் தயாரிக்கப்பட்டு வெளியானது.
கழக வெளியீட்டின் ‘பாராட்டு விழா நூல்பட்டி’ வெளியாவதற்கு முன்பு, 1934-ல் கொலம்பியா பல்கலைக்கழக அச்சகம் 1893 முதல் 1933 வரை வெளியான புத்தகப் பட்டியலை வெளியிட்டது. இரண்டாவதாக, பிரிட்டிஷ் நூலகத்தாரால் 1949-ல் ‘பிரிட்டிஷ் தேசிய நூல் பட்டி’ வெளியானது. இந்த தேசிய நூல்பட்டிப் பதிப்பாசிரியர் தாங்கள் எஸ்.ஆர். ரங்கநாதனுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளதாகவும், இந்த நூல்பட்டி வெளியாக அவரது கருத்து தங்களுக்கு உந்துதலாக இருந்தது என்றும் குறிப்பிடுகின்றனர். மூன்றாவதாக, தமிழகத்தில் கழக பாராட்டு நூல்பட்டி வெளியாகி லிப்ராமெட்ரிக் ஆய்வுக்கு முன்னோடியாக இந்தப் பகுப்புப் பட்டியல் விளங்கியது. இந்தப் பகுப்புப் பட்டியலைத் தயாரிக்கும்போது எஸ்.ஆர். ரங்கநாதன் 100 மணிநேரமும் முத்துக்குமாரசுவாமி 1,000 மணி நேரமும் செலவிட்டு இந்தியாவில் முதல்முயற்சியாக இதை முன்னெடுத்துச் சென்றனர். இந்திய அளவில் கழக வெளியீட்டுப் புத்தகங்களின் முகப்புத் தலைப்பில் கோலன் பகுப்பு எண் இட்டு அனைத்து நூல்களும் வெளியாவதற்கு உறுதுணையாக இருந்தவர் முத்துக்குமாரசுவாமி.
கோலன் பகுப்புக்கு முதலிடம்
தமிழகத்தைச் சார்ந்த எஸ்.ஆர்.ரங்கநாதனின் கோலன் பகுப்புப் பட்டியல் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றாலும் காலப்போக்கில் தமிழகத்தில்கூட தொடர முடியாமல் கைவிட்டனர். ஆனால் மறைமலையடிகள் நூலகத்தில் கோலன் பகுப்பு முறையில் புத்தகங்களை வரிசைப்படுத்தி ரங்கநாதனுக்கு புகழைச் சேர்த்தவர் முத்துக்குமாரசுவாமி.
குறிப்பாக, ஆய்வுக்குச் செலவிடும் நேரத்தைக் குறைப்பதற்கும், உடனடியாகத் தகவல்களைப் பெறுவதற்கும் தமிழ் ஆய்வாளர்களுக்காகப் பல்வேறு நூலடைவுகள் செய்துவைத்தவர் முத்துக்குமாரசுவாமி. ‘செந்தமிழ்ச்செல்வி’ மாத இதழின் ஆசிரியராக அவர் இருந்தபோது அந்த இதழில் ஆரம்ப காலத்திலிருந்து வெளியான கட்டுரைகள் அனைத்தையும் தட்டச்சுசெய்து நூலடைவு செய்திருந்தது அந்த காலகட்டத்தில் ஆய்வாளர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.
இந்தி எதிர்ப்புப் போர் ஆவண காப்பகம்
1948 மற்றும் 1965-களில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்துப் பல இதழ்களில் வெளியான செய்திகளை முத்துக்குமாரசுவாமி ஆவணப்படுத்தி நல்ல முறையில் பைண்டிங் செய்து ஆவணப்படுத்தினார். அதேபோல், பல சமய, தோத்திர, துதி, சிறு-குறு நூல்கள் மற்றும் குஜிலி பதிப்பு சில்லறைக் கோர்வைப் புத்தகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை பைண்டிங் செய்து, பக்க எண் இட்டு முகப்பு பக்கத்தில் அனைத்து நூலுக்குமான பட்டியலை அழகு தமிழில் எழுதிய ஆவணங்கள் அவருடைய சீரிய உழைப்புக்கு உதாரணங்கள். காலனிய காலகட்டத்தில் முற்கால அச்சுக்கூடங்கள் வழியாக வெளியான பல அரிய நூல்களைத் துறைவாரியாகப் பட்டியலிட்டதோடு மட்டுமல்லாமல் அனைத்து அரிய நூல்கள், இதழ்களின் வரலாறு குறித்த தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் முத்துக்குமாரசுவாமி.
பன்முகப் பொறுப்புகள்
நூலகராக மட்டுமல்லாமல் பதிப்பாளராகவும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நிர்வாகப் பொறுப்பாளராகவும், உலகத் தமிழ் மாநாட்டு நிர்வாக மற்றும் மலர்க்குழுவிலும், பபாசி நிர்வாகத்திலும் தன்னுடைய சீரிய உழைப்பைச் செலுத்தியவர். புத்தக விற்பனையாளர்களிடையே நிகழும் சில சச்சரவுகளை அவருக்கே உரித்தான பாணியில் சுமுகமாகத் தீர்த்து வைத்ததிலும், நூலக ஆணைக்காகச் சிரத்தை எடுத்ததிலும், சக பதிப்பாளர்களுக்கு விழா எடுத்து கௌரவப்படுத்தியதிலும் (குறிப்பாக வெள்ளையாம்பட்டு சுந்தரத்துக்கு) இவரது பங்களிப்பு உண்டு.
தமிழாய்வு உலகுக்கு மறைமலையடிகள் நூலகத்தின் பங்கு மகத்தானது என்பதைப் போல முத்துக்குமாரசுவாமியின் தன்னலமற்ற உழைப்பும் முக்கியமானது. முத்துக்குமாரசுவாமியின் இழப்பு நூலகத் துறைக்கு மட்டுமல்லாமல் தமிழ் உலகுக்கும் பேரிழப்பு!
- ரெங்கையா முருகன், ‘அனுபவங்களின்
நிழல் பாதை’ என்ற நூலின் ஆசிரியர்.
தொடர்புக்கு: murugan_kani@yahoo.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
24 days ago
இலக்கியம்
24 days ago